மகாபாரதம்



தருமபுத்திரனை எப்படியாவது ஜெயிக்க வேண்டும்!

தருமபுத்திரர் தன் சகோதரர்களை அழைத்தார். ‘‘வியாசர் சொன்னது இதுதான். இப்படித்தான் நடக்கப் போகிறது என்று சொல்கிறார். எனக்குக் கலவரமாக இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் நானே காரணமாக இருப்பேன். என்னை முன்னிறுத்தி இது நடக்கப் போகிறது என்கிறபோது எனக்கு உயிர் வாழ்தலில் விருப்பமே இல்லை. இப்பேர்பட்ட ஒரு காரியத்தை நான் ஏன் செய்ய வேண்டும்? இதற்காக நான் ஏன் உயிர் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது.

‘‘ஆனாலும், உங்களுடைய மனமறிந்து நான் அமைதியடைகிறேன். என்னைப் பிரிந்து நீங்கள் இருக்க மாட்டீர்கள். இதற்கு ஒப்புமை தரமாட்டீர்கள் என்றும் தெரியும். மேலும், தற்கொலை செய்து கொள்வது பாவமானது. வியாசர் சொன்னபடி விதி வழியே போகத்தான் பிறந்திருக்கிறோம். ஆனாலும், நான் ஒரு சபதம் எடுத்துக் கொள்ளப் போகிறேன். எவர் மனதும் புண்படாது, எவருக்கும் பேதம் ஏற்படாது, எல்லோருக்கும் இதமானவனாய், எல்லோருக்கும் அடங்கிப் போகிறவனாய், எல்லோருக்கும் சரி என்று தலையசைக்கிறவனாய் நான் இருக்கப் போகிறேன். அப்பொழுது எப்படி சண்டை வரும்?



அப்பொழுது எப்படி மனப் பிளவு ஏற்படும்? விட்டுக் கொடுக்க நான் இப்பொழுதே தயாராகிவிட்டேன். இந்த க்ஷணமே தயாராகி விட்டேன். அப்பொழுது யாருக்கும் பேதம் வராதல்லவா, யாருக்கும் அசூயை வராதல்லவா?’’ என்று சொல்ல, சகோதரர்கள் எந்தப் பேச்சும் இன்றி அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனதிற்குள் இருக்கின்ற புலம்பல் வெளியே வரட்டும் என்று மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே சகலருக்கும் அனுசரணையாய் இருப்பதாய் ப்ரதிக்ஞை எடுத்துக் கொண்டார். அந்த ப்ரதிக்ஞையே போருக்கு காரணமாயிற்று.

விதி மிகவலியது என்பது, எந்த வழியில் மனிதன் போனாலும் தப்பித்துக் கொள்ள முடியாதபடி தன் வழிக்கு அது இழுக்கும் என்பது, மிகத் தெள்ளத் தெளிவாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யாரிடமும் பேதமை இல்லையென்று சொல்லிவிட்டால் முடிந்துவிடுமா, யுத்தம் வராது போகுமா? அப்படி பேதமை காட்டாது சூதாட்டத்திற்கு சரி என்று சொன்னதால்தானே, வரமாட்டேன் என்று ெசால்லாததால்தானே, அனுசரித்துப் போனதால்தானே, அந்த யுத்தம் நடந்தது. எது கம்பீரமான சத்தியமோ, எது அன்பு மிகுந்த ஒரு செயலோ அதுவும்கூட யுத்தத்திற்கு காரணமாகக் கூடும். விதி வலியது. மிக வலியது. மிகமிக வலியது.

