சகல மங்களங்களும் நிலைத்திட திதி நித்யா தேவிகள் ஸ்தோத்திரம்



அபூர்வ ஸ்லோகம்

பகமாலினி (சுகப்ரசவம் ஆக, கர்ப்பசிதைவு ஏற்படாதிருக்க)
கர்வமாம் குணத்தைப்போக்கி சர்வமும் சிநேகமாக்கி ஆர்வமும் அறிவும் ஊட்டும் பார்புகழ் பகமாலினி தேவி போற்றி.

காமேஸ்வரி (அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டிட)
கஷ்டமெல்லாம் விரட்டி ஓட்டி இஷ்டமெல்லாம் தந்து வாழ்த்தி அஷ்டதிக்கும் நின்று காக்கும் இஷ்ட தேவி காமேஸ்வரி நித்யா போற்றி.

த்வரிதா (உடல்நலம், கல்வி மேம்பட)
மருந்தென மன்னுயிர் காக்க அருந்திடும் அமுதென ஆகி வரும் திருவருளால் நலமே அருள் அன்னை த்வரிதா தேவியே போற்றி போற்றி.

வஹ்னிவாஸினி (தொழிலில் மேன்மை அடைய)
வாக்கிலே உறைந்து என்றும் போக்கிலே தவறிலாது காத்து ஆக்கிடும் யாவிலும் வெற்றி தேக்கிடும் வஹ்னிவாஸினி தேவி போற்றி போற்றி.

நித்யக்லின்னா (நினைத்த செயல்கள் நினைத்தபடி நிறைவுற)
சத்தியம் வன்மை வாக்கு நித்தியம் புகழாம் பெருமை எத்திசையும் போற்ற நல்கும் சக்தி நித்யக்லின்னா போற்றி போற்றி.

சிவதூதி (உடல்நலம், செல்வவளம், கல்வி அபிவிருத்தி பெற)
பஞ்சமும் பசியும் போக்கி நெஞ்சிலே நிறைந்து நின்று அஞ்சிடா வாழ்வளிக்கும் வஞ்சியே சிவதூதியே போற்றி போற்றி.

குலஸுந்தரி (செல்வம், அழகு, உடல் பலம் சிறந்தோங்க)
வலிமையுடன் வன்மை ஞானம் பொலிவுடன் புகழும் கீர்த்தி நலிவிலா யாவுமளிக்கும் கலிதெய்வம் குலஸுந்தரி போற்றி போற்றி.

விஜயா (தொழில், வியாபாரம், செய்பணி மேலோங்கி, நீடிக்க)
மடைதிறந்த வெள்ளம்போலே தடையெலாம் தகர்த்து ஓட்டி இடைவிடா அருள்மழையை இடையறாதருளும் விஜயா தேவி போற்றி போற்றி.

பேருண்டா (தீயசக்தி, விஷபயம் தீண்டாதிருக்க)
உலகினை ஆக்கிக் காத்து நிலவுயிர் துன்பம் நீக்கி நலமுடன் நாளும் வாழ்வு நல்கிடும் பேருண்டா தேவி போற்றி போற்றி.

ஜ்வாலாமாலினி (துயரங்கள் தொலைய, தெய்வ அருள் கிட்ட)
தெளிவிலா மனத்துயர் போக்கி களிப்புடன் நன்மையாக்கி ஒளி திகழ் வாழ்வை யார்க்கும் அளித்திடும் ஜ்வாலாமாலினி தேவி போற்றி போற்றி.

நித்யா நித்யா (பெரியோரின் கனிந்த ஆசி கிட்ட)
வேகமாய் வந்தே வாழ்வில் சோகமாய் வினைகள் தீர்த்து யோகமாய் யாவும் நல்கும் ஆகமம் போற்றும் நித்யா நித்யா போற்றி போற்றி.

நீலபதாகா (என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்க)
நீள் நில உலகில் வாழ நீடித்த நிம்மதியே தந்து நீங்காத மகிழ்ச்சி சேர்க்கும் நீலபதாகா தேவியே போற்றி போற்றி.

மஹாவஜ்ரேஸ்வரி (ஞானம் மேம்பட, மன உறுதி வலுப்பெற)
நிறைவான நெறி மாண்பு குறைவிலா கோடி செல்வம் மறைஞானம் கல்விதரும் இறை மஹாவஜ்ரேஸ்வரி தாயே போற்றி போற்றி.

சித்ரா (எதிர்பாராத யோகம் கிட்ட)
நசித்திட்ட வாழ்வில் செல்வம் புசித்திட தீரா அன்னம் விசித்ரமாக யாவும் சேர்க்கும் சித்ரா தேவி போற்றி போற்றி.

சர்வமங்களா (சகல ஸெளபாக்யங்களும் கிட்ட)
மங்களம் யாவும் வாழ்வில் தங்கிட அருளே செய்து மக்கட்பேறு நல்கும் கருணை பொங்கிடும் சர்வமங்களா தேவி போற்றி போற்றி.

தொகுத்தவர்: டி.வி.திருநாவுக்கரசு