கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - கொடும்பாளூர்



அமுது படைக்கக் கொள்ளையும் புரியலாம்!

உறையூரில் தங்கயிருந்த கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றபோது அந்நெடிய வழியில் முதலில் கடந்ததாகக் குறிப்பிடப் பெறுவது ‘கொடும்பை நெடுங்குள கோட்டகம்’ என்ற இடமாகும். கொடும்பை என்பதே கொடும்பாளூர் என்று மருவியிருக்கிறது. அங்கிருந்த பெரிய ஏரிக்கரையைக் கடந்து செல்லும்போது சிவபெருமானின் திரிசூலம் போன்று அந்த வழியில் மூன்று தடங்கள் பிரிந்து சென்றதாகவும் அவற்றில் வலப்பக்கம் இருந்த தடத்தின் வழியாக மதுரை நோக்கி அவர்கள் பயணம் செய்தனர் என்று இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்தில் குறித்துள்ளார். திருச்சி-மதுரை சாலையில்தான் கொடும்பாளூர் என்னும் இருக்குவேளிரின் தலைநகரம் உள்ளது. இவர்கள் சோழர் தம் சிற்றரசர்களுள் ஒருவராவர்.



சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டர் தொகை நூலில் ‘மடல் சூழ்ந்த தார் நம்பி இடங் கழிக்கும் தஞ்சை மன்னவனாம் செருத்துகணை தன் அடியார்க்கும் அடியேன்’ என்று பாடி பரவியுள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் இடங்கழி நாயனாரின் சரிதத்தை சேக்கிழார்பெருமான் தம் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைத்துள்ளார். தி்ல்லை அம்பலத்திற்குப் பொன் வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகிய சோழர் மரபில் உதித்து கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் வேளிர் குல அரசராக விளங்கியவரே இடங்கழி நாயனார் என்பது சேக்கிழாரின் குறிப்பாகும். இவர் வைதீக தரும நெறி நின்று சைவம் தழைக்க திருக்கோயில்கள் பலவற்றை பேணி வந்ததோடு, சிவனடியார்கட்கு வேண்டுவனவற்றையெல்லாம் அளிக்க வல்லாராகவும் வாழ்ந்தார் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு வாழ்ந்து வந்த இடங்கழியார் கொடும்பாளூரில் அரசு புரிந்தபோது ஒருநாள் சிவனடியார்களுக்குத் திருவமுது அளிப்பதையே தவமாகப் பேணும் அடியார் ஒருவர் உணவிட எங்கும் நெல் கிடைக்காத நிலையில் மனம் தளர்ந்து அடியார்களுக்கு எப்படியும் அமுது செய்வித்திட வேண்டும் என்ற பேரார்வத்தால் கொடும்பாளூர் அரசர்க்குரிய நெற் பண்டாரத்திலே (களஞ்சியத்திலே) நள்ளிரவில் புகுந்து நெல்லைக் களவு செய்ய முனைந்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியார் முன் கொண்டு நிறுத்தினர்.

நெல்லைக் களவாடியவரைப் பார்த்து ‘நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்?’ எனக் கேட்டார். ‘நான் சிவனடியார்களுக்கு திருவமுது படைப்பதற்காகவே இவ்வாறு செய்தேன்,’ என்றார் சிவனடியார். இது கேட்ட கொடும்பாளூர் அரசர் இடங்கழியார், ‘எனக்கு இவரல்லவோ பண்டாரம்!’ எனக் கூறி ‘சிவனடியார்களெல்லோரும் என் நெல் பண்டாரம் மாத்திரமின்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்துகொள்க,’ எனப் பறையறிவிக்க ஆணையிட்டாராம். இவ்வாறு கூறும் சேக்கிழார் பெருமான் அருள் வேந்தராகத் திகழ்ந்த கொடும்பாளூர் அரசர் இடங்கழியார் சிவநெறி தழைப்ப வாழ்ந்து சிவப்பேறு பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேக்கிழார் பெருமான் கூறியுள்ள இந்த வரலாற்றை உலகவர்க்குக் காட்ட விழைந்த இரண்டாம் ராஜராஜ சோழன் ராஜராஜபுரியில் தான் எடுத்த ராஜராஜேச்சரம் என்ற (தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில்) திருக்கோயிலில் ‘இடங்கழியாண்டார்’ என்ற கல்வெட்டினைப் பொறித்து அதற்குக் கீழாக இடங்கழியார் ஆசனத்தில் அமர்ந்தவாறு கையுயர்த்தி ஆணை பிறப்பிக்க ஊழியன் ஒருவன் பறை மத்தளத்தை அடித்தவாறு அதனை அறிவிக்கும் காட்சி அங்கு சிறப்பாக இடம் பெறுமாறு செய்துள்ளான்.

