ஞானிகளாக அவதரிப்பதும் பகவானே!



பகவத் கீதை -47

ஒருவகையில் பார்த்தால் ஞானிகள் அவதரிப்பதும் இந்த முறையில்தானோ என்று தோன்றுகிறது. அதாவது பல ஜன்மங்களைக் கடந்த பிறகு மேற்கொள்ளும் ஒரு பிறவி! அதாவது இந்த ஞானிப் பிறவிக்கு முந்தைய ஜன்மங்களில் தனது தீவினைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துக்கொண்டே வந்து, இப்போது அவை முற்றிலுமாக நீங்கிவிட்ட பரிசுத்தமான பிறவி.

அதாவது அந்தத் தீவினைகள் அழியவேண்டும் என்பதற்காக நல்வினை புரிவதை அதிகரித்துக்கொண்டேபோய் இப்போது தீயவற்றின் கருமைச் சாயல் கொஞ்சம்கூட இல்லாதவகையில் தோன்றியிருக்கும் அப்பழுக்கற்றப் பிறவி. இத்தகைய ஞானிகளை சற்றே ஆழமாக கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் கண்களின் வெண்விழி அவ்வளவு தூய்மையாக இருக்கும்.

கொஞ்சம்கூட கலங்கலோ, கலக்கமோ இன்றி, மிகத் தெளிவாக இருக்கும். விழிகளில் தீட்சண்யம் மிகுந்து இருக்கும். நேர்ப் பார்வையும், அதில் நேர்மையும் குவிந்திருக்கும். அவர்கள் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பார்கள். ஒன்றிரண்டு பேசினாலும் அது சமுதாய நன்மைக்காகத்தான் இருக்கும். அமைதியாக ஒடுங்கியிருக்கிறார்களே என்ற சற்றே அலட்சிய, அவமரியாதை சிந்தனை கொள்வோமானால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்பதுபோல உலகளாவிய விஷயங்களை வெகு சரளமாக எடுத்துரைப்பார்கள்.

ஏனென்றால் இவர்கள் அப்பழுக்கற்றவர்கள். தம் கர்மவினைகளை இதற்கு முந்தைய ஜன்மங்களோடு முற்றிலுமாகக் கைகழுவிவிட்டு வந்திருப்பவர்கள். இந்தப் பிறவியில் தாங்கள் சந்திக்கக்கூடிய அனைவரையும் சமமாக பாவிப்பவர்கள். எதிலும், யாரிடத்திலும் ஏற்ற-தாழ்வு பாராட்டாதவர்கள். தன்னைச் சுற்றி நடக்கும் எந்த சலசலப்புக்கும், கலவரத்துக்கும்கூட சலனமடையாதவர்கள்.

முகம், ஒளிமிகுந்து மலர்ந்திருக்கும், அதில் புன்முறுவல் நிரந்தரமாகக் குடியிருக்கும், அன்பு மணம் வீசும். அவர்களில் சிலர் தாம் அணிந்திருக்கும் உடைகளிலோ, உண்ணும் உணவிலோ, தம் ஓய்விலோ, தூக்கத்திலோ எந்த விசேட அக்கறையும் கொள்ளமாட்டார்கள். அதெல்லாம் தமக்குத் தேவையற்ற ஆடம்பரம் என்று கருதக்கூடியவர்கள்.

ஒவ்வொரு யுகத்திலும் இவர்கள் அவதரிப்பார்கள். ஒரே ஒருவர் என்றில்லாமல் பல மனித ரூபங்களில் தோன்றுவார்கள். ஆணாக மட்டுமல்லாமல், பெண்ணாகவும் வடிவெடுப்பார்கள் - பாவக்கறைகளை முற்றிலுமாகக் கழுவி நீக்கப்பட்ட ஒரு ஆன்மா முந்தைய ஜன்மத்தில் ஆண் உடலில் குடியிருந்தாலும், அடுத்த ஜன்மத்தில் பெண் உடலையும் தேடக்கூடியது என்றவகையில்.

இந்த ஞானிகளை நூற்றுக்கணக்கில் அடியவர்கள் பின்பற்றலாம். இந்தக் கணக்கு ஒவ்வொரு ஞானிக்கும் பொருந்தும். அவ்வாறு பின்பற்றுவதற்கும் இந்த அடியவர்கள் தங்களது முந்தைய ஜன்மங்களில் நல்வினைகள் புரிந்திருக்க வேண்டும். இவர்களில் சிலர், தமது அடுத்த ஜன்மத்தில் ஞானிகளாகப் பிறக்கக்கூடும்.

