கைத்தடிக்குள் கடவுளர்கள்!



ஜமீன் கோயில்கள் -13

குளத்தூர் ஜமீன்

முத்தாலங்குறிச்சி காமராசு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஜமீன்தார்கள் நெல்லை மாநகரை சுற்றியுள்ள கோயில்களில் தொண்டாற்றிய வகைக்கு கல்வெட்டுகள் உள்ளன. தென் தில்லை என்றழைக்கப்படும் செப்பறை நடராஜர் கோயிலுக்கு செப்பு கூரையை அமைத்து கொடுத்தவர்கள் இவர்களே. நெல்லையப்பர் கோயிலுக்கும் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

குளத்தூர் ஜமீன்தார்கள் தோன்றுவதற்கு காரணம் ஏற்கனவே வாழ்ந்த ஜமீன்தார்கள் ஏற்படுத்திய கலகம்தான். 18ம் நூற்றாண்டில் குறுநில மன்னர்களாக விளங்கிய ஜமீன்தார்களுக்கு, கப்பம் வசூலிக்க ஆர்காடு நவாப்பை நியமனம் செய்தார்கள் ஆங்கிலேயர்கள். மறவர் பாளையத்தின் முக்கியமானவரும், விடுதலை போராட்டத்துக்கு முதல் வித்திட்டவருமான பூலித்தேவன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்தார். இவர் மேற்கு மறவர் பாளையத்தினை ஒன்றிணைத்தார். இது ஆங்கிலேயருக்கு பெரிய தலைவேதனையை ஏற்படுத்தியது.



கிழக்கு பாளையத்தில் எட்டயபுரம் ஜமீன்தார் ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டாலும், கட்ட பொம்மனால் ஆங்கிலேயருக்கு பெருத்த பிரச்னை உண்டாகியது. கி.பி. 1785 ஆண்டுவாக்கில் பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேயருக்கு எதிராக ஜமீன்தார் கலகம் தோன்றியது. 1799ல் மேஜர் பானர்மேன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுப்பு நிகழ்ந்தது. “தென்னகத்தின் டிரபால்கர்” என்று அழைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தகர்க்கப்பட்டது. 

1799அக்டோபர் 16 ம் நாள் கட்ட பொம்மன் கயத்தாற்றில் தூக்கிலப்பட்டார். கட்டபொம்மனை தூக்கிலிட்டதால் மற்ற ஜமீன்தார்கள் பயந்துவிடுவார்கள் என நினைத்தனர் ஆங்கிலேயர். ஆனால், ஊமைத்துரை, தடை சட்டத்தையும் மீறி தரைமட்டமான இக்கோட்டையை மீண்டும் கட்டினார்.  இந்த கட்டிடம் பனங்சாற்றில் மண்ணைக் குழைத்து உறுதியுடன் ஆறே நாளில் புதிதாக எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மெக்காலே தலைமையிலான படை இரண்டு தடவை படையெடுத்தது.  இரண்டாம் தடவை இக்கோட்டையை தகர்த்தது.
கி.பி. 1801ம் ஆண்டு மார்ச் 21 மற்றும் 24 தேதிகளில் ஊமைத்துரைக்கும் கும்பினி யாருக்கும்  நடைபெற்ற போரில் 46 ஆங்கிலேயருக்கு இறந்து போனார்கள். இவர் களுக்கு எடுக்கப்பட்ட நினைவுக் கல்லறைகள் தற்போதும் பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ளது.

இப்படி தொடர்ந்து நாயக்கர் பாளையத்தினால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் முழுவதும் ஆட்சியை அவர்கள் கைக்கு கொண்டும் வரமுடியாமல் தவித்தனர். எனவே ஜமீன் பகுதிகளை மீண்டும் மறவர்கள் மற்றும் நாயக்கர்களிடம் கொடுக்க மனம் வரவில்லை. ஜமீனை ஒருவர் வசம்  கொடுத்துவிட்டு, அவர்களிடம் கப்பம் கேட்டு அழையாமல் முன்பணம் தருபவருக்கு ஜமீனை ஏலத்துக்கு விட்டு விட முடிவு செய்தனர். இதனால் பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார்களை ஜமீன்தார்களாக உருவாக்கினார்கள்.