ராஜசபையின் நடுவே விட்டேத்தியாக அமர்ந்திருந்த துரியோதனனும், சகுனியும் எழுந்து நின்றார்கள். மனதிற்குள் இடையறாது ராஜசுய யாகத்தின் காட்சிகளே நிறைந்திருந்தன. சிசுபாலனின் மரணம் மெல்லியதாய் வந்துபோய் கொண்டிருந்தது. அத்தனை மன்னர்களுக்கு நடுவே ஒரு மிருகத்தை அம்பு எய்து கொல்வதுபோல மிக எளிதாக கிருஷ்ணர் கொன்று போட்டது ஆச்சரியமாக இருந்தது. ஏன் ஒருவரும் எதிர்க்கவில்லை? கிருஷ்ணருக்கு பயந்தா, சிசுபாலன் தவறு என்றா என்ற கேள்விதான் இருந்தது. பதில் வரவில்லை. அதை மறக்கடிக்கும்படி பரிமாறப்பட்ட உணவு வகைகளும், கோஷங்களும், வாழ்த்துரைகளும் மனதில் நிறைந்திருந்தன. வந்திருந்து, மன்னர்களை வரவேற்று அவர்கள் கொடுக்கும் பரிசுப் பொருட்களை வாங்கி வைக்கும் வேலையை துரியோதனன் தானே எடுத்துக் கொண்டான். எளிதாக இருக்கும் என்று நினைத்தான். வேலை அசர வைத்தது.

உலகத்தில் மிகச் சிறந்த ரத்தினங்களை அவன் தொட்டுப் பார்த்தான். பானை பானையாக முத்துகளும், தங்கக் காசுகளும், வெள்ளி பாளங்களும், அழகிய வாட்களும், கதைகளும், கவசங்களும், அலங்காரப் பொருட்களுமாய் வந்திருந்தன. வந்தவர் அத்தனை பேரும் துரியோதனனை நினைவில் வைத்து அவனையும் குசலம் விசாரித்துப் போனார்கள். நீ எப்பொழுது ராஜசூய யாகம் செய்யப் போகிறாய் என்று சிலர் நேரிடையாகக் கேட்டார்கள். சொல்லாமல் சொன்னார்கள். தவறான வேலைக்கு தானாக வந்துவிட்டோமோ என்ற கவலை துரியோதனனுக்கு வந்தாலும் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. மிக நீண்ட வரிசையில் மன்னர்கள் காத்திருந்தபோது இன்னும் விரைவாகத்தான் வேலை செய்யத் தோன்றியது. இந்த பரிசுப் பொருட்களை வாங்கி வைத்ததில் தான் என்ன கொண்டு வந்தோம் என்பதே மறந்து போயிற்று.

எதுவுமே கொண்டு வரவில்லையோ என்றும் தோன்றியது. கிலேசமும் ஏற்பட்டது. எதனால் ஒரு மயக்க நிலையை அடைந்திருக்கிறோம். எதனால் நம்மால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை... துரியோதனன் நீண்ட பெருமூச்சுவிட்டு தவித்தான். ‘‘என்ன ஆயிற்று துரியோதனா, ஏன் அடிக்கடி பெருமூச்சு விடுகிறாய். உணவுக் கோளாறா. உடம்பில் ஏதாவது அஜீரணமா?’’ கவலையோடு சகுனி விசாரித்தார். ‘‘தருமபுத்திரர் எவ்வளவு அற்புதமாக ராஜசூய யாகம் செய்து முடித்துவிட்டார் மாமா’’ என்று பேச, சகுனிக்கு எந்தப் பக்கம் கால் வைப்பது என்று தெரியவில்லை. துரியோதனன் பாராட்டாகப் பேசுகிறானா அல்லது பொறாமையில் பிதற்றுகிறானா என்று அனுமானிக்க முடியவில்லை.

‘‘ஆமாம். மிகச் சிறப்பாக நடந்தது. இதற்கும் உன் பெருமூச்சிற்கும் என்ன சம்பந்தம்’’ ‘‘கவலையாக இருக்கிறது மாமா’’ துரியோதனன் எழுந்தான். நாலாபக்கமும் பார்த்தான். தோளிலிருந்த வஸ்திரத்தை சுற்றிப் போர்த்திக்கொண்டு அரண்மனையை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று நடந்தான். வியாசரிடம் பேசிக் கொண்டிருந்த தர்மபுத்திரர், துரியோதனன் அங்கிருக்கிறான். எனவே அவனை கவனிக்க யாராவது போக வேண்டும் என்று சொல்லி பீமனை அனுப்பினார். பீமன் விரைவாக அரண்மனைக்கு வந்தான். எதிரே பெரிய தடாகம் இருந்தது. பல வண்ண மீன்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கீழே நீரில் மூழ்கியபடி தாமரை மொக்கு இருந்தது. கீழே பசும்புல் தழைத்திருந்தது.