ஆனால் இதே ஜன்மத்தில் தங்களுக்கு ஞானம் வசப்பட்டுவிட்டதாகவும், தாங்களே ஞானிகள் என்றும் பிரகடனப்படுத்திக்கொள்பவர்கள் போலி ஞானிகளாகிவிடுகிறார்கள், கொச்சையாகச் சொல்வதானால் போலி சாமியார்கள்! ஏனென்றால் உண்மையான ஞானிகள் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்ளமாட்டார்கள். தங்களைப் பிறர் விளம்பரப்படுத்துவதை விரும்பவும் மாட்டார்கள்.

ஏனென்றால் இவர்களுக்குத் தெரியும், தன்னை நாடி வருபவர்கள் யார், சுயநல நோக்கோடு வருபவர்கள் யார், இறைச் சிந்தனையுடன் வருபவர்கள் யார், வியாபாரமாக பேரம் பேச வருபவர்கள் யார் என்றெல்லாம் ஒவ்வொரு நபரையும் பார்த்த மாத்திரத்திலேயே எடைபோடக்கூடியவர்கள்.

ஆக, இப்படி சிந்திக்கும்போது, ஆன்மா என்பது ஒவ்வொரு ஜன்மத்துக்கும் ஆன சங்கிலித் தொடராக நீடிக்கக்கூடிய ஓர் இறை அற்புதம் என்றுதான் தோன்றுகிறது. இது மனிதப் பிறவிக்குச் சரி, ஆனால் பரந்தாமனுக்கு? இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அவருக்கு ஆன்மா, ஜன்மாந்திர தொடர்ச்சி, அதன் லாப நஷ்டக் கணக்கு எல்லாம் உண்டா, தேவையா? அப்படி இல்லாததால்தான் மாறி மாறிப் பிறப்பு காணும் மனித குலத்துக்கு அவரால் உபதேசம் செய்ய முடிகிறது.

சரி, பிறப்பற்றவன், முடிவற்றவன் என்றால் அவர் தன் விருப்பம்போல ஜன்மமெடுக்க முடிந்தவர் என்றால், அப்படி ஜன்மமெடுக்க என்ன காரணம்? எதனால் குறிப்பிட்ட காலக்கெடுவில் பிறவி எடுக்க வேண்டும்? - இந்த சந்தேகம் அர்ஜுனன் மனதில் தோன்றியிருக்க வேண்டும்.
இதற்கும் கிருஷ்ணன் பதில் சொல்கிறார்:

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரு
ஜாம்யஹம்

‘‘பரத வம்சத்தில் பிறந்தவனே, அர்ஜுனா, நான் அறத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் எழும்போது அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக்கொள்கிறேன். அதாவது மறம் அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்படுத்தவும், இல்லாமலேயே ஆக்கவும் நான் பிறவி எடுக்கிறேன்.’’

அறம் ஏன் தேயவேண்டும், மறம் ஏன் பெருகவேண்டும்? அது மனிதனின் புண்ணிய-பாவ நடவடிக்கைகளைப் பொறுத்தது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புண்ணியம் பெருகுமானால் அது அப்போது வாழும் மக்கள் தங்கள் பூர்வ ஜன்மத்தில் செய்திருக்கக்கூடிய நன்மைகளாலேயே அமைவதாக இருக்கும். அதேபோலதான் அந்த காலகட்டத்தில் பாவம் பெருகுவதும்.

மனித முயற்சிகளால் தீர்க்க முடியாத பாவங்களை பகவான் வந்துதான் தீர்க்க வேண்டும், அதாவது வதம் செய்யவேண்டும். ஏனென்றால் அவர் ஒருவர் மட்டும்தான் பாவம்-புண்ணியத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவற்றால் தீண்டப்படாதவர். அவற்றை அழிக்கவோ, வளர்க்கவோ செய்யக்கூடியவர்.

இந்த சந்தர்ப்பத்தில் பகவான் கிருஷ்ணனே சம்பந்தப்பட்ட ஒரு புராண நிகழ்ச்சியை நினைவுகூரலாம். துரியோதனாதிகள் முற்றிலுமாக அழிந்துவிட்ட பிறகு தர்மரின் தலைமையில் அதி அற்புதமான ஆட்சி அமைந்தது. அச்சமயம் இரு பிரஜைகள் ஒரு வழக்கை தர்மர் அரசவை முன் வைத்தார்கள்.

ஒருவர் அடுத்தவரிடமிருந்து நிலத்தை வாங்கியவர். அவர், தான் அந்த நிலத்தை உழுது செம்மைப்படுத்தியபோது பூமியிலிருந்து மிகப் பெரிய பொக்கிஷம் ஒன்று கிடைத்ததாகச் சொன்னார். தான் நிலத்தை மட்டுமே வாங்கியதால் அந்த பொக்கிஷத்தைத் தான் உரிமை கொண்டாட முடியாது என்றும் அது அந்த நிலத்தை விற்றவருக்குதான் சொந்தம் என்றும் கூறினார்.