அப்படி உருவாக்கப்பட்டவர்கள்தான் குளத்தூர் ஜமீன்தார். இவர்களைத் தேர்ந்தெடுக்க காரணம், இந்த காருகாத்தார் பிள்ளை சமூகம் எப்போதுமே  ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக  இருந்ததுதான்.  இவர்கள் நாயக்க மன்னர்கள் காலத்தில் படை வீரர்களாகவும், அரசு ஆவண காப்பாளர்களாகவும், வரி வசூல் செய்பவர்களாகவும் விளங்கினர். இவர்களில் முக்கியமானவர் வடமலையப்பிள்ளை. இவர் திருநெல்வேலியில் குறுக்குதுறை முருகன், சாலைகுமார சுவாமி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் பல திருப்பணிகளைச் செய்தவர். வடமலையப்ப பிள்ளைக்கு உறுதுணையாக குளத்தூர் ஜமீன்தார்கள் வாழ்ந்து வந்தனர். திருநெல்வேலியில் படை வீரர்களாகவும்,  பயிர்த் தொழிலில் வல்லவர்களாகவும் வாழ்ந்தவர்களில் தில்லை நாயகம் என்பவர் மிகசெல்வந்தராக விளங்கினார். 

குளத்தூர் ஜமீன்தார் ஆட்சிக்கு வரும் முன்பே நெல்லை மாவட்டத்தில் பல கிராமங்கள்  இவர்கள் கட்டுபாட்டுக்குள் இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வயல்வெளிகளும் இவர்கள் வசம் இருந்தன. இவர்கள் ஆளும் ஆங்கிலேயர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார். அவர்களுக்கு மொழி மாற்றம் செய்வது உள்பட பல விதங்களில் உதவினார். எனவே தில்லை நாயகம் குடும்பத்தின் மீது ஆங்கிலேயருக்கு சுமுகமான உறவு இருந்தது. 1815ம் ஆண்டு குளத்தூர் ஜமீன் உள்பட சில ஜமீன்கள் ஏலம் விடப்பட்டன. இவற்றில் புதூர், உச்சிநத்தம், கோலார்பட்டி, மேல் மாந்தை, போன்ற ஜமீன்கள் முக்கியமானவை. தில்லை நாயகம் தன் இரு தம்பியரை கூட்டிக்கொண்டு கொக்கிரகுளம் கலெக்டர் ஆபீஸ் சென்றார். அங்கு குளத்தூரை சுற்றியுள்ள 42 கிராமங்களை ஏலத்துக்கு எடுத்தார். மூன்று சகோதரர்கள் குளத்தூர் ஜமீனை ஏலத்துக்கு எடுத்த காரணத்தினால் அவர்களின் கூட்டாட்சி மலர்ந்தது. குளத்தூர் ஜமீன், மூன்று பாக ஜமீன்தார் எனவும் பெயர் பெற்றது.

குளத்தூரில் இவர்கள் பிரமாண்டமான அரண்மனையைக் கட்டினர். குளத்தூரை சுற்றி கண்மாய் எனப்படும் ஒன்பது குளங்களை  வெட்டினார்கள். மழைகாலத்தில் பெய்யும் நீரையெல்லாம் சேர்த்து வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தினர். குளத்தூர் முதல் வேப்பலோடை வரை மிகப்பெரிய கண்மாய் ஒன்றை வெட்டி இதில் இருபுறமும் மரங்கள் நட்டுத் தோப்பாக்கினார்கள். குளங்கள் நிறைந்த ஊர் குளத்தூர்என்றானது. அரண்மனை பல வசதிகளை கொண்டிருந்தது. இங்கிருந்து சுரங்க பாதை அமைக்கப்பட்டது. இப்பாதை வழியாக நீராழி மண்டபம் ஒன்றை அமைத்துள்ளார்கள். நான்கு புறம் படித்துறை, ஒருபக்கம் சிறு கோயில். எப்போதுமே தண்ணீர் நிறைந்திருக்கும்  இந்த நீராழி மண்டபம், ராணிகள் மட்டும் நீராடுவதற்காக அமைக்கப்பட்டதாகும்.



மகாராணி தினமும்  சுரங்க பாதை வழியாக இங்கு வந்து, நீராடி, மண்டபத்தில் உள்ள தெய்வங்களுக்கு நித்திய பூஜை  செய்து விட்டு அரண்மனை திரும்புவார். குளத்தூரில் ஜமீன்தார்கள் சிறப்பாக வணங்கிய ஆலயம் குழந்தை விநாயகர் ஆலயம். இங்கு பிரதான தெய்வம் குழந்தை விநாயகராக இருந்தாலும் முக்கிய தெய்வங்களையும் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். ஜமீன்தார்கள் காலத்தில் ஆலயத்தில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். குழந்தை விநாயகர் கோயிலுக்கு பூஜை தங்கு தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் வெட்டிய அடைய குளம் கண்மாயியில் உள்ள வயல் காடுகள் அனைத்தையும் எழுதி வைத்தார்கள். கோயில் அருகிலேயே ஒரு வீடும் இருந்தது.

