அது ஏன் ‘சாப்பாட்டு ராமன்’ என்று..?



வனவாசம் மேற்கொண்ட ராமன்- சீதை, லட்சுமணனுடன் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் ஒருநாள் தங்கினான். தன் வனவாசம் முடிந்ததும் அயோத்திக்குத் திரும்பும்போது பிரயாகையில் அமைந்திருந்த அந்த ஆசிரமத்துக்கு மறுபடி ஒருநாள் தங்கிவிட்டுச் செல்வதாக முனிவருக்கு வாக்களித்தான் ராமன். பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவன் ராவணனிடம் சீதையைப் பறிகொடுத்து, பரிதவித்து, அனுமன் தோழமை கிடைத்து, சுக்ரீவன் மற்றும் அவனுடைய பரிவாரங்கள் உதவியால் ராவணனை வீழ்த்தினான். சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்பும் வழியில் பிரயாகை வழியாக வந்தபோது பரத்வாஜ முனிவருக்கு வாக்களித்தது நினைவுக்கு வந்தது. அவருடைய ஆசிரமத்துக்குப் போனான்.

அங்கே அவனுக்கு விருந்துபசாரம் செய்தார் முனிவர். உடனே ராமன் தன்னுடன் வந்த சீதை, லட்சுமணன், சுக்ரீவன், அனுமன் தவிர அனைத்து வானரங்களுக்கும் உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டான். முனிவரும் அது தன் பாக்கியம் என்றுணர்ந்து அனைவருக்கும் அமுது படைத்தார். அவர்கள் அனைவரும் தமக்குத் திருப்தியாகும்வரை சாப்பிடுகிறார்களா என்று கவனித்தான் ராமன். யாரையும் விட்டுவிடாமல் ஒவ்வொருவராக விசாரித்து கூடுதலாக உணவு பரிமாறச் சொல்லி அவர்கள் மகிழ்ச்சியுடன் உண்பதை மன நிறைவோடு பார்த்தான் அவன். சீதை மீட்புக்குப் பெரிதும் துணை நின்றவர்களல்லவா அவர்கள்!



‘‘ராமா ரொம்பவும் திருப்தியாக சாப்பிட்டோம். இப்படி எங்கள் அனைவருக்கும் பார்த்துப் பார்த்து உணவிட உதவிய நீ இனி, எங்களைப் பொறுத்தவரை ‘சாப்பாட்டு ராமன்’ என்று பாராட்டினார்கள்.  நிறைய சாப்பிடுபவர்களை கேலியாக இப்போது அழைக்கும் ‘சாப்பாட்டு ராமன்’ என்ற பட்டம், தன்னைச் சார்ந்த அனைவருக்கும் நிறைவாக உணவளித்த ஒரு தலைவனைப் பாராட்டி சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாங்காய் இனிப்பு-புளிப்பு பச்சடி

என்னென்ன தேவை?

நன்கு புளித்த மாங்காய் - 1,
வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன் அல்லது தேவைக்கு,
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள்தூள் - தேவைக்கு.
தாளிக்க: கடுகு, எண்ணெய்.

எப்படிச் செய்வது?

மாங்காயின் மேல் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். அந்த துண்டுகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அது 3/4 பாகம் வெந்ததும் சுத்தமான பொடித்த வெல்லத்தை சேர்க்கவும். உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளற வேண்டும். ஒரு கொதி வந்ததும் இறக்கி, எண்ணெயில் கடுகை தாளித்து கொட்டி கலந்து பரிமாறவும். தமிழ் புத்தாண்டுக்கு இந்த இனிப்பு புளிப்பு பச்சடி அநேகமாக ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும்.

பானகம்  (ராமநவமிக்கு)

என்னென்ன தேவை?

வெல்லம் - 1/2 கப்,
ஏலக்காய் - 4,
சுக்கு - ஒரு துண்டு,
மிகப் பொடியாக நறுக்கிய மாங்காய் - பாதி,
உப்பு - ஒரு சிட்டிகை,
தண்ணீர் 2-கப்.

எப்படிச் செய்வது?

