நாவுக்கரசர் போற்றிய நல்லூர் நாயகன்



-திருநல்லூர்

‘மகம் பிறந்தது நல்லூரில். மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்,’ என்பார்கள். அத்தனை பெருமைமிக்க நல்லூரில், கிரிசுந்தராம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலை கோச்செங்கட்சோழர் கட்டினார். அவர் எடுப்பித்த எழுபது மாடக்கோயில்களில் திருநல்லூர் மிக முக்கியமானது. சுந்தரமூர்த்தி நாயனார், செங்கணாரின் அடியவனாய் தன்னை பாவித்து ‘தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கடியேன்’ என சோழரைப் போற்றுகிறார்.

வைணவப் பெருந்தகையான திருமங்கை ஆழ்வார்கூட ‘எண்டோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்துலகமாண்ட திருக்குலத்துவளச் சோழன்’ எனப் பிரபந்தம் பாடி சிறப்பிக்கிறார். செங்கணார் மட்டுமின்றி சங்ககாலத்துக்குப் பிறகு வந்த அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சிக்குரியது.

திருநல்லூர் திக்கு நோக்கி விரைந்தார் நாவுக்கரசர். சிவத்தொண்டர்கள் நிறைந்த திருநல்லூர், அந்த மகானின் அடி பணிந்து வணங்கியது. திருநல்லூர் நாயகன் கல்யாணசுந்தரேஸ்வரின் முன்பு களிப்போடு அமர்ந்தார். பக்தி கண்ணீராய்ப் பெருக்கெடுக்க, ஈசனைப் பார்த்தார். ‘கூற்றம் எனும் எமன் வந்து குலைக்கும் முன் பெருமானின் பூவடிகளை என் தலைமீது பொறிக்க மாட்டீரா’ என நெகிழ்ந்து கோரினார். நல்லூர் பெருமான் கனிந்தார்.

உமையன்னையும் உடன் அமர்ந்தாள். சட்டென்று ஈசன் லிங்கத்தினின்று ஜோதியாய் கிளர்ந்தெழுந்தான். வீரக்கழல் அணிந்த ஈசனின் திருவடி ஜோதியின் ஒளிபட்டு பிரகாசித்தது. நாவுக்கரசரின் முகம் திகைத்து ஒளிர்ந்தது. ‘எம்பெருமானே...எம்பெருமானே’ என நாத்தழுதழுக்க மெய் சிலிர்த்தார். நெகிழ்ந்து கிடந்த நாவுக்கரசரின் தலையின் மேல் தம் திருவடிகளை மெல்ல ஈசன் பதிக்க பரவசம் பூண்டார் அந்த சிவக் கொழுந்து.

புறவுலகின் நினைவை முற்றிலும் இழந்து அகத்தில் பொங்கி ஆர்ப்பரித்த ஈசனின் அருட் சமுத்திரத்தில் கரைந்தார். ஈசன் இன்னும் அழுத்தமாய் சிரம் பதிக்க ஈசனோடு ஏகமாய் கலந்த நிலையில் யாவினுள்ளும் ஈசன் உறைந்திருப்பதை உணர்ந்து  குழந்தைபோல தளர் நடை நடந்து சந்நதிக்கு அருகே அமர்ந்தார். உள்ளுக்குள் பெய்த தெய்வீகப் பெருமழையை பாக்களாக மாற்றி திருப்பதிகங்களாக திருவாய் மலர்ந்தருளினார்.

ஒவ்வொரு பதிகத்திலும் ‘நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே’ என்று தம் சிரசில் ஈசன் சூடிய திருவடியை நினைந்து, நினைந்து நெகிழ்ந்தார். அதோடு நாவுக்கரசர் விடவில்லை. நம்மீது கருணை கொண்டவரான அவர், ‘எம் தலையில் பதித்ததுபோல் உம்மை நாடிவரும் பக்தர்பெருமக்களின் தலையிலும் திருவடி பதிக்க வேண்டுகிறேன்’ என வினயமாய் கேட்க ஈசனும் சம்மதமாய் உகந்தான்.

