தடைகளை விலக்கும் தெய்வ திருமணங்கள்!



* சங்கத் தமிழ் வளர்த்த நான்மாடக்கூடலில்
அங்கயற்கண்ணி சீர்மிகு அருளாட்சி புரிய
பங்கய கரங்கள் புகழ் ஓங்கி வளர
தங்கக்கோபுரத்தில் ஒளிரும் மரகதசிலையே
இல்லறம் சிறக்க அருளும் விழியே!
மதுரை வீரமங்கை மீனாட்சியவள்

சொக்கனை கண்டு சொக்கினாள்
முக்கண்ணில் ஒன்று மறைந்திட
இருகண்ணில் நாணம் பூத்தாள்
பருவகாதலில் மாதுளைநிற உடல்
மெலிந்தாள்!
நாளும், கோளும் சான்றோர் பார்க்க
நல்லதோர் நாளை பெற்றோர் ஏற்க
நாயகன் ஆலவாயன் பொற்பாதம்
பணிந்தாள்
வீரத்தோளில் கிளியாய் தொற்றினாள்
விரிந்தமார்பில் கொடியாய் படர்ந்தாள்!
இதயம் மாற்றி இதயம் புகுந்து
இன்பகாதலுக்கு இலக்கணம் வகுத்தாள்
தமிழும் சுவையுமாய் அருளாகி நின்றாள்
வைகை நீராடி பொற்றாமரை கண்டு
மீனாட்சியை வணங்கி நலம் பெறுவோம்!

* அலைகள் பாதம் தொழும் செந்தூரில்
சேவற்கொடியோன் செந்தில்நாதன் சூரனை
வென்றான்
இந்திரன் மகளை பரிசாக பெற்றான்!
கருமைதீட்டிய அல்லி விழியாளுடன்
திருப்பரங்குன்றில் நல்லறம் வளர்த்தான்!
திணைகாத்த குறவள்ளி வினை தீர
தள்ளாத வேடதாரி கொடியிடை தழுவ
தணிகைவேலனை அறியா பெண்ணும்
கண்டித்தாள்!
தளர்ந்த நடைமாறி குமரனாக காட்சி
தந்தான்
தவறுணர்ந்து மாலைசூடிய கரங்களை
மன்னித்தாள்!

* நெஞ்சுறைந்து பூமி பூத்த பத்மாவதியை
நாராயணன் தேடியலைந்து நல்லுறவாடி
திருவேங்கடத்தில் திருமகளை துணை கொண்டான்
வட்டிக்கு பொருள்பெற்று வசந்தமலர்
சூடினான்
திருமால்-திருமகள் திருவருள்
பெற்றிடுவோம்!

* மனதில் பாடமான மாசறு ஓவியம்
மன்னர்குல ராமனை கானகத்தில் பிரிந்தாள்
நினைவை, மூச்சை தவமாக்கிய சீதை
நினைத்தது சாதித்து ராமனை சேர்ந்தாள்!
சீதா கல்யாணம் வெற்றி அருளட்டும்!

- விஷ்ணுதாசன்