அட, அப்படியா!



மோதகப் படையல் திருமறைக்காடு ஆலயத்திலுள்ள வீரஹத்தி விநாயகப் பெருமானுக்கு நாள்தோறும் மாலை சந்தி வழிபாட்டின்போது மோதகம் படையலாக சமர்ப்பிக்கப்படுகிறது. இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். மும்மூர்த்திகள் தலம் தஞ்சை மாவட்டம் திருவைகாவூர் தலத்தில் வில்வவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தமாக அருள்புரிகிறார். துவாரபாலகர்களாக ஒருபுறம் விஷ்ணுவும், இன்னொருபுறம் பிரம்மனும் காட்சியளிக்கிறார்கள். எனவே இது ‘மும்மூர்த்திகள் தலம்’ என அழைக்கப்படுகிறது.



பலிபீடத்தில் நந்தீஸ்வரர்!

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் நிமிஷம்பாள் ஆலயத்தில் முக்தீஸ்வரர் சந்நதியின் பலிபீடத்தில் நந்தியின் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. தனியே நந்தி அமைவது பொது வழக்கம் என்பதால், இந்தக் காட்சி வித்தியாசமானதாகத் திகழ்கிறது.

முருகருக்கு சிம்ம வாகனம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகிலுள்ள ஆண்டார் குப்பத்தில் முருகப் பெருமானுக்கு மயிலுடன் சிம்ம வாகனமும் உள்ளது. தன் அன்னைக்கு உரிய வாகனத்துடன் முருகன் அருள்புரிகிறார். அந்த சிம்ம வாகனமும் மயிலைத் தாங்கியபடி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உப்பு நிவேதனம்

உத்திரபிரதேச மாநிலம் பெட்வா நதிக்கரையில் வருண பகவான் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உப்பு மட்டுமே நிவேதனம் செய்யப்படுகிறது. அதிகமாகப் பெய்யும் மழை நிற்க உப்புடன் எள் கலந்து நிவேதனம் செய்கிறார்கள். குளிர் மற்றும் பனி குறைய உப்புடன் பார்லி கலந்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

- நெ.இராமன்