மூன்று முடிச்சு பாக்கியம் அருளும் முடிச்சூர் அம்பிகை



சென்னை- முடிச்சூர்

சுடலைக் காடனான சதாசிவனுக்கும், இமவானுடைய புத்திரியான பார்வதிக்கும் திருமணம் செய்வதாக நிச்சயமாயிற்று. பரமசிவனார் தன் ஜடாபாரத்தை கழல் கற்றைகளாக திருத்தி அழகு சுந்தரராக அலங்கரித்துக் கொண்டார். பார்வதி மலையரசியாக பேரழகு பூண்டு நின்றாள். திருமால் தன் அன்புத் தங்கையோடு கண்களில் நீர் துளிர்க்க நடந்துவர சகல தேவர்களும் சிரசுக்கு மேல் கரங்கள் உயர்த்தி ‘ஹர ஹர மகாதேவா...’ என்று கோஷமிட்டபடி உடன் வந்தனர். 

பிரபஞ்சத்தையே அசைக்கும் மையச் சக்திகள் மானிட உருகொண்டு மணமக்களாக மாறிய கருணையை கண்டு முனிவர்கள் சிலிர்த்தனர். யுகம் தோறும் அருட்கோலம் காட்டி அனைத்து உயிர்களையும் ஆட்கொண்டருளவே இந்தத் திருமணம் என்று புரிந்து வைத்திருந்தார்கள். வைகுந்தவாசன் ஈசனின் திருக்கரங்களை மெல்ல பிடித்து, தாமரை மலர் போன்ற தமது தங்கையான பார்வதியின் திருக்கரங்க ளோடு சேர்த்தார்.

கோர்த்த கரங்களோடு மணமேடையேறினார் மகேசன். வேதமோதும் அந்தணர்கள் வேதமூச்சாக விளங்கும் வேந்தன் சிவனுக்கு முன் மறையை மழையாகப் பொழிந்தனர். ஈசன், திருமாங்கல்யத்தை பார்வதி தேவியின் கழுத்தில் பூட்டி மணம் புரிந்தார். பார்வதி ஆனந்தத்திலும், நாணத்திலும், வெட்கத்திலும் கனிந்து சிவந்தாள். ஈசனார் கம்பீரக்கோலம் காட்டி அமர்ந்தார்.

திருமால் நெஞ்சு குழைந்து மாப்பிள்ளையையும், மணமகளையும் பார்த்தபடி நின்றிருந்தார். மகாவிஷ்ணுவும், ஈசனும், உமையும் தம் திருக்கண்களை பூமி மீது படரச் செய்தனர். மாமுனிகளும், சீரடியார்களும் மணக்கோல நாயகனையும், நாயகியையும் அவர்களோடு திருமாலையும் தரிசித்தனர்.

நகரேஷு காஞ்சி எனும் கச்சித் தலத்திற்கு சற்றுத் தொலைவிலுள்ள வில்வவனத்திற்குள் ஓரிடத்தில் சிவனார் உமையம்மையின் தளிர்கரம் பிடித்தபடி நிற்க, அருகேயே மகாவிஷ்ணு சங்கு சக்கரத்தோடு திருக்காட்சியும் அளித்தார். இப்படியோர் காணுதற்கரிய கோலம் காட்டியவர்கள் தம் திருக்கண்களால் அந்தப் பிரதேசத்தையே  தங்களின் அருட்சக்தியால் நிறைத்தார்கள். லிங்க உருவிலும், அர்ச்சாவதாரமான உருவத்திலும் உமையும், பெருமாளும் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். லிங்கத்திற்குள் திரட்சியாக ஈசன் புகுந்தார்.

பார்வதியும், மாலவனும் தம்மையும் ஓரிடத்தில் நிறுத்திக் கொண்டார்கள். மூவரும் அடுத்து வேறொரு தலத்தை உருவாக்கவும், தம் லீலா வினோத விளையாட்டை யுகம் யுகமாக தொடரவும் நகர்ந்தார்கள். அதனால் அவர்கள் அம்சங்கள் ஆங்காங்கே சிலா ரூபத்தில் தங்கின.  மக்களும், மாமுனிகளும் குதூகலமடைந்தார்கள். அழகிய ஆலயம் அமைத்தார்கள். பெருவிழாக்களும், ஆண்டுக்கு ஆண்டு இறை திருமணமும் செய்து மகிழ்ந்தார்கள்.

