பதிபக்தியும், உண்மையான சேவையுமே புருஷனை வசீகரிக்கும்!



மகாபாரதம் - 63

வியாசருக்கும், கெளசிகருக்கும் நடந்த சம்பாஷணைக்குப் பிறகு மகாபாரதத்தில் அக்னியின் சிறப்புப் பற்றி மிகப் பெரிய விளக்கம் ஒன்று வருகிறது. அதிகமான பெயர்களும், குறிப்பு நுணுக்கங்களும் கொண்ட அந்தப் பகுதியில் அக்னியில் பல்வேறு விதமான ரூபங்கள் பற்றி குறிப்பு இருக்கிறது. பூமியினுடைய இயக்கத்திற்குக் காரணம் அக்னியே என்று திடமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

குத்து விளக்கு ஒரு அக்னி என்றால், அடுப்பு வேறுவிதமான அக்னி. காடு எரிவது இன்னொரு விதமான அக்னி. ஹோமத்தில் வருவது வேறுவிதமான அக்னி என்று விதவிதமான அக்னியினுடைய ரூபங்களும், பெயர்களும் கதைகளூடாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அக்னி என்பது தகிக்கின்ற நெருப்பு மட்டும் அல்ல.

பிராணியினுடைய உடம்பில் இருக்கின்ற வெப்பம் கூட சூரியனிடமிருந்து கிடைத்த அக்னியின் விளைவுதான். எல்லா உயிர்களிலும், எல்லா உயிர்களையும் சுமந்து கொண்டிருக்கின்ற உடல் களும், அக்னியைத்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. புழு, பூச்சியிலிருந்து மிகப்பெரிய யானை, புலி, சிங்கம்வரை அந்த அக்னியினுடைய வலிவினாலேயே விரைவும், பலமும், புத்திசாலித்தனமும் கொண்டிருக்கின்றன.

மனிதனுடைய அக்னி சூட்சமமாகவும், மிக வேகமான வளர்ச்சியுடையதாகவும் அவனிடம் இருக்கிறது. இந்த விஷயங்களை அந்த அத்தியாயம் பூடகமாகச் சொல்கிறது. உதாரணத்திற்கு அக்னியினுடைய மனைவியை ஸ்வாஹா என்று சொல்கிறது. அக்னிக்கு ஆஜ்யம் என்று கூறப்படுகின்ற நெய்யை ஆகுதி செய்யும்போது அந்த அக்னி கொழுந்துவிட்டு எரிகிறது.

சந்தோஷ மடைகிறது. ‘ஸ்வாஹா’ என்று சொல்லித்தான் அந்த நெய்யை அந்தணர்கள் ஊற்றுகிறார்கள். ‘அக்னியே ஸ்வாஹா’ என்று இரண்டு வார்த்தைகளுடைய சேர்க்கையை கணவன் மனைவி சேர்க்கையாக உருவகப்படுத்துகிறார்கள். மனிதனை சத்தாக்குவதும் அக்னி, ரோகம் உண்டாக்குவதும் அக்னி.

வெற்றியைத் தருவதும் அக்னி, தோல்வியைத் தருவதும் அக்னி என்று வாழ்க்கையின் பல்வேறு கோணங்களில் அக்னியினுடைய பலத்தை, பயன்பாடுகளை சொல்கிறார்கள். தரையில் வாழும் உயிர்களில் மட்டுமல்ல. நீரிலும் அக்னியின் சம்பந்தம் இருக்கிறது, மீன்களிலும் அக்னியினுடைய வேகம் இருக்கிறது என்றெல்லாம் விவரிக்கப்படுகிறது.

விலங்குகளுடைய சினேகம், தாவரங்களுடைய சினேகம், பூமிக்கு அடியில் புரண்டு கொண்டிருக்கின்ற அக்னியினுடைய வலிமை என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. பூமியிலுள்ள அக்னியை போற்ற வேண்டிய கடமை அந்தணர்களுக்கு உண்டு என்றும், அந்த அக்னி மனித ஓலத்தாலோ, வேறு ஏதாவது அழுகையாலோ, சில பிராணிகளின் தீண்டுதல்களாலேயோ தோஷமடைந்தால் அப்பொழுது எட்டு மண் பானைகளில் அந்த அக்னிகளை மறுபடியும் ஏற்றி அவை ஹோமம் செய்யப்பட வேண்டும், புனிதப்படுத்த வேண்டும் என்றும் இதில் சொல்லப்படுகிறது.

