முதலில் திருமூலட்டானர், பிறகுதான் நடராஜர்!



பிரபஞ்சத்தினைத் தோற்றுவித்த பரமசிவம், அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் அனவரத ஆனந்தத் தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கும் தலம் சிதம்பரம் ஆகும். ஆதியில் இந்தச் சிதம்பரத்தில் தில்லைவனத்தையும், அதன் நடுவே சிவகங்கை எனும் திருக்குளத்தையும், அதன் கரையில் பெரிய ஆலமரத்தையும் தோற்றுவித்த பெருமான், அம்மரத்தின் கீழ் ஜோதிர்மயமான சிவலிங்க வடிவமாக எழுந்தருளினார்.

பிரபஞ்சத்திற்கு மூலகாரணமான இடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டிருப்பதால், அந்த லிங்கமானது திருமூலட்டானநாதர் என்று அழைக்கப்படுகின்றது. தில்லைப் பெருங்கோயிலில் திருமூலட்டானர் சந்நதி இரண்டாம் பிராகாரத்தில் நடராஜருக்கு ஈசான திக்கில் (தென் கிழக்கில்) கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்னும் அங்கங்களைக் கொண்டது.

மகாமண்டபத்தின் வடக்கில் தெற்கு நோக்கியவாறு அமைந்த சந்நதியில் உமையம்மை உமா பார்வதி என்னும் பெயருடன் எழுந்தருளியுள்ளார். இங்கு பதஞ்சலி, வியாக்ரபாதர் திருவுருவங்கள் உள்ளன. மூலட்டானர், உமா பார்வதி ஆகிய இருவருடைய சந்நதி வாயில்களில் துவார பாலகர்களும் துவார பாலகியர்களும் உள்ளனர்.

திருமூலட்டானரைச் சுற்றியுள்ள பிராகாரத் திருமாளிகைப்பத்தியில் அறுபத்து மூவர் திருவுருவங்கள், ஆலமரத்தின் புடைப்புச் சிற்பம், பல்வேறு லிங்கங்கள், அர்த்தநாரீஸ்வரர் வடிவம் முதலியவை இடம் பெற்றுள்ளன. திருமூலட்டானத்தில் நாள்தோறும் நான்கு காலபூசை நடைபெறுகிறது. மன்று தொழுத பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி முதலான எண்ணிலாதோர் இப்பெருமானை வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.

திருமூலட்டானருக்கு நேராக வெளிப்பிராகாரத்தில் மாக்காளையான பெரிய வடிவிலான ரிஷபமும், பெரிய வடிவிலான பலிபீடமும் உள்ளன. இந்தச் சந்நதிக்கு நேராகவே கிழக்குக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. திருமூலட்டானரை வணங்கிய பின்னரே நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்பது பண்டைய மரபாகும்.

அது என்ன திருக்களிற்றுப் படிகள்?
உயிரினங்களில் வடிவில் மிகப்பெரியதான யானையின் மீது ஏறி அமர, அந்த யானையே தனது காலைப் படியாகத் தந்து உதவ வேண்டும். யானையின் விருப்பமின்றி அதன்மீது ஏறி அமரமுடியாது. அதுபோல் இறைவனின் அருளின்றி அவனை அடைய முடியாது. அவன்
அருளாலேயேதான் அவன் தாளை அடைய முடியும்.

யானையைப் போல் தன்மீது ஏறுபவர்களைத் தகுதியால் தானே உயர்த்தும் படிகளை யானைப் படிகள் என்பர். ஆண் யானைக்குரிய பெயர்களில் ஒன்றான ‘‘களிறு’’ என்னும் பெயரால் இத்தகைய படிகள் ‘‘திருக்களிற்றுப்படிகள்’’ என்று அழைக்கப்படுகின்றன. சிதம்பரத்தில் முகமண்டபமான கனகசபையையும், கருவறையான சிற்சபையையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள ஐந்து படிகளே திருக்களிற்றுப்படிகள் என்று அழைக்கப்படுகின்றன.

கனகசபையைவிடச் சிற்சபை சற்று உயரத்தில் அமைந்திருப்பதால், இந்த ஐந்து படிகளின் மீதேறி அங்குச்செல்ல வேண்டும். ஐந்தெழுத்தான பஞ்சாட்சரமே இங்கு ஐந்து படிகளாக விளங்குவதால், இவை பஞ்சாட்சரப்படிகள் என்றழைக்கப்படுகின்றன. இவை அன்பர்களைத் தகுதியால் உயர்த்தும் படிகளாகும்.

இந்தப் படிகள் அரசியல் வரலாற்றிலும், இலக்கிய வரலாற்றிலும் தனியிடம் பெற்றுள்ளன. சோழ மன்னர்கள் முடி சூடுவதற்கு முன்பாக இப்படிகளில் அமர்ந்து அபிஷேகம் செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. இலக்கிய வரலாற்றில் இரண்டு நூல்கள் இந்தப் படிகளோடு தொடர்பு கொண்டவை. சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கின் வரிசையில் இரண்டாவது நூல் இப்படிகளின் பெயரால் ‘திருக்களிற்றுப்படியார்’ என்றழைக்கப் படுகிறது.

