ஊழலற்ற, வெளிப்படையான கோயில் கைங்கர்யங்கள்!கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்: திருக்கருகாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் திருக்களாவூர் எனும் திருவூர் ஒன்றுள்ளது. தேவாரத் தலமான இவ்வூரின் பழம்பெயர் திருக்கருகாவூர் என்பதாகும். சோழர் கல்வெட்டுகளில் ‘நித்தவிநோத வளநாட்டு ஆவூர் கூற்றத்துத் திருக்கருகாவூர்’ என இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. திருஞானசம்பந்தப்பெருமான் ஒரு பதிகமும், திருநாவுக்கரசு பெருமான் ஒரு பதிகமும் பாடி கருகாவூர் ஈசனின் புகழினை எடுத்துரைத்துள்ளனர்.

ஞானக்குழந்தையார் பாடிய பதிகத்தில், ‘கமுதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்’, ‘கடி கொள்முல்லை கமழும் கருகாவூர்’, ‘கைதல் முல்லை கமழும் கருகாவூர்’, ‘கந்த மௌவல் கமழும் கருகாவூர்’, ‘கார்த்தண் முல்லை கமழும் கருகாவூர்’ என்றெல்லாம் குறிப்பிட்டு முல்லைப் பூமணம் எப்போதும் வீசுகின்ற பதியாகவே அவ்வூரினைச் சுட்டுகின்றார்.

மேலும்,
‘‘கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர்
நிலவு பாடல் உடையான் தன் நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே’’

- என்ற அவர் தம் வாக்கு பொய்யன்று, அநுபூதியில் அது மெய்யே. சோழநாட்டுத் தேவாரத் தலங்களை ‘சப்த விடங்கத் தலங்கள்’, ‘சப்த தானத் தலங்கள்’, ‘சப்த மங்கைத் தலங்கள்’ என ஏழு, ஏழு தலங்களாகக் குறிப்பர். அதுபோன்றே பஞ்சாரண்ய தலங்கள் என்ற ஒரு பகுப்பும் உண்டு. ஆரண்யம் என்ற சொல், காடு சார்ந்த பகுதியைக் குறிப்பதாகும். கருகாவூர் முல்லை வனமாகவும், அவளிவநல்லூர் பாதரி வனமாகவும், அரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்) வன்னி வனமாகவும், திருவிரும்பூளை (ஆலங்குடி) பூளை வனமாகவும், திருக்கொள்ளம்பூதூர் வில்வ வனமாகவும் போற்றப்பெறுகின்றன. இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் ஒரே நாளில் வழிபடுவதை புனிதமுடையதாக சைவர் போற்றுவர்.

இதுபோன்றே காலை கடம்பரையும் (குளித்தலை ஈசர்), மதியம் வாட்போக்கி நாதரையும் (அய்யர் மலை), மாலை திருவீங்கோய்மலை ஈசரையும் வழிபடுவது பண்டைய மரபாகும். திருக்கருகாவூர் ஈசனை கல்வெட்டுகள், ‘திருக்கருகாவூருடைய மகாதேவர்’ எனக் குறிக்கின்றன. விக்கிரமசோழனின் கல்வெட்டு, ‘முல்லைவனநாதர்’ எனப் பெருமானின் பெயரினைக் குறிப்பிடுகின்றது. தற்காலத்தில் வடமொழி அடிப்படையில் அப்பெருமானை ‘கர்ப்பபுரீஸ்வரர்’ என்றும், ‘மாதவிவனேஸ்வரர்’ என்றும் அழைக்கப்பெற, தமிழில் முல்லைவனநாதர் என்றே குறிக்கின்றனர்.

’கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே’ என அப்பர் பெருமான் இத்தலத்து தேவாரப்பதிகத்தில் குறிப்பிடுமாறுபோல இத்தலத்து ஈசனாரான முல்லைவனநாதர், கருவாய் உலகத்துத் தோன்றும் அனைத்து உயிர்களையும் ரட்சிக்கும் ஈசனாக விளங்குகின்றார். இங்குறையும் தேவியோ கர்ப்பரட்சாம்பிகை, கருகாத்த நாயகி என்ற திருநாமங்களைப் பெற்று பெண்களுக்கு சுகமான குழந்தைப்பேற்றை அருளுகின்றாள்.

கருவுற்ற பெண்கள் இத்தலத்திற்கு வந்து, பூசனை செய்யப் பெறுகின்ற மருத்துவகுணம் பெற்ற எண்ணெயைப் பெற்று நலம் பெறுகின்றனர். குழந்தைப்பேறு இல்லாமல் இருப்பவர்கள் முல்லைவனநாதரையும், கருகாக்கும் நாயகியையும் வழிபட்டு சந்தானப்பேறு பெறுவது நடைமுறையாகஉள்ளது. கிழக்கு நோக்கிய இவ்வாலயத்திற்கு முன்பு ‘பாற்குளம்’ என்றும், ‘க்ஷீரகுண்டம்’ என்றும் அழைக்கப்பெறுகின்ற தீர்த்தக்குளம் உள்ளது. தலவிருட்சமாக முல்லைக்கொடியே விளங்குகின்றது. மூலவர் கோயிலும், அம்மன் கோயிலும் கிழக்கு நோக்கிய வண்ணம் இணையாகவே திகழ்கின்றன. கருவறையில் முல்லைவனநாதர் லிங்கத் திருமேனியாகக் காட்சி நல்குகின்றார்.