அக்னி என்பது வெறும் தழல் மட்டும் இல்லை. அது வெப்பமாகவும் இருக்கிறது. அந்த வெப்பம் பூமியில் ஜனங்கள் செய்யும் யாகத்தின் பலனைக் கொண்டுபோய் மேலோகத்தில் உள்ள தேவர்களிடம் சேர்க்கிறது. அக்னியின் சம்பந்தத்தால் தான் பூமியிலுள்ள மண்ணில் பல தாதுகள் விளைகின்றன.

வைரமும், வெள்ளியும், மாணிக்கமும், பச்சைக் கல்லும், வைடூரியமும், தங்கமும் வெவ்வேறு விதமான மண்களின் சம்பந்தம் கொண்டவை. இவை சிருஷ்டிக்கப்படுகின்றன. நதிகள் அத்தனையும் அக்னியின் உற்பத்தி ஸ்தானங்கள். அக்னி என்பது சாதாரண விஷயமல்ல. அது பெரிய வம்சம் என்றும் சொல்லப்படுகின்றது.

அந்த அக்னியின் வம்சம் விரிவாக சொல்லப்பட்ட பிறகு ஸ்கந்தன் என்று அழைக்கப்படுகின்ற முருகருடைய அலங்கார மகிமையும் மகாபாரதத்தில் தனியாக வருகிறது. ஸ்கந்தன் யார், அவருடைய சரித்திரம் என்ன என்று தருமர் கேட்க, மார்க்கண்டேய முனிவர் அதை விவரித்துச் சொல்வதாக வருகிறது.

சிவனுடைய ரூபம் அக்னி. அதாவது, அக்னியினுடைய இன்னொரு விஷயம் சிவன். அந்த சிவனுடைய மகிழ்ச்சியின் விளைவாக ஒரு தாது ஏற்பட அதை வேறு எவரும் தாங்க முடியாமல் போக, அதை ஒரு குளத்தில் விட்டுவிட அது ஆறு குழந்தைகளாக பிறந்தது. கார்த்திகைப் பெண்கள் என்னும் நட்சத்திரங்கள் அவர்களை ஸ்வகரித்து வளர்த்து பிறகு ஒரு உருவமாக்கினார்கள்.

இந்திரனுடைய படை பலமற்று இருந்தது. சரியான தலைவனற்று இருந்தது. தேவர்களுடைய அந்தப் படைக்கு தலைமை வகிக்க சிவனுடைய மைந்தனான முருகன் தகுதியானவன் என்று பல்வேறு விதமான சோதனைகளுக்குப் பிறகு இந்திரன் புரிந்துகொண்டு அவரை தேவசேனாதி பதியாக நியமித்தான்.

ஸ்கந்தனுக்கு முன்பாகவே பிறந்த தேவசேனா அவருக்காக இளமையோடு காத்திருக்க, ஸ்கந்தன் என்ற முருகனுக்கு தேவசேனா திருமணம் செய்விக்கப்பட்டார். இவை அனைத்தும் குறியீடுகள் என்பது என் அபிப்ராயம். போர் என்ற விஷயம் இல்லாது பூமி இல்லை. போர் செய்கின்ற முனைப்பு, பிடிவாதம், முழு பலம், சோர்வில்லா தன்மை எல்லாமே முருகர் என்று சொல்லப்படுகிறது.

சிவனிடமிருந்து நழுவி வந்ததால் ஸ்கந்தம் என்று அழைக்கப்பட்டது. ஸ்கந்தம் என்ற வார்த்தைக்கு நழுவுதல் என்று பெயர். நழுவிய ஒரு வலிவு ஸ்கந்தன். அசையாத விஷயத்திலிருந்து அசைந்த சக்தி ஸ்கந்தன். நல்லவர்களுக்கு போர் செய்யும் முனைப்பை இந்த ஸ்கந்தன் ஏற்படுத்துகிறான். அல்லது இந்த போர் செய்யும் முனைப்புக்கு ஸ்கந்தன் என்ற ரூபம் கொடுத்திருக்கிறார்கள்.