திருக்களிற்றுப்படியாரை இயற்றியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். நூறு வெண்பாக்களால் ஆன இந்நூல், சிவானுபூதி நூலாகும். களிற்றுப்படிபோல் தன்னிடம் வந்தாரை மேன்நிலைக்கு உயர்த்தும் என்பதால் இந்நூல் திருக்களிற்றுப்படியார் எனப்பட்டதென்பர். இந்நூலை இயற்றிய பின் தில்லைக்குச் சென்ற உய்யவந்த தேவநாயனார் அதைப் பஞ்சாட்சரப் படிகள் மீது வைத்து வணங்கினார்.

சிவபெருமான் ஆணைப்படி, படியின் ஓரத்தில் இருந்த கல் யானை உயிர் பெற்றுத் தனது நீண்ட துதிக்கையால் அந்நூலை எடுத்து நடராஜப் பெருமானின் கரத்தில் அளித்தது. அதைக் கண்டு எல்லோரும் அதிசயித்தனர். அதனால் அந்நூலுக்குத் திருக்களிற்றுப்படி என்று பெயரிட்டனர். சிறப்பை நோக்கி ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து அந்த நூலைத் திருக்களிற்றுப்படியார் என அழைக்கின்றனர்.

பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தை அருளியவர் மணிவாசகர். அவரிடம் சிவபெருமான் சென்று அந்நூலைத் திரும்பக் கூறச் செய்து, தன் கைப்பட எழுதிக் கொண்டதுடன், அதன் கீழ், ‘தில்லைச் சிற்றம்பலவன்” என்று கையொப்பமிட்டு அந்த ஏடுகளை இந்தப்படிகளின் மீது வைத்து விட்டுச் சென்றார். திருவாசகத்தை முதன் முதலாகத் தாங்கிய பெருமை கொண்டவை இந்தப் படிகளாகும்.

தில்லைக்கு வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘திருக்களிற்றுப்படியின் மருங்கே நின்று...’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. சேரமான் பெருமான் நாயனார் தில்லைக்கு வந்து பெருமானை வழிபட்ட பின், இத்திருப்படிகளுக்குக் கீழ் நின்று பொன்வண்ணத்தந்தாதியைப் பாடியதைச் சேக்கிழார், ‘சீரார் பொன்வண்ணத்தந்தாதி திருப்படிக்கீழ் பாராதரிக்க எடுத்து ஏற்றிப் பணிந்தார் என்றும், அதைக் கேட்டுச் சிவபெருமான் தனது சிலம்போசை அவருக்குக் கேட்கும்படிச் செய்தார்’ என்றும் பெரியபுராணத்தில் குறித்துள்ளார்.

பெரியபுராணத்தில் இது திருப்படி என்று குறிக்கப்பட்டுள்ளது. இப்படி இலக்கிய உலகில் தனிச்சிறப்புப் பெற்றதாக இப்படிகள் விளங்குகின்றன. இப்படிகளின் சிறப்பு கருதி அன்பர்கள் தத்தம் ஊர்களில் அமைந்துள்ள நடராஜர் சந்நிதிகளிலும் பஞ்சாட்சரப் படிகளான இந்தத் திருக்களிற்றுப்படிகளை அமைத்துள்ளனர். சமய வரலாற்றில் திருக்களிற்றுப்படிகள் தனியிடம் பெற்றுள்ளன.

குஞ்சித பாதப் பிரசாதம்
நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடிக்குக் குஞ்சிதபாதம் எனும் சொல், உச்சியில் இருப்பது, வளைவானது என்று பல பொருள்களைத் தருவதாகும். இறைவனின் இந்தத் தூக்கிய திருவடியே உயிர்களுக்கு முக்தியின் பத்தினைத் தருகின்றது. குஞ்சிதபாதத்தைத் தமிழில் ‘எடுத்த பொற்பாத’மென்றும், ‘தூக்கிய திருவடி’யென்றும், ‘வீசியாடும் திருவடி’ எனவும் அழைக்கின்றனர்.

‘இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்கிறார் அப்பர் சுவாமிகள். இறைவனின் குஞ்சிதபாதத்தைப் போற்றித் துதிக்கும் வகையில் தனி நூல்கள் பல உள்ளன. அவற்றுள் உமாபதி சிவாச்சாரியார் அருளிய குஞ்சிதாங்கிரிஸ்வதம் என்னும் நூல் புகழ் பெற்றதாகும். மக்களும் குஞ்சிதபாதம் என்ற பெயரைச் சூட்டிக் கொள்கின்றனர்.