மணமாகாதவர்கள் இத்தலத்தை அடைந்தவுடனேயே கல்யாண களை சூழப்பெற்றார் கள். ஈசனையும், அம்மையையும் வணங்கினார்கள். திருமணம் முடிந்து நன்றியாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். காலச் சக்கரம் சுழன்றது. பாண்டவர்கள் மறைந்து வாழும் நேரம் பார்த்து மீண்டும் இத்தலம் வேறொரு உருகொண்டது. தனிமை தவமேவிய பாண்டவர்கள் ஒவ்வொருவரும் மூலைக்கொருவராக சில நேரம் தவத்தில் சென்று ஆழ்வதுண்டு.

அந்த வகையில் பீமன் வில்வத்தின் வாசத்தில் ஈர்க்கப்பட்டு இத்தலத்தினுள் நுழைந்தான். பேரழகனாக விளங்கும் மகேசனையும், மலையழகியான பார்வதியையும், சிருங்கார நாயகன் வைகுந்தனையும் தரிசித்து தாங்கொணா பேரின்பம் அடைந்தான். லிங்க வடிவினரான சிவனை நித்தமும் பூசித்தும், அம்பாளை ஆராதித்தும், பெருமாளை பாமாலைகள் பாடியும் பரம பக்தனாக விளங்கினான்.

ஊரிலுள்ளோர் யாரோ பக்தர் என அவருடைய பெரும்பக்தியைக் கண்டு வியந்தனர். பீமன் தனக்குள் திடப்பட்ட பக்தியால் ஈசனின் முழு திருவருளையும் பெற்றான். அன்னை அவனுக்கு சகல வித்யைகளையும் தந்தாள். திருமால் தான் உடன் இருப்பதாக திருக்கண்ணால் சொன்னார். பீமன் வஜ்ஜிரம் பாய்ந்தவனானான். சகோதரர்கள் ஒன்று கூடி வனவாசம் முடித்து கௌரவர்களோடு போர் தொடுத்தனர்.

வெற்றியை உறுதிப்படுத்தினர். வில்வாரண்ய மக்கள் பீமன்தான் இத்தலத்திற்கு வந்து பூஜைகள் செய்தார் என்று தெரிந்து வியப்பின் உச்சிக்கு சென்றார்கள். அதனாலேயே ‘பீமேஸ்வரர்’ என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தனர். சகல வித்யைகளையும் பீமனுக்கு அளித்தவளை ‘வித்யாம்பிகை’ என்று போற்றித் துதித்தனர். திருமால் கோயில் கொண்டுள்ள தலங்களில் மிகவும் அரிய திருநாமமான தாமோதரன் எனும் பெயரை மாலவனுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள்.

கோயிலோடு ஊரும் வளர்ந்தது. இன்று சிறப்புற்று விளங்குகிறது. கடந்த நூற்றாண்டு வரை இத்தலத்திற்கு ‘மணமுடித்த நல்லூர்’ என்றே பெயர். திருமாங்கல்யத்தின் மஞ்சள் ஈரம் கூட காயாது மூன்று முடிச்சுகளோடு அம்பாள் இத்தலத்தில் காட்சி தந்ததால் ‘முடிச்சூர்’ என்று வந்தது என்கிறார்கள். அதுபோல அப்பாரியர் சுவாமிகள் எனும் வைணவப் பெரியார் நாலாயிரத்தையும் இத்தலத்தில் தொகுத்து, ஒரே மூச்சில் முடித்துக் கொடுத்ததால் முடிச்சூர் என்பதாகவும் செவி வழிச் செய்திகள் உள்ளன.

சென்னை நகரின் நெரிசலில் நெரிபடாது தனித்து, கனிந்த பழமாக விளங்குகிறது, முடிச்சூர் கிராமம். தாம்பரம் தாண்டி காஞ்சிபுரம் செல்லும் சாலையில் இடதுபுறம் திரும்ப ஊரின் நேர்த்தியான தெருக்களும் அழகான வீடுகளும் நம்மை ஈர்க்கின்றன. சென்னைக்கு அருகே இப்படியொரு ஏகாந்தமான தலமா என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. சட்டென்று நம் கண்ணுக்கெதிரே மாபெரும் திருக்குளம் விரிகிறது.