உயரமான பாணம் பிருதிவியாக புனுகுச் சட்டத்துடன் உள்ளது. ஆவுடையார்க்கு மட்டுமே அபிஷேகம் நிகழ்கின்றது. கருவறையின் புறச்சுவர்களில் உள்ள கோஷ்ட மாடங்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, உமையொரு பாகன், பிரம்மன், துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. பரிவாராலயங்களில் கணபதி, வள்ளி-தேவசேனையுடன் மயில்மீது திகழும் முருகப்பெருமான், சண்டீசர் திருமேனிகள் உள்ளன. நால்வர், சந்தான குரவர், பைரவர், சூரியன், சந்திரன், நவகிரகங்கள் ஆகிய திருமேனிகள் இடம் பெற்றுள்ளன.

திருக்காமகோட்டத்து அம்பிகையான கர்ப்பராட்சாம்பிகை திருமேனி பெரிய அளவிலும், பேரழகு வாய்ந்ததாகவும் காட்சி நல்குகின்றது. இவ்வாலயத்து கூத்தப்பெருமானின் செப்புத் திருமேனியும், சிவகாமசுந்தரியின் செப்புத் திருமேனியும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் திகழ்பவைகளாகும். காவிரியின் கிளைநதியான வெட்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கற்கோயில் முதலாம் ஆதித்தசோழன் காலத்தில் புதுப்பிக்கப் பெற்றதாகும்.

ஆதித்தசோழன் காலந்தொட்டு வெட்டப்பெற்ற பல கல்வெட்டுச் சாசனங்கள் இவ்வாலயத்து சுவர்களில் காணப்பெறுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களைத் தொகுத்து நோக்கும்போது பல பெண்கள் இவ்வாலயத்திற்கு நிவந்தங்களைக் கொடுத்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர் என்பதறியலாம். சோழ அரசி, மீனவன் மாதேவியாரின் பணிப்பெண் நக்கன் விக்கிரம மாமணி என்பாள் திருக்கருகாவூர் காணி உடைய கொற்றங்குடி உடையான் வைகுந்தன் என்பானிடமிருந்து நிலமும், குளமும் வாங்கி, குளத்தை ஆழப்படுத்தி கோயிலுக்காக அவற்றை ஊர் நிர்வாகச் சபையோரிடம் ஒப்புவித்த செய்தியை முதல் பராந்தகசோழனின் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது.

இதே முதல் பராந்தகசோழனின் காலத்தில் திருக்கருகாவூர் மகாதேவர் கோயிலில் பொறிக்கப்பெற்ற மற்றொரு கல்வெட்டில் தஞ்சாவூரில் இருந்த ஜயபீமதளி என்ற கோயிலில் நாட்டியப்பணி செய்து கொண்டிருந்த நக்கன் சந்திரதேவி என்ற பெண் திருக்கருகாவூர் மகாதேவர் முன்பு தன் பெயரால் எப்போதும் எரியக்கூடிய நந்தாவிளக்கு ஒன்றினை வைத்ததோடு, அது எப்போதும் எரிவதற்கென வடவூர் வெண்காடு எனும் ஊரில் நிலமும் அளித்ததை விவரிக்கின்றது.

கங்கையும், கடாரமும் கொண்ட முதலாம் ராஜேந்திரசோழனின் இவ்வாலயத்துக் கல்வெட்டில் சோழ இளவரசி சோழகுல சுந்தரியார் என்ற அணங்கு, கருகாவூர் மகாதேவர்க்கு பூசனைக்குரிய பூக்களுக்காக ஆடவல்லான் என்ற பெயரில் ஒரு நந்தவனத்தை அமைத்துத் தந்ததோடு, அதன் பராமரிப்புக்காக நிலமும் அளித்த செய்தி குறிக்கப்பெற்றுள்ளது. அதில் சோழகுலசுந்தரி என்ற பெயரில் அவ்வூரில் ஒரு சாலையும், ஜெயங்கொண்ட சோழ வாய்க்கால் என்ற வாய்க்காலும் திகழ்ந்தமை சுட்டப் பெற்றுள்ளன.