இத்திருநல்லூர் நான்கு ராஜவீதிகளுடன் சப்தசாகரம் எனும் ஏழுகடல் தீர்த்தத்தோடு விளங்குகிறது. ஏழுநிலை மாடத்துடன் வானளாவி உயர்ந்து நிற்கிறது ராஜகோபுரம். உட்கோபுர வாயிலுக்குள் சென்று இடதுபுறம் பார்க்க அமர்நீதிநாயனாரும், கையில் மழலையுடன் அவர் துணைவியாரும் நல்லூர் பெருமானை வந்து தரிசிக்கும் பக்தர்களை இனிதே வரவேற்பது போன்ற பாங்கு அற்புதமானது.

சிவத்தொண்டர்களுக்கு ஆடை அளித்து, அவர்கள் பசியாற இன்னமுது படைப்பதையே தனது வாழ்க்கையாக்கிக் கொண்ட குடும்பம் அது. நல்லூர் பெருமானும் வேதியர் வடிவில் விளையாடல் புரிந்து தன்னோடு சேர்த்துக் கொண்டார் என்கிறது பெரிய புராணம். இத்தலத்திற்கு பெரும் பெருமை சேர்த்த திவ்ய தம்பதிகளை கைகூப்பி வணங்கிவிட்டு உட்பிராகாரத்தை நோக்கி நகர்வோம்.

சப்தரிஷிகளும் பிரளயத்தின்போது ஒடுங்கும் விதமாக, லிங்கத்தினுள் ஏழு துளைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பிரபஞ்சத்தின் மாற்றத்திற்குக் காரணமாக இத்தல ஈசன் விளங்குவதால், லிங்கத்தின் நிறம் ஆறு நாழிகைக்கு ஒருமுறை மாறுவது பார்க்க, வியப்பு எல்லை மீறும்; உடல் சிலிர்க்கும். நாம் பார்க்கும்போதே அழகாய் நிறம் மாறும் அற்புதம் மனதை கொள்ளை கொள்ளும்.

தாமிர நிறம், இளம் சிவப்பு, உருக்கிய தங்கம், கரும்பச்சை, இன்னதென்று அடையாளம் காணமுடியாத நிறம் என்று காலைமுதல் இரவுவரை தொடர்ச்சியாக வண்ணம் மாறிக்கொண்டே இருக்கும். அதனாலேயே இவரை பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். நாவுக்கரசர் ஈசனிடம் வேண்டிக்கொண்டது போல, ஈசனின் திருவடிகளை பக்தர்களின் தலையில் பதித்து ஆசியளிப்பது இங்கு நிரந்தர வழக்கமாக உள்ளது - பெருமாள் கோயிலில் சடாரி கொண்டு ஆசியளிப்பதுபோல!

சிவன் சந்நதிக்கு அருகிலேயே மலைமகளான கிரிசுந்தரி அருள் அமுதமாக நிற்கிறாள். உயர்ந்த திருவுருவம் உடைய கிரிசுந்தரி அருளைப் பொழிவதில் மேருவை விட உயர்ந்தவளாய் விளங்குகிறாள். நல்லூரின் புகழ் சொல்லும் இன்னொரு விஷயம், இத்தலத்து பிராகாரத்தில் அமைந்துள்ள நல்லூர் அஷ்டபுஜமாகாளி ஆவாள். பிரளயத்தோடு காளிக்கு நெருங்கிய தொடர்பிருப்பதால் இவள் இங்கே அமர்ந்துள்ளாள்.

காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாய் அமர்ந்திருப்பவள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள்.

குந்திதேவி சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி பூஜித்த லிங்கத்தை கோயிலின் உட்பிராகாரத்தில் காணலாம். இரண்யனை வதம் முடிக்கும் முன்பு, எவ்வுருவம் தாங்கி சம்ஹாரம் செய்வது என்று இத்தலத்து ஈசனிடம் திருமால் யோசனை கேட்க, ‘நரசிங்கனாக செல்’ என்று ஆசி கூறினாராம் இந்த கல்யாண சுந்தரேஸ்வரர். அதற்கு ஆதாரமாக கருவறை விமானத்தின் பின்புறம் நரசிம்மம் காட்சி அளிக்கும் சிற்பம் இத்தலத்து அற்புதம். கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது திருநல்லூர் திருக்கோயில்.