தேசிய நெடுஞ்சாலை எண்.45ல் திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழித்தடத்தில் முருகப் பெருமான் அருள்பாலிக்கும் விராலிமலையைக் கடந்து செல்லும்போது கொடும்பாளூர் காட்சி நல்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள இச்சிற்றூர் பண்டு தலைநகராக விளங்கிய பெரு நகரமாகும். இதனைக் கொடும்பை நகர் என்றும் வரலாற்று ஏடுகள் குறிப்பிடும். ஒரு பெரிய அரசமரம், அருகே குளம், அப்பகுதியில்  பிரமாண்டமாக ஓர் இடபம் (காளை), சற்று அருகே நடப்பெற்ற நான்கு பெருந்தூண்கள் இவையே அண்மைக் காலம் வரை அவ்வூரின் ஒரு பகுதியில் காட்சி தந்தவை. இவை அங்கு பண்டு பெருங்கோயில் ஒன்று இருந்ததைக் காட்டும் சான்றாதாரங்களாகும். காலவெள்ளம் அப்பெரும் சிவாலயத்தைக் கரைத்து அழித்துவிட்டது.



அவ்வூர் மக்கள் தரையில் கிடந்த பிரமாண்ட இடபத்திற்கு ஒரு மண்டபத்தை எழுப்பியுள்ளதோடு, அதன் எதிரே இடங்கழி நாயனாரின் சிற்றாலயத்தையும் நிறுவியுள்ளனர். கருவறையுள் இடங்கழி நாயனாரின் திருவுருவம் உள்ளது. கான்கிரிட் கட்டுமானங்களும் டைல்ஸ் பதித்த சுவர்களும் நம்மை ஒருபுறம் உறுத்தினாலும், இடங்கழியாருக்கு ஒரு வழிபாட்டுத் தலம் அங்கிருப்பது நம்மை நெகிழ்ந்திடச் செய்கின்றது. பெரிய இடபம், இடங்கழியார் கோயில் ஆகியவை திகழும் இடத்திலிருந்து வடக்கு நோக்கிச் சென்றோமாயின் அங்கு முசுகுந்தீஸ்வரர் திருக்கோயில் என்ற பழங் கோயில் ஒன்றைக் காணலாம். பராந்தக சோழன் ஆட்சி காலத்தின்போது மகிமாலய இருக்குவேள் என்றழைக்கப்பெற்ற குஞ்சரமல்லன் என்ற கொடும்பாளூர் அரசன் முதுகுன்றன் உடையார்க்கு இக் கோயிலை அமைத்தான், என அங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது. கி.பி. 13ம் நூற்றாண்டில் இக்கோயில் சற்று விரிவு பெற்றுள்ளது. சதுர வடிவ சிகரத்துடன் முற்றிலும் கருங்கல்லாலேயே இவ்வாலயம் எடுக்கப்பெற்றதாகும்.

இடங்கழி நாயனார் கோயிலிருந்து கிழக்கே செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று மீண்டும் வடக்கு நோக்கிச் செல்வோமாயின் அங்கு பரந்துபட்ட புல்வெளி ஒன்றில், உலக கலை வல்லோரை நாளும் தம்பால் ஈர்த்து நிற்கின்ற மூவர் கோயில் என்ற கலைப் பெட்டகம் இருப்பதை நாம் காணலாம். மூன்று சிவாலயங்கள் நடுவே இருக்க 15 சுற்றாலயங்களும், முன்புறம் பெரிய மண்டபம், பலிபீடம் ஆகியவற்றுடன் இக்கோயில் கம்பீரமாக இருந்துள்ளது. தற்போது நடுக்கோயிலும், தென்புற கோயிலும் மட்டுமே புணர்நிர்மாணம் பெற்று நிற்க, வடபுறத்தளியும், மற்ற சுற்றாலயங்களும், மகா மண்டபமும் அடித்தளத்தை மட்டுமே கொண்டு பண்டைய மூவர் கோயிலின் மாட்சிமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