இவ்வாலயத்திலுள்ள முதல் ராஜாதி ராஜசோழனின் கல்வெட்டில் ராஜாதிராஜனின் அணுக்கியார் பட்டாலகன் மதுரவாசகியார் என்ற பெண், மகா சபையாரிடமிருந்து அப்பேரரசனின் இருபத்தாறு, இருபத்தெட்டு, முப்பத்தொன்று ஆகிய ஆட்சியாண்டுகளில் பொற்காசுகள் கொடுத்து நிலங்களை விலைக்கு வாங்கி ஆலயத்தில் அன்னசாலை பராமரிக்க அளித்த செய்தி குறிக்கப்பெற்றுள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்கால கல்வெட்டொன்றில் கோயிலில் பூசகராகப் பணிபுரிந்த திவாகரபட்டன் என்பானின் மனைவி கூத்தன் அடைக்கலத்தாள் என்ற பெண் சில நிலங்களை விற்று கோயிலுக்கு அளித்த செய்தி வரையப்பெற்றுள்ளது.

முதல் ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் கருகாவூர் கோயிலில் வெட்டப்பட்ட கல்வெட்டுச் சாசனம் ஒன்றில் சிங்கன் பொன்னம்பலம் என்ற வெள்ளாளப் பெண்மணி ஈசன் முன்பு நந்தாவிளக்கு எரிப்பதற்காக எழுப்பதாறு ஆடுகளை வழங்கி அவற்றை இடையர்களிடம் ஒப்புவித்து நெய் வழங்க ஏற்பாடு செய்தமை பற்றி கூறப்பெற்றுள்ளது.

இவ்வாறு நாட்டியத் தாரகைகளும், அரசகுல பெண்களும், சாதாரண பெண்களும் போற்றித் துதித்த கருகாவூர் மகாதேவர் கோயிலில் பலி எழுந்தருளும் பாசுபதமூர்த்தி எனும் செப்புத்திருமேனிக்கு பீடமும், பிரபையும் ‘நெய்தலூருடையான் நாராயணன் பிடாரன்’ என்பான் செய்து வழங்கினான் என்பதை முதல் ராஜேந்திரசோழதேவரின் கல்வெட்டுச் சாசனம் எடுத்துரைக்கின்றது.

உத்தமசோழன் காலத்தில் திருவலஞ்சுழி சிவாலயத்திற்கு நாற்பது வேலி நிலம் வழங்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பெற்றன. ஐப்பசி மாதம் விஷு சங்கராந்தி பூஜை அதில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாற்பது வேலி நிலத்திலிருந்து குறிப்பிட்ட அந்த பூஜைகளுக்காக வந்த நெல்லின் அளவு மிகுதியாக இருந்தது.

எனவே உத்தமசோழ மூவேந்த வேளான் என்ற அதிகாரி அந்த நாற்பதுவேலி நிலத்தில் உள்ள மூன்று வேலி நிலத்திலிருந்து கிடைக்கும் எழுநூற்றுப் பத்து கலம் நெல்லினை திருக்கருகாவூர் மகாதேவர் கோயிலுக்கு அளிக்க அரசனிடம் அனுமதி பெற்றான். அதன்படி திருக்கருகாவூர் கோயில் பெற்ற 710 கலம் நெல்லிலிருந்து அமுதுபடி, விளக்கு, பணி மக்கள் ஊதியம், அவர்களுக்கு உரிய ஆடை, சந்தனம், குங்கிலியம் ஆகியவற்றுக்காகவும், கருமாணிக்கதேவர் (திருமால்), கணபதியார் போன்ற தெய்வ பூஜைகளுக்குரிய அமுது படிகளுக்காகவும் செலவிட வகை செய்யப்பெற்றது.

ஒரு கோயிலுக்கு தேவைக்கு அதிகமாக வருவாய் கிடைத்தபோது அந்த மிகுதியை தேவைப்படும் பிற கோயிலுக்கென வழங்கிய பண்டைய ஆலய நிர்வாகச் செயல்பாடு பற்றி நாம் இக்கல்வெட்டு மூலம் அரிய இயலுகின்றது. பிடாரன் உடையான் என்பவர் பதினோராம் நூற்றாண்டில் ஏழு கழஞ்சே, பதினொரு மஞ்சாடியே, இரு குறுணியே உரி எடையுடைய பொன்னை கருகாவூருடைய மகாதேவர்க்கு வழங்கினாராம்.

அந்த பொன்னை கோயில் பண்டாரத்தில் சேர்ப்பித்து கணக்கிடுலிடும்போது கோயிலின் காணி உரிமை உடைய தட்டான் விடங்கன்தேவன் என்ற பொன்னின் தன்மை அறிந்த அந்த வல்லுநர் சான்றளித்த பிறகே கணக்கில் இட்டதும் குறிக்கப்பெற்றுள்ளது. திருக்கோயில் உடைமைகளைத் துல்லியமாகவும், அனைவரும் அறியும்வண்ணம் திறந்த புத்தகமாகவே மக்களுக்கு கணக்கில் காட்டுபவைதாம் நம் கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுச் சாசனங்களாகும். நம் முன்னோர்கள் மேற்கொண்டொழுகிய ஆலய நிர்வாகமுறை மீண்டும் தழைக்க ஈசனைப் பிரார்த்திப்போம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்