- கே. ஹரீஷ்

திருநல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை தரிசிக்கும்வரை கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீகண்ட பார்வதீநாத தேஜிநீபுரநாயக
ஆயுர்பலம் ஸ்ரீயம் தேஹி ஹர மே
பாதகம் ஹர
கௌரீ வல்லப காமாரே காளகூட
விஷாஸந
மாமுத்தராபதம்போதே: த்ரிபுரக்நந்த
காந்தக

பொதுப்பொருள்: கழுத்தில் காலகூட விஷத்தை விருப்பத்துடன் ஏற்றுத் தரித்தவரே நமஸ்காரம். காத்யாயினியான பார்வதியின் கணவரே, திருநல்லூர் தலத்தின் நாயகரே, நமஸ்காரம். எனக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை அருள்வீராக. சிவபெருமானே, என் பாவங்களைப் போக்கி என்னைத் தூய்மைப்படுத்துங்கள். கௌரியின் கணவரே, மன்மதனை சாம்பலாக்கியவரே, நமஸ்காரம். த்ரிபுரங்களை எரித்து நன்மைகள் அருளியவரே, நமஸ்காரம்.

திருமணவரம் தரும் வேதபுரீஸ்வரர்

-திருவேதிக்குடி

வாழைக்கனிகள் பழுத்து அந்தப் பிரதேசம் முழுதும் மணம் பரப்பின. கண்கள் மங்கும் தூரம் வரையில் பச்சைக் கிளியின் சிறகாக விரிந்த வாழையிலைகள் நீலவானப் பதாகையில் தூரிகையாக உரசிக் கொண்டிருந்தன. தோப்பா, காடா என்று இனம் காணமுடியா அவ்விடத்தின் மையமாக பெரு வில்வ மரமொன்று குடையாக கவிழ்த்திருந்தது.

வில்வத்தின் மூவிலைகளும் முக்கண்ணனான ஈசனை ஒத்திருந்தது. இந்த விசித்திரமான இடந்தனில் ஈசன் லிங்க ரூபமாக பூமியினின்று பொங்கியெழுந்தார். ‘வாழைமடுநாதர்’ என நாமம் கொண்டார். வந்தமர்ந்த பரமசிவத்தின் நாசியிலிருந்து பெருமூச்செழுந்தது. அலை அலையாக அவ்விடத்தை வளைத்து நின்றது.

வேத ஒலிகளாக ஓங்கி எழுந்து திரிந்து வானத்தில் உந்திப் பரவ, அந்த அதிர்வில் வில்வ இலைகள் சிலிர்த்தன, அப்படியே உதிர்ந்து பரமசிவனாகிய லிங்கத்தை அர்ச்சித்தன. வேதசப்தங்கள் சீரான ஒலிச் செறிவோடு வேதசொரூபனான பிரம்மனை உரசியது. அவர் வியப்பெய்தினார். வாழைக்குலைகள் கொத்துக் கொத்தாக தரையிறங்கி நிவேதனமாக மாறும் அதிசயத்தைப் பார்த்து புருவம் விரித்தார்.

வேதங்கள் ஈசனின் மூச்சிலேயே இழையோடுவதை உணர்ந்து களிப்புற்றார். ‘நான்மறை நாயகா... வேதபுரீசா...’ என கண்களில் நீர் பெருக்கி அழைத்தபடி  வேதசப்தங்கள் ஒலிக்குமிடத்தில், வாழையும், வில்வமும் சேர்ந்திருந்த அந்த ஆரண்யத்திற்குள் நுழைந்தார். சிலிர்த்து சிங்காரமாக இருக்கும் ஈசனின் தாள் பணிந்தார்.

