இளம் தலைமுறையினருக்கு வரப்ரசாதம்



ஸ்ரீராமானுஜர் பக்தி ஸ்பெஷல் இதழில் “நம்முடனேயே வாழ்கிறார் ஸ்ரீ ராமானுஜர்” என்ற கட்டுரையில் ஸ்ரீபெரும்புதூர் கோயிலின் சிறப்பினை பக்தி ரசம் சொட்ட சொட்ட வாசகர்களை நேராக கோயிலுக்கே அழைத்து சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர் திவ்ய தேசத்தை ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது அவதார விசேஷத்தின்போது ரசித்தது நாங்கள் செய்த பாக்கியம்.
- பாபு கிருஷ்ணராஜ், கோவை (இ-மெயில்)

ராமானுஜர் 1000ஆவது ஆண்டு விழாவில் தங்கள் பத்திரிகையில் அரிய பல கட்டுரையை படங்களோடு படித்ததில் ஆத்மதிருப்தி அடைந்தேன். இதழின் சிறப்புக்கு அட்டைப்படமே சான்று. ஆன்மிகத்தின் மீது வற்றாத பற்று கொண்டு பக்தி சேவையாற்றியவரை தகுந்த நேரத்தில் நினைவு கூர்ந்து அற்புத படைப்புகளை வழங்கிய தங்கள் பத்திரிகைக்கு வாழ்த்துகள்.
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

ஆன்மிகத்தில் புரட்சி செய்த மகான், வைணவப் பெரியார், வைணவ குலத்தின் தெய்வீக அதிசயம் என்ற பல்வேறு பெருமைகளுக்கு உடையவராய் விளங்கி யதிராஜ ராமானுஜராய்  ஸ்ரீபெரும்புதூரில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற, 1000மாவது ஆண்டு அவதார திருநாள் காணும் இறைவனுக்கு மகத்துவம் சேர்க்கும் வகையில் திறம்படத் தயாரித்துப் படைத்த தங்களுக்கு 1000 கோடி நன்றிகள்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

பகுத்தறிவு, பட்டறிவு என்பதை அலசி ஆராய்ந்து, அனுபவத்துக்கு மிஞ்சிய அறிவுதான் எது என்பதை உறுதி செய்த திருப்பூராருக்கு நன்றி.
- முனைவர் இராம.கண்ணன், திருநெல்வேலி.

பக்கத்துக்குப் பக்கம் எம்பெருமானார் தரிசனம். நடையாய் நடந்து திருமந்திர ரகசியம் பெற்றதையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சமூக நீதியில் புரட்சி செய்ததையும், ராமானுஜர் நமக்கு கிடைக்க ‘தஞ்சம்மாளே’ காரணம் என்று நேர்மறையாய் விளக்கியதும், குருவிற்காக தன் கண்களையே இழந்த கூரத்தாழ்வான் பெருமையையும் ஒருசேரக்கூறிய ஏற்றமிகு கட்டுரையை அளித்த ஆழ்வார்க்கடியான் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

‘பிறருடைய பிரார்த்தனைப் பட்டியலில் இடம் பெறுவோம்’ - பொறுப்பாசிரியரின் கட்டுரை ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே இருக்கிறேன். தெளிவு பெறுஓம் கேள்வி-பதில் ஆன்மிக சொற்பொழிவு கேட்பது போல் உள்ளது. அர்த்தமுள்ள இந்துமதம் தொடரில் துன்பங்களிலிருந்து விடுதலை படித்ததும் விடுதலை கிடைத்தது மனதிற்கு. கல்வெட்டு சொல்லும் கோயில்கள், ராசிபலன்கள், மன இருள் அகற்றும் ஞானஒளி, ராமானுஜர் கட்டுரைகள் என பல படைப்புகள் ஆன்மிக மணம் பரப்பி அருந்தொண்டாற்றின.
- இரா.வைரமுத்து, ராயபுரம்.

அட்டை-டு-அட்டை அட்டகாசம். ஸ்ரீராமானுஜர் பக்தி ஸ்பெஷல் போற்றிப் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம். உள்ளே ஸ்ரீபெரும்புதூரின் மகத்துவம், காஞ்சியில் ராமானுஜரின் வைபவம், கலைவாணி மூலம் அவருக்குக் கிடைத்த முதல் இடம், நூற்றியிருபது ஆண்டுகள் வாழ்ந்து வழிகாட்டிய அவருக்கே உரிய நூற்று இருபது உடைய(வர்) சிறப்புகள், பகவத்கீதையிலும் அவர் மீதான வெளிச்சம், பதினெட்டு நிபந்தனைகளுக்கும் உட்பட்ட அனுபவம் என எம்பெருமானார் பெருமைகளை படித்து மகிழ ஆயிரம் கண்கள் வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினருக்கும் ஒரு வரப்ரசாதம். 
- சுகந்தி நாராயணன். வியாசர்பாடி.

ஸ்ரீராமானுஜரின் சிறப்பினை அங்குலம் அங்குலமாக அலசி வாசகர்கள், பக்தர்கள் மனங்களில் நீங்காத இடம் பெற்று விட்டீர்கள். இதைவிட யாரும் அவர் மகத்துவத்தை எடுத்துக்கூறிவிட முடியுமா என்பது சந்தேகமே.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

சென்ற இதழின் முகப்பு அட்டையைப் பார்த்து பரவசம் அடைந்தேன். நம்முடன் வாழும் ராமானுஜரின் அருள்முகம் கண்டு, நெகிழ்ந்து போனேன். பிரசாதங்கள் பகுதியில் வெளிவந்த ஸ்வீட்மாதுளை கீர், கேரட் வெள்ளரி மோர் செய்து பார்த்து ரசித்து, ருசித்து பருகினோம்.
- இல.வள்ளிமயில், திருநகர்.

அட்டையில்: ஸ்ரீநிவாச கல்யாணம்