உலகத்தில் எல்லா காலங்களிலும் இடையறாது போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதர்களின் படையெடுப்பும், கிருமிகளின் படையெடுப்பும், அலை கடல் நிலம் புகுதலும், எரிமலை வெடிப்பும்கூட போர் என்பதின் வேறுவேறு ரூபம்தான். அக்னியைப் பற்றியும், முருகப்பெருமானின் பிறப்பு பற்றியும் சூட்சுமமாகவும், விரிவாகவும் மகாபாரதம் பேசுகிறது.

திரும்பத் திரும்ப படித்துப் பார்க்கையில் போராடுகின்ற குணமே, முனைப்பே, ஜெயிக்கின்ற ஆவலே, உத்வேகமே முருகன் என்று உவமையாக்கப்பட்டிருக்கிறது. கடவுள் சக்தியாக பார்க்கப்பட்டிருக்கிறது. மனித இயல்பில்லாத எதையும் இந்துமதம் கடவுளாக வர்ணித்து விடவில்லை.

மார்க்கண்டேயரோடு வனத்தின் ஒரு பக்கம் பஞ்சபாண்டவர்கள் பல்வேறு விதமான கேள்விகள் கேட்டு தர்மத்தை பற்றிய விளக்கங்களை பெற்றுவரும் அதே சமயத்தில் கிருஷ்ணரும் உடனிருந்து அவர்களை கேள்விகள் கேட்க உற்சாகப்படுத்தியும், தன் இருப்பால் அந்தச் சபையை சந்தோஷப்படுத்தியும் வந்த நேரத்தில் கிருஷ்ணருடைய மனைவியான சத்யபாமை, பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரௌபதியோடு புருஷர்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு ஆற்றங்கரையோரம் வசதியாக அமர்ந்து ஒருவருக்கொருவர் முகமன் கூறி மெல்லிய நகைச்சுவையை பரிமாறிக் கொண்டார்கள்.

அப்படிப் பேசுவதின் மூலம் தங்களை இயல்பாக்கிக் கொண்டு, பரஸ்பரம் இருவரும் இரண்டு உயர்குலத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும், அந்த கம்பீரங்களை முன்னிருத்தாது அரசகுமாரி, பட்டமகிஷி என்றெல்லாம் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளாமல் உளமார்ந்த சிநேகிதிகளாக பேசத் துவங்கினார்கள். தோழிகளாக தங்களை முழுதுமாய் பாவித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கேலி செய்தார்கள்.

யது குலம் பற்றியும், குருகுலம் பற்றியும் உள்ள அதிசயங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள். ‘‘கிருஷ்ணை, உன்னிடம் நான் ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது’’ என்று நெருங்கி வந்து முகம் முழுவதும் ஆவலாக சத்யபாமை பேச ஆரம்பித்தாள். துருபதனின் மகள் திரௌபதி என்றோ, பஞ்ச பாண்டவரின் மனைவி பாஞ்சாலி என்றோ அழைக்காது, திரௌபதியின் வசீகரமான அந்த கருப்பு வர்ணத்தை, அந்த அழகை சிலாகிக்கும் வண்ணம் கூடுதலான உரிமையை சத்யபாமா எடுத்துக் கொண்டு கிருஷ்ணை என்று விளித்து பேச ஆரம்பித்தாள்.

‘‘கட்டுமஸ்தான உடம்பு உடையவர்களும், அபாரமான வீரம் உடையவர்களும், மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களும், தங்களைப் பற்றிய சிறப்புகள் முற்றிலும் அறிந்தவர்களுமான உன்னுடைய ஐந்து புருஷர்களை நீ எவ்விதம் கவர்ந்து வைத்திருக்கிறாய்? அவர்கள் உன்மீது இத்தனை பிரியமாக இருப்பதற்கு என்ன காரணம்? உன்னை முன்னிறுத்தாது அவர்கள் பேசுவதே இல்லையே!

ஐந்து பேரும் சகலத்திற்கும் உன்னுடைய சம்மதமல்லவா கேட்கிறார்கள், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! இந்த ஐந்து மகாபாரதர்களும் உன்னிடம் இத்தனை தாஸமாக இருப்பதற்கு என்ன காரணம்? இதை எனக்குச் சொல்லித் தருவாயா? இது ஹோமமா, யக்ஞமா, மூலிகையா, வேரா, மந்திரமா அல்லது விரதமா, பூஜையா, எந்த தெய்வம் குறித்த பூஜை.