சற்றுகூட அசையாது அழுத்தமாக நீர் நின்றது. அட, இந்த நீரை சலனப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. பஞ்சகச்ச வேட்டியை மடித்துக் கொண்டு வெகுநிதானமாக நீரின் சில்லிப்பை வாங்குவதற்காக துரியோதனன் படிகளில் இறங்கி நீரில் கால் வைத்தான். அது நீர் அல்ல. தரை. தரைக்கு கீழே நீர். நீரில் மீன்கள், தாமரை மொக்குகள், பசும்புற்கள். நீருக்கு மேலே ஸ்படிகத்தில் பலகை செய்து இறுக்கமாக மூடப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அசையாத நீர் போல இருந்தது. அவன் இன்னும் நடக்க தடாகம் முழுவதும் பலகையாக இருந்தது. ஆனாலும், வேட்டியைவிட பயமாக இருந்தது. அதனால் வழித்த வேட்டியோடு தடாகத்தைச் சுற்றினான். யாரோ வேலைக்காரர்கள் சிரித்தார்கள். பணிப்பெண்கள் வாய்பொத்தி சிரிப்பது கேட்டது. அவன் மெல்ல வெளியே வந்தான். இன்னும் சற்று நடந்தான். வேறு ஒரு தடாகம் இருந்தது.

அதிலும் மீன்களும், நீலநிற அல்லி மொக்குகளும் இருந்தன. நீர் சலனமற்று இருந்தது. இதிலும் ஸ்படிக பலகை போட்டிருப்பார்களோ என்று வேகமாய்ப்போய் கால் வைத்தான். ஆனால் அது நீர், சலனமற்று இறுக்கமாக இருந்தது. காற்றே வராது அமைதியாக இருந்தது. தொபீரென்று இடுப்பளவு ஆழத்திற்குள் விழ, பீமன் வாய்விட்டு சிரித்தான். கண்ணெதிரே நீர் என்று தெரிந்தும் இரண்டு கால்களைக் கொண்டுபோய் வைப்பதற்கு இவன் என்ன முட்டாளா என்பது போல் சிரித்தான். இடுப்புவரை துணி நனைந்தது, சகுனி கை தூக்கிவிட்டான். துரியோதனன் வெட்கித் தலைகுனிந்தான். கரை ஏறினான். இந்த முறை பணியாட்களின் சிரிப்பு சத்தம் பலமாகக் கேட்டது. எங்கு துரியோதனன் நகர்ந்தாலும் அவர்களும் ரகசியமாக தூண்களுக்குப் பின்னாலும், சுவருக்கு அப்பாலும், சாரளங்களின் வழியாகவும் அவனை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. பணியாட்கள் ஓடி வந்து அவனுக்கு மாற்று உடை கொடுத்தார்கள்.

பலகை என்று நினைத்தேன் நீராக இருந்தது. நீர் என்று நினைத்தேன் பலகையாக இருந்தது. அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ‘‘ஆமாம் மன்னா. நீங்கள் மட்டும் அல்ல, பல தேசத்து மன்னர்களும் குப்புற விழுந்திருக்கிறார்கள். உங்களுக்காவது இடுப்பளவு ஆழம். தலைவரை மூழ்கி தத்தளித்து எழுந்தவர்கள் அதிகம் பேர்’’ வேலைக்காரர்கள் முகம் முழுவதும் பிரகாசமான கேலிப் புன்னகையோடு சொன்னார்கள். பளீர் என்று அறைய வேண்டும்போல் இருந்தது. மாற்றான் வீட்டு வேலைக்காரனை எப்படி அறைவது. அவன் அடக்கிக் கொண்டான்.

புதிய உடையோடு வேகமாக நடந்தான். உடை மிக பொருத்தமாக இருந்தது. சரிகை வேலைப்பாடுகள் அழகாக இருந்தன. மேல் துணியும் தரப்பட்டது. எல்லாவற்றிலும் வாசனை தெளிக்கப்பட்டிருந்தது. வாசனை கோபத்தை குறைத்தது. ஒரு வழியூனூடே பெரிய தோட்டம் தெரிந்தது. வேகமாக நடந்து போக டொம்மென்று அவன் இடித்துக் கொண்டான். அது வழி அல்ல, கதவு. ஸ்படிக கதவு. பிடி கூட இல்லாது வாசற்படி போல செய்யப்பட்டிருந்தது. வேட்டியை இறுக்கிக் கொண்டு கதவினின்று பின்னடைந்தான். மனிதனை மனிதன் ஒட்டாது செய்வது அவனுடைய அசூயை மட்டுமே. அசூயைக்கு எளிதாக காரணம் கண்டுபிடிக்க முடியாது. தனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ ஆனால், அடுத்தவரைப் பற்றி அவர் வளர்ச்சியைப் பற்றி, அவர் நிம்மதியைப் பற்றி ஒருவர் வெகு வேகமாக அசூயை கொள்ளலாம்.