இந்த வீட்டில் துர்க்கை அம்மனை வைத்து ஜமீன் குடும்பம் வழிவழியாக வழிப்பட்டு வந்தார்கள்.  கேட்கும் வரம்தரும் இந்த அம்மன், எதிரிகளை நாசம் செய்வாள். கி.பி. 1900ம் ஆண்டுகளில் குளத்தூர் ஜமீனை தில்லை சங்கர நாரயணன் மற்றும் தில்லை சபாபதி இருவரும் ஆண்டு வந்தார்கள். ஆரம்பத்தில் குளத்தூர் மூன்று பாக ஜமீனாகத்தான் இருந்தது. பிற்காலத்தில் ஒருவருக்கு வாரிசு இல்லாமல் போகவே அந்த வாரிசு சொத்து மற்றொரு ஜமீன்தாருக்கு கொடுக்கப்பட்டது. எனவே இருவர் ஆட்சி குளத்தூரில் மலர்ந்தது. அதில் ஒருவர் இரு பாக ஜமீன்தார் என்றும், மற்றவர் ஒரு பாக ஜமீன்தார் என்றும் அழைக்கப்பட்டனர். இதனால்தான் குளத்தூர் ஜமீனில் இரண்டு அரண்மனை உள்ளது. நெல்லையிலும் அதுபோலவே இரண்டு ஜமீன் வாரிசுகளுக்கும் அரண்மனை உள்ளது.

குளத்தூர் ஜமீனில் தில்லை தாண்டவராயன் என்ற ஜமீன்தார் அதிகமாக ஆலய திருப்பணிகள் செய்தார். இவர் காசி யாத்திரை சென்று வருவது வழக்கம். அப்படி செல்லும்போது அமாவாசை சித்தரை அழைத்து வந்தார். அவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பல திருப்பணிகளை செய்துள்ளார். மூடியே கிடந்த ஆறுமுகநயினார் கோயிலை திறக்க காரணமாக இருந்தவர் இவர்தான். அவர் காலத்துக்கு பிறகு ரத்தின சபாபதி என்ற தில்லை தாண்டவராயன் ஜமீன்தாராக பொறுப்பேற்றார். இவர்தான் பட்டம் கட்டிய கடைசி ஜமீன்தார். தில்லை தாண்டவராயருக்கு ஆண் வாரிசு கிடையாது.

எனவே தனது மகள் முத்து சிதம்பர சண்முகவடிவு என்ற தெய்வானையம்மாளுக்கு ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த ரத்தின சபாபதி என்பவரை மணமுடித்து வைத்தார். இவரே பட்டங்கட்டிய கடைசி ஜமீன்தாராக விளங்கினார். ஜமீன் ஒழிப்பு முறை வந்தது. அனைத்து ஜமீன்தார்களும் தங்களுக்கு இஷ்டப்பட்ட தெய்வங்களை தங்கள் வசமே வைத்துக்கொண்டனர். அதனால் அந்த கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கும் ஜமீன்தார்கள் கட்டுபாட்டுக்குள் வந்தன. ஆனால், குளத்தூர் ஜமீன்தார்கள் மட்டும் அரசு உரிமையில் தாங்கள் தலையிடகூடாது என்றும், தங்கள் வணங்கிய தெய்வங்கள் மற்றும் அந்த கோயிலுக்காக வழங்கப்பட்ட விளை நிலங்களை அரசிடமே ஒப்படைத்து விட்டனர். அதோடு அவர்கள் முதல் மரியாதை கோரி திருவிழா காலங்களில்கூட ஆலயம் பக்கம் செல்லவில்லை.
 
தற்போது இந்த ஆலயம் அரசு பராமரிப்பில் உள்ளது. விளைநிலங்கள் இருந்தும் ஆலயம் சிறப்பாக இல்லை என்பது இந்த பகுதி மக்களின் மனக்குமுறல். அருகிலிருந்த கோயில் வீடும் தற்போது தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. குளத்தூர் ஜமீன்தார் உருவாக்கிய அரண்மனைகள், நீராழி மண்டபம், வெட்டிய கண்மாய், கால்வாய்கள், வணங்கிய கோயில்கள் எல்லாம் அவர்கள் வரலாற்றை தற்போதும் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. தற்போது குளத்தூர் ஜமீன்தார் அரண்மனை திருநெல்வேலி மாநகரில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது. வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே பூஜை அறைதான் வரவேற்கிறது. தங்களது முன்னோர்களின் நினைவாக தற்போது குட்டி என்ற சண்முகசுந்தரம் அந்த பூஜை அறையை நிர்வாகித்து வருகிறார்.

பூஜை அறையில் 1008 உத்திராட்சங்களால் உருவாக்கப்பட்ட திரைக்கு உள்ளே  சுவாமி சிலைகள் உள்ளன. அருகிலேயே பல கைத்தடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த கைத்தடிகளுக்கு தினமும் பூஜை நடக்கிறது. இதன் பழமை 200 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். கைத்தடிகள் வாக்கிங் ஸ்டிக் போல காணப்படுகின்றன. கைப்பிடியின் மேல் பகுதியில் நட்சத்திரங்கள் போன்ற குறியீடுகள் உள்ளன. கைப்பிடிகள் சில மிருக உருவத்துத்துடனும்  காட்சியளிக்கிறது. அந்த கைத்தடியின் வாய்ப் பகுதியை திறந்தால், உள்ளே லட்சுமி, பழனியாண்டவர், பரமசிவன் போன்ற  தெய்வ உருவங்கள் உள்ளன.