ஆனால் நிலத்தை விற்றவரோ, எப்போது தான் நிலத்தை விற்றோமோ அப்போது அந்த நிலம் மட்டுமல்லாமல் அதனடியில் உள்ள அனைத்துமே வாங்கியவருக்குதான் சொந்தம் என்றும் அதில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்தார். தர்மருக்கு தர்ம சங்கடமாகிவிட்டது.

இருவருமே அந்த பொக்கிஷத்தைத் தனக்கு வேண்டாம் என்று கூறுகிறார்கள். என்ன செய்வது? பிறகு, அலசி ஆராய்ந்து யாருக்கு உரிமையானது என்று முடிவெடுக்கும்வரை அந்த பொக்கிஷத்தைத் தன் அரசின் கஜானாவில் வைத்திருக்குமாறு தீர்வு சொன்னார் தர்மர். அதன்படி அந்த பொக்கிஷம் கஜானாவுக்குப் போயிற்று.

பலவருடங்கள் கழித்து, அதே இருவர் மீண்டும் தர்மரின் சபைக்கு வந்தனர். ஒருவர் மீது அடுத்தவர் குற்றம் சாட்டினர். என்னவென்று? தான் விற்ற நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷம் தனக்கே சொந்தம் என்று விற்றவரும், நிலத்தை வாங்கியதால் அது தனக்குதான் சொந்தம் என்று வாங்கியவரும் இப்போது நேர்மாறாக வாதிட்டனர்.

அன்று அவ்விருவரும் பரந்த மனப்பான்மை உடையவர்களாக விளங்கியவர்கள்தான். ஆனால் அவர்களுக்குக் குடும்பம், பிள்ளைகள் என்று ஆனபிறகு, குடும்பத்தாரின் ஆசை, அபிலாஷைகளுக்காக தம் உரிமையை நிலைநாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர்கள் ஆளாயினர். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பதுபோல அவர்களுடைய போதனைகள் அவ்விருவரின் நட்பையும், நல்லெண்ணத்தையும் அழித்தன. வேண்டாம் என்று ஒதுக்கியதை வேண்டும் என்று கோர ஆரம்பித்தார்கள்.

இப்போது மீண்டும் தர்மருக்கு தர்மசங்கடம்! இந்த தர்மசங்கடத்துக்கு அவ்விருவர் மட்டும் காரணமல்ல, அவரே ஒரு காரணமாகவும் ஆகிவிட்டார். என்ன அது? அருகில் இருந்த கிருஷ்ணனைப் பரிதாபமாகப் பார்த்தார் தர்மர். ‘‘என்ன தர்மா, என்ன முடிவெடுக்கப் போகிறாய்? யாருக்குச் சாதகமாகத் தீர்ப்பு சொல்லப் போகிறாய்? அல்லது இருவருக்கும் சமமாக அந்த பொக்கிஷத்தைப் பகிர்ந்து அளிக்கத் தீர்மானித்திருக்கிறாயா?’’ என்று கேட்டார் கிருஷ்ணர்.

தர்மர் நெளிந்தார். ‘‘கிருஷ்ணா, இப்போது நானே குற்றவாளியாக நிற்கிறேன். தீர்ப்பு சொல்லும் தகுதி இல்லாதவனாக இருக்கிறேன்,’’ என்று தயங்கிச் சொன்னார். ‘‘ஏன், என்ன ஆயிற்று?’’ ‘‘கிருஷ்ணா, தனக்கு வேண்டாம் என்று இவர்கள் இருவரும் நம் கஜானாவுக்கு அளித்த பொக்கிஷத்தை, இத்தனை வருடங்கள் ஆயிற்றே, இவர்கள் மீண்டும் கோரவா போகிறார்கள் என்று எண்ணி அதனை நம் அரசாங்க சார்பில் பொது செலவுக்காகப் பயன்படுத்திக்கொண்டு விட்டேனே!’’ என்று பரிதாபமாகச் சொன்னார் தர்மர்.

கலகலவென்று சிரித்தார் கிருஷ்ணன். ‘‘சரிதான், கலியுகம் ஆரம்பித்துவிட்டது! பெருந்தன்மையுடன் திகழ்ந்தவர்கள் இப்போது சுயநலமிகளாக மாறிவிட்டார்கள். பொதுமக்களின் சொத்துகளைப் பாதுகாக்கவேண்டிய நீயோ அதை எடுத்து அரசாங்க செலவைச் செய்துவிட்டதாகச் சொல்கிறாய்.

மக்கள் அளிக்கும் வரிப்பணத்திலிருந்து அரசுச் செலவு செய்யவேண்டிய நீ, உன்னிடம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி கொடுக்கப்பட்ட பொக்கிஷத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம்? சரி, சரி, புறப்படத் தயாராக இரு. நாம் இந்த உலகைவிட்டு நீங்கும் நாள் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிதான் இது,’’ என்றார் கிருஷ்ணன்.