அதையொட்டிய எழில் புனல் சூழ் என்று பதிக வரி வர்ணனையாக ரம்மியமான சூழல் மனதை மயக்குகிறது. அதன் மத்தியில் அழகாக அமைந்துள்ளது முடிச்சூர் சிவா-விஷ்ணு ஆலயம். திருக்குளத்தில் கைகள் நனைக்கக்கூட தயக்கமாக இருக்கிறது. அத்தனை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். குளத்தின் ஒருபுறம் கோயிலும் மறுபுறம் சிவசக்தி சிவாகம சமஸ்கிருத வித்யாலயா ட்ரஸ்ட் சார்ந்த வேதபாடசாலையும் கோயிலின் கீர்த்தியை பறைசாற்றுகின்றன.

பாடசாலை மாணவர்களின் வேதகோஷங்கள் முக்காலமும் திருக்கோயிலில் எதிரொலித்து திரும்பி உள்ளத்தை நிறைக்கின்றன. சிறிய சோலைக்கு நடுவே ஆலயம். கோயில் வாயிலிலிருந்து சற்று உள்ளே திரும்ப நேரே பார்க்க அம்பாள் வித்யாம்பிகை, ‘வா’ என்று அழைக்கிறாள். ஓடோடி சென்று பார்க்கையில் மறுபக்கம் பீமேஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். வித்யாம்பிகை சுடர் விளக்கின் மத்தியில் மெல்லிய புன்னகை பூத்து நிற்கிறாள்.

வரத அபய ஹஸ்தங்கள் காட்டி, அங்குச, பாசங்கள் ஏந்தி காக்கிறாள். சகல வித்தைகளுக்கும் ஆதார மாதா. இவளை வணங்கினால் பேரறிவும் கண நேரத்தில் கைகூடும். அதையும் தாண்டி இத்தலத்தின் பிரதான விஷயமே அம்பாளின் சந்நதிக்கருகே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் திருமாங்கல்ய தோரணம்தான். இத்தலத்திற்கு வந்து இறைவன் திருக்கரத்தால் திருமாங்கல்யம் அணியப்பெற்று, அதிலும் சுமங்கலி பாக்கியமாக மூன்று முடிச்சுகளும் இடப்பட்டு சுபமங்கள நாயகியாக விளங்கும் அன்னையை திருமணமாகா தோர் உள்ளம் உருக வேண்டிக் கொள்கிறார்கள்.

அம்பாளின் பாதத்தில் ஒரு மஞ்சள் கிழங்கும், தன் பெயர் எழுதிய சீட்டையும் இணைத்த மஞ்சள் சரடை வைத்து, கண்களில் நீர் பனிக்க உருகுகிறார்கள். பிறகு தாலியை எடுத்து, அம்பாளுக்கு எதிரே சற்று உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் கம்பியில் மூன்று முடிச்சுபோட்டு கட்டுகிறார்கள். கூடவே ‘‘தாயே நீ தொங்கத் தொங்க தாலி கட்டிக்கொண்டு இத்தலத்திற்கு வந்தாய்.

அதுபோல எனக்கும் மாங்கல்ய பாக்கியம் தா. வெகு சீக்கிரம் திருமணம் முடிந்து மீண்டும் உன்னை தரிசிக்கும்படி செய்’’ என்று பிரார்த்தனையும் செய்து கொள்கிறார்கள். அம்பிகையின் அருளுக்கு காலமும்தான் எவ்வளவு கட்டுப்படுகிறது! இப்படி அம்பாளுக்கு முன் தாலி கட்டியவர்கள் வெகுவிரைவிலேயே தன் கணவருடனும் அவர் தன் கழுத்தில் கட்டிய மெருகு மாறாத தாலியுடனும் மீண்டும் கோயிலுக்கு வருகிறார்கள்.

தாம் கட்டிய தாலியைப் பிரித்து எடுத்து, கோயிலுக்கு வரும் சுமங்கலி யாருக்காவது தாம்பூலத்துடன் வைத்து அம்பிகை பிரசாதமாக வழங்கிவிடுகிறார்கள். ஆண், பெண் இருவருக்குமே பொதுவான பரிகாரமாக இத்தலத்தில் இந்த முறை அனுஷ்டிக்கப்படுகிறது. அருகிலுள்ள பீமேஸ்வரரும் அம்மையோடு வீற்றிருந்து வலிமைமிகுந்த பீமனைப்போல மாங்கல்ய பலத்தை கூட்டுகிறார்; நீடித்த சுமங்கலியாக வாழும் பெரும் பாக்கியத்தை அருள்கிறார்.