குளத்தூர் ஜமீன்தார்கள். தங்கள் இல்லத்தில் உள்ள பூஜை அறைக்கு தினமும் மூன்று வேளை பூஜை செய்து வணங்கக் கூடியவர்கள். செல்லும் இடத்தில் கோயில்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்கள் தெய்வத்தை வணங்கியே ஆக வேண்டும். எனவே பிரேத்யோகமாக ஒரு கைத்தடியை வடிவமைத்து அதை உடன் கொண்டு சென்றனர். பூஜை நேரம் வந்தவுடன் அந்த இடத்தில் கைத்தடியை ஊன்றி, மூடியை திறந்து அதனுள் உள்ள தெய்வத்துக்கு பூஜை செய்வார்கள். இதை தில்லை தாண்டவராயர் காசி யாத்திரை சென்றபோதுகூட பயன்படுத்தி இருக்கிறார். அந்த கைத்தடிகள் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூஜையறையில் தில்லை தாண்டவராயர், அமாவாசை சித்தர் உள்பட சில ஜமீன்தார் படங்கள் வைத்து வணங்கப்படுகின்றன.

அடுத்த அறைக்குள் மிகப்பெரிய தாழ்வாரம் உள்ளது. அங்கு ஒரு கட்டிலைப் பாதுகாத்து வருகிறார்கள் ஜமீன்தார் வாரிசுகள். அது மகாத்மா காந்தி அமர்ந்தகட்டில்! காந்திஜி  திருநெல்வேலி வந்தபோது சாவடி பிள்ளை வீட்டில் தங்கினார். அப்போது ஆங்கிலேயர்களுக்கும் குளத்தூர் ஜமீன்தார்களுக்கும் நல்ல  உறவு இருந்தது. எனவே மகாத்மாவை தங்கள் வீட்டுக்கு அழைக்க முடியாது. ஆனாலும் மகாத்மா மீது நல்ல மரியாதை வைத்திருந்ததால், தங்களது உறவினரான சாவடி பிள்ளை வீட்டில்  மகாத்மா காந்தி தங்கி ஓய்வெடுக்க கட்டிலை கொடுத்து அனுப்பினர். அது இந்த கட்டில்தான். இந்த கட்டிலை மிகவும் வயதானவர்கள்தான் பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் அமரக்கூடாது என்பது இவ்வீட்டின் சட்டம்!

குளத்தூர் ஜமீன்தார்கள் திருநெல்வேலி மாநகரில் தங்கள் அரண்மனையை கட்டிய போது நெல்லையப்பபர் கோபுரத்தினை விட சற்று தாழ்வாகவே கட்டினார்கள். நெல்லையப்பரே இந் நகரில் உயர்ந்தவர், வசதியானவர், அனைவரையும் காக்கும் தன்மை கொண்டவர். எனவே அவரின் இல்லத்தினை விட, தங்கள் அரண்மனை குறைந்த உயரத்தில் தான் இருக்கவேண்டும் என்ற பக்தி எண்ணம்தான் காரணம்.

ஊற்றுமலை ஜமீன் பற்றிய கட்டுரையில் நவநீத கிருஷ்ண கோயில் பற்றி மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதில் காவடிச் சிந்து பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடவில்லை என்றும் மன்னரே பாடினார் என்றும் ஒரு கருத்து உள்ளதாக தென்காசி அரசு வழக்கறிஞரும், எழுத்தாளருமான மருதுபாண்டியர் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கருத்து ஏற்புடையது அல்ல. கழுகுமலை காவடிச்சிந்து பாடல்கள் பெரும்பாலானவற்றில் அண்ணாமலைக் கவிராயர் தம் பெயரையும் “சென்னிகுளம்” என்ற தன் ஊரின் பெயரையும் இணைத்தே பாடி உள்ளார். அண்ணாமலை ரெட்டியார், உவேசா அவர்களிடம் பாடம் பயின்றவர். திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆசி பெற்றவர். “இவர் சாதியிலும் ரெட்டி, புத்தியிலும் ரெட்டி” என்று மடாதிபதியால் போற்றப்பட்டவர்.  எனவே காவடி சிந்தை எழுதியவர் அண்ணாமலை ரெட்டியார்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

- தேசிய நல்லாசிரியர் கழுகுமலை வை.பூ.சோமசுந்தரம்.

(தொடரும்)
படங்கள்: பரமகுமார், முத்துமாரியப்பன்