அதிகாரக் கொடுங்கோன்மையும், அன்பான செங்கோன்மையும்!



குறளின் குரல் - 60

மன்னன் எப்படி அரசாள வேண்டும் என்று வள்ளுவம் அழகாகச் சட்ட வரைவு இயற்றுகிறது. மன்னன் நல்லாட்சி தரவேண்டும். செங்கோல் வளையாமல் ஆளவேண்டும். மன்னன் கொடுங்கோலனாக இருந்தால் மக்களுக்கு மட்டுமல்ல, அது அந்த மன்னனுக்கே கேடு. அவன் செல்வம் அழிந்துபோகும் என அறுதியிட்டுக் கூறுகிறார் வள்ளுவர்.

நடுநிலையான ஆட்சி பற்றியும் நடுநிலையற்ற ஆட்சி பற்றியும் விளக்கிக் கூறும் செங்கோன்மை (55), கொடுங்கோன்மை (56) என்ற இரண்டு அதிகாரங்கள் பொருட்பாலில் இடம் பெற்றிருக்கின்றன. வள்ளுவர் கூறுகிறபடி மன்னராட்சி நடந்தால் அது மன்னராட்சி அல்ல, மக்களாட்சி தான்! செங்கோல் மன்னனின் சிறப்புக்களை அப்படி உயர்த்திப் பேசுகிறார் வள்ளுவர்.

`வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி.’
 
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்து வாழ்கின்றன. அதுபோல் மக்கள் எல்லாம் மன்னனுடைய நல்லாட்சியை நம்பி வாழ்கின்றனர். 
 
`அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.’
 
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அடிப்படையாக நின்று காப்பது வேந்தனின் செங்கோல்தான். 

`வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.’
 
போர்க்களத்தில் வெல்வது அரசனுடைய வேல் அல்ல. அவனுடைய முறைதவறாத ஆட்சியே அவனுக்கு வெற்றி தேடித் தருகிறது.

`இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.’
 
உலகத்தை எல்லாம் அரசன் காக்கின்றான். அவனைக் காப்பது அவனது செங்கோல்தான். அவனது நல்லாட்சி முறைமைதான்.

`குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.’

குடிமக்களை நன்முறையில் காப்பது அரசன் கடமை. அதன்பொருட்டு குற்றம் இழைப்பவர்களைத் தண்டிப்பதும் அரசன் தொழில்தான். அவ்விதம் தண்டிப்பது அவனுக்குப் பழி தராது.

`கொலையில் கொடியாரை வேந்தறுத்தல்
பைங்கூழ்க்
களைகட் டதனோடு நேர்.’
 
கொலைபோன்ற பெருங்குற்றம் செய்பவர்களை அரசன் தக்கவாறு தண்டிப்பது, பயிரினிடையே தென்படும் களையைப் பிடுங்குவது போன்றதாகும். களையைக் களைந்தால்தானே பயிர் தழைக்கும்? சமூகத்தில் புல்லுருவிகளாய் ஊடுருவும் குற்றவாளிகளைத் தண்டித்தால்தான் பொதுமக்கள் நிம்மதியான வாழ்வுபெற இயலும்.

`வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு.’
 
மன்னன் அளவுக்கதிகமாக வரிவசூல் செய்யக் கூடாது. வேலோடு வழியில் நின்று பொருட்களை அடித்துப் பிடுங்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரரைப் போல் மன்னன் இயங்கலாகாது. அந்த வரி இந்த வரி என்று வரிவரியாய்ச் சட்டங்கள் கொண்டுவந்து நடுத்தர மக்களைச் சிரமப்படுத்துவதை வள்ளுவம் வன்மையாய்க் கண்டிக்கிறது. இதை மன்னராட்சிக்குச் சொன்னதாய் மட்டும் கொள்ளத் தேவையில்லை. மக்களாட்சிக்கும் இது பொருந்தும்.

`நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.’
 
