கணவர் நலம்பெற தாலி காணிக்கை!



-கும்பகோணம்

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள நாகேஸ்வரன் கீழவீதியில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். ஆலயம் மேற்குதிசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான பிராகாரம். அதையடுத்து மகாமண்டபம்.

மகாமண்டபத்தின் இடதுபுறம் அன்னை காமாட்சியின் சந்நதி உள்ளது. எதிரே கருவறையில் ஏகாம்பரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் மேற்குதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். கார்த்திகை மாத சோமவாரங்களில் (திங்கட்கிழமைகளில்) இறைவனுக்கும், இறைவிக்கும் 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.

பலநூறு பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுவர். மாதப் பிரதோஷம் விழா இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கும், இறைவிக்கும் நான்கு கால ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத அமாவாசை அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் 32 திரவியங்களைக் கொண்டு சிறப்பான முறையில் அபிஷேகம் நடத்துகிறார்கள்.

இங்கு அருள்புரியும் அன்னை காமாட்சி, பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். எனவே அன்னையையும், இறைவனையும் தரிசிக்கவும் ஆராதனை செய்யவும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக இந்த ஆலயம் வருவதும், வேண்டுதல்களை நிறைவேற்றுவதும் தினசரி பக்தி நடவடிக்கையாக உள்ளன.

மாசி மகத்தன்று அன்னையும், இறைவனும் மகாமக குளம் சென்று பிற ஆலய உற்சவ மூர்த்திகளுடன்  தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கு பெற்று அருள்தரும் காட்சி அற்புதமான ஒன்றாகும். நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் அன்னை காமாட்சியை, விதவிதமாக அலங்காரம் செய்வர். இந்த அழகு அலங்காரத்தை கண்டு தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

பத்தாம் நாள் இறைவனும் இறைவியும் குதிரை வாகனத்தில் வீதியுலா வருவதுண்டு. இறைவனின் தேவக்கோட்டத்தில் துர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் திருமேனிகளைத் தரிசிக்கலாம். திருச்சுற்றில் மேற்கில் முருகன், வள்ளி-தெய்வானை சந்நதி உள்ளது. முருக பெருமானுக்கு கந்த சஷ்டி அன்று மகா அபிஷேகம் நடைபெறும். அன்று சிறப்பு ஹோமமும் நடைபெறுகிறது.

தீராத நோயால் அவதிப்படும் தன் கணவர் குணமாக வேண்டும் என்று வேண்டாத பெண்கள் கிடையாது. அப்படி இங்கே இறைவன் மற்றும் இறைவியிடம் வேண்டிக்கொள்ளும் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இவ்வகையில் தன் மனம் குளிர வைத்த தெய்வத்திற்கு தங்களால் முடிந்த வகையில் நன்றிக் கடனைச் செலுத்துவர்.

அல்லது பிரார்த்தனை செய்து கொண்டபடி வேண்டுதலை நிறைவேற்றுவர். இப்படி தங்கள் கணவர் குணமானபின் தான் வேண்டியபடி தன் கழுத்தில் உள்ள மாங்கல்ய  நாணில் உள்ள தாலியையே கழற்றி உண்டியலில் போட்டு நன்றிக் கடன் செலுத்தும் பெண்களும் இருக்கிறார்கள்! ஆம், அன்னை காளிகா பரமேஸ்வரியிடம் வேண்டிக்கொள்ளும் பெண் பக்தர்கள் இப்படித்தான் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

ராகுகால காளிகா பரமேஸ்வரிக்கென இக்கோயிலில் தனி ஆலயம் உள்ளது. அன்னையின் எதிரே மகா மண்டபத்தில் நந்தியும் பீடமும் இருக்க அன்னை சாந்த சொரூபியாய் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் ஆலய மகாமண்டப இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். 

வடக்கு திருச்சுற்றில் நந்திகேஸ்வரர், கிழக்கு திருச்சுற்றில் ஆஞ்சநேயர் மற்றும் நவகிரக நாயகர்கள் சந்நதி உள்ளன.  சிவாலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிச் சந்நதி இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும். மேற்கு திருச்சுற்றில் ராஜகணபதி தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு  சிறப்பு  அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இங்கு அருள்புரியும் ராகுகால காளிகா பரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகுகால நேரத்தில் காளிகா பரமேஸ்வரி அன்னைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

பௌர்ணமிதோறும் பரமேஸ்வரி அன்னைக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் விசேஷ பூஜை நடைபெறும். அன்று சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். அன்று அன்னை திருச்சுற்றில் உலா வருவதுண்டு. சித்ரா பௌர்ணமி அன்று அன்னைக்கு 32 திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

அன்று அன்னை சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவாள். பிற பௌர்ணமி நாட்களில் அன்னை தங்க கவசம் அணிந்து அருள்புரிவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று நடைபெறும் அன்னதானத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெறுவர்.

மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் அன்று அன்னை காளிகா பரமேஸ்வரி வீதியுலா வருவதுண்டு. அன்று அன்னைக்கு சிறப்பு ஹோமமும் நடைபெறும். இங்கு அன்னை காளிகா பரமேஸ்வரி சிவசக்தி சொரூபமாக, அமைதி தவழும் இன்முகத்துடன் காட்சி தருவது மனதை நிறைவு செய்யும்.

நவராத்தியின்போது வரும் வெள்ளிக்கிழமையன்று அன்னைக்கு சிறப்பு பூஜை நடைபெறுவதுடன் ஜாக்கெட் துணி, மஞ்சள், வளையல்கள், குங்குமம் போன்ற மங்கையரின் மங்கலப் பொருட்களை அன்று வரும் பெண் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர். ஆடிப்பூரம் அன்று அன்னையின் சந்நிதியில் நடைபெறும் குத்துவிளக்கு பூஜை மிகவும் பிரபலம்.

பெண்கள் பட்டுப்புடவை உடுத்தி வரிசையாக அமர்ந்து விளக்குக்கு பூஜை செய்யும் காட்சி பிரமிப்பூட்டும். அன்னையிடம் வேண்டும் பிரார்த்தனைகள்  யாவும் உடனுக்குடன் நிறைவேறுகின்றன என்று சொல்கின்றனர் பக்தர்கள். தங்களது கணவர் தீராத நோயால் அவதிப்பட்டாலோ, உயிருக்குப் போராடினாலோ பெண்கள் அன்னையிடம் வந்து மனமுருக கண்ணீர் மல்க வேண்டிக் கொள்கின்றனர்.

அன்னையின் கருணைப் பார்வை அவர்களுக்குக் கிட்டுகிறது.  அன்னையின் அருளால் அந்தப் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. மனம் நெகிழும் பெண்கள் அன்னையின் ஆலயம் வருகின்றனர். தங்களது மாங்கல்யத்தை நன்றி காணிக்கையாக செலுத்திவிட்டு மகிழ்வோடு இல்லம் திரும்புகின்றனர்.

குழந்தைப் பேறு வேண்டும் மகளிர் தங்களது  வேண்டுதல் நிறைவேறியதும் வெள்ளியில் செய்த சிறிய தொட்டிலை உண்டியலில் செலுத்தி தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர். அன்னை காளிகா பரமேஸ்வரி சந்நிதியின் முன் உள்ள தூண்களில்  சுதைவடிவில் அஷ்ட லட்சுமிகளும் காட்சி தருகின்றனர்.

தினசரி மூன்றுகால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 முதல் பகல் 12 மணிவரையிலும் மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். குடந்தை செல்வோர் ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியையும், ராகுகால காளிகா பரமேஸ்வரியையும் கண்குளிர தரிசித்து வரலாமே!

- ஜெயவண்ணன்