கல்யாண கவலைகள் தீர்க்கும் கந்தசுவாமி!



சென்னை - மடிப்பாக்கம்

வள்ளி, தெய்வானையுடன் திருமணத் திருக்கோலத்தில் முருகப் பெருமான் திருவருள்புரியும் திருத்தலம் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு கார்த்திகை நட்சத்திர தினத்தன்றும் விசேஷ வழிபாடுகள், அலங்காரங்கள் இந்த முருகப் பெருமானுக்கு நடத்தப்படுகிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன் இப்பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூர் போன்ற தலங்களுக்குச் சென்று அங்கே அருளும் கந்தசுவாமியை தரிசித்தனர்.

ஒருகட்டத்தில் தம் பகுதியிலேயே முருகப்பெருமான் ஆலயத்தை எழுப்பி வழிபடத் தொடங்கினர், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் முருகனின் திருவருள் மடிப்பாக்கத்தில் பொங்கிப் பெருக, ஆலயம் புகழ் பெற்றது. ஆலய நுழைவாயிலில் கொடிமரமும், மயிலும் அமைந்துள்ளன.

முருகனின் ஆறெழுத்து மந்திரமான சரவணபவ எனும் எழுத்துகளே இங்கு கருவறைக்குச் செல்லும் படிக்கட்டுகளாக உள்ளன என்பது ஐதீகம். இந்த படிகளுக்கு படி பூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்த சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.

அப்போது முருகப்பெருமான் அணிந்திருந்த மாலையை திருமணமாக வேண்டிய கன்னியரும், காளையரும் பிரசாதமாக வாங்கி அணிந்துகொள்ள அவர்களுக்குத் திருமணம் விரைவில் நிச்சயமாகிறது. எனவே, இத்தல முருகன் கல்யாண கந்தசுவாமி என போற்றப்படுகிறார். திருமணத் திருக்கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்தில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

இவரிடம் நேர்ந்து கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால்குடம் எடுத்தும், அபிஷேகம் செய்தும், விசேஷ நாட்களில் அலகு குத்தியும் தம் நன்றிக்கடனைத் தெரிவிக்கின்றனர். பரம்பொருள், புருஷ வடிவில், மாயா சம்பந்தத்தால் தேவிகளை ஏற்கும்போது மாயை இரண்டு அம்சங்களாக உதிக்கிறாள்.

இந்த இரு அம்சங்களே சிவனுக்கு பார்வதி-கங்கையாகவும், திருமாலுக்கு ஸ்ரீதேவி-பூதேவியாகவும், நான்முகனுக்கு சாவித்ரி-சரஸ்வதியாகவும், விநாயகனுக்கு சித்தி-புத்தியாகவும் அருள்வது போல் முருகப் பெருமானுக்கு தேவசேனா-வள்ளி எனத் துணை நிற்கின்றன என கந்தபுராணம் கூறுகிறது.

அதன்படி கருவறையில் தன் நாயகியரான வள்ளி, தேவசேனாவுடன் அழகே உருவாய், அருளே வடிவாய் முருகப் பெருமான் திருவருள்புரிகிறார். மிகுந்த வரப்ரசாதியாக அவர் பக்தர்களால் போற்றப்படுகிறார். முன்பொரு சமயம் நாரதர் கூறிய திருமுருகனின் லீலா விநோதங்களைக் கேட்டு அகமகிழ்ந்த நாரணன் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் பெருக்க, அவர்தம் கண்ணீரிலிருந்து உதித்த இரு பெண்களும் முருகனைக் கணவராய் அடைய அவரிடம் வரம் கேட்டனர்.

அமுதவல்லி, சுந்தரவல்லி எனும் அந்த இருவரையும் பூவுலகில் தவம் புரியப் பணித்தார் பரந்தாமன். அவ்வாறே தவம் புரிந்த அவர்களின் முன் தோன்றிய முருகன், ‘அமுதவல்லி தேவேந்திரன் மகளாக இந்திரலோகத்தில் தேவசேனா எனும் பெயருடன் வளரவும், சுந்தரவல்லி பூமியில் வேடுவர் குலத்தில் வள்ளியாக வளர்ந்திடவும், தக்க காலத்தில் தாம் அவர்களை மணம் புரிவதாகவும்’ வாக்குறுதி அளித்தான்.

காலம் கனிந்தது. சூரபத்மனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றி அசுரனுக்கே அருளி தேவலோகத்தைக் காத்த கருணாமூர்த்தியான முருகப் பெருமானின் வீரதீர பராக்ரமத்தால் மனமகிழ்ந்த தேவேந்திரன், தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்கு மணமுடித்துத் தந்தார்.

அதேபோன்று தினைப்புனம் காத்த வள்ளியை வேடனாய், வேங்கை மரமாய் மாறி, விநாயகர் ஆசிபெற மறந்ததால் இடர்பட்டு, பிறகு அவரை வேண்டிக்கொள்ள யானையின் உருவினராகவே வந்தார் கணநாதன். யானையைக் கண்டு பயந்த வள்ளிநாயகி, முருகனை கட்டி அணைக்க முருகப் பெருமானின் திருவருளை உணர்ந்து வள்ளிநாயகியை அவருக்கு மணமுடிக்க முடிவெடுத்தான் வேடுவர்குல ராஜனான நம்பிராஜன்.

அதன்படி முருகப்பெருமான் எப்போதும் காதலுடன் தன்னையே நோக்கும் புள்ளிமானாகிய அந்த வள்ளி மானை மணந்தான். தேவசேனை தேவலோகத்து மந்தாரமாலை, முத்துமாலை போன்றவற்றை அணிந்த மார்பினள். முருகனின் இடப்புறம் அமர்ந்து அருள்பவள். வள்ளி தாமரைமலர் ஏந்தி, அலங்கார ரூபிணியாக, மாணிக்க மகுடங்கள் துலங்க, இடப்புறம் வீற்றிருப்பவள்.

ஆகமங்கள் இவர்களை கஜா, கஜவல்லி என்று போற்றுகின்றன. மேலும் வேதங்கள் இவ்விருவரையும் வித்யா, மேதா என்றும் புகழ்பாடுகின்றன. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் எனும் பழமொழி கூட சஷ்டிவிரதம் இருந்தால் கருப்பையில் மழலைவரம் வரும் என்பதைக் குறிக்கும் என்பர்.

அவ்வாறான முருகனுக்கு உறுதுணையாய் இருக்கும் சஷ்டி தேவியான தேவசேனாவை முருகனுடன் சேர்த்து வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், மனதிற்கினிய திருமண வாழ்வும், சத்புத்ர பாக்யமும் கிடைக்கும். நீலச்சிகண்டியில் ஆரோகணித்து குமரவேலுடன் கோலக்குறத்தியாய் பக்தர்களைக் காத்து வருபவள் வள்ளி.

ஞானமும், தவமும் அறியாத வேடுவர் குல நங்கையைத் தானே வலியச் சென்று மணம் செய்த  முருகனின் பரந்த நோக்கை கண்டு அருணகிரியார் மெய்சிலிர்த்து பேசுகிறார். ‘முனினாமுதா’ எனும் சுப்ரமணிய புஜங்கத்தில் ஆதிசங்கரர்கூட நவவித பக்தி செய்து தன்னை வழிபடும் அடியவருக்கு அருள்புரியும் அநேக தெய்வங்கள் உண்டு.

ஆனால், எதுவுமே அறியாத எளியோர்க்கும் விரும்புவதைத் தரும் தெய்வமான முருகனின் பேரருளை வியக்கிறேன் என்கிறார். காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால் 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு அதன் மேல் கோலோச்சும் சுவாமிநாதன், முருகப்பெருமான். 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூலரூபம்.

காலத்தை ஒரு வருடத்தின் உருவமாய்க் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயனம், உத்ராயணம் ஆகின்றன. ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரெண்டு பாதங்களாகும். ஒரு நாள் என்பது இரவு, பகல் என அமைகிறது. அதுவே முருகனின் வடிவமாய் எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவசேனா.

இந்த இரண்டு சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் ரூபம். முருகனை காலரூபனாகவும், காலத்தை தன்வசத்தில் வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம். இவ்வளவு வல்லமை பொருந்திய வள்ளி, தேவசேனா சமேத கல்யாண கந்தசாமியாகிய முருகப்பெருமான் தன் பக்தர்களுக்காக எதைத்தான் செய்ய மாட்டான்!

அங்காரகன் எனும் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகப் பெருமான். இத்தலத்தில் அங்காரகனுக்கு தில பத்ம தானம் எனும் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. திலம் என்றால் எள். பத்மம் என்றால் தாமரை. இத்தல அங்காரகனின் பாதங்களில் செவ்வாய்க்கிழமையன்று எள்ளையும் தாமரையையும் சமர்ப்பித்து மனமுருக பிரார்த்தனை செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

கருவறையின் தெற்கில் கருணை கணபதி, வடக்கில் செவ்வாய் பகவான் இருவரும் துவார பாலகர்களைப்போல வீற்றிருக்கிறார்கள். கோஷ்டங்களில் குருபகவானும், ஜெயதுர்க்காவும் திருவருள் பாலிக்கின்றனர். இவர்கள் தவிர ராமர், சீதை, லட்சுமணர், அபீதகுசலாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்கின்றனர்.

சென்னையில் பரங்கிமலை மற்றும் வேளச்சேரி பகுதிகளுக்கு அருகில் இருக்கிறது மடிப்பாக்கம். கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் கல்யாணகந்தசுவாமியை தரிசித்து வளங்கள் பெறுவோம்.

- ப.பரத்குமார்

சென்னை மடிப்பாக்கம் சென்று கல்யாண கந்தசுவாமியை தரிசிக்கும்வரை கீழ்காணும் முருக ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸச்சிதானந்த ரூபேஸம் ஸம்ஸாரத்வாந்ததீபகம்
ஸுப்ரஹ்மண்யம் அனத்யந்தம் வந்தே குஹம் உமாஸுதம்.
பொருள்: ஸச்சிதானந்த ரூபனே, சம்சார இருளில்
வழிகாட்டும் ஒளியாய்த் திகழ்பவனே, ஸுப்ரமண்யனே,
ஆதி அந்தம் இல்லாதவனே, உமா தேவியின் புத்திரனே, குஹனே நமஸ்காரம்.