நாள்தோறும் நன்கு ஆராய்ந்து தான் செய்யும் செயல்களை நீதிவழுவாமல் மன்னன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாடு கெட்டுவிடும். 

`அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.’
 
மன்னன் செய்யும் கொடுமைகளைக் கண்டு பொறுக்காது துயரத்தோடு மக்கள் கண்ணீர் விடுவார்களானால் அந்தக் கண்ணீரே மன்னனின் செல்வத்தை அழிக்கும் படையாக மாறும். மக்களை அழவைக்கும் மன்னர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியோடு வாழ இயலாது.

`ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்
மறப்பர்
காவலன் காவான் எனின்.’
 
அரசன் முறைப்படி நாட்டைக் காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்களின் பால்வளம் குன்றும். அந்தணர்கள் தமக்குரிய மறைநூலை மறந்துபோவார்கள். இப்படி செங்கோல் ஆட்சியின் நன்மைகளையும் கொடுங்கோல் ஆட்சியின் தீமைகளையும் வள்ளுவம் விரிவாகப் பேசுகிறது...

மிகப் பழைய இதிகாச காலத்திலேயே நீதி நெறி தவறாமல் மக்களைத் தங்கள் குழந்தைகள் போல் கருதிப் பாதுகாத்த மன்னர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ராமன் செங்கோல் தவறாமல் நீதிபரிபாலனம் செய்து நாட்டை ஆண்டான். அதனால்தான் உயர்ந்த தேசத்தை ராம ராஜ்யம் என்கிறோம். மகாத்மா நள்ளிரவில் சர்வாலங்கார பூஷிதையாக ஒரு பெண் தன்னந்தனியே நடந்து செல்ல முடியவேண்டும் என இந்தியா குறித்து ராமராஜ்யக் கனவு கண்டார்.
 
துணி வெளுப்பவன் தன் மனைவி சீதாதேவி மேல் ஓர் அபவாதம் சொன்னான் என்பதற்காக சீதாராமனாக இருந்த அவன் ராஜாராமனாக மாறி சீதையைக் காட்டுக்கு அனுப்பவும் துணிந்தானே? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதே, அதை நடைமுறையில் உணர்ந்து நடவடிக்கை எடுத்த ராமபிரானைப் போன்ற மன்னர் வரலாற்றில் வேறு யார் உண்டு?
 
அந்நிகழ்வு ராஜாராமனின் புகழை உயர்த்தியதோ இல்லையோ, சீதாராமனின் புகழில் ஒரு களங்கத்தைக் கற்பித்து விட்டது. அதை நீக்க வேண்டும் என யோசித்தது நம் பாரத தேசத்தில் வழங்குகிற பல ராமாயணங்களில் ஒரு ராமாயணம். அந்தக் கதைப் படி துணி வெளுப்பவன் சொன்ன அபவாதத்தை சீதை தன் தோழி மூலம் அறிகிறாள். ராமபிரானின் தர்ம சங்கடத்தை அவள் உணர்கிறாள்.

ராமபிரானை சமாதானப் படுத்தி, தானே விரும்பி சீதை கானகம் சென்று விடுகிறாள் என்கிறது அந்த அபூர்வ ராமாயணக் கதை. ராமன் ஆட்சி மட்டுமல்ல, அதற்கு முன் நிகழ்ந்த ராமனின் தந்தை தசரதர் ஆட்சிகூடச் செங்கோல் வளையாத நல்லாட்சிதான். அங்கே கொடையாளிகளே இல்லையாம். காரணம் பிச்சைக்காரர்கள் இருந்தால் தானே பிச்சை போடு பவர்கள் இருக்க முடியும்?  

`வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்’
 
சரி. தசரதர் ஆட்சி இப்படிப்பட்ட செங்கோல் ஆட்சி என்றால் இலங்கையில் நடைபெற்ற ராவணன் ஆட்சி எப்படி? உண்மையை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். அதுவும் நல்லாட்சி தான்! ராவணன் பிறன்மனை நயத்தல் என்ற பெரும் பாவத்தைச் செய்ததால் அழிந்தானே தவிர இலங்கை மக்களுக்குத் தொடர்ந்து நல்லாட்சியைத் தான் வழங்கினான். அனுமன் இலங்கையில் நுழைந்து சுற்றிப் பார்த்தபோது எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்க்கிறான். கவலைப் படுகிறவர்களையே தான் பார்க்கவில்லை என்கிறான் அனுமன்!

`பளிக்கு மாளிகைத் தலந்தொறும் இடந்தொறும் பசுந்தேன்
துளிக்கும் கற்பகத் தண்ணறுஞ் சோலைகள் தோறும்
அளிக்கும் தேறலுண்டு ஆடுநர் பாடுநர் ஆகிக்
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக்
காணேன்!’

- என்று இலங்கையைக் கண்ட அனுமனின் நினைவைப் பதிவு செய்கிறது கம்பன் பாடல். சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன், கண்ணகியின் சொற்களைக் கேட்டும் அவள் தரையில் வீசியெறிந்த சிலம்பிலிருந்து தன் உதட்டில் வந்து தெறித்த மணியைப் பார்த்தும் விதிர்விதிர்க்கிறான்.

தவறான நீதி வழங்கித் தவறிழைக்காத கோவலன் கொலைப்படத் தான் காரணமானோமே என அவன் மனம் பதறுகிறது. அவனது செங்கோல் வளைந்துவிட்டதே! வளைந்த செங்கோலைத் தன்னுயிர் கொண்டு நிமிர்த்த முனைபவன்போல் அவன்,

`பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் ’

எனக்குஉறி, மயங்கிக் கீழே விழுந்து இறக்கிறான். அவன் மனைவியான கோப்பெருந்தேவியும் உடன் விழுந்து இறக்கிறாள். சரியாக நீதி வழங்குவது என்பது மன்னனின் தலையாய பொறுப்புகளில் ஒன்று. கள்வனல்லாத கோவலனை பொற்கொல்லன் சொற்கேட்டு தீர விசாரியாது கொல்லச் சொன்ன மாபெரும் தவறுக்கு மன்னனும் அரசியும் மட்டுமல்ல, மதுரையே பலியாக நேர்ந்தது.

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வரும் மனுநீதிச் சோழன் கதை மிகச் சரியாக நீதி வழங்கிய ஒரு மன்னனை நமக்கு அறிமுகம் செய்கிறது. செங்கோல் வளையாமல் ஆட்சி செய்த மன்னன் மனுநீதிச் சோழன். அவன் மகன் வீதி விடங்கன் வீதியில் செல்லும்போது அறியாது ஒரு பசுவின் கன்றைத் தேர்க்காலில் ஏற்றிக் கொன்றுவிடுகிறான்.

கன்று இறந்ததைக் கண்டு கண்ணீர் வடித்த தாய்ப்பசு, அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மணியை தன் வாயால் கயிற்றைப் பற்றி அடிக்கிறது. மணியொலி கேட்டுப் பதறிய மன்னன் பின்னர் விசாரித்து விவரமறிகிறான். தன் மகனைத் தரையில் படுக்க வைத்து அவன்மேல் தான் தேர் ஏற்றி அவனை உயிரிழக்கச் செய்து அந்தப் பசுவுக்கு நீதி வழங்குகிறான்.