தினமும் பூஜைவேளையில் தூக்கிய திருவடியில் சிறிய மாலையொன்று சாத்தப்படுகின்றது. இதற்கும் குஞ்சிதபாதம் என்பது பெயர். சூடிக் களைந்த குஞ்சிதபாத மாலை அன்பர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகின்றது. அதைப் பெறும் அன்பர்கள் தலையில் வைத்துக்கொண்டு பெருமானின் திருவடியே தம் தலை மீதிருப்பதாக நினைந்து வணங்குகின்றனர். நாள்தோறும் பூக்களாலும், விளாமிச்சை வேர்களாலும் தொடுக்கப்படும் குஞ்சிதபாத மாலைகள் பல அணிவிக்கப்படுகின்றன.

திருவடியே மணிமுடி!
சேர நாட்டில் களப்பால் எனும் நகரில் தோன்றியவர் கூற்றுவ நாயனார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் இவர் மாவீரர். தனது தோள் வலிமையாலும், வாள் வலிமையாலும் ஒரு நாட்டை உருவாக்கினார். அதற்கு மன்னனாக முடிசூட விரும்பிய அவர் தென்னகத்தில் முடி சூட்டும் உரிமை பெற்ற குடிகளில் தில்லைவாழ் அந்தணர்கள் உயர்ந்தவர்கள் என்பதை அறிந்தார்.

தனது படை வீரர்களோடு தில்லைக்கு வந்து தமக்கு முடிசூட்டும்படி வேண்டினார். தீக்ஷிதர்கள் ‘சோழர் குலத்துக்கு மட்டுமே முடி சூட்டும் உரிமை உடையோம்’ என்று கூறி, அவருக்கு முடிசூட்ட மறுத்து விட்டனர். மனதில் மிகுந்த வருத்தத்துடன் நாயனார் தம் நாடு திரும்பினார். சிவபெருமான் அவரது கனவில் தோன்றினார். தமது தூக்கிய திருவடியை மணிமகுடமாக அவருக்குச் சூட்டினார்.

நாயனார் திருவடியையே மணி முடியாகச் சூடி நெடுங்காலம் ஆண்டபின் சிவகதி சேர்ந்தார். இதன்மூலம் தூக்கிய திருவடி முத்தியின்பத்துடன் இவ்வுலகில் உள்ள உயர்ந்த அரசபோக இன்பங்களையும் தருமென்று அறியப்படுகிறது.

செம்புத் தாமரை தங்கமாக மாறியது!
ஆகாசத்தைத் திருமேனியாகக் கொண்டிருப்பவர் ஸ்ரீபைரவர். அதனால் ஆகாச பைரவர் என்று அழைக்கப்படுகிறார். ஆகாசத் தலமாகப் போற்றப்படும் தில்லையில் பைரவர் வழிபாடு சிறப்பாக உள்ளது. இத்தலத்தில் மூன்று இடங்களில் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். முதலாவதாக வடக்கு வாயிலின் காவலராக சிறிய சந்நிதியில் பைரவர் விளங்குகிறார். இரண்டாவதாக விக்ரமசோழன் திருமாளிகையான முதல் பிராகாரத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

இவை இரண்டும் கல்திருமேனிகளாகும். மூன்றாவதான ஆகாச பைரவர் உலாத் திருமேனியாக தில்லைச் சிற்றம்பலத்துள் எழுந்தருளியுள்ளார். சிற்சபையின் உள்ளே எழுந்தருளி இருக்கும் உலாத் திருமேனியான பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர் என்றும், சுவர்ண பைரவர் என்றும் அழைக்கின்றனர். அன்பர்களின் வேண்டுதலுக்கேற்ப இவருக்கு அபிஷேகம் செய்தல், வடை மாலை சாத்துதல் ஆகியவை நடைபெறுகின்றன.

ஸ்படிக லிங்க அபிஷேக வேளையில் மட்டுமே பைரவரை கனக சபையில் எழுந்தருளுவித்து, அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. முன்னாளில் தில்லைவாழ் அந்தணர்கள், பிறரிடம் பொருள் பெறுவதில்லை. தினமும் பூஜை செய்வோர் செம்பால் செய்த தாமரையொன்றை பைரவர் பாதத்தில் வைத்து விட்டுச் செல்வர் என்றும், மறுநாள் சென்று பார்க்கையில் அது தங்க மலராக ஆகிவிடுமென்றும், அதைக் கொண்டே வாழ்வை நடத்தினார் என்றும் செவிவழிச்செய்திகள் கூறுகின்றன.

இவருடைய வாகனமான நாய் பக்கத்தில் நிற்கின்றது. காசியில் இறக்கும் உயிர்களை எமன் நெருங்குவதில்லை. அவ்வுயிர்களை கால பைரவர் சூலத்தால் குத்தி, வாதனைகளைத் தந்து, பாவங்களை கணப்பொழுதில் நீக்கி முக்கி அளிக்கின்றார். தில்லையம்பல பைரவர், அந்தக் கணநேரமும் கூட வேதனைப்படுத்தாது அன்பர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்து அருள்பாலிக்கின்றார். பைரவமூர்த்தியின் பல்வகைத் திருக்கோலங்களில் சட்டநாதர் வடிவமும் ஒன்றாகும். பைரவர் சட்டநாதராக தேவசபையில் அமைந்த மாடத்தில் எழுந்தருளியுள்ளார்.