அங்கே வேதங்கள் குடிபுகுந்து எண்புறமும் அதிர்ந்து பூஜித்ததால் ‘வேதிக்குடி உறையும் மகாதேவா’ எனப் புகழ்ந்தார். ‘நான்மறைகளும் எவ்விடத்தில் இலகுமோ அவ்விடமே என் இடம்’ என அமர்வார் பிரம்மா. வேத நாயகனைத் தொடர்ந்து தேவலோக மாந்தர்கள் பச்சைப் பட்டாய் விரிந்திருக்கும் வாழைக் காட்டிற்குள் நுழைந்தனர்.

வேழமுகத்தானாம் விநாயகனை நான்மறைகளும் தம் திருவாக்கால் அழைக்க சட்டென்று முன்னே வந்தமர்ந்தார் ஆனைமுகத்தான். வலதுகை விரல்களை சற்றே விரித்து, இடது கைவிரல்களில் ஜப மாலைகளை உருட்டி, தும்பிக்கை மிக நெகிழ்வாய் சுருண்டு அசைவற்றிருக்க, தம் தலையைச் சாய்த்து, சாமரம் போன்று அசையும் வலச் செவியை முன்னே சாய்த்து வேத சப்தங்களை அவர் உள்வாங்கிய பாங்கு கண்டு ஈசன் சிலிர்த்தார்.

இன்னும் பிரவாகமாகப்  பொழிந்தார். சட்டென்று சூரியனின் ஒளியை வேத ஒலிகள் மிக வலிமையாய் ஊடுருவ, கதிர்கள் அதிர்ந்து வேதிக்குடி நோக்கித் திரும்பின. மிகப் பிரமாண்ட கோளத்தின் நடுவே சூரியன் பிரசன்னமானார். ஈசன் சூரியத் தேவன் திருவடிகளில் தம் செங்கதிர்களை பணிவாய் சமர்பிக்க, எங்கேயோ இருந்த குபேரன் தன் பொன்மலையையே மறைக்கும் ஒளி கண்டான்.

வைரக்குவியலின் மிளிரலைத் திணறடித்தாற் போன்றிருக்கும் பிரதேசத்தைப் பார்த்து மலைத்தான். ஈசனின் இணையிலா திருவடியை பிரம்மன் அர்ச்சிப்பதும், விக்னேஸ்வரர் தன்னை மறந்து அமர்ந்திருப்பதையும் கண்டு களித்தான். தானும் அவ்வழியில் நடந்தான். அருகே நெருங்கியவனை வேதசப்தங்கள் வேகமாக வருடிச் சூழ சட்டென தன் நிலை மறந்தான்.

ராஜரிஷியான வியாச பகவான் வேதத் திரட்சியைக் கண்டு நீர்மல்கி அத்தலந்தனிலே குடில் வேய்ந்து தங்கினார். வேதிக்குடியின் மகாத்மியத்தை மகாதேவர் உயர்த்திட பேருவகை கொண்டார். சிலாத முனிவர் யாகம் புரிய நிலத்தை சமன் செய்தார். மண்ணை அள்ளி முகர்ந்தார். நெய்யின் மணமும், அரசுச் சுள்ளியின் சுகந்தமும் ஒரு சேர வீச இதுவே யாகசாலை எனத் தீர்மானித்தார்.

மண்ணை தன் கரத்தால் அகழ்ந்து வெளியே கொணர சட்டென்று சூரியப் பிரகாசம் கண்ணை கூசச் செய்தது. பொன்னாற் செய்த பெட்டியொன்றைக் கண்டார். திறந்து பார்க்க, அருணோதயமாக ஒளிர்ந்தது ஒரு குழந்தை. வாரி அணைத்து வீடு நோக்கி நடந்தார். ஆன்றோர்களை கூட்டி ஆயுள் ஹோமம் புரிந்து ஜப்பேசன் எனும் திருப்பெயர் சூட்டினார்.

ஜப்பேசன் ஈசனின் நாமத்தை ஜபித்தும், திருவையாறு ஐயாறப்பனை அகத்தில் இருத்தி, பிழம்பாக வளர்ந்தான். ‘இனி நீ நந்தீசன்’ எனும் தீட்சா நாமம் சூட்டினார் பிறைசூடனான ஐயாறப்பன். நந்தீசர் சிவகணத்திற்கெல்லாம் அதிபதியானார். எந்நாளும் ஈசனின் எதிரே இருக்கும் பெரும் பேறு பெற்றார். ஐயாறப்ப பெருமான் அதோடு நில்லாது நந்தீசனுக்கு மணமுடிக்க முடிவெடுத்தார்.