இரண்டு கோப்பைத் தண்ணீரில் சுத்தமான வெல்லத்தை கரைத்து வடித்து ஏலக்காய், சுக்கு இடித்து சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து இத்துடன் பொடித்த மாங்காயை அல்லது மாங்காய் விழுதாக அரைத்து சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து புத்தாண்டு அன்று கடவுளுக்கு படைத்து அனைவருக்கும் பரிமாறவும். வட இந்தியர்கள் - பன்னா என்பார்கள். வெல்லத்தை கரைத்து அதில் சுட்ட மாங்காய் விழுதைச் சேர்த்து, சீரகத்தை வறுத்து பொடித்து, உப்பு சேர்த்து யாவற்றையும் கலந்து  பரிமாறுவார்கள்.

நீர் மோர்

கெட்டித்தயிர் - 2-3 கப் தண்ணீர் சேர்த்து கலந்து அடித்து உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து பிரசாதமாக படைத்து பின் கொடுப்பார்கள்.

கோசுமல்லி

என்னென்ன தேவை?

வெள்ளரிக்காய் - 1 துருவியது,
ஊற வைத்த பாசிப்பருப்பு - 1/2 கப்,
பொடித்த பச்சைமிளகாய் - 2,
தேங்காய் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,
எலுமிச்சைப் பழச்சாறு - தேவைக்கு.
தாளிப்பதற்கு: எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.

எப்படிச் செய்வது?

ஊற வைத்த பாசிப்பருப்பை வடித்து, துருவிய வெள்ளரிக்காய், பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சைச்சாறு, துருவிய தேங்காய் சேர்த்து, தாளிப்புப் பொருட்கள் சேர்த்துக்  கலந்து படைக்கவும். குறிப்பு: இந்த பச்சடியை தெலுங்கு வருடப் பிறப்புக்கு ஆந்திராவில் செய்வார்கள். சிலர் தாளிக்க மாட்டார்கள்.

வேப்பம்பூ பச்சடி

என்னென்ன தேவை?

வேப்பம்பூ பச்சையாகவோ அல்லது காய்ந்ததாகவோ - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
அரிசிமாவு - 1 டீஸ்பூன்,
வெல்லம் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
மிளகாய் வற்றல் - 2-3,
பெருங்காயம் - 1 சிறு துண்டு,
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பதப்படுத்திய காய வைத்த பூவை எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் சிறிதளவு விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கிள்ளிய மிளகாய் வற்றல் போட்டு வறுக்கவும். அத்துடன் வேப்பம்பூவை போட்டு வறுக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் அவற்றோடு கரைத்த புளி நீரையும், உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் சுத்தமான வெல்லத்தை கெட்டியாக கரைத்து வடித்து சேர்க்கவும். இது கொதித்து வரும்போது அரிசி மாவை சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து அதில் கொட்டிக் கிளறி இறக்கி வைத்து பரிமாறவும்.

வெல்ல சாதம் அல்லது தேங்காய் வெல்ல சாதம்

இந்த வெல்ல சாதத்திற்கும், சர்க்கரைப் பொங்கலுக்கும் வேறுபாடு உண்டு.

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 டம்ளர்,
பெரிய தேங்காய் மூடி - 1,
பச்சைக் கற்பூரம் - சிறு துண்டு,
வெல்லம் - 300 கிராம்,
ஏலக்காய் - 4,
முந்திரிப்பருப்பு - 10,
உலர்ந்த திராட்சை - 10,
நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை வடித்து தாம்பாளத்தில் கொட்டி கொள்ளவும். தேங்காயைத் துருவி வைத்துக் கொண்டு 1 மூடி தேங்காய்த் துருவலுக்கு, 3/4 பங்கு சுத்தம் செய்த பொடித்த வெல்லத்தை (அவரவர் தேவைக்கும், சுவைக்கும் தக்க அளவு) சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு சுருளக் கிளறி அதில் ஏலக்காயை உரித்துப் பொடித்துப் போட வேண்டும். நெய்யில் முந்திரிப்பருப்பை கிள்ளிப் போட்டு திராட்சையை சேர்த்து வறுத்து இந்த கலவையில் போட்டு கலந்து சாதத்தில் கொட்டி பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து போட்டு வெல்லப் பூரணத்தை சாதத்துடன் கொட்டி நன்றாக கலந்து பரிமாறவும். வறுத்த தேங்காய்-வெல்லசாதம் வித்தியாசமாக இருக்கும். பொங்கல் மாதிரி இல்லாமல், சாதம் உதிர் உதிராக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

தொகுப்பு: ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்