அதைச் சொன்னால் நானும் அந்த விஷயங்களைக் கற்றுக்கொண்டு, என்னுடைய ஸ்ரீகிருஷ்ணரை என்னிடமே இன்னும் நெருக்கமாக இருப்பதற்கு நான் முயற்சி செய்வேன். எனக்கு இந்த உதவியை செய்யக் கூடாதா?’’ என்று பிரியத்துடனும், ஆவலுடனும் கேட்பாள் சத்யபாமா. ஸ்ரீகிருஷ்ணருடைய மனைவியா இப்படி கேட்பது, அவருடைய அன்புக்குப் பாத்திரமான சத்யபாமையா இப்படி கேட்பது என்று திகைப்போடு திரௌபதி சத்யபாமாவை ஊடுருவிப் பார்த்தாள்.

‘‘ஒரு நல்ல பத்தினிப் பெண் இப்படி ஒரு கேள்வியை கேட்கக் கூடாது. இது மிகப்பெரிய தவறு. மூலிகையோ, வேரோ, மந்திரமோ, தந்திரமோ, விரதமோ, பூஜையோ, ஹோமமோ, யக்ஞமோ வைத்து ஒரு புருஷனை வசியப்படுத்துவதை நல்ல குலத்தில் பிறந்த எந்தப் பெண்ணும் சிந்திக்க மாட்டாள்.

அப்படி சிந்திப்பவளாயின், ஒரு கடும் விஷம் உள்ள பாம்பு வீட்டிற்குள் வந்ததான ஒரு பயம்தான் ஒரு புருஷனுக்கு அந்த மனைவி மீது ஏற்படும். இவள் மேற்கொண்டு என்ன மந்திரம் செய்வாளோ, எந்த மூலிகை தருவாளோ, எதை தொடச் சொல்வாளோ, எதை விடச் சொல்வாளோ, இன்னும் வேறு என்ன ஹோமங்கள் செய்து என்னை கட்டிப் போடுவாளோ என்ற பயம் இருக்கும்.

பயம் இருக்கும் இடத்தில் அன்பு வருமா, சத்யபாமை? பயமும், அன்பும் எதிர் எதிர் விஷயங்கள் அல்லவா. இந்த கேள்வியை எப்படி நீ என்னிடம் கேட்கலாம். இருந்தாலும் அன்போடும், ஆவலோடும் நீ கேட்டதால் உனக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.’’ திரௌபதி திரும்பி அவளைப் பார்த்து உட்கார்ந்து கொண்டாள். அவள் முகம் சுடர் விட்டது.

சத்யபாமைக்கு தன் கேள்வி குறித்து ஒரு கலவரம் ஏற்பட்டாலும் திரௌபதி கோபித்துக் கொள்ளாமல் தனக்கு பதில் சொல்ல முற்பட்டதால் மகிழ்ந்து, தன் முழு பலத்தையும் மனதிலே தேக்கி கேட்கத் துவங்கினாள். கேள்வியே தவறு என்று சொல்லிவிட்டால் எப்படி கேட்க வேண்டும் என்று சொல்லித் தருவார்கள் அல்லவா. எது தவறு, எது தவறு அல்லாதது என்றும் சொல்வார்கள், அல்லவா? எனவே ஐந்து புருஷர்களின் மனைவியாக இருக்கின்ற திரௌபதி சொல்வது மிக நிச்சயமாய் உயர்ந்த விஷயமாய் இருக்கக்கூடும்.

முற்றிலுமாய் கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற அடக்கம் இயல்பாக சத்யபாமைக்குள் வந்தது. ‘‘வேரையும், மூலிகையையும் பயன்படுத்துவதில் பெரிய ஆபத்து இருக்கிறது. உன் புருஷனுக்கு வேண்டாதவன் கபடமாய் வேடம் தரித்து உன்னிடம் இது புருஷனை வசீகரிக்கின்ற வேர்.

