வித்தியாசமான ஊர்த்துவ நடனம் புரியும் நடராஜர்!



-திருவாலங்காடு

இறைவன் வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர் எனும் திருப்பெயர்களிலும் இறைவி வண்டார் குழலம்மையாகவும் திருவருட்பாலிக்கும் திருத்தலம் திருவாலங்காடு. வடாரண்யேஸ்வரர் கோயில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜப் பெருமான் காட்சி தந்த திருத்தலம் இது.

இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்காலை மேல்நோக்கித் தூக்கி நின்றாடும் நாட்டியம் இது. இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.

எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய்சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளியை வெட்கித் தலைகுனிய வைத்த இந்த ஊர்த்துவ தாண்டவம் பார்த்துப் பரவசமடைய வேண்டிய ஒன்று. ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள்.

நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி இருக்கிறது. சந்நதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தலபுராணம். கிழக்கிலுள்ள ஐந்துநிலை ராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

கோபுர நுழைவாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நதியில் வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு ஷண்முகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில்தான் நடராஜர் அபிஷேகம் நடைபெறுகிறது.

நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் மூன்று நிலைகளுடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதைச்சிற்பங்களாக கொலுவிருக்கின்றன.

இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும், இண்டாவது சுற்றுப் பிராகாரத்தின் வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நதி, அடுத்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவாயில். இந்த வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

மூலவரைத் தரிசிக்க உட்பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள், தேவியருடன் ஷண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேச முனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் முதலிய சந்நதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது, அதிசயமான அமைப்பாகும். சண்டேஸ்வரர் சந்நதியும் உள்ளது. பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. ஸஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்ரமணியர், கஜலட்சுமி, பாபஹரேஸ்வர லிங்கம் முதலிய சந்நதிகளும் உள்ளன. பைரவர் தனது வாகனமான நாயின்றி  காட்சி தருகின்றார்.

பிராகாரத்தில் வலம் வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், ரத்தினசபை வாயில் உள்ளன. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். அம்பிகையின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.

சந்நதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் மிக அழகுடையவை. ரத்தின சபையில் நடராஜப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகத லிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது.

ரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேஸ்வரரின் உருவம் காணலாம். ரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது. தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன.

ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு.

- ந.பரணிகுமார்