கானகமும் பானகமும்



ஸ்ரீராமர் விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன் பின்னர் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வசித்தபோதும் நீர்மோரையும், பானகத்தையுமே அருந்தினாராம். அதன் நினைவாகவே நீர்மோரும், பானகமும் ஸ்ரீராமநவமி அன்று நிவேதனம் செய்யப்படுகின்றன. ராமர் எளிமையாக வாழ்ந்ததால், எளிய பானங்களான பானகம், நீர்மோர் ஆகியவற்றை நிவேதனம் செய்து மக்களுக்கு வழங்கும் பழக்கம் தற்போதும் இருந்து வருகிறது.



ராம நாம மகிமைகள்

‘ராம ராம ராம’ என மும்முறை சொன்னாலே விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் கிடைக்கும். சீதையைத் தேடிச் சென்ற அனுமன், ‘‘ராம’’ நாமம் சொல்லிக் கொண்டே கடலை தாண்டி விட்டார். இந்திரஜித்தை வெல்ல முடியாத நிலையில் லட்சுமணன் இருந்தபோது  ‘‘வேதத்தில் முடிவாகச் சொல்லப்படும் பொருளான ‘‘ராமன்’’ என்பது உண்மையானால் இந்த பாணம் இந்திரஜித்தின் தலையைக் கொய்யட்டும்’’ என்று கூறி பாணத்தை ஏவினான். இந்திரஜித்தின் தலை துண்டிக்கப்பட்டது. எனவே, ராம நாமத்தை ஜபிப்பதால் இகபர சுகங்கள் அனைத்தும் கிடைக்கும். துன்பங்கள் நீங்கும்.

- டி.பூபதிராவ்