அரியகுறிச்சி நாணயம் தவறியவர்களுக்கு நாணயத்தை வெட்டி தண்டனை!



கோயிலுக்குச் சென்றாலே அர்ச்சனை செய்வதும், நம் பிரச்னைகள் தீர வேண்டிக் கொள்வதும் காலங்காலமாக நம்மிடையே இருந்து வரும் வழக்கம். பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கும், வாழ்க்கையில் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து வருபவர்களுக்கும் வடிகாலாகவும்  ஒரு கோயில் அமைந்திருக்கிறது. வித்தியாசமான பழக்க வழக்கங்களும், விநோதமான வழிபாடுகளும் நிறைந்திருக்கும் அந்தக் கோயில் -  வெட்டுடையார்காளி கோயில்.



சிவகங்கையில் இருந்து காளையார் கோயில் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது அரியகுறிச்சி என்ற கொல்லங்குடி கிராமம். பழமையும், பாரம் பரியமும் வாய்ந்த இக்கோயிலில் அருள்மிகு வெட்டுடையார்காளியம்மன் 8 கரங்களுடன் அருள்பாலிக்கிறார். வெட்டு குத்து என்று பரம்பரை பரம்பரையாக தீராத பகை பூண்டிருக்கும் குடும்பங்கள்கூட இங்கு வந்து விபூதி பூசி தங்கள் பகையை தீர்த்து கொள்கின்றார்கள்.

அம்மனுக்கு முன் நின்று இரு குடும்பங்களும் பகையை மறந்து ராசியாகிவிடுகின்றார்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று கூடுவதும், ராசியாகிக் கொள்வதும் இந்த கோயிலில் பெருமளவு நடந்துவரும் வழக்கம். தொடர் ஏமாற்றங்களை சந்தித்து நொந்து போனவர்கள் இந்த கோயிலுக்கு வந்து தங்கள் மனக்குறையை முறையிட்டு நீதி அருளுமாறு காளியிடம் வேண்டிக் கொண்டு காசு வெட்டி போடும் வினோத வழிபாடும் இங்கே தொன்றுதொட்டு நடந்து வருகின்றது. காசு வெட்டி போடுவதன் மூலம் தங்களை ஏமாற்றியவர்கள் கடும் தண்டனை பெறுவார்கள் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால நம்பிக்கை!

ஏதேனும் பொருள் அல்லது சொத்தை இழந்தவர்கள், அநியாயமான சூழ்நிலையில் மனவேதனை அடைந்தவர்கள், நீதிமன்றமோ, காவல்நிலையமோ செல்ல இயலாதவர்கள் தங்கள் மனம் நொந்து இவ்வாறு காசை வெட்டி போடுகிறார்கள். அதற்கு அம்பாள் உரிய காலத்தில் எதிரிக்கு கடும் தண்டனை பெற்று தருவது, பலகாலமாக நடைபெற்றுவரும் உண்மை. தங்களை ஏமாற்றியவன் என்று கருதுபவர்களை இந்த கோயிலுக்கு அழைத்து வந்து சத்திய பிரமாணம் வாங்குவதும் நடக்கின்றது. அப்படி சத்திய பிரமாணம் செய்பவன் நியாயவானாக இருந்தால் அவன் தப்பித்தான். ஆனால், பொய்யாக, நேர்மைக்குப் புறம்பாக அவன் அப்படி பிரமாணம் எடுப்பானானால் அவனுக்கு அழிவு நிச்சயம். இந்த காரணத்தாலேயே, நியாயமற்றவர்கள் இப்படி பிரமாணம் எடுத்துக்கொள்ள வருவதில்லை.



இதுபோன்ற வித்தியாசமான நேர்ச்சைகளும், வேண்டுதல்களும், வினோதமான வழிபாடுகளும் இக்கோயிலில் நிரம்பி இருக்கின்றன. ‘‘என் சொத்தை அநியாயமாகப் பறித்துக் கொண்டான். ஆதரவு அற்ற எனக்குத் துணை யாரும் இல்லை. காளியே நீயே என் சொத்தை மீட்டருளவேண்டும்’’ என்று முறையிட்டால், அந்த முறையீட்டில் உண்மையும், நியாயமும் இருந்தால், அவ்வாறு முறையிட்ட சில மாதங்களிலேயே எதிரியை சரணடைய வைத்து பறிபோன சொத்தை, காளி மீட்டு தருவாள் என்பதில் இந்தக் காளியின் பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டுள்ளனர். சுற்றுவட்டார தென்மாவட்ட மக்கள் நீதிமன்றம், காவல்நிலையம் செல்லாமல் தங்கள் கோரிக்கைகளை காளியிடம் முறையிட்டு நீதி பெறுகின்றனர் என்றால், இந்த அம்மனின் சக்தியும், அருளும் எத்தகையது என்பது புரியும். கோயில் தொடர்புக்கு தொலைபேசி எண்: 98431 46743

- எம். செந்தில்குமார், சிவகங்கை
படங்கள்: பிரிட்டோ