திருமணவரம் தரும் ஆலயங்கள்



* சென்னை பரங்கிமலை ரயில்நிலையம் அருகிலுள்ள நந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு தொடர்ந்து 5 பிரதோஷங்கள் இரு ரோஜாமாலையை வாங்கி சாத்தினால் திருமணத் தடை நீங்கிவிடுகிறது.

* சென்னை-செங்கல்பட்டு வழியில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் நரசிம்மர் த்ரிநேத்ரதாரியாய் அருள்கிறார். அந்த மூன்றாவது கண்ணை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா தடைகளும் விலகி, திருமணம் கைகூடுகிறது.

* விருகம்பாக்கம் - ஆற்காடு சாலையில் விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் உள்ள சந்தோஷிமாதாவை வெள்ளிக்கிழமைகளில் தரிசித்தால் திருமணவரம் பெறலாம்.

* சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் உள்ள மயூரவல்லித் தாயாருக்கு வெள்ளிக்கிழமை வில்வத்தளங்களால் சுக்த அர்ச்சனை செய்தால் மனநிறைவாக திருமணம் நடைபெறுகிறது.

* தாம்பரம்-காஞ்சிபுரம் பாதையில் உள்ள முடிச்சூர் பிரம்மவித்யாம்பிகை ஆலயத்தில் கொடுக்கப்படும் கொம்பு மஞ்சளை அம்பிகையின் சந்நதியில் கட்டி பிரார்த்தனை செய்தால் தடைகள் தகர்கின்றன; திருமணம் நிறைவேறுகிறது.

* மயிலாடுதுறை, கீழையூர் கடைமுடிநாதர் ஆலய அபிராமி அம்மனுக்கு மஞ்சள் கயிற்றில் கோத்த மஞ்சள் தாலியை அணிவித்து, அதை பிரசாதமாகப் பெற்று கன்னிப் பெண்கள் அணிந்து, பிறகு கழற்றி வீட்டில் வைத்து பூஜை செய்ய விரைவில் அவர்கள்
மணமுடிக்கிறார்கள்.

* திருமண தோஷம் உள்ளவர்கள் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றில் நீராடி பின் கடலில் குளித்து செந்தூரானை வணங்கி, குகை லிங்கத்தை தரிசித்தால் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகிறது.

* ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை மங்களநாதரையும், சுயம்பு பாணலிங்கத்தையும் வணங்கினால் திருமணத்திற்கு எந்தத் தடையும் குறுக்கே நிற்காது.

* மதுரை-சோழவந்தான் பாதையில் உள்ள திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்திலுள்ள 16 கர வனதுர்க்கைக்கு பூமாலை அணிவித்து, அதை பிரசாதமாகப் பெற்று அணிந்து, பின் வீட்டில் வைத்து பூஜித்துவர விரைவில் கெட்டி மேளம் கொட்டும்.

* தெய்வானைக்கும் முருகனுக்கும் திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் கோயிலை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபட, ஒரு வருடம் கழித்து தலை தீபாவளி கொண்டாடலாம்.

* கோபிசெட்டிப்பாளையம் முருகன்புதூரில் அருளாட்சி செய்யும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருமண வரம் அருள்கிறாள்.

* திருமணஞ்சேரியில் அருளும் உத்வாகநாதரையும் கோகிலாம்பிகையையும் வழிபட்டு அத்தல கல்யாணசுந்தரருக்கு மாலை சாத்தி வழிபடுவோர் விரைவில் மணமாலை சூடுகிறார்கள்.

* திருமணதோஷம் உள்ளவர்கள் திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி கோயிலில் கல்வாழை மரத்திற்கு தாலி கட்டி 12 முறை வலம் வந்து பரிகார பூஜை செய்தால் 3 மாதங்களுக்குள் மங்கல நாண் கழுத்தை அலங்கரிக்கும்.

* கடலூர், நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் போகிப் பண்டிகையன்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலையைப் பிரசாதமாகப் பெறும் கன்னியர் சீக்கிரமே திருமண பந்தம் காண்கிறார்கள்.

* கும்பகோணம் ஒப்பிலியப்பன், மார்க்கண்டேய முனிவரின் மகளாகப் பிறந்த பூமிதேவியை மணம் புரிந்ததால் இத்தலம் திருமணவரம் அருள்வதில் நிகரற்றது.

 - விஸ்வேஷ்