பின்னர் சிவபெருமான் நிகழ்த்திய சோதனை அது எனக் கதை விரிகிறது. கன்றும் மகனும் உயிரோடு எழுவதைப் பெரியபுராணம் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட விவரிக்கிறது. மனுநீதிச் சோழன், `மன்னன் என்பவன் எப்படியெல்லாம் மக்களைக் காக்கவேண்டும்’ என்று சொல்வதாக பெரியபுராணத்தில் ஒரு பாடல் வருகிறது. ஐந்து வகைகளில் மக்களுக்கு இடையூறு வராமல் அவன் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். தன்னாலோ, தன் படையினராலோ, பகைவர்களாலோ, கள்வராலோ, விலங்குகளாலோ மக்கள் எந்த பாதிப்பும் அடையாமல் மன்னன் மக்களைக் காப்பாற்ற வேண்டுமாம்:

`மானிலம் காவலன் ஆவான்
மன்னுயிர் காக்கும் காலை
தானதனுக்கிடையூறு
தன்னால் தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து
அறங்காப்பான் அல்லனோ?’
 
நீதிதவறாது செங்கோலாட்சி நடத்திய ஒரு பாண்டிய மன்னனின் பெருமையையும் நம் வரலாறு பேசுகிறது. மன்னன் மாறுவேடம் பூண்டு இரவில் நகர்வலம் வந்தபோது ஒரு வீட்டின் உள்ளே பேச்சுக் குரல் கேட்கிறது. அந்த இல்லத்தில் வசித்த வேதியன், தான் வெளியூர் செல்வதாகவும் திரும்பி வரும்வரை தன் மனைவியை யாராலும் பாதிப்பு வராமல் பாண்டிய மன்னன் காப்பான் என்றும் உறுதி கூறுகிறான்.

மறுநாள் முதல் அந்த வீட்டைச் சற்றுக் கவனமாகக் கண்காணிப்பது பாண்டியனின் வழக்கமாயிற்று. சிலநாள் சென்றபின் இரவில் வீட்டின் உள்ளே பேச்சுக் குரல் கேட்கவே, யார் என அறியக் கதவைத் தட்டுகிறான் மன்னன். உள்ளிருந்து அதே வேதியர் குரல், ‘வெளியே யார்?’ என உரத்துக் கேட்கவும், வேதியன் திரும்பி வந்துவிட்டான் என்பதை உணர்கிறான். 
 
இனி வேதியன் அவனில்லாத வேளையில் இரவில் யாரோ வந்து சென்றதாக எண்ணிவிடக் கூடாதே எனப் பாண்டியனுக்குக் கவலை. உடனே விரைந்து அந்த வீதியில் உள்ள அத்தனை இல்லங்களின் கதவையும் தட்டிவிட்டுச் செல்கிறான். தத்தமது இல்லக் கதவைத் திறக்கும் மக்கள் யாரையும் காணாது திகைக்கிறார்கள். மறுநாள் அரசவையில் மன்னனிடம் எவனோ ஒரு கள்வன் தங்கள் இல்லங்களின் கதவை இரவு நேரத்தில் தட்டியதாகப் புகார் செய்கிறார்கள்.

அந்தக் கள்வனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் எனக் கேட்கிறான் மன்னன். அவன் கையை வெட்ட வேண்டியதுதான் என்கிறார்கள் அமைச்சர்கள். மன்னன் உடனே தன் இடக்கரத்தால் வாளெடுத்து, தன் வலக்கரத்தைத் துண்டித்துக் கொண்டதாகவும் அதன் பின் அவன் கரம் இறையருளால் பொற்கரமாகவே வளர, அவன் பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான் என்றும் செல்கிறது கதை.

நாட்டு மக்களின்மேல் அக்கறை கொண்ட வள்ளுவர், நடைபெறும் ஆட்சி செங்கோலாட்சியாக இருக்க வேண்டும் என்பதையும் கொடுங்கோலாட்சியாக இருந்துவிடக் கூடாது என்பதையும் இரண்டு அதிகாரங்களில் விளக்கியுள்ளார். எந்த அதிகாரத்தில் இருப்பவர்களும் இந்த இரண்டு அதிகாரங்களின் கருத்தையுணர்ந்து நடந்துகொள்வது நாட்டுக்கும் நல்லது. அந்த அதிகாரிகளுக்கும் நல்லது!

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்