பிரபஞ்சத்தின் இருதயத் தானமே தில்லை



-பூசை எஸ்.ஆட்சிலிங்கம்

‘கோயில்’ என்று சைவர்களால் கொண்டாடப்படும் திருத்தலம் சிதம்பரம். தில்லைமூதூர் என்று அன்பர்களால் கொண்டாடப்படும் இத்தலத்தின் தோற்றம் பற்றிய செய்திகள் பலவாறு முயன்றபோதிலும் அறிய முடியாதவாறான பழைமையை உடையது. பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பரம்பொருள் அதன் இருதயத் தானமாகச் சிதம்பரத்தை தோற்றுவித்தது.

அதிலிருந்தவாறே தாம் படைத்த பிரபஞ்சத்தை இயக்கத் தொடங்கியது. இருதயத் தானமாகிய அப்புண்டரீகபுரத்தில் தாம் ஆடும் பரமானந்தத் தாண்டவத்தால் பிரபஞ்சத்தில் ஓயாது ஐந்தொழிலை நடத்தி அதை ஆட்டுவிக்கின்றது. பரமாகாசமாக விரிந்துள்ள இடமே தில்லை. தன்னுள் சிதாகாசமென்னும் சிற்சபையாக விளங்க, அதனுள் தமது ஆனந்தத் தாண்டவத்தைப் பெருமான் ஆடிக் கொண்டிருக்கின்றார்.

உலக இயக்கத்திற்கு ஆதாரமான இறைவனின் ஆனந்தத் தாண்டவம் நிகழுமிடமான புண்டரீகபுரம் தில்லையம்பலம். இதுவே சிவராஜதானியாகும். ஆதியில் அங்கு தில்லை மரங்கள் அடர்ந்த காடு பரவி இருந்தது. அக்காட்டினுள் சிவனருளால் உண்டான சிவகங்கை தீர்த்தமும் அதன் கரையில் அட்சய வடமான ஆலமரமும் இருந்தன. அதன் கீழிருந்தே சிவபெருமான் அலகிலா விளையாட்டை நடனத்தால் சூட்சும நிலையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.

அந்தப் பரந்த ஆலமரத்தின் கீழ் ஒப்பிலாததாய் முளைத்த சிவலிங்கமானது திருமூலட்டானர் என்ற பெயரில் விளங்கி வருகிறது. அந்தச் சிவலிங்கத்தைப் பூஜிப்பதற்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவர்களே தில்லை மூவாயிரவர் ஆவர். ஒருசமயம் பிரம்மதேவன் அந்தர்வேதியில் யாகமொன்றைச் செய்யத் தொடங்கினார். அந்த வேள்விக்கு, உயர்ந்த வேத அந்தணர்கள் வேண்டியிருந்ததால், தில்லையில் இருந்த மூவாயிரவரையும் அங்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

அதனால் மூலட்டானரையும், ரகசிய ஸ்தானத்தையும் தேவர்களே நெடுங்காலம் பூஜித்து வந்தனர். ஆல நீழலில் விளங்கும் ஆதி சிவலிங்கத்தை வழிபட்டுப் பேறுபெற்ற எண்ணிலாதவர்களில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி முனிவர் மூவரும் முதன்மையானவர்கள். இவர்கள் பெருமானின் நடனத் திருக்கோலத்தைக் காண இங்கே வந்து தில்லை வனத்தின் நடுவேயிருந்த பெருமானை வழிபட்டு வந்ததுடன், அரிய தவத்தையும் மேற்கொண்டனர்.

அவர்களுடைய தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஒரு தை மாதத்தில் வியாழக்கிழமையும் பெளர்ணமியும் கூடிய தைப்பூச நன்னாளில் தனது நடனக் கோலத்தைக் காட்டினார். அவரது ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்த பூதகணங்கள் பலவிதமான இசைக் கருவிகளை இசைத்தனர்.

சரஸ்வதி வீணை மீட்ட, இந்திரன் குழல் ஊத, பிரம்மன் தாளமிட, திருமால் மத்தளம் கொட்ட, பானுகம்பன் ஆயிரம் முகங்களால் சங்குகளை ஊத, வாணன் ஆயிரம் கரங்களாலும் பஞ்ச வாத்தியங்களை முழக்கி இசை மழை பொழிய, எல்லையற்றதோர் இன்பவெள்ளம் எங்கும் பொங்கிப் பாய்ந்தோடப் பெருமானின் திருநடனம் நிகழ்ந்தது.

அங்கு நடைபெற்ற எல்லையில்லா ஆனந்தக் கூத்தைக் கண்டுகளித்த அனைவரும் இணையிலா மகிழ்வு எய்தினர்.தேவர்கள் பெருமானிடம் இந்தக் காட்சி நினைவில் நீங்காதிருக்கும் பொருட்டு ஞானசபையாக ஓர் ஆலயம் அமைய வேண்டுமென்று வேண்டிக் கொள்ள சிவபெருமான் அப்படியே ஆகட்டுமென்றார்.

அதுமுதல் எல்லோரும் கண்டு மகிழ, தேவர்கள் இயற்றிய பொற்சபையில் நின்று பெருமான் திருநடனம் புரிந்து கொண்டிருக்கின்றார். வியாக்ரபாத முனிவரின் அருள்பெற்ற இரண்யவர்மன், இங்கு பொற்சபையுடன், ஸ்ரீவிமானம் திருக்கோபுரங்கள் ஆகியவற்றுடன் திருக்கோயிலை எழிலுற அமைத்தான். சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்தான்.

நாள் பூசைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ததுடன், ஆனி, மார்கழி மாதங்களில் நிகழும் இருபெரும் திருவிழாக்களையும் ஏற்படுத்திச் சிறப்புற நடத்தினான். அந்தர்வேதிக்குச் சென்றிருந்த தில்லை மூவாயிரவரை அழைத்து வந்து மீண்டும் இத்தலத்தில் குடியமர்த்தினான். எண்ணற்ற திருப்பணிகளைச் செய்தவாறு மகிழ்ச்சியுடன் நெடுங்காலம் அரசு புரிந்தபின் சிவனடியைச் சேர்ந்தான்.

அதன்பிறகு பூமண்டலத்தை அரசோச்சிய அனேக அரசர்களும், கனதனவான்களும் தில்லையம்பலத்திற்குப் பொன் வேய்ந்தும், பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டும் புண்ணியம் பெற்றனர். காலங்கள் தோறும் சிதம்பரம் அன்பர்களால் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.