நந்தீசனுக்கு இணையான நங்கையாக வியாக்ரபாதரின் குமாரியைக் கண்டனர். திருமழபாடியிலேயே திருமணம் முடிக்கலாமே என்றவுடன் திருவேதிக்குடி வேதியர்கள் கூட்டம் வியந்தது. சிவநெறிச் செல்வன் நந்தீசனுக்கு திருமணம் என்றவுடன் இன்னும் வேதிக்குடியே மகிழ்ச்சியில் திளைத்தது. திருமழபாடிக்கு வேதிக்குடியே வேரோடு பெயர்ந்து நந்தீசன் முன்பு அமர்ந்தது.

யாககுண்டங்களா அல்லது கிணறுகளா என்று வியக்கும்படி அதில் நெய்வார்த்து தீ வளர்க்க, விண்ணுயரும் பிழம்பின் முன் பிரவாகமாக வேதமந்திரங்களை மழையாகப் பொழிந்தனர். திருமணம் முடித்து மகிழ்ந்த வேதியர் கூட்டம் வியந்து வேதிக்குடி புகுந்தனர். நந்தீசன் மணநாளன்று வேதியர்களை அனுப்பி வைத்தார் வேதபுரீஸ்வரர்.

வேதியர்களால் நிறைந்த ஊராதலால் ‘திருவேதிக்குடி’ என்றனர். அதை சத்தியமாக்கும் வகையில் சம்பந்தரும் ‘‘சொற்பிரிவிலாத முறை பாடி நடமாடுவர் பயில்’’ என்று இவ்வூர் வேதகோஷத்தை கோடிட்டுக் காட்டுகிறார். அன்று முதல் இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது திருவேதிக்குடிப் பெருமானும் பல்லக்கில் மழபாடிக்கு எழுந்தருள்வார். சப்தஸ்தானங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

சமயக்குரவர்களான சம்பந்தரும், நாவுக்கரசரும் இத்தல நாயகனைக் கண்டு நெகிழ்ந்து, பதிகங்கள் செய்திருக்கிறார்கள். ‘‘கையது காலெரி...’’ என்று துவங்கி, வேதிகுடி ஐயனை ஆரா அமுதினை நாமடைந்தாடுதுமே’’ என்றும், ‘‘ஆராஅமுதாகிய அவ்விறைவனைத் திருவேதிக்குடியில் சென்று, கண்டு இன்பக் கூத்தாடுவோமே’’ என்றும் நாவாறப் பாடி நடம் புரிகிறார்.

மறுபுறம், ஞான சம்பந்தப் பெருமான் இத்தல அமைப்பை ‘‘பாவலர்க ளோசையில் கேள்விய தறாத கொடையாளார்... மேவரிய செல்வநெடு மாடம் வளர் வீதிதிகழ் வேதிகுடியே’’ என்று வேதிக்குடியின் செல்வச் செழிப்பு மிக்க மாடவீதிகளை, இருவரியில் பெருக்கமாகத் தெரிவிக்கிறார். சம்பந்தப் பெருமான் தலத்தின் பெருமையை தமது பதிகங்களால் சிறப்பிக்க, ஆன்றோர்கள் அந்தப் பாடலின் தன்மை புரிந்து வாழ்வினில் ஏற்படும் இன்னல்களுக்கு அந்தப் பதிகத்தையே பரிகாரமாக பிரித்துக் கொடுத்தனர்.

