உன் கடைக்கண்ணால் என் வாழ்வு சிறக்கும்!



மன இருள் அகற்றும் ஞானஒளி - 21

ஆழ்வார்களின் தலைமகனாக விளங்குகிற நம்வாழ்வார் உள்ளம் உருகி நமக்கு படைத்திட்ட தேனான திவ்யப் பிரபந்த பாசுரங்களில் ஒன்றுதான் இந்தப் பாசுரம். எந்த விஷயமாக இருந்தாலும் மனம் ஒன்றுபட வேண்டும். மன ஒருமைப்பாடு இல்லாவிட்டால் புறவாழ்க்கையில் சந்ேதாஷமாக இருப்பதுபோல் தெரியும். ஆனால், உள்ளே (Dustbin) குப்பைத் தொட்டிபோல் காணப்படும்.

பெருங்காயம் கரைவதுபோல் இந்த ஜீவாத்மா அந்த பரமாத்மா மீது கரைய வேண்டும். அப்போதுதான் மனதுக்கு அமைதி ஏற்படும். இல்லாவிட்டால் எண்ண அலைகளால் மனம் திண்டாடும். திண்டாட்டமான மனதில் நேர்மறைச் சிந்தனைகள் தோன்றாது. நேர்மறைச் சிந்தனைகள் தோன்றாத இதயத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றாமல் போய்விடும்.

சுற்றமும் சூழலும் சுகமாக இருக்காது சுமையாக இருக்கும். Moneyயால், பணத்தால் ஒன்றுபடுத்த முடியாததை மனத்தால்தான் எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்த முடியும். அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியில் அம்மையை அழுது தொழுதிருக்கிறார். ‘‘தரம் அன்று இவன் என்று’’ தள்ளத்தகாது என்ற வரி ஒன்று வரும்.

என்னை உன் பக்தன் இல்லை என்று முடிவு எண்ணி உதறிவிடாதே தாயே உன் கடைக்கண் பட்டால்தான் என் வாழ்வு சிறக்கும். புயலில் அகப்பட்ட படகுபோல் இல்லாமல் என்னால் இனிமையான தென்றல் காற்றை சுவாசிக்க முடியும், உன் அருள்வேண்டும் என்று மன்றாடுகிறார். அபிராமிபட்டரே அபிராமி அந்தாதியில் ஒரு அற்புத பாடலை வடித்தெடுத்து நமக்கு தந்திருக்கிறார்.

‘‘நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நினை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்; என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால் திருத் தங்கச்சியே!

அபிராமியிடம் கதறுகிறார். உன்னை வணங்கும்படியான ஒரு சூழ்நிலையை அடியேனுக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறாயே என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று ஆழ்வார்களும் நாயன்மார்களும் அடி மனதின் ஆசைகளை கொட்டித் தீர்த்திருப்பார்களே அந்த மாதிரி பட்டர் அபிராமியிடம் மன்றாடியிருக்கிறார்.

இறையருளைப் பெறுவது என்பது லேசான காரியம் இல்லை. நம்மை அந்த நாயகனிடம் இழந்தால்தானே நம்மை நாம் பரிபூரணமாக உணர முடியும். அதற்கு அவனுடைய அருள் நமக்கு முழுவதுமாக கிடைக்க வேண்டும். இதைத்தான் திருமங்கையாழ்வார் ‘‘கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு’’ என்று பரம்பொருளிடம் அப்பளிகேஷன் போட்டு வைக்கிறார்.

மனிதருள் பலரும் விரும்பி வேண்டுவது மீண்டும் பிறவாமையே. பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் அதற்கு ஒரே வழி நமக்கு கிடைத்த இந்த மனிதப் பிறவியில் நல்லதைச் செய்ய வேண்டும் அல்லது செய்யாமலிருக்க வேண்டும். பாவ மூட்டைகளை சுமக்காமல் இருக்க வேண்டும். திருவாசகம் படைத்த மாணிக்கவாசகர் பிறவித் துன்பத்தை அதன் தலை--களில் இருந்து விடுபட வேண்டும் என்ற ஆவலில் அற்புதப் படைப்பு...

‘‘புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’’

பிறவாமையே உயிர் பெறத்தக்க பெரும்பேறு என்கிறார் மணிவாசகப் பெருந்தகை நல்வினை தீவினை என்று இரண்டு வினைகள் நம்மை புளிய மரத்தை உலுக்கி எடுப்பதுபோல் எடுத்துவிடும். அப்பர் பெருமான் என்று பக்தி உலகத்தாரால் அழைக்கப்படுகிற திருநாவுக்கரசர் தமக்கு உரிய இறுதிப் பொருளும், உறுதிப் பொருளும் இறைவன் ஒருவனே என்று முழுமையாக உணர்ந்து வாழ்ந்தவர். அதனால்தான்,

‘‘எண்ணுகேன் என் சொல்லி
எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணில் அல்லால்’’

சிவனை தன் சிந்தனையில் வைத்து ஆராதிருக்கிறார். அகமும் புறமும் அவனையே சரணடைவதுதான் சாலச் சிறந்த வழி என்று இந்த ஊருக்கு எடுத்துச் சொன்ன உத்தமர் அப்பர் பெருமான். வைணவத்தின் உயிர் நாடியே சரணாகதிதான். நாம் அங்கங்கே அரைகுறையாகத்தான் நம் உணர்வுகளை தெரியப்படுத்திய வண்ணம் இருக்கிறோம்.

முழுவதுமாக நாம் மனம், மொழி, மெய்யால் ஒன்றுபட்டு உடலும் உள்ளமும் ஒரே பாதையில் பயணம் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் நம் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாறாக உடல் ஒரு பக்கமும் மனம் ஒரு பக்கமும் எதிரெதிர் திசையில் சென்றால் நாம் ஊருக்கு முறையாகப் போய்ச் சேர முடியாது. எனவே, மனம் ஒன்றுதல் என்பது இன்றியமையாதது. மிக முக்கியமானதும்கூட. அதற்கும் அவன் அருள்தான் வேண்டும். அவனை மனதாறவேண்டுவோம்.

ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்