பிரிந்த தம்பதியை இணைத்துவைக்கும் பள்ளிகொண்ட பெருமாள்



-பள்ளிகொண்டா

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா என்ற இடத்தில் பாலாற்றங்கரையோரம் மகாவிஷ்ணு பள்ளி கொண்ட நிலையில் அரங்கநாதராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என கருதப்படும் இத்திருக்கோயிலின் மூலவர் அரங்கநாதப் பெருமாளின் திருமேனி சாளக்கிராமக் கல்லினால் உருவாக்கப்பட்டது என்பதால் இக்கோயில் தனிப்பெரும் சிறப்பு வாய்ந்ததாகிறது.

ஆதிசேஷன் மீது அரங்கன் பள்ளிகொண்டிருப்பதால் இத்தலம் பள்ளிகொண்டான் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் திருவேதிமங்கலம் என்றழைக்கப்பட்ட பள்ளிகொண்டா பகுதியை அம்பாராஜா என்ற மன்னர் ஆண்டு வந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு ஆட்சி செய்வதில் விருப்பம் குறைந்து மகாவிஷ்ணுவை தரிசிக்கும் ஆர்வம் மேலோங்கியது.

இதனால் மகாவிஷ்ணுவைக் குறித்து தவமியற்றத் தொடங்கினார். பல ஆண்டு களுக்குப் பின்னரும் மகாவிஷ்ணு காட்சி தரவில்லை. இதனால் மனவருத்தமுற்ற அம்பாராஜா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தபோது ‘உன் விருப்பம் நிறைவேறும். தொடர்ந்து பொறுமையுடன் தவத்தினைச் செய்து வருவாயாக. இந்த இடத்தில் நான் வந்து பள்ளி கொள்வேன்’ என்று அசரீரி ஒலித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னன் தனது தவத்தைத் தொடர்ந்தார்.

இதே சமயத்தில் பிரம்மா யாகம் ஒன்றை நடத்த விரும்பி அதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கினார். சத்யவிரத க்ஷேத்திரமான காஞ்சிபுரத்தில் யாகம் செய்தால் அது நூறு யாகத்திற்குச் சமம் என்பதால் காஞ்சிபுரத்தில் யாகம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. இந்த நேரத்தில் பிரம்ம சபையில் சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் இடையில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட பிரம்மா லட்சுமியே உயர்ந்தவர் என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

இதனால் சரஸ்வதி கோபித்துக்கொண்டு சபையிலிருந்து வெளியேறி, மேற்கே நந்தி துர்கா மலையை இருப்பிடமாகக் கொண்டாள். யாகம் தம்பதி சமேதராக நடத்தப்படவேண்டும் என்பதால், பிரம்மா சரஸ்வதியை அழைத்தார். ஆனால் சரஸ்வதி பிரம்மாவின் மீதிருந்த கோபத்தால் யாகத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். பிரம்மனுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது.

வேறுவழியின்றி, பிரம்மா சாவித்ரியைத் திருமணம் செய்து யாகத்தைத் தொடங்கினார். இதனால் சரஸ்வதியின் கோபம் மேலும் அதிகரித்து அசுரர்களைக் கொண்டு யாகத்தைத் தடுத்து நிறுத்திட முயன்றார். பிரம்மா உடனே மகாவிஷ்ணுவிடம் சென்று யாகத்தை வெற்றிகரமாக முடித்திட உதவும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி மகாவிஷ்ணு அசுரர்களை அழித்தார். சரஸ்வதி மேலும் கோபம் கொண்டு, வேகவதி ஆறாய் உருமாறி புரண்டோடி வந்தாள். அவள் வழியில் மகாவிஷ்ணு பள்ளிகொண்டு, அவளுடைய கோபத்தைக் குறைக்க முயற்சித்தார். சரஸ்வதியால் அவரைத் தாண்டிச் செல்ல இயலவில்லை. மகாவிஷ்ணு, சாவித்ரியும் அவளுடைய அம்சமே என்று எடுத்துக்கூற, சரஸ்வதியின் கோபம் குறைந்தது.

பின்னர் பிரம்மாவுடன் சேர்ந்தார். இந்த புராண அடிப்படையில்தான், பிரிந்த தம்பதியர் இத்தலத்திற்கு வந்து அரங்கனை பிரார்த்தித்தால் ஒன்று சேர்வர் என்பது இங்கே ஐதீகம். அம்பாராஜா மஹாவிஷ்ணுவின் தரிசனத்திற்காகக் காத்திருந்தார். மகாவிஷ்ணு பள்ளிகொண்டாவிற்குத் திரும்பி வந்து தரிசனம் அளித்தார்.

அப்போது அம்பாராஜா, மகாவிஷ்ணு இப்பகுதியிலேயே தங்கி இங்கு வருவோருக்கு வேண்டிய வரம் அருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மகாவிஷ்ணு அம்பாராஜாவின் வேண்டுதலை ஏற்று இத்தலத்தில் கோயில் கொண்டார். ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. அதற்கு முன்னால் நான்குகால் மண்டபம் அமைந்துள்ளது.

மூலவர் அரங்கநாத சுவாமி கருவறைக்குள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறார். தாயார் ரங்கநாயகி தனி சந்நதியில் வீற்றிருக்கிறார். இடதுபுறம் கண்ணாடி அறை, ராமானுஜர் சந்நதி அமைந்துள்ளன. ஜெயன், விஜயன் துவாரபாலர்கள். கருவறைக்கு வெளியே கஸ்தூரி ரங்கன் சந்நதி. மூலவருக்கு நேர் எதிரே கருடாழ்வார் சந்நதி. அருகில் ஆழ்வார்கள், ராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், கண்ணபிரான் என அடுத்தடுத்து சந்நதிகள்.

சம்பாதி என்ற முனிவர் மகாவிஷ்ணுவிடம், செண்பகவல்லி என்பவள் ஆண்டாளைப் போலவே தங்களை மணக்க விரும்புகிறாள் என்று எடுத்துக்கூறினார். மகாவிஷ்ணுவும் திருவுளம் கொண்டு பங்குனி உத்திரத்தன்று செண்பகவல்லியை மணந்துகொண்டார். பெருமாளே மனமுவந்து திருமணம் செய்துகொண்ட இடம் என்பதால் இத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.

திருமணமாகாதவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து பள்ளிகொண்ட பெருமாளை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் இத்தலத்தில் திருமணம் செய்துகொள்ளுபவர்கள் பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர் என்பது ஐதீகம். மேலும் பிரிந்த தம்பதியர் இத்தலத்திற்கு வந்து அரங்கனை பிரார்த்தித்தால் ஒன்று சேர்வர். பிரம்மன் செய்த யாகம் மகாவிஷ்ணுவின் அருளால் இனிதே நிறைவுற்றபோது மகாவிஷ்ணு யாக குண்டத்திலிருந்து வரதராஜப் பெருமாளாக காட்சி கொடுத்தார்.

இதனால் மனம் மகிழ்ந்த பிரம்மன் பெருமாளுக்கு பத்து நாட்கள் உற்சவத்தை நடத்தினார். இதுவே பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலில் பிரம்மோற்சவம் நடைபெற்றது இத்தலத்தில் என்பதும் முதல் பிரம்மோற்சவத்தை இத்தலத்தில் நடத்தியவர் பிரம்மா என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், கருட சேவை, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கோயில் காலை எட்டு முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும், மாலை நான்கு முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும். பள்ளிகொண்டா, வேலூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து 23 கி.மீ. ஆம்பூரிலிருந்து 24 கி.மீ.

- ஆர்.வி.பதி

பள்ளிகொண்டா கோயில் சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கும்வரை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக் கலாம்:

ஸப்தப்ராகார மத்யே ஸரஸிஜ முகுலோத்பாஸமாநே விமாநே
காவேரீ மத்யதேசே பணிபதிசயநே சேஷபர்யங்க பாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர: பார்ச்வ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்.

பொதுப் பொருள்: ஏழு பிராகாரங்களுக்கு மத்தியில் ப்ரணவாகார விமானத்தின் கீழ் காவிரியின் இடையில் ஆதிசேஷன் மேல் யோகநித்ரையில் ஆழ்ந்திருக்கும் ரங்கநாதரே, நமஸ்காரம். தாமரை மலர்களை கையிலேந்திய ரங்கநாயகித் தாயாரால் வணங்கப்படுகின்ற திருப்பாதங்களை உடையவரே, நமஸ்காரம்.