பூதிவிக்கிரமகேசரி என்ற கொடும்பாளூர் வேளிர் குலத்து வேந்தன் மூவர் கோயிலில் நடுக்கோயிலைத் தன் பெயராலும் மற்ற இரு கோயில்களைத் தன் தேவியரான அனுபமா, கற்றளி என்ற இருவர் தம் பெயராலும் எடுப்பித்தான் என்பதை நடுக்கோயிலின் சுவரில் காணப்பெறும் அவ்வேந்தனின் கல்வெட்டால் அறியலாம். நடுக்கோயிலில் மட்டுமே சிவலிங்கம் காணப்பெறுகின்றது. பேரழகோடு காட்சி நல்கும் இருகோயில்களின் விமானத்து மாடங்களில் பேரழகு வாய்ந்த கற்சிற்பங்கள் காணப்பெறுகின்றன. இங்கு இடம் பெற்றிருந்த சிற்பங்கள் சில சென்னை மற்றும் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகங்களில் காட்சிபடுத்தப் பெற்றுள்ளன. இவைதாம் உலக சிற்பக் கலா ரசிகர்களை மூவர் கோயிலுக்கு ஈர்க்கின்ற காரணிகளாக விளங்குகின்றன.

உமாதேவியுடன் சிவபெருமான் அமர்ந்தும், நின்றும் காட்சி நல்கும் சிற்பங்கள், உமையொருபங்கன், திரிபுராந்தகர், காலகாலர், கங்காதரர், கஜசம்ஹாரர், வீணாதாரர், திரிபுரசுந்தரர், திரிபுரபைரவி போன்ற எண்ணற்ற வடிவங்கள் கொள்ளை அழகுடையவையாம். நடுக்கோயிலின் கிரீவ கோஷ்டத்தில் உள்ள சிவபெருமானின் ஒரு சிற்பம் ஒரு தனிச்சிறப்புடையதாகும். இடபத்தின் தலையில் கையை அமர்த்தியவாறு ஆகூய வரதம் காட்டி, மானை ஒரு கரத்தில் தரித்து, தன் வலத்தோளில் லிங்கபாணத்தை சுமந்தவாறு, குழையும், பத்தரகுண்டலமும் சூடிக் காணப்பெறும் இவ்வடிவம் சதாசிவனின் அருட்கோல வடிவமாகும்.

‘‘தன் மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடுந்
தன் மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்குந்
தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாந்
தன் மேனி தானாகுந் தற்பரந்தானே’’
(1750)

‘‘உருவும் அருவும் உருவோடருவும்
மருவு பரசிவன் மன் பல்லுயிர்க்குங்
குருவு மென நிற்குங் கொள்கையனாகுந்
தருவென நல்குஞ் சதாசிவன் தானே’’
(1763)
- என்கிறார் திருமூலர்.

அதனால்தான் திருவையாற்றில் ஈசன் தன்னைத் தானே பூஜித்துக் கொள்கின்ற திருநாள் ஆண்டுதோறும் நிகழ்கின்றது போலும்! மூவர் கோயிலின் நடுக்கோயிலில் காணப்பெறும் கிரந்த கல்வெட்டில் பூதிவிக்கிரமகேசரியின் முன்னோர்களின் பட்டியல், தன் பேராலும் தன் மனைவியர்தம் பேராலும் மூன்று கற்றளிகள் எடுத்தது, தன் குரு மல்லிகார்ஜுனர் என்ற காளாமுக சைவப்பிரிவின் துறவி ஒருவருக்கு கோயிலோடு இணைந்து மடமொன்றினை அமைத்தது, அதன் நிர்வாகத்திற்காக 11 கிராமங்களின் வருவாயினைக் கொடுத்தது போன்ற பல செய்திகள் குறிக்கப்பெற்றுள்ளன. காளாமுக பாசுபதம் பூதிவிக்கிரமகேசரியால் அங்கு நிலை பெற்றிருந்தது என்பதை இச்சாசனத்தின் வாயிலாக நாம் அறியமுடிகிறது.

கொடும்பாளூரின் கிழக்குப் பகுதியில் ஐவர் கோயில் என்ற அழிந்துபட்ட அற்புத சிவாலயம் ஒன்றின் அடித்தளமும், எச்ச சொச்சங்களும் நமக்குக் காட்சி தருகின்றன. இவை அனைத்தையும் நோக்கும்போது கொடும்பாளூரில் நான்கு இடங்களில் சிவாலயங்கள் இருந்தமையை அறிகிறோம். அடியார்களுக்கு அன்னமிட தம் பண்டாரங்களை எடுத்துச் செல்லுங்கள் எனப் பறை அறைந்து அறைகூவல் விடுத்த சைவ சிகாமணியாம் இடங்கழியார் என்ற கொடும்பாளூர் வேந்தன் வாழ்ந்த இந்த திருவூருக்கு வாருங்கள். சைவம் தழைத்த கொடும்பாளூரின் கலை அமுதினைப் பருகி சாகாவரம் பெறுங்கள்.