இந்தப் பொறாமை மனிதர்களை சின்னாபின்னப்படுத்திவிடும். வாழ்க்கையை தடம் புரள வைத்துவிடும். உடல்நலத்தை சீரழித்து விடும். சிந்தனையைக் குழப்பி விட்டுவிடும். வாய்விட்டும் சிரிக்க முடியாமல், நல்ல வார்த்தை சொல்ல முடியாமல் ஒரு இனம் புரியாத வேதனையில் எப்பொழுதும் விழுந்திருக்கத் தோன்றும். அசூயை கொண்டவர்கள் தனியே இருப்பார்கள். அது அசூயையை மேலும் வளர்க்கும். ஆனால், அசூயை கொள்வதற்கு சௌகரியமாக தனிமையை தேர்ந்தெடுப்பார்கள். எப்படி அவனுக்கு இந்த வாழ்வு வந்தது என்று
கூட்டத்தில் அமர்ந்து யோசிப்பதைவிட தனியே அமர்ந்து யோசிப்பார்கள்.

துரியோதனன் அந்த மனநிலையில்தான் இருந்தான். எப்பொழுதும் தன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிற துரியோதனன் திடீரென்று காணாமல் போனதும் சகுனி கவலையடைந்தார். இங்கும் அங்குமாக எங்கிருக்கிறான் என்று தேடினார். பலபேரை விசாரித்து துரியோதனன் இருக்கும் இடத்தை அடைந்தார். துரியோதனன் அவரைத் திரும்பிப் பார்த்தான் வா என்றும் சொல்லவில்லை. போ என்றும் சொல்லவில்லை. தலை குனிந்து உட்கார்ந்து கொண்டான்.

‘‘என்ன ஆயிற்று உனக்கு. எதற்கு நெடுமூச்செறிகிறாய்? மூச்சு நீண்டதாக இருப்பது தவறாயிற்றே. உடல்நலம் சரியில்லையென்றால் நீண்ட மூச்சு வரும். இருதயம் தவிக்கும், நுரையீரல் சிரமப்படும். அதே மாதிரி சிந்தனை சரியில்லையென்றால் மூச்சு சிரமப்படும். நுரையீரல் தவிக்கும். உடம்பு, மனம் இரண்டும் மூச்சால் பிணைக்கப்பட்டிருக்கிறது. மூச்சை சரி செய்வதால் உடல் நலம் பேண முடியும். மனநலம் பேண முடியும். இவை இரண்டும் தெரிந்திருந்தும் இப்படி நெடுமூச்சு விட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாயே. இதற்கு என்ன காரணம்? என்னிடம் சொல். நான் உன் மாமன் அல்லவா. வேறு யாரிடம் நீ பேச முடியும், வேறு யார் இருக்கிறார்கள் உன்னிடம் பேச? நான் இருக்கிறேன் அல்லவா. சொல்.’’

ஆதுரமான வார்த்தைகள் துரியோதனனை அசைத்தன. விழியோரம் நீர் தளம்பிற்று. அவன் ஆறுதலாக மாமனை பிடித்துக் கொண்டான். அவர் தோளில் சாய்ந்தான். ‘‘தருமபுத்திரர் செய்த ராஜசூய யாகத்தை எண்ணித்தான் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். என்ன அற்புதமான வேள்வி. எத்தனை அந்தணர்கள், எத்தனை மன்னர்கள், எவ்வளவு பெரிய சபை, சிரித்தார்களய்யா. தடுக்கி விழுந்ததும், விழுந்தது மன்னன் என்று தெரியாது வாய் பொத்தி சிரித்தார்களய்யா. அந்த பீமன் உரக்கவே சிரித்தான். பெரும் ரணத்தை அது என் நெஞ்சில் ஏற்படுத்தியது. ஒரு விருந்தாளி வீட்டிற்கு வந்து வழுக்கி விழுந்தால் சிரிப்பவன் மனிதனா? அவர்களையெல்லாம் சிரிப்பதற்கென்றே ஏற்பாடு செய்திருக்கிறார்களா? என்னை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமா?

