ஆனந்தம் அள்ளித்தரும் ஆடலரசன்



தில்லை அம்பல நடராஜா
திருவருள் புரிவாய் நடராஜா
ஆனந்த தாண்டவ அருட்காட்சி
ஆயகலைக்கு ஒரு சாட்சி

அம்பலவாணன் துணைகொள்வோம்
ஆடற்கலைக்கு உயிர் தருவோம்!
சிந்தையில் ஒளிர்வாள் சிவகாமி
சிவனார் மேனியில் ஒருபாதி
சிற்றம்பலத்தில் எழுந்தாடி
செம்மைகள் வளர்க்கும் சிவநாதன்!
பதஞ்சலி ரசிக்க நடனமிட்டு
பக்தர் மகிழ அருள் தருவான்!
முத்துப்புன்னகை முகம்காட்டி
முத்தொழில் புரியும் கூத்தபிரான்
முப்புரம் எரித்த சிவபெருமான்
மும்மலம் நீக்கி அருள் புரிவான்!
கவலைகள் தீர்ப்பான் கனகசபை
சஞ்சலம் தீர்ப்பான் சபாபதி!
அகண்ட வெளியில் ஆகாயம்
பூமிக்கு அதுவே ஆதாரம்
கண்ணின் பாவைக்கு ஒளியாவான்
கல்லில் தேரைக்கு உணவளிப்பான்
மஞ்சள் வெயிலாய் உருவெடுப்பான்
மலையில், இலையில் வாழ்ந்திடுவான்!
அருவியாய் வீழ்கிறாய்,
சிட்டுக்குருவியாய் சிறகடிக்கிறாய்
மேவிடும் மகிழ்ச்சியில் நர்த்தனம் புரிகிறாய்!
கருவியாய் எனை மாற்றினாய்
காரணம் கேட்கையில்
கானலாய் ஓடி மறைகிறாய்!
தலைமுறை காப்பது நற்துணையாவது
நம சிவாய நாமம் பாடுவோம்!
சூரியன் உதிப்பதும்
சந்திரன் முளைப்பதும்
தில்லையில் தொடங்கி
திரும்பவும் ஒடுங்கிடும்
பூலோக கயிலாயம்
பொன்னம்பலநாதன் அருள்வீடு!
ஐந்தெழுத்து மகிமை உணர்ந்தால்
ஆனந்தம் அள்ளித்தரும் ஆடலரசன்!

- விஷ்ணுதாசன்