இப்படித்தான் பாவங்கள் அதிகரிக்கின்றன; புண்ணியங்கள் குறைகின்றன! இவ்வாறு பாவங்கள் அதிகரிக்கும்போது, அதனால் ஏற்படும் பூமியின் பாரத்தைக் குறைக்க பரந்தாமன் அவதாரம் செய்கிறார். அதாவது, பகவானின் தசாவதாரங்கள் என்றில்லை, மனித உருவிலேயே, ஞானிகளாகவும் அவர் அவதரிக்கிறார்.

நடமாடும் தெய்வம், மனிதருள் மாணிக்கம், மக்களை உய்விக்க வந்த மகான், ஜகத்குரு என்றெல்லாம் நாம் போற்றிப் புகழும் பல ஞானிகள், பகவான் அம்சமாகவே நம்மிடையே அவதரிக்கிறார்கள். நம் பாவங்கள் தொலைய நம்மை நல்வழிப்படுத்துகிறார்கள். அவர்களுடைய நேர்மையான அறிவுறுத்தலின்படி, போதனைப்படி நம் வாழ்க்கையை நாம் நேராக்கிக்கொள்ள முயற்சிக்கும்போது, இந்த ஜன்மக் கணக்கில் நம் பாவங்கள் குறைகின்றன, அவ்வாறு பாவங்கள் குறைவதாலேயே புண்ணியம் அதிகரிக்கிறது.

இது அடுத்த ஜன்மத்துக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளப்படும்! இப்படிப்பட்ட ஞானிகள் தம் கருணையால் நம்மிடையே தோன்றுகிறார்கள். ஆமாம், இறையம்சம் அப்படி ஒரு இரக்கத்தை, நம் மீது ஞானிகள் மூலமாக செலுத்துகிறது. இதனை நம் பேறாகவே நாம் கருதிக்கொள்ள வேண்டும்.

சில ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் சில அற்புதங்களை நிகழ்த்தலாம். இதுகூட தன்பால் நம்மை ஈர்த்து அவர்கள் காட்டும் நல்வழியில் நம்மை நடத்துவதற்குதான். உணவுப் பிரசாதம் கொடுத்து, நாம் அடிக்கடி கோயிலுக்குப் போகும் பக்தியைத் தூண்டுவதில்லையா, அப்படித்தான்! சில ஞானிகள் பின்னாளில் நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். இதுவும் ஒரு தெய்வாம்சம்தன்.

ஆனால், இவர்களாலும், இறைவன் தீர்மானிப்பதை மீற முடியாது என்பதும் உண்மை. இந்த ஞானிகள் அடையாளத்துக்காகப் பெயர்கள் வைத்துக்கொண்டிருப்பார்களே தவிர, தங்களை அதற்கும் மேலாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளமாட்டார்கள். உடனிருப்பவர்கள், ஞானிமீது உணர்வுபூர்வமாக பக்தி பூண்டிருப்பவர்கள், அவர் விரும்பாமலேயே அவரைப் பற்றி மிகையாகப் பேசுவதும், அவரை விளம்பரப்படுத்துவதுமாக இருப்பார்கள்.

சில இடங்களில் அவர்மீது இருக்கும் அபிமானம் காரணமாக அவரை போன்ற இன்னொரு ஞானியை அவதூறாகப் பேசவும் அவர்கள் தயங்குவதில்லை. இதை எந்த உண்மையான ஞானியும் விரும்புவதில்லை என்பதுதான் யதார்த்தம். இத்தகைய போலி விளம்பரங்களால் தம் செல்வாக்கு உயர்வதையோ, தாழ்வதையோ அந்த ஞானிகள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

அவர்கள் எந்த சலனத்துக்கும் ஆட்படாமல் தம் தெய்வீகக் கடமையை நாள்தவறாமல் நிறைவேற்றிக்கொண்டிருப்பார்கள். அந்தக் கடமையில் பொதுநலன்தான் முக்கியமாக இருக்குமே தவிர, தன் சுய பிரபலம் கொஞ்சமும் தென்படாது. துரதிருஷ்டவசமாக இப்போதைய அடியார்கள் ஞானியரின் உண்மையான நோக்கத்தை நிறைவேறாமல் செய்துவிடுவதிலேயே, அவர்களே அறியாமல் குறியாக இருக்கிறார்கள்! அதாவது இறையம்சம், அவதாரமாக இறங்கியிருக்கும்போது அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அந்த அவதாரத்தையும் தமக்குச் சமமானதாக, மிகவும் மலிவாகக் குறைத்துவிடவும்தான் இப்போதைய அடியார்கள் செயல்படுகிறார்கள்!

(தொடரும்)

-பிரபுசங்கர்