இதோ இந்த நேரம் நீ தடுமாறுகிறாய். நான் உட்கார்ந்து சிரிப்பேனா, ஓடிவந்து கை லாவகம் கொடுத்து உன்னை உட்கார வைக்கமாட்டேனா? அங்கிருந்து சிரிப்பது என்பது என்ன அபத்தம். பீமனுக்கு என்மீது ஆறாத கோபம். நான், நீர் என்று நினைத்து தரையில் கால் வைத்ததும், தரை என்று நீரில் கால் வைத்ததும் அவன் காத்திருந்து, பார்த்திருந்து வாய்விட்டுச் சிரித்தான். வேண்டுமென்றே சிரித்தான். எனக்கு எரிகிறது. நவத்துவாரமும் எரிகிறது. என் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கேயே பீமனை அடித்துக் கொன்றிருப்பேன். ஆனால், விருந்துக்கு வந்துவிட்டு வரவேற்றவனை அடிப்பது நியாயமாகாது. தர்மம் அவன் பக்கம் பேசும் என்று அடக்கிக் கொண்டேன்.

மாமா புரியவில்லை. எப்படி இவ்வளவு உயரத்திற்கு அவர்கள் வளர்ந்து விட்டார்கள், யாரால் வளர்ந்தார்கள்? நான் அழிக்க வேண்டிய ஒரு விஷயம் எனக்கு முன்னே பெரிதாய் கிளம்பி நிற்கிறதே! அழிக்க முடியாதபடி வளர்ந்திருக்கிறதே, உங்களுக்கு வருத்தமாக இல்லையா? எனக்கு பொறுக்கவில்லை. என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மிகத் தந்திரமாக ஒரு அரக்கு மாளிகை செய்து கொடுத்தும், இங்குள்ளவர்கள் காட்டி கொடுத்ததால் அவர்கள் தப்பிவிட்டார்கள்.

‘‘மாமா நான் மன்னனாக இருப்பதற்கு அருகதை உடையவன்தானா? என் எதிரி என் கண் முன்னே பிரமாண்டமாய் வளர்ந்திருக்கும்பொழுது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறேனே! நான் மன்னன்தானா? அசூயைப்படுவது தவறு என்று தயவு செய்து எனக்கு போதிக்காதீர்கள். தன்னுடைய பகைவன் வளருவது கண்டு எந்த அரசன் மௌனமாக இருப்பான்? அப்படி மௌனமாக இருப்பது க்ஷத்திரிய குணமா, இல்லையே? அப்படியானால் என்னுடைய அசூயை சரிதானே? தருமபுத்திரரை என்னால் அழிக்க முடியுமா? எனக்கு உதவி செய்ய ஆளே இல்லையே! மாமா ஊன்றி கவனித்தால் என்னுடைய நிலைமை உங்களுக்கு புரியவரும். கண்ணில்லாத ஒரு தகப்பன் கண்ணைக் கட்டிக் கொண்ட ஒரு தாய்.

இவர்கள் இரண்டு பேரும் ஒரு புதல்வனுக்கு, அதுவும் மூத்த புதல்வனுக்கு எவ்வளவு பெரிய சுமை. அதுமட்டுமல்ல எனக்குப் பின்னே தொன்னூற்றொன்பது சகோதரர்களை வைத்து அவர்களையும் நீயே பாதுகாத்து வா என்று என் தலையில் சுமத்திவிட்டார்கள். ஒவ்வொன்றுக்கும் விதுரரையும், பீஷ்மரையும், துரோணரையும் அனுமதி கேட்க வேண்டும். இந்த தொந்தரவுகள் எதுவும் இல்லாமல் ஸ்ரீகிருஷ்ணருடைய வழிகாட்டல்படி அற்புதமாக இரண்டு இளைஞர்களின் துணைகொண்டு அந்த தருமபுத்திரன் பிரகாசித்திருக்கிறான். என்ன தெரியும் அவனுக்கு? ஒரு அடி தாங்குவானா? பீமனைப் போல், அர்ஜுனனைப் போல எனக்கு யாரும் துணை இல்லையே மாமா. இது விதியா? நீங்கள் ஒருவர் எனக்கு ஆதரவாக இல்லையென்றால் நான் செத்தே போயிருப்பேன். இப்பொழுதும் உங்களால் எனக்கு பெரிய உதவி எதுவும் கிடைத்துவிடாதே என்ற துக்கத்தில்தான் நான் தனியே வந்தேன். விதுரரோ, பீஷ்மரோ, துரோணரோ என்னிடம் சோறு வாங்கி தின்கின்றவர்கள் எத்தனைப் பேரோ அத்தனை பேரும் தருமபுத்திரருக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார்கள்.