முடிச்சூர் நாயகனாம் பீமேஸ்வரர் வாழ்வின் தீர்க்க முடியாத சிக்கல்களை எளிதான முடிச்சுகளாக பாவித்து பிரித்துக் கொடுக்கிறார். மிகச் சிரத்தையான பூஜை முறைகளால் கோயிலின் சாந்நித்தியத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கிறார்கள். பிம்ப சாந்நித்தியத்தை எளியவர்களும் சட்டென்று உணரும்படியாக வைத்திருக்கிறார்கள்.

புற உலகை மறக்கடித்து அக உலகை திறக்கச் செய்யும் அற்புதக் கோயில்களுள் முடிச்சூரும் ஒன்று. பல வெளிவராத ரகசியங்களை தாம் மட்டுமே அறிவார் என்பதுபோல பீமேஸ்வரர் வீற்றிருக்கிறார். அருகருகே உள்ள இரு சந்நதிகளையும் விட்டு நகர மனம் மறுக்கிறது. பிராகாரத்தில் விநாயகரும், அதற்கு அடுத்த சந்நதியில் சிவனும், உமையும் மணக்கோலத்தில் நிற்க, அதை அருகிலிருந்து ரசித்தபடி சங்கு சக்கரங்களோடு மகாவிஷ்ணுவும் நின்று கொண்டிருக்கிறார்.

சாதாரணமாக சிவனின் வலப்பக்கத்தில் அம்பாள் நின்றிருப்பாள். இங்கு இடப்பக்கத்தில் அம்பாளையும், வலப்பக்கம் பெருமாளையும் நிற்க வைத்து காட்சி தருகிறார். இந்த சிலை மிகவும் தொன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதே சமயம் மிகச் சிறிய வடிவுடையது. சற்று உற்றுப் பார்த்தால்தான் தெளிவாகத் தெரியும். அதற்கு அடுத்து சுப்ரமணிய சுவாமி உள்ளார்.

கோயிலின் கருவறை மற்றும் பிராகார கோஷ்டங்களில் முறையே தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், துர்க்கையும் வீற்றிருந்து அருள் கூட்டுகின்றனர். இவர்களை தரிசித்து நகர்ந்தால், சிறிய சந்நதியில் சந்திரனும் அதற்கடுத்த சந்நதியில் பைரவரும், சூரியனும் உள்ளனர். மீண்டும் கோயிலின் வாயிலுக்கருகில் வரும்போது நால்வரின் சிலைகள் அழகுற நம்மை ஈர்க்கின்றன.

அதில் சுந்தரருக்கு அருகில் பரவை நாச்சியாரையும் சிலையாக அமைத்து மரியாதை செய்திருக்கிறார்கள். சற்று தள்ளி கோயிலின் ஒரு மூலையில் தாமோதரப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அருள்கிறார். தனிக்கோயிலில் சிறிய சந்நதியில் சேவை சாதிக்கிறார். இவருக்கும் தனிப் பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயிலிலுள்ள மரங்களின் மெல்லிய தென்றலும், ஈசனின் இணையிலா அருளும் காற்றில் கசிந்த வண்ணம் இருக்கின்றன. வலம் வருவோரை பதப்படுத்துகின்றன. சென்னை - தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் முடிச்சூர் கிராமம் அமைந்துள்ளது.

- கிருஷ்ணா
படங்கள்: ரமேஷ்

முடிச்சூர் கோயில் சென்று வித்யாம்பிகையை தரிசிக்கும்வரை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

‘பாலார்க்க மண்டலாபாசாம்
சதுர்பாஹூம் த்ரிலோசனாம்
பாசாங்குச வராபீதிர்
தாரயந்தீம் சிவாம் பஜே.’  

பொதுப் பொருள்: சிவம் என்றால் மங்களம் எனப் பொருள். தன்னை வழிபடும் பக்தர் களுக்கு வாரி வாரி மங்களங்களை அருளும் தேவியே நமஸ்காரம். பூவின் வாசனைபோல, அமிர்தத்தின் சுவைபோல, அக்னியின் பிரகாசம் போல, ஈசனுடன் இரண்டறக் கலந்தவளே நமஸ்காரம். ஈசன் நெற்றிக்கண்ணை திறந்து முப்புரத்தை எரித்தபோது சமயா என பெயர் பெற்று உலகங்களை குளிரச் செய்தவளே நமஸ்காரம். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமம் போன்று விளங்கும்  முக்கண்களை உடைய அம்பிகையே நமஸ்காரம்.