சிரித்துச் சிரித்துச் சிறையிலிடுகிறார் திருவள்ளூவர்!



குறளின் குரல் - 62

வள்ளுவர் காட்டும் சிரிப்புகள் பலவிதம். காதலியின் புன்முறுவல், நண்பர்களின் சிரிப்பு, எள்ளி நகையாடுவோரின் சிரிப்பு, பகைமை கொண்டோரின் பொய்யான சிரிப்பு, உண்மையான மலர்ந்த சிரிப்பு என மனிதர்கள் சிரிக்கும் சிரிப்பில்தான் எத்தனை வகை! வள்ளுவர் எல்லாச் சிரிப்பையும் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்கிறார்.

`நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.’ (குறள் எண் 999)

பிறருடன் சிரித்துப் பேசி மகிழத் தெரியாதவர்க்கு இந்தப் பெரிய உலகம் பகலிலும் இருள் உடையதாய் இருக்கும். அடுத்தவர்களுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பழகி நட்புறவு கொண்டு வாழ்தலே வாழ்க்கை என்பதையும் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு வாழ்தல் சரியல்ல என்ற கருத்தையும் அழகாக `பண்புடைமை’ என்ற அதிகாரத்தில் பதிவு செய்கிறார்.

`இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.’ (குறள் எண் 621)

ஒரு செயலைச் செய்யும்போது சில இடையூறுகள் வராமல் இருக்குமா? இடையூறுகளைக் கண்டு அஞ்சினால் செயலைச் செய்து முடிக்க முடியுமா? துன்பம் வந்தால் அந்தத் துன்பத்தைச் சிரித்தே எதிர்கொள்ள வேண்டும். துன்பத்தை வெல்லச் சிரிப்பைத் தவிரச் சிறந்த ஆயுதம் வேறில்லை. கவிஞர் கண்ணதாசன் இந்தக் குறளால் கவரப்பட்டார்.

ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தில், `ஜிஞ்ஜினிக்கான் சின்னக்கிளி! சிரிக்கும் பச்சைக் கிளி!’ என்ற திரைப்பாடலில் `துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லிவச்சார் வள்ளுவரு சரிங்க!’ என்ற வரிகளில் வள்ளுவரின் இந்த உயர்ந்த கருத்தை பொதுமக்களுக்கு எளிமையாய்க் கொண்டு சேர்க்கிறார் அவர்.

`முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.’ (குறள் எண் 786)

முகத்தில் மட்டும் சிரிப்பைக் காட்டிப் பேசுவது நட்பாகாது. நெஞ்சத்திலும் மலர்ச்சியோடு உண்மையான அன்புடன் பழகுவதே நட்பாகும்.

`உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண் சாய்பவர்.’ (குறள் எண் 927)

எங்கே கள் கிடைக்கும் என அறிந்து மறைவாகக் கள்ளருந்தி விட்டு மயங்கிக் கிடப்பவர்களைக் கண்டு ஊரே சிரிக்கும். (என்ன ஆச்சரியம்! கள்குடித்து தெருவில் மயங்கிக் கிடப்போரின் மூதாதையர் வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள்!)

`முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.’ (குறள் எண். 824)

வெளியிலே சிரித்துப் பேசி உள்ளத்தில் வஞ்சம் வைத்துப் பழகுவோரிடம் அஞ்சி விலகுவதே நல்லது.

`நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.’ (குறள் எண் 817)

உள்ளத்தில் அன்பில்லாமல் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பழகும் தீயவர் நட்பைவிட, பகைவரால் வரும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையைத் தரும்.

`பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்.’ (குறள் எண் 187)

சந்தோஷமாகப் பேசி நண்பர்களாக ஆவது சிறந்தது. இது தெரியாத புறங்கூறுவோர் நமக்குப் பின்னால் நம்மைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி உறவினர்களைக் கூடப் பிரித்து விடுவார்கள்.

`மிகச் செய்து தம் எள்ளுவாரை நகச் செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.’ (குறள் எண் 829)
 
வெளியே நண்பர்போல் நடித்து மனத்தில் வெறுப்பு வைத்திருப்பவரைச் சிரித்துக் கொண்டே விலக்கிவிட வேண்டும்.

`நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.’ (குறள் எண் 782)
 
நண்பர்கள் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல. நண்பர்கள் தவறு செய்தால் கண்டித்து நல்வழிப்படுத்தவும் வேண்டும்.

`வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.’ (குறள் எண் 271)

உள்ளொன்று வைத்துப் புறமொன்று செயல்படும் வஞ்சகர்களின் பொய்யொழுக்கத்தைப் பிறர் அறியாமல் போகலாம். ஆனால் அவன் உடலில் கலந்திருக்கும் ஐந்து பூதங்களும் அவனின் உண்மைத் தன்மையை அறிந்து தமக்குள்ளே நகைக்கும். 

`இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.’ (குறள் எண் 1040)
 
என்னிடத்தில் ஒருபொருளும் இல்லையே என்று வருந்தும் சோம்பேறிகளைக் கண்டால் நிலமாகிய நல்லாள் தன்னுள் சிரித்துக் கொள்வாள்.
 
`நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.’ (குறள் எண் 304)

சினம் முகத்தில் சிரிப்பை அழித்துவிடும். மனத்தில் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும். சினத்தை விடப் பெரிய பகைவன் வேறில்லை.
 
`நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.’ (குறள் எண் 953)

மலர்ச்சியோடு சிரித்தல், இரக்க குணம் கொண்டிருத்தல், இனிமையாகப் பேசுதல், பிறரை மட்டம் தட்டாதிருத்தல் என்னும் இந்த நான்கும் நற்குடிப் பிறந்தோர்க்கு அடையாளங்கள்.

`செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகும்
ஆன்ற பெரியா ரகத்து.’ (குறள் எண் 694)

பெரியவர்களுடன் பழகும்போது அவர் காணப் பிறர் காதில் ரகசியம் பேசுவதும் பிறருடன் சேர்ந்து சிரித்தலும் முற்றிலும் தவிர்க்க வேண்டியவை ஆகும்.
 
`தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.’ (குறள் எண் 685)
 
தூதன் சொல்ல வேண்டியவற்றை மட்டுமே சொல்ல வேண்டும். அவற்றையும் சிரித்தவாறு மலர்ச்சியுடன் சொல்ல வேண்டும். தன் அரசனுக்கு நன்மை கிடைக்கும்படி அவன் பேச வேண்டும். காமத்துப் பாலிலும் பல இடங்களில் காதலன் காதலி இடையேயான சிரிப்பு பல பொருட்கள் உடையதாய்ப் பேசப்படுகிறது.

`யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.’ (குறள் எண் 1094)
 
காதலன் காதலியைப் பார்க்கும்போது அவள் நிலத்தைப் பார்க்கிறாளாம். அவன் அவளைப் பார்க்காவிட்டால், அவள் அவனைப் பார்த்து மெலிதாக நகைக்கிறாளாம். இப்படிச் சொல்பவன் யார்? காதலனேதான். இது வள்ளுவர் தீட்டும் காதல் சித்திரம். அதுசரி. `நான் அவளைப் பார்க்காதபோது அவள் என்னைப் பார்க்கிறாள்’ என்று காதலன் சொல்வதாக எழுதுகிறாரே வள்ளுவர், இது இமாலயப் பொய் இல்லையா? அவன்தான் அவளைப் பார்க்கவே இல்லையே, பிறகு அவள் அவனைப் பார்த்தது மட்டும் அவனுக்கு எப்படித் தெரியும்? காதலில் பொய்யெல்லாம் சகஜம்தான் என்பதே இதன் விளக்கம்!
 
இந்த அழகிய காதல் சித்திரத்தில் மனம் பறிகொடுத்த கண்ணதாசன், இதே கற்பனையைத் தன் திரைப்பாடலில் எடுத்தாள்கிறார். வாழ்க்கைப் படகு திரைப்படத்தில், `உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே! விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!’ என எழுதுகிறார் அவர்.
 
`சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் - கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து  கதை படித்தாய்!
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்துவிட்டாய் - பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்’
 
-என `தாய் சொல்லைத் தட்டாதே` திரைப்படத்திற்குப் பாடல் எழுதும்போதும் காதலர்களின் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடல் எழுதியவரல்லவா அவர்!

`குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.’ (குறள் எண் 1095)

நேராகப் பார்க்காதவள் போல ஆனால் ஓரக்கண்ணால் பார்த்து காதலனை நோக்கி முறுவல் செய்வாள் காதலி.
`அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.’ (குறள் எண் 1098)
 
காதலன் காதலியை ஆசையோடு பார்க்கும்போது அவள் தலைசாய்த்துப் பார்த்துப் புன்முறுவல் செய்வாளே அப்போது அவளிடம் ஒரு தனித்த எழில் தென்படும். 

`கதுநகத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.’ (குறள் எண் 1173)

`முன்பு காதலரைத் தேடி என் கண்கள் ஓடின. இப்போது காதலரைக் காணாது அவை கண்ணீர் விடுகின்றன. என் நிலையை நினைத்து எனக்கே சிரிப்பு வருகிறது!’ என்கிறாள் காதலி.

`யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.’ (குறள் எண் 1140 )
 
`என் கண்களுக்கு முன்பாகவே என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். எனக்கு வந்த கஷ்டம் இவர்களுக்கு வந்தால் அல்லவா தெரியும்!` என்கிறாள் காதலி. இப்படி இத்தனை குறட்பாக்களில் சிரிப்பைப் பற்றிப் பேசுகிறார் வள்ளுவப் பெருந்தகை. விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ கிட்டாமல் மனிதனுக்கு மட்டும் கிட்டியிருக்கும் அரிய வரமல்லவா சிரிப்பு!

விலங்குகளும் பறவைகளும் கண்ணீர் வடிப்பதுண்டு. ஆனால் ஆடோ, மாடோ, காகமோ, கிளியோ சிரித்ததாய்ச் செய்தியில்லை. `இந்த நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டு எங்கள் வீட்டு நாய் கலகலவெனச் சிரித்தது என்று உலகில் எந்த நாட்டிலாவது செய்தி வந்ததுண்டா?` எனத் தம் சொற்பொழிவின் இடையே கேட்டுக் கேட்பவர்களைச் சிரிக்கவைப்பார் திருக்குறள் முனுசாமி.
 
சிரிப்பு பலவகைப் பட்டது என்பதை என்.எஸ். கிருஷ்ணன் திரைப்பாடல் ஒன்று விளக்குகிறது:
 
`சிரிப்பு! இதன் சிறப்பைச் சீர்தூக்கிப்
பார்ப்பதே நமது பொறுப்பு!
மனம் கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு..’
- எனத் தொடங்கும் அந்தப் பாடலில்

`சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு! -
வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு!’
- எனச் சிரிப்பின் பெருமையைப்

பட்டியலிடுகிறார் என்.எஸ்.கே. பற்களை முத்துக்கு ஒப்பிட்டு, முத்துப் பல் சிரிப்பு எனச் சிரிப்பைப் புகழ்வது கவிமரபு. கண்ணதாசன் ஒருபடி மேலே போனார். உதட்டைப் பவழத்தோடு ஒப்பிட்டார். உதட்டின் இடையே சிரிக்கும்போது தோன்றும் பற்களை முத்துகளோடு ஒப்பிட்டார்.

சிரிக்கும்போது இதழ்களும் பல்வரிசையும் சேர்ந்து தெரிவதை பவழக் கொடியில் முத்துக்கள் பூத்தது போல் இருப்பதாகப் பாடினார். `பவழக் கொடியிலே முத்துகள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்!’ என்பது `பணம் படைத்தவன்’ படப் பாடலில் கண்ணதாசனின் அபாரமான கற்பனை. துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் தம் பிரபுலிங்க லீலை என்ற செய்யுள் நூலில் பார்வதியின் சிரிப்பைப் பற்றி மிக அழகான ஒரு கற்பனையை எழுதுகிறார்.
 