‘‘அந்தச் சபையில் என்ன நடந்தது? பீஷ்மர், கிருஷ்ணனை தடவித் தடவி கொடுக்கிறார்.  கிருஷணர் சிசுபாலனை நடு சபையில் வதைத்தான். ஒரு மன்னர்கூட கேட்கவில்லையே. நியாயம் பேசுகின்ற பீஷ்மரும், விதுரரும், துரோணரும், அஸ்வத்தாமனும்கூட வாய் திறக்கவேயில்லை. கிருஷ்ணர் எது செய்தாலும் சரி என்கிற நிலைமையை உருவாக்கியிருக்கிறார்களே. அப்படிப்பட்ட கிருஷ்ணனைத் துணையாக பாண்டவர்கள் கொண்டிருக்கிறார்களே. ஒட்டு மொத்த உலகமும் எனக்கு எதிராக அல்லவா இருக்கிறது. என்னோடு என் அரச சபையில் எனக்கு முன்னே கைகட்டி நிற்பவர்கள் எல்லோரும் தருமருக்கல்லவா மானசீக துணையாக இருக்கிறார்கள்! பாண்டவர்கள் வாழ வேண்டுமென்றல்லவா நினைக்கிறார்கள். துரியோதனன் செத்தால் சாகட்டும் என்றல்லவா சொல்கிறார்கள். நான் சாக விரும்புகின்றேன். தீயிட்டாவது, தண்ணீரில் விழுந்தாவது, மூச்சு அடக்கியாவது, சிரத்தை நானே கொய்து கொண்டாவது சாக விரும்புகின்றேன். தயவு செய்து என்னை சாக விடுங்கள். அல்லது நான் எப்படி தருமபுத்திரனை ஜெயிப்பது என்ற வழியைச் சொல்லுங்கள்.’’

துரியோதனன் கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருகியது. அழுகை என்பது துக்கத்தால் மட்டுமல்ல, ஆத்திரத்தாலும் ஏற்படும். அது சுய பச்சாபத்தால் வெளிப்படுகின்ற வேதனை. தருமபுத்திரருக்கு சுமைகள் இல்லை. துரியோதனனுக்கு சுமைகள் அதிகம். கண் தெரியாத பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவனுடைய துக்கம் என்ன என்று புரிந்து கொள்ளாத தகப்பனுக்கும், தாய்க்கும் நடுவிலே பணிவாகப் பேச வேண்டும். அவன் இருப்பு என்னவென்று புரியாத சகோதரர்களோடு அவன் ஆடு, மாடு போல் மேய்ந்து கொண்டிருக்க வேண்டும். அவர்களை சம்ரட்சணை செய்து கொள்ள வேண்டும். துரியோதனன் தன்னைப் பற்றி அதிகம் கவலைப்பட்டான்.

தன்னைப் பற்றி அவன் பட்ட கவலையே தருமபுத்திரர் மீதும், பஞ்சபாண்டவர்கள் மீதும் மிகப் பெரிய ஆத்திரமாக, பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமாகத் தோன்றியது. எப்படி கொல்வேன் தருமபுத்திரரை என்று மனம் அரற்றியது. ‘‘நீ சொல்வது சரி துரியோதனா, உன் பக்கத்திலே பீஷ்மரும், விதுரரும், துரோணரும், அஸ்வத்தாமனும் இருந்தாலும் இன்றைய அர்ஜுனனுக்கு எதிரில் நிற்க முடியாது. பீமனுக்கு எதிரே நிற்க முடியாது. இவன் