ராமரும் சாஸ்தாவும் ஒருவரே!



ராமவதாரமும், சாஸ்தா அவதாரமும் ஒன்றே என்பர். இதை ‘‘ஹரிஹர சமஷ்டி அம்சம்” என்பர். ராமனும் சாஸ்தாவும் வில்லேந்திப் போரிட்டவர்கள். ராமர் முறித்த சிவதனுசில் சாஸ்தாவின் ஆக்ரோஷ சக்தி ஆவாஹனம் செய்யப்பட்டிருந்தது. அதனால்தான் அதை சாதாரணமானவர்களால் முறிக்க முடியவில்லை. ஏன், அசைக்கக்கூட முடியவில்லை. ராமர், சாஸ்தா அவதாரங்கள் இரண்டும் ஒன்றே என்பதால் ராமன் அதை லாவகமாக எடுத்தார். வில்லில் இருந்த சக்தியை தனக்குள் ஆகர்ஷணம் செய்து கொண்டார். இதனால் மாபெரும் வீரன் ராவணனைக் கொல்லும் சக்தியை அவர் ஆரம்பத்திலேயே பெற்றுக் கொண்டார். அதனால்தான், சக்தியை இழந்த வில், ராமன் கை பட்டவுடன் தானாகவே ஒடிந்துவிழுந்தது.



மீசையுடன் ராமர்!

மும்பை நகரிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ளது நாசிக். இங்குதான் ராமாயணத் தொடர்புடைய ‘பஞ்சவடி’ உள்ளது. இங்குள்ள மிகப் பெரிய கோயிலான ‘காலாராம் மந்திர்’ எனும் ‘ராம்ஜி’ ஆலயம் உள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், சிறப்பானதும், பிரசித்தி பெற்றதும் ஆகும். இவ்வாலயக் கருவறையில் ஒரு கருங்கல் மேடை மீது ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோரின் சிலைகள் கண்ணாடி போன்ற கருங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளன. ராமர் மட்டும் பொன் வண்ணத்தால் ஆன மீசையையும் அதே நிறத்தில் கையுறைகளும் கொண்டு திகழ்கிறார். இரண்டு அடி உயரமே உள்ள இச்சிலைகள் எல்லாம் கருநீல சலவைக் கல்லாலான திருமேனிகள். முகப்பொலிவு, வடிவழகு, நேர்த்தியான அமைப்பு என்று உயிரோட்டம் மிக்கதாகக் காட்சி தருகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெறும் ‘ராம நவமி’ உற்சவம், இங்கே 13 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

சதுர்புஜ ராமர்

திருக்கழுக்குன்றத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ‘பொன் பதர் கூடம்’ என்ற அழகிய சிற்றூர். ராமபிரானின் அருள் சுரக்கும் திருத்தலம். கருவறையில் மூலவர் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்தோடு திருக்கரங்கள் நான்கில், மேலிரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி, கீழிரு கரங்களில் அபய வரத முத்திரை காட்டி வீற்றிருக்கிறார். உற்சவர் ராமன், சதுர் புஜங்கொண்டு மேலிரு திருக்கரங்களில் சக்கரம், சங்கு; கீழிரு கரங்களில் அம்பும் வில்லும் ஏந்தி சௌந்தர்ய வதனத்தோடு காட்சி தருகிறார். இப்படி மூலவரும் உற்சவருமான ராமபிரான் சதுர்புஜம் கொண்டு அருளாட்சி புரிவதால், இந்த கிராமத்திற்கே ‘சதுர்புஜ ராமம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.