வீதியுலா வருகிறார் பரமசிவன். அந்தச் செய்தியை அவரது காதலியான பார்வதியிடம் ஓடோடிப் போய்ச் சொல்கிறாள் பார்வதியின் தோழி. பார்வதி தன் காதலனைப் பார்க்கும் ஆவலில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு அரண்மனை வாயிலுக்கு வருகிறாள். அவளிடம் ஒரு விசேஷமான முத்துப் புல்லக்கு இருக்கிறது.

(புல்லக்கு என்பது காதில் தொங்கும் ஜிமிக்கி போல் மூக்கில் தொங்கும் ஓர் ஆபரணம். இன்று புழக்கத்தில் இல்லை. சில நடனமணிகள் மட்டும் நடன நிகழ்ச்சியின் போது அதை அணிகிறார்கள்.) அந்த முத்துப் புல்லக்கையும் அணிந்துகொண்டு வருகிறாள் பார்வதி. தன் அரண்மனை வாயிலில் நிற்கிறாள்.

வீதியுலா வந்துகொண்டிருக்கும் பரமசிவனைப் பார்த்து மகிழ்ச்சியோடு மலர்ந்து சிரிக்கிறாள். மூக்கில் தொங்கும் முத்து புல்லக்கில் உள்ள முத்து, பார்வதி சிரிக்கும்போது அவளின் முத்துப் பல் வரிசையை, அவள் மூக்கில் இருந்தவாறே எட்டிப் பார்க்கிறது. பார்வதியின் பல்முத்தின் அழகிற்குத் தான் சமமாக இல்லையே என்ற தாளாத துக்கம் அந்த புல்லக்கில் இருந்த முத்திற்கு.

அந்த துக்கத்தின் காரணமாக உயிர்வாழப் பிடிக்காமல் அது மூக்கில் தூக்குப் போட்டுக்கொண்டு தொங்குகிறது என்று எழுதுகிறார் சிவப்பிரகாசர்! கற்பனைக் களஞ்சியம் என்று இலக்கிய உலகம் சிவப்பிரகாசரைக் கொண்டாடுகிறது. நம் இருபெரும் இதிகாசங்களில் ஓர் இதிகாசத்தின் அடிப்படையே ஒரு பெண் சிரித்த ஏளனச் சிரிப்புத்தான்.
 
மகாபாரதத்தில் பாண்டவர் நிர்மாணித்த மாளிகைக்கு வருகிறான் துரியோதனன். அந்த மாளிகையின் தரைப்பகுதி பளபளவென மின்னுகிறது. கால்பதித்து நடக்கிற துரியோதனன் அது நிலமா இல்லை நீரா எனத் தெரியாமல் மயங்கி, நடக்கும்போது தடுமாறுகிறான். அந்தத் தடுமாற்றத்தை உப்பரிகையிலிருந்து பார்க்கின்றன ஒரு ஜோடிக் கண்கள்.

அந்தக் கண்கள் திரெளபதியுடையவை. கலகலவென்று சிரிக்கிறாள் திரெளபதி. அந்த ஏளனச் சிரிப்பால் மனம் கசந்த துரியோதனன், மனத்தில் வஞ்சினம் கொள்கிறான். அதுவே பாரதப் போருக்கு வித்திடுகிறது. ஒரு பேரழகியின் ஒரே ஒரு சிரிப்பால் எத்தனை உயிர்கள் பின்னாளில் பலியாயின!
 
சிரிப்பு அன்பைத் தழைக்கச் செய்யும். தவறான நேரத்தில் சிரிக்கும் சிரிப்பு விரோதத்தை உண்டாக்கும். சிரிப்பால் நட்பு பெருகும். உறவு செழிக்கும். சிரிப்பின் வலிமையை வள்ளுவர் உணர்ந்திருக்கிறார். அதனால் தான் தம் திருக்குறளின் பல இடங்களில் மனிதர்களின் பல்வேறு சிரிப்புக்களைக் கோடி காட்டுகிறார். மலர்ந்து சிரித்தவாறு மகிழ்ச்சியோடு வாழக் கற்றுத்தரும் நூல் அல்லவா வள்ளுவம்!

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்