பிரசாதங்கள்



-சந்திரலேகா ராமமூர்த்தி

தயிர் மினி இட்லி

என்னென்ன தேவை?

மினி இட்லி - 20,
புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவைக்கு,
அலங்கரிக்க மாதுளை முத்துக்கள் - சிறிது.

எப்படிச் செய்வது?

அதிகம் புளிக்காத மாவினால் மினி இட்லி செய்து கொள்ளவும். தயிரை நன்கு அடித்துக் கொண்டு, தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். ஒரு ஆழமான தட்டில் இட்லிகளை வைத்து, அதன் மீது தயிரை ஊற்றி பரப்பவும். அதன் மீது ஒவ்வொன்றாக சீரகத்தூள், மிளகுத்தூள், கடைசியாக சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழையை தூவி, மாதுளை முத்துக்களால் அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: விரும்பினால் பொடித்த திராட்சை, பைனாப்பிள் கொண்டு அலங்கரிக்கலாம்.

புதினா மல்லி நம்கின்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்,
ரவை - 1/4 கப்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/4 கப்,
மிளகு - 10,
ஓமம் - 1/4 டீஸ்பூன்,
தண்ணீர் - 1/4 கப்,
மிகப்பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - தலா 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மிளகை இடித்துக் கொள்ளவும். ஓமத்தை கையால் கசக்கிக் கொள்ளவும். பொரிக்க எண்ணெயை தவிர, பாத்திரத்தில் மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து, தண்ணீர் தெளித்து பூரி மாவை விட சிறிது கெட்டியாக பிசைந்து 15 நிமிடம் மூடி வைக்கவும். பின் மாவை எடுத்து மீண்டும் பிசைந்து சிறு சிறு கோலி அளவு உருண்டைகளாக செய்து, மத்தியில் விரலால் அழுத்தி, கொட்டை பாக்கு வடிவத்தில் செய்யவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, சூடானதும் மிதமான தீயில் நம்கின்களை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கரகரப்பான வித்தியாசமான சுவையில் இருக்கும்.

மேங்கோ தூத் பேடா

என்னென்ன தேவை?

பால் பவுடர் - 1 கப்,
நன்கு பழுத்த பெரிய மாம்பழம் - 1,
பால் - 1/2 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்,
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை,
அலங்கரிக்க பாதாம் அல்லது பிஸ்தா - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, பால் பவுடரை சேர்த்து கட்டித்தட்டாமல் கலந்து, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும். பின்பு பாலை சேர்த்து கலந்து மிக்சியில் நன்கு அடித்து தனியே வைத்து கொள்ளவும். மாம்பழத்தை தோல் நீக்கி மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் நெய் விட்டு அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கிளறவும்.

சிறிது கெட்டியாக வந்ததும் அரைத்த பால் கலவையை கொட்டி, மீண்டும் கைவிடாமல் கெட்டியாக கிளறவும். சுருண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உருட்டும் பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிட்டு, கையில் நெய் தடவிக் கொண்டு விருப்பமான வடிவத்தில் பேடாக்கள் செய்து, அதன் மேல் குங்குமப்பூ, பிஸ்தா கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.


கற்பூரவல்லி ஜூஸ்

என்னென்ன தேவை?

கற்பூரவல்லி - 6-8 இலைகள்,
மிளகு - 10,
இடித்த இஞ்சி - ஒரு ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
கிராம்பு - 2,
தேன் - தேவைக்கு,
தண்ணீர் - 2 கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர், கற்பூரவல்லி, மிளகு, இஞ்சி, உப்பு, கிராம்பு சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக ெகாதிக்க விடவும். பிறகு 10 நிமிடத்திற்கு மூடிவைத்து வடித்து தேன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இனிப்பு வேண்டாம் என்றால் உப்பு, எலுமிச்சைச்சாறு 1/2 டீஸ்பூன் கலந்து பரிமாறலாம். இலைகளை பொடித்துப் போடலாம்.

தினை முலாம்பழ ஷீரா

என்னென்ன தேவை?

தினை - 1 கப்,
பால் - 3/4 கப்,
முலாம்பழ விழுது - 1½ கப்,
சர்க்கரை - 1 கப்,
துருவிய பாதாம்,
உடைத்த முந்திரி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
திராட்சை - 10,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - சிறிது,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நட்ஸ், திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தினையை கரகரப்பாக பொடித்து, கடாயில் சிறிது ெநய் சேர்த்து தினையை வறுத்துக் கொள்ளவும். சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும். மீதி பாலை கொதிக்க வைத்து தினையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறவும். தினை வெந்ததும் குங்குமப்பூ பால், சர்க்கரை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாக வரும்பொழுது முலாம்பழ விழுது சேர்த்து கிளறவும். சேகரி பதத்திற்கு வந்ததும் உப்பு,ஏலக்காய்த்தூள், பாதி வறுத்த நட்ஸ், திராட்சையை சேர்த்து கலந்து இறக்கவும். மீதியுள்ள நட்ஸ், திராட்சையை அலங்கரித்து பரிமாறவும்.

கேசர் பந்துவ (கொல்கத்தா ஸ்வீட்)

என்னென்ன தேவை?

பனீர் - 250,
குங்குமப்பூ - 2 சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் - 1  சிட்டிகை,
ரவை - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 கிலோ,
கேசரி கலர் பவுடர் - சிறிது.

எப்படிச் செய்வது?

ரெடிமேடாக விற்கும் பனீரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வைத்து எடுத்து, பின்பு ஒரு சுத்தமான துணியில் கட்டி தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும். தட்டில் பனீர், சேகரி கலர் பவுடர், ரவை சேர்த்து மிருதுவாக வரும்வரை கைவிடாமல் நன்கு தேய்க்கவும். தேய்த்த பனீரை வெடிப்பு இல்லாமல் எலுமிச்சைப்பழ அளவிற்கு உருட்டவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1/2 லிட்டர் தண்ணீர், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து கொதித்து வந்ததும், மிதமான தீயில் வைத்து பனீர் உருண்டைகளை மெதுவாக போடவும். 5 நிமிடம் கழித்து மீண்டும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்படி 3 முறை செய்யவும். சர்க்கரை தண்ணீர் கெட்டியாகி, உருண்டைகள் மேலே மிதக்கும் பொழுது ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். ஆறியதும் மூடி வைத்து 1 நாள் முழுவதும் ஊறவிட்டு, அடுத்த நாள் பரிமாறவும்.

குறிப்பு: கெட்டியான பாலில் சர்க்கரை, பிஸ்தா, குங்குமப்பூ, ஏலத்தூள், பனீர் உருண்டைகளை சேர்த்து குளிரவைத்தும் பரிமாறவும்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்