ஆனால், திருவேதிக்குடியில், பக்தர்களின் மனம் நம்பிக்கை கொள்ளும் வகையில் தம்மீதே ஆணையிட்டுப் பதிகம் பாடி பரவசப்பட்டார் சம்பந்தர். வேதபுரீஸ்வரரையும், அன்னை மங்கையர்க்கரசியையும் தரிசித்தால், திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் தாம் விரும்பிய வண்ணம் நிச்சயம் நல்ல திருமண சம்பந்தம் அமையும் என்று தம்மீதே ஆணையிட்டுப் பகர்கிறார்:

“உன்னியிரு போதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்கஅருளித்துன்னியிரு நால்வருடன் அல்நிழ லிருந்ததுணை வன்தனிடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக மின்னியலும் நுண்ணிடைநன் மங்கைய ரியற்று பதிவேதிகுடியே’’ ஞானமே உருவாக, சிவனின் அம்சமாகவே அவதரித்த சம்பந்தப் பெருமானின் வாக்கு பலநூறு மக்களுக்கும் பலித்த, பலித்து கொண் டி ருக்கும் பாங்கை இன்றும் வேதிக்குடி விவரமாகவே பகர்கிறது.

முதல் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) காலத்தில் கற்றளியாக எடுப்பிக்கப்பட்டது, இக்கோயில். சோழச் சிற்பிகள் கைவண்ணத்தில் சிற்பங்களோடு சேர்ந்த கல்வெட்டுகளும் மிளிர்கின்றன. ஆதித்த சோழனைத் தொடர்ந்து ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் பொன்விளக்குகள் கொடுத்தது பற்றியும், ஆலயத்திற்கு அளித்த நில நிவந்தங்களைப் பற்றியும் மிக விரிவாகப் பேசுகின்றன, கல்வெட்டுகள்.

மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் கூடிய கோபுரம் தாண்டி உள்ளே நேரே வேதபுரீஸ்வரர் சந்நதி உள்ளது. அதற்கு முன்பு நீண்ட குறுகிய மண்டபம் போன்றுள்ளது. இன்னும் உள்ளே நகர, வேதபுரீஸ்வரரின் சந்நதி. சோழர்கால பாணியில் செதுக்கிய துவார பாலகர்கள். சற்றே திரும்பிப் பார்க்க விநாயகர், வேதத்தைக் கேட்டபடி!

அழகுமிகு விநாயகர் செவிசாய்த்து மறை கேட்கும் பாங்கைப் பார்க்க மனம் கரையும். அடுத்து, பேரருளாளன் வேதநாயகன், வாழைமடுநாதன், வேதபுரீஸ்வரரின் சந்நதியை நெருங்க, மனம் விண்டு போகும். வேதத்தின் வலிமை அச்சந்நதிகளில் வலையாகப் பின்னி சாந்நித்யம் நிறைத்து அருகே வருவோரை உணர்வு மேலிடச் செய்கிறது. மாமுனிகளும், பிரம்மாதி ரிஷிகளும் ஏன் இங்கு வந்து அமர்ந்தார்கள் எனப் புரிகிறது.

மணமாகவில்லையே என மனம் வருந்தியோருக்கு அவர்கள் மனம் போல மணமுடித்து வைக்கும் மகாதேவன் இவன். யுகாந்திரமாக அமர்ந்து அருள்புரியும் அவனின் பிரமிப்பூட்டும் கருணையை அகத்தில் ஏற்று பிராகாரத்தை வலம் வருவோம். பிராகாரத்தில் காலடி படும்முன் நம்முன்னால் தெரிவது சுற்றுச் சுவரின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்கள்தான். இத்தலம் முழுதுமே ஆங்காங்கு பூமியில் புதைந்திருந்த லிங்கங்களாம் இவை.

இன்னும் பல நூறு சிவலிங்கங்கள் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு வீரசிங்கம்பேட்டையிலுள்ள கோயிலில் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்க சிலிர்த்துப் போகிறது. இன்னும் சில ஆயிரம் லிங்கங்கள் பூமிக்குள் இருப்பதாகவும் சமயம் வரும்போது தானாக வெளிப்படும் என்று கோயில் அர்ச்சகர் தீர்க்கமாக சொல்லும்போது எப்பேர்ப்பட்ட இறையாண்மை மிக்க பூமி இது என்னும் பிரமிப்பு நெஞ்சைக் கவ்வுகிறது.

மிக அழகான பிராகாரம். தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் மேற்புற கோஷ்டங்களில் அருள்பாலிக்கின்றனர். அர்த்தநாரீஸ்வரரின் சிற்பம்தான் சற்று பின்னமாகி உள்ளது. அதேபோல கோயில் முழுதும் ஆங்காங்கு பல இடங்களில் விரிசல் வீழ்ந்துள்ளதைப் பார்க்கும்போது வருத்தம் மேலிடுகிறது. கோயில் வாயிலின் இடது ஓரத்தில் உள்ள சிறிய மண்டபம்தான் அம்பாள் சந்நதி என்றறிந்தபோது திகைப்பாக இருந்தது.

தனி சந்நதியாக இருப்பது ஏதேனும் விசேஷமோ? ‘தனி சந்நதியெல்லாம் இல்லை. கோயிலுக்குள்தான் இருக்கிறது. கோயிலின் இரண்டாவது பிராகாரம் இது. காலத்தால் அவை இடிந்து காணாமல் போய், மக்கள் புழங்கும் வீதியாக மாறிவிட்டது. அதனால் அம்பாள் சந்நதி வெளியே உள்ளது போன்று தெரிகிறது’ என்று அவர் சொல்ல, மனசுக்குள் வேதனை நிழல் படர்ந்தது.

‘தனிக்’ கோயிலுக்குள் அம்பாள் எளியவளாக, மெல்லிய ஆடையை தரித்திருந்தாள். ஆனால், அம்பாளின் நாமமோ மங்கையர்க்கரசி. ஆனால், ஒரு அரசி போலவா அவளுடைய சந்நதி உள்ளது? ஆனாலும், தன்னைப் பற்றிக் கவலை இல்லாது அண்டுவோருக்கு அபயம் அளிப்பது ஒன்றே தனது தாய்மைப் பணி என்று சொல்வதுபோல நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள், அம்பாள்.

கருணை விழிகளில் பூரிக்கும் பாசம், உதட்டோரச் சிரிப்பில் வாழ்வின் சிரமங்கள் சுக்கு நூறாகின்றன. வாழ்வில் சகல மங்கலத்தையும் கூட்டுவிப்பதால் மங்களநாயகி என்றும் அன்னைக்குப் பெயர் உண்டு. பழமைக்குப் பழமையான பெரும்பதியான வேதிக்குடிக் கோயில் அவனருளால் நிச்சயம் புதுப்பொலிவு பெறும். பக்தர்களின் மனம் திரும்பக் காத்திருக்கிறான் வேதபுரீசன்.

திரும்பும்; கோயில் முழுமையாகும். பக்தர்கள் மனம் நிறையும். இத்தலம் தஞ்சாவூர்-பாபநாசம் வழியில் நெடாரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தஞ்சாவூர்- திருவையாறு பாதையில், திருக்கண்டியூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் அடையலாம்.

- கிருஷ்ணா
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்

திருவேதிக்குடி சென்று வேதபுரீஸ்வரரை தரிசிக்கும்வரை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

முக்தேஸ்வராய பலதாய் கணேஸ்வராய
கீதப்ரியாய வ்ருஷபேஸ்வர வாஹனாய
மாதங்க சர்மவஸனாய மஹேஸ்வராய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

பொதுப் பொருள்: அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கிவிடும் ஈஸ்வரனே நமஸ்காரம். கர்ம பலன்களைச் சரியானபடி அளிப்பவரே, பூத கணங்களுக்கெல்லாம் அதிபதியே, நமஸ்காரம். இசையில் இச்சை கொள்பவரே, சிறந்த காளைமாட்டை வாகனமாகக் கொண்டவரே, நமஸ்காரம். யானைத் தோலைப் போர்த்தியவரே, வறுமை கொண்டோரை அந்த ஆழ்கடலிலிருந்து மீட்டு, சந்தோஷமான வாழ்வை அருள்பவரே, மஹேஸ்வரா, நமஸ்காரம். இத்துதியை தினமும் காலையில் சொல்லி வந்தால் திருமணத்தடைகள் நீங்கி, வளமான வாழ்வு அமையப் பெறலாம்.