அதற்குண்டான மூலிகை, இப்படி பூஜை செய்து அவன் இரவு தூங்கும்போது இந்த இடத்தில் வைத்துவிடு என்று சொல்ல, நீயும் செய்தாய் என்றால் அந்த வேர் பட்டு அந்த மூலிகை பட்டு அவன் பிராணன் போய் விட்டது என்றால் என்ன செய்வாய்? அப்படியும் இந்த உலகத்தில் கொலைகள் நடந்திருக்கின்றன. இம்மாதிரி மருந்துகள் மூலம் புருஷனை வசப்படுத்துவது என்கிற விஷயத்தை ஒரு குடும்ப ஸ்த்ரீ அறவே தவிர்க்க வேண்டும்.

சத்யபாமா, நான் உத்தமமான பாண்டவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதைச் சொல்கிறேன். நான் என்னுடைய அகங்காரத்தையும், காம குரோதத்தையும் அறவே விட்டு விட்டு எப்பொழுதும் முழு கவனத்தோடு பாண்டவர்கள் அனைவருக்கும் ஏன் அவர்களுடைய மற்ற மனைவியருக்கும் சேவை செய்கிறேன்.

என்னுடைய விருப்பங்கள் என்று எதையும் கொள்ளாது என் மனதை எனக்குள்ளேயே சுருட்டி வைத்துக் கொண்டு சேவையின் விருப்பத்தால் மட்டுமே என் மனதை பதிகளிடம் வைக்கிறேன். அகங்காரத்தை நெல் முனையளவும் நான் என்றும் நெருங்க விடுவதில்லை. என் வாய்மூலம் ஒருகாலும் எந்த தீய விஷயமும் வராது.

வரக்கூடாது என்ற பயத்ேதாடே நான் இருக்கிறேன். அநாவசியமாக, அநாகரீகமாக நான் எங்கும் நிற்பதில்லை. அதீத ஆர்வமுள்ளவளைப் போல நான் எல்லாவற்றையும் பார்ப்பதில்லை. தேவையில்லா இடத்தில் உட்காருவதில்லை. நிற்பதிலும், நடப்பதிலும் கூட அநாகரீகம் ஏற்படக்கூடாது என்ற முழு கவனத்தோடு இருக்கிறேன்.

என்னுடைய புருஷர்கள் அக்னிக்கு நிகரான தேஜஸ்விகள். சந்திரனைப் போல சந்தோஷம் தருபவர்கள். தூய்மையான வார்த்தைகள் உடையவர்கள். இவற்றால் பகைவர்களை அழிக்கும் குணம் இருப்பவர்கள். பராக்கிரமும், பிரபல்யமும் உடையவர்கள். என் மனதை அவர்களுடைய சேவையிலேயே நான் ஈடுபடுத்தியிருக்கிறேன்.

தேவ, மனித, கந்தர்வ, யட்ச, புருஷர்கள் எவராக இருந்தாலும் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தாலும் என் மனம் இந்த பாண்டவர்களைத் தவிர வேறு எங்கும் செல்வதில்லை. அவர்களை நீராட்டாமல் நான் நீராடுவதில்லை. அவர்கள் படுக்கையில் அயரும் வரை நானும் படுப்பதில்லை. வயலிலிருந்தோ, காட்டிலிருந்தோ, கிராமத்திலிருந்தோ, அரண்மனையிலிருந்தோ என் கணவர்கள் அந்தப்புரம் வரும்போது நான் நின்று கொண்டு அவர்களை வணங்குகிறேன்.

ஆசனமும், நீரும் கொடுத்து அவர்களை உபசரிக்கிறேன். ருசியான சமையலை என்னுடைய மேற்பார்வையில் தயார் செய்து அவர்களுக்கு பரிமாறுகிறேன். சரியான சமயத்தில் போஜனம் செய்விக்கிறேன். அவர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் வேலையாட்களை அனுப்பி தானியங்களை சேகரிக்கிறேன். அவற்றின் தரத்தைப் பார்க்கிறேன்.

வீட்டை துடைத்து, பெருக்கி, மெழுகி, தோரணங்கள் செய்து தொங்க விட்டு எப்பொழுதும் சுத்தமாக அலங்காரமாக வைத்துக் கொள்கிறேன். நான் சோம்பலாக இருப்பதேயில்லை. கணவன் எதிரே அவர் செய்யும் பரிகாசத்திற்கு சிரிப்பதல்லாது, வேறு எப்போதும் எவர் முன்பும் சிரிப்பதில்லை. பெண்களின் தொடர்பிலிருந்து விலகியிருக்கிறேன்.

