கலையரசன் கால் மாறி ஆடிய காரணம் என்ன?



மதுரை வெள்ளியம்பலம்

பெரும்பாலும் நடராஜரை வலது காலை ஊன்றி, இடது கால் தூக்கி திருநடனம் புரிந்த நிலையிலேயே நாம் எல்லாக் கோயில்களிலும் கண்டிருக்கிறோம். ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலுள்ள வெள்ளியம்பலத்தில் மட்டும் நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி தாண்டவம் ஆடுகிறார்.

நடராஜருக்கு ஆனி மாதம் நடக்கும் திருமஞ்சனம் முக்கியமானதாகும். தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் ஈசனுக்கு மாலைநேர பூஜைகள் செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வார்கள். ஆனித் திருமஞ்சனத்தையொட்டி நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சில ஆலயங்களில் இந்த ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். சிவபெருமான், திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தை தரும் தன்மையைக் கொண்டது. மேலும், வெம்மை மிகுந்த சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் நடராஜராகிய சிவபெருமான் கடுமையான வெப்பம் சூழ்ந்தவராகத் திகழ்கிறார்.

இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இவற்றில் ஆனித் திருமஞ்சனம் மிக முக்கியமானதாகும். நடராஜருக்கு ஐந்து நடனசபைகள் உள்ளன. சிதம்பரத்தில் இருப்பது பொன்னம்பலம். இங்கு அவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இருப்பது வெள்ளியம்பலம்.

இங்கு அவர் ஆடுவது சந்தியா தாண்டவம். திருநெல்வேலியில் இருப்பது தாமிர சபை. இங்கு ஆடுவது முனி தாண்டவம். குற்றாலத்தில் இருப்பது சித்திர சபை. இங்கு அவர் ஆடுவது திரிபுர தாண்டவம். திருவாலங்காட்டில் இருப்பது ரத்தினசபை. இங்கு ஆடுவது காளிதாண்டவம்.

நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி சந்தியா தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில் 24வது படலமாக கால் மாறி ஆடிய படலமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

நடராஜர் கால் மாறி ஆடியதன் காரணம் என்ன?
மதுரையில் மீனாட்சியம்மனுக்கு சுந்தரேஸ்வரருக்கும் நடைபெற்ற திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலி மகரிஷியும், வியாக்ரபாதரும் சிவனிடம், ‘‘இறைவா நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை பார்த்த பின்தான் உணவு அருந்துவது வழக்கம்,’’ என்றனர்.

இதைக் கேட்ட இறைவன் இவர்களின் நியமத்தை காக்கும் பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிப்பதற்காக வெள்ளியம்பலத்தை ஏற்படுத்தினார். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்டபின் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்தினர்.

மதுரையை ஆண்ட விக்ரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் அறுபத்து நான்கில் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். அவன் கற்காதிருந்த ஒரு கலை, நடனம். நடராஜப் பெருமான் நடனமாடிக்கொண்டிருக்கும்போது தான் அதனைக் கற்று ஆடுவது அவருக்கே அவமரியாதை செய்வது போல ஆகாதா என்று கருதி நடனம் கற்பதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான்.

இதே காலத்தில் வாழ்ந்த கற்காற் ’சோழன் என்ற மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். அப்போதுதான் ராஜசேகர பாண்டியன், நடனம் என்பது இறைவனே நாம் உய்யும் பொருட்டு நமக்காக உருவாக்கித் தந்திருக்கும் ஒரு கலை என்பதையும், அதனை மிகச் சரியாகப் பயின்று, பக்திப் பெருக்குடன் ஆடும்போது இறைவனுக்கு நாம் சமர்ப்பிக்கும் பக்தியாகவே அது மாறும் என்றும் உணர்ந்தான்.

உடனே நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெற்றான். இப்படி நடனம் கற்கும்போது உடம்பெல்லாம் வலியெடுக்க, நடனக் கலையைப் பயில்வதும், அதனைத் தொடர்ந்து ஆடுவதும் எத்தகையத் துன்பகரமானது என்பதை அனுபவித்து உணர்ந்தான். அறுபத்து நாலு கலைகளையும் கற்ற நிறைவில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீர்வாதம் பெற வந்தான்.

அவரை தரிசித்ததும், நடனம் கற்பதே உடல்வலி மிகுந்த கஷ்டமான விஷயமாக இருக்கும்போது, காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி நடனமாடி கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்பட்டான். இதை யாரிடம் எப்படி கேட்பது? தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதைப் பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி ஈசனிடம் கேட்பது என நினைத்து மனம் நொந்தான்.

இந்நிலையில் சிவராத்திரி திருவிழா வந்தது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு நடராஜரின் எதிரில் நின்று, ‘ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?’ என மனம் உருகிக் கேட்டான். ‘அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால் என் முன்னால் கத்தியை நிறுத்திவைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன்,’ என இறைவனிடம் கண் மூடி மன்றாடினான்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த ராஜசேகபாண்டியன் அப்படியே மெய்சிலிர்த்து நின்று விட்டான். ஆமாம், தன்மீது வெறும் பக்தி மட்டுமல்லாமல், பாசமும் காட்டிய பக்தனுக்காக இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார், நடராஜப்பெருமான். அதேசமயம், ‘எனக்காக கால்மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும்,’ என்ற வரமும் வாங்கி விட்டான்.

அன்றிலிருந்துதான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார். மதுரை வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறி ஆடிய சந்தியா தாண்டவம் குறித்து பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்பு பட்டயத்தில் தொடக்கத்திலேயே காணப்படுகிறது.

பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீசைலம் கோயிலில் ஆனந்த தாண்டவத்தை போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பம் உள்ளது. நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டே இருப்பதால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை திருமஞ்சனம் நடக்கும்.

சித்திரை மாத திருவோண நட்சத்திர தினம், ஆனி மாத உத்திரம் நட்சத்திர நாள், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் ஆகிய திருமஞ்சனங்கள் நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுபவை. மற்றவை வளர்பிறை திதியை வைத்து நடப்பவை. அதாவது மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் திருமஞ்சனம் நடக்கும். தன் பக்தனுக்காக கால்மாறி ஆடிய ஈசனை நாமும் தரிசித்து வளங்கள் பெறுவோம்.

- சந்தியா முரளிதரன்