இறைவன் திருநடனம் புரியும் இரு சபைகள்



நடராஜர், உருவத்திருமேனியாக எழுந்தருளி அன்னை சிவகாமி காண ஆடிக் கொண்டிருக்குமிடமே சிற்சபையாகும். சித் என்பது உயிர்களின் இருதய மண்டலத்துள் விளங்கும் சிற்சபையைக் குறிக்கிறது. அது அணுவிற்குள் அணுபோல் சிறியது. ஒவ்வொரு உயிரின் இதயமான சிற்றறைக்குள் ஆடும் பிரானே நாம் காணும் வகையில் அமைந்த இந்தப் பொன்மயமான அம்பலத்துள்ளேயும் ஆடிக் கொண்டிருக்கின்றான்.

இந்த நடராஜப் பெருமான் தனது பின் கரங்களில் உடுக்கையும் அனலும் விளங்க, வலது முன்கரத்தில் அபய முத்திரை தாங்கி, இடக்கையை மார்பின் குறுக்காக வீசியபடியுள்ளார். இடது கரம் வீசுகரம் எனப்படுகிறது. வலது திருவடியைச் சற்று வளைத்து முயலகன் மீது ஊன்றி நின்று ஆடுகிறார். பீடத்தில் குடமுழா முழக்கும் பூதகணமும், தாளமிடும் பூதகணமும் உள்ளன.

இடதுகாலை எடுத்து வலப்புறம் வீசியுள்ளார். எடுத்து வீசியாடும் தூக்கிய திருவடியைக் குஞ்சிதபாதம் என்று அழைக்கின்றனர். ஆட்டத்தில் வேகமில்லை என்பதால், சடைகள் பின்னே தாழ்ந்துள்ளன. நடராஜப்பெருமான் எப்பொழுது சர்வாலங்காரத்துடனேயே காட்சியளிக்கிறார். நடராஜரின் இடப்புறத்தில் சிவகாமி அம்பிகை இரண்டு கரங்களுடன் நின்றவாறு காட்சி அளிக்கிறார்.

இவளும் உயர்ந்த ஆபரணங்களை அணிந்து அலங்காரத்துடன் காட்சியளிக்கின்றாள். இவர்கள் எழுந்தருளியுள்ள மேடைக்குப்பிரணவ பீடம் என்பது பெயர். இதன் மீது பத்துக் கால்களைக் கொண்ட விமானம் அமைந்துள்ளது. இதன் நான்கு கால்கள் நான்கு வேதங்களையும் எஞ்சிய ஆறு கால்கள் வேதத்தின் ஆறு அங்கங்களையும் குறிக்கின்றன.

நடராஜருக்கு முன்பாக ஸ்படிக லிங்கமும், ரத்தின சபாபதியும் அழகிய தனித்தனி பெட்டகங்களில் எழுந்தருளியுள்ளனர். மேலும் முகலிங்கம், ரகசியம், பைரவர், ஸ்ரீபாதுகை ஆகிய மூர்த்தங்களும் இங்குள்ளனர். இந்தச் சிற்சபையின் அடிப்பகுதி கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. சுவர்கள் மரத்தாலானவை. இதில் இருபத்தெட்டுத் தூண்கள் இடம் பெற்றுள்ளன.

சிற்சபை, கனகசபை ஆகியவற்றின் மேற்கூரைகள் குடிசை வடிவில் நான்குபுறமும் வளைவாக அமைந்திருக்கின்றன. ஆதியில் இது புல்லால் வேயப்பட்டிருக்கலாம் என்றும், பின்னாளில் அதே அமைப்புடன் இரணியவர்மனால் பொன்னால் வேயப்பட்டது என்றும் கூறுகின்றனர். இதன்மீது ஒன்பது தங்கக் கலசங்கள் உள்ளன. இவை ஒன்பதும், வாமை முதலான ஒன்பது சக்திகளைக் குறிக்கின்றன.

விமானத்தின் வளைந்துள்ள அமைப்பு தண்ணீர் நிற்காத அளவுக்கு சரிவாக உள்ளது. கருவறையைச் சுற்றிலும் நீராழியான சிறு சுற்றாலை அமைந்துள்ளது. இந்தச் சுற்றாலையை 43 தூண்கள் தாங்குகின்றன. இந்தத் தூண்கள் யாவும் நேர்த்தியாக கருங்கல்லால் வட்ட வடிவில் செய்யப்பட்டு, மெருகூட்டப்பட்டு வழவழப்பாக உள்ளன.

நீராழி பத்தி எனப்படும் இந்தசுற்றாலையில் பத்து பலிபீடங்களும் பத்து நந்திகளும் அமைந்துள்ளன. இவை தசதிக் பாலகர்களைக் குறிப்பதாகும். கனகசபைக்கும் சிற்சபைக்கும் இடையே உள்ள இடைநாழியின் மேற்கிலும் கிழக்கிலுமே அணுக்கன் வாயில்கள் அமைந்துள்ளன. வாயில்களின் முன்புறம் படிகள் அமைந்துள்ளன.

படிகளின் மீதேறி அன்பர்கள் நடராஜரை நெருக்கத்தில் நின்று தரிசிக்கின்றனர். இந்தச் சிற்சபையின் முன்புறம், மூன்று புறமும் மரப்பலகைகளால் மூடப்பட்டுள்ளது. தெற்குப் பகுதியில் மட்டும் நடுவில் வாயிலும் மற்றைய இடங்களில் ஜன்னல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஜன்னலையொட்டி சங்கநிதி, பதஞ்சலி, வியாக்ரபாதர் திருவுருவங்கள் உள்ளன.

சிற்சபையான கருவறையைச் சுற்றி மேடைமீது பார்வைக்கு எளிதில் புலனாகாத வகையில் அமைந்த ஒரு திருச்சுற்று உள்ளது. இதற்கு ஆனந்தப் பிராகாரம் என்பது பெயர். இதன் ஒரு பக்கத்தில் மட்டும் செல்வதற்கு வழியுள்ளது. மற்றைய பகுதி மூடப்பட்டுள்ளது. ஆனந்தம் முடிவற்றது என்பதால், இந்த அமைப்பில் உள்ளது என்கின்றனர்.

சிற்சபைக்கு இணையாக அதற்குத் தெற்கில் மகாமண்டபமாக இருப்பதே கனகசபையாகும். வடபுறம் சிற்சபையின் தென்பகுதியாக இருக்க, எஞ்சிய மூன்று பக்கங்களும் கதவுகள் உள்ளன. இதிலுள்ள பதினெட்டுத் தூண்களும் பதிணெண் புராணங்களைக் குறிக்கின்றன. கனகசபையானது சிற்சபை அமைந்துள்ள மேடையை விடச் சற்று குறைவான உயரம் கொண்ட மேடை மீது அமைந்துள்ளது.

கனக சபையில் இருந்து சிற்சபைக்குச் செல்ல அமைந்த வாயிலில் ஐந்து படிகள் உள்ளன. இவையே பஞ்சாட்சரப் படிகள் என்றும், திருக்களிற்றுப்படி என்றும் அழைக்கப்படுகின்றன. கனகசபையின் மீதுள்ள கூரையும், சிற்சபையின் கூரையைப் போன்றதாயினும், ஆனால், இந்தக் கூரை செப்பேடுகளால் வேயப்பட்டுள்ளது. இதன் உச்சியிலும் ஒன்பது கலசங்கள் உள்ளன. (இதுவும் முன்னாளில் பொன்வேய்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.)

சிற்சபையும், கனகசபையும் தம்முள் இணைந்தவை. இவை இரண்டுக்கும் பொதுவானதாக முதல் பிராகாரம் அமைகிறது. இரண்டடுக்கு திருமாளிகைப் பத்தி மண்டபத்துடன் கூடிய இந்தப் பிராகாரத்திற்கு விக்ரமசோழன் திருமாளிகை என்பது பெயர். திருமாளிகைப் பதியின் அடிப்பட்டைப் பகுதியில் திருவிளையாடற்புராணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

திருமாளிகைகளில் அமைந்துள்ள தனித்தனி அறைகளில் மேற்கில் கூத்தாடும் பிள்ளையார், அண்ணாமலையார், வள்ளி தெய்வயானை உடனாய ஆறுமுகப்பெருமான் ஆகியோர் உள்ளனர். ஆறுமுகப்பெருமானுக்கு வடக்கில் மேல் அடுக்குக்குச் செல்ல படிகள் உள்ளன. இப்படிகள் வழியாக மேலே சென்றால் ஆகாச லிங்கம் அமைந்துள்ள சந்நதியை அடையலாம்.

வடக்குப் பிராகாரத்தில் மேற்குக் கோடியில் பள்ளியறை உள்ளது. அதையடுத்து ஜைமினியின் திருவுருவம் உள்ளது. கிழக்கு முனையில் தெற்கு நோக்கியவாறு பிட்சாடனர் உள்ளார். அவருடன் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உள்ளனர். கிழக்கில் பைரவர், சூரியன், சமயக்குரவர், நால்வர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதன்தெற்கில் இரண்டு பெரிய கண்டாமணிகள் உள்ளன.

கனகசபை, சிற்சபை ஆகியவற்றைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் மேற்கேயுள்ள பிராகாரம் சிறியதாகவும், கிழக்கேயுள்ள பிராகாரம் அகலமாகவும் உள்ளன. இந்தப் பிராகாரத்தில் கனகசபையை ஒட்டியவாறு பெரிய உருண்டையான தூண்களால் தாங்கப்படும் ஸ்ரீபலி (மரப்பந்தல்) மண்டபம் உள்ளது.

இதன் கூரையிலுள்ள வேலைப்பாடுகள் உன்னதமானவை. சிற்சபைக்குக் கிழக்கில் பரமானந்தகூபம் எனும் கிணறும், அதனையொட்டித் தெற்கு நோக்கியவாறு சண்டேஸ்வரர் சந்நதியும் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நதியில் ஆகமம் கூறும் நான்முக ஆதிசண்டீசரும் அறுபத்து மூவரில் ஒருவரான பக்த சண்டீசரும் எழுந்தருளியுள்ளனர். இரண்டு சண்டேஸ்வரருக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன.

முறைக்காரர் (அன்றைய பூஜையை நடத்தும் தீக்ஷிதர்) பரமானந்த கூபத்தின் அருகில் சண்டேஸ்வரர் சந்நதியில் இருந்து விபூதி தருகின்றார். கனகசபையில் நாள்தோறும் ஸ்படிக லிங்கத்திற்கு ஆறுகால பூஜை செய்யப்படுகிறது. இங்கிருந்தவாறே நடராஜருக்குத் தீபாராதனை செய்யப்படுகின்றது. நடராஜருக்குரிய ஆறு அபிஷேகங்களில் நான்கு அபிஷேகங்கள் கனக சபையில் வைத்தே நடத்தப்படுகின்றன.