நான் அடிக்கடி நின்று வாசலை பார்ப்பதில்லை. எனக்கு வீட்டிற்குள் வேலைபலதும் இருக்கின்றன. வீட்டு தோட்டத்திலும் நான் தனியாக இருப்பதில்லை. ஒன்று புருஷர்களுக்கு நடுவே இருக்கிறேன் அல்லது பணிப் பெண்களுக்கு நடுவே இருந்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நான் அதிகம் சிரிப்பதில்லை. அதிகம் கோபப்படுவதில்லை.

கோபம் வரும் விஷயத்தையே நான் தள்ளி விடுகிறேன். புருஷர்கள் இல்லாது தனியாக இருப்பது என்பது எனக்கு பிடிக்காத விஷயமாகும். குடும்ப காரியங்களுக்காக நான் வீட்டை விட்டு வெளியேறுகிறபோது மலர்களை அணிந்து கொள்வதில்லை. மாலைகள் சூடுவதில்லை. வாசனை திரவியங்கள் உபயோகப்படுத்துவதில்லை. எவர் கவனத்தையும் அதிகமாக கவராது மௌனமாகவே இருக்க விரும்புகிறேன்.

கணவனுக்கு பிடிக்காத பொருட்களை நானும் உடனடியாக துறந்து விடுகிறேன். என் மாமியாருடைய சொற்களை நான் மிக முக்கியமாக கருதுகிறேன். அவருக்கு பிரியமாக இருப்பதின் மூலம் என் கணவர்களின் அன்பை சம்பாதிக்கிறேன். நான் இரவும், பகலும் சோம்பலைத் துறந்து பிக்ஷாதானம், பித்ரு சிரார்த்தம், பாக யக்ஞம், மதிப்பிற்குரிய ஆண்களை உபசரித்தல், வினயம், நியமம் போன்ற எனக்குத் தெரிந்த அத்தனை தர்மங்களையும் முனைப்போடு கடைபிடிக்கிறேன்.

சத்யபாமா, என்னுடைய கணவர்கள் மிகவும் நல்லவர்கள். மென்மையான இயல்புடையவர்கள். சத்தியவாதிகள். சத்திய தர்மத்தையே எப்பொழுதும் கடைபிடிப்பவர்கள். ஆனாலும், கோபம் கொண்ட விஷப் பாம்பிடம் மக்கள் பயப்படுவதைப் போல நான் என் கணவர்களிடம் பயந்தபடிதான் அவர்களுக்கு சேவை செய்கிறேன். நல்ல பெண்ணுக்கு கணவனே தெய்வம். கணவனே அவளுக்கு கதி.

கணவனைத் தவிர ஒரு பெண்ணுக்கு வேறு எந்த உதவியும் இல்லை என்பதை நான் அறிவேன். இப்படிப்பட்ட நல்லவர்களுக்கு விருப்பமில்லாததை ஒரு பெண் எப்படி செய்ய முடியும்? நான் காலையிலேயே எழுந்து என் சேவைகள் அத்தனைக்கும் தயாராகி விடுகிறேன். மாமியாருக்கு உண்டான அத்தனை உதவிகளையும் நானே முன்னின்று செய்கிறேன்.

குந்திதேவியின் போஜனம், வஸ்திரம், ஜலம் முதலிய எல்லாவற்றையும் நானே பார்த்துப் பார்த்து எடுத்து வைக்கிறேன். என் மாமியாரை விட சிறந்தவர் என்று நான் வேறு பெண்களைக் கருதுவதே இல்லை. முன்பு யுதிஷ்டிரர் அரண்மனையில் இருந்த காலத்தில் ஒரு நாளைக்கு எட்டாயிரம் அதிதிகள் தங்கத் தட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள்.

ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் உணவு தயாரித்தும், பரிமாறியும் அதற்குண்டான வேலைகளை முனைப்போடும் செய்துகொண்டிருந்தார்கள். அதிதிகளை ஆடியும், பாடியும் பல பெண்கள் வரவேற்று உபசரித்திருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரையும் பெயர் முதற்கொண்டு நான் அறிவேன். அவர்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார்களா, இல்லையா என்பதும் எனக்குத் தெரிந்து விடும்.

இரண்டு கைகளை தட்டி நான் உத்தரவு இட்டால் அவர்கள் நாலா பக்கமும் சிட்டென பறப்பார்கள். எந்த வேலை முடிந்திருக்கிறது, எந்த வேலை முடியாமல் இருக்கிறது என்பதையும் நான் மனதில் குறித்து வைத்துக் கொள்வேன். அது மட்டுமல்ல, அரண்மனையில் வரவும் செலவும் என்னுடைய மேற்பார்வையில்தான் இருந்தது.

இன்று என்ன வரவு வந்தது, இன்று என்ன செலவாயிற்று, எந்த பண்டாரத்தில் என்ன பொன், பொருட்கள் மீதம் இருக்கின்றன, மறு படியும் எப்போது பண்டாரம் நிரப்பப்பட வேண்டும் என்பதெல்லாமும் எனக்குத் தெரியும். குடும்பம் என்கிற விஷயத்தை நான் குறைவர சுமப்பதாலேயே என் புருஷர்கள் ஐந்து பேரும் என்மீது அளவற்ற பிரியத்தோடு இருக்கிறார்கள்.

வேறு எந்த தந்திரமும் இல்லாமல் நான் உண்மையாகவும், முழு உழைப்போடும் இருப்பதைப் பார்த்து அவர்கள் என்னை இடையறாது போற்றுகிறார்கள். பணிப் பெண்ணை ஏவிக் குடிப்பதற்கு நீரைக் கொண்டு வர தருமர் உத்தரவிட்டால் நான் என் பணிப்பெண்ணிற்கு முன்னால் ஓடிப்போய் நீரை எடுத்து வந்து அவரிடம் நீட்டுவேன்.

‘பணிப் பெண்ணிடம் தானே கேட்டேன், நீயே கொண்டு வந்து விட்டாயா, கொடு’ என்று சந்தோஷமாக வாங்கி குடிப்பார். இந்த அன்பை, இந்த சுறுசுறுப்பை அவர் மறக்க மாட்டார். நல்ல புருஷர்கள் இதைக் கொண்டாடுவார்கள். இது தந்திரமல்ல, சத்யபாமா. அந்த வேலையை, அந்த வேலைக்காரியை விட அவருக்கு பத்தினியாக இருக்கின்ற நான் சிறப்பாகச் செய்ய முடியும்.

ஒரு சிறப்பான சேவை செய்வதற்கு, நான் எப்பொழுதும் தயாராக இருக்கிறேன். அவ்வளவே. பதிபக்தியும், உண்மையான சேவையுமே புருஷனை வசீகரிக்கின்ற அற்புதமான மந்திரம் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. கெட்ட நடத்தை உள்ள பெண்கள் வேறு எந்த உபாயங்களை கடைபிடித்தாலும் அதை நான் காதிலே வாங்கிக் கொள்வதில்லை. அதை செய்ய விரும்புவதில்லை.’’

சத்யபாமாவிற்கு உடம்பு உதறியது. கை கூப்பினாள். மிகப் பெரிய சக்தியின் முன்பு தான் ஒரு தூசாக உட்கார்ந்திருக்கிறோம் என்பதைப் போல் உணர்ந்தாள். ‘‘கிருஷ்ணா, நான் உன்னை சரணடைகிறேன். மிகத் தவறான என்னுடைய வினாவிற்காக என்னை மன்னித்து விடு. என் மீது கோபம் கொள்ளாது இருப்பதற்காக நான் உனக்கு நன்றி சொல்கிறேன்.

உன்னை தோழி என்று அழைக்க விரும்பியதால் அந்த உரிமை எடுத்துக் கொண்டதால் இந்தக் கேள்வியை உன்னிடம் கேட்கத் தோன்றியது. மறுபடியும் கேட்கிறேன். தயவுசெய்து மன்னித்து விடு’’ என்று சொல்லி, சத்யபாமை திரௌபதியின் முழங்காலை தழுவிக் கொண்டாள். அந்த செய்கையிலும் மன்னிப்பு கோறல் இருந்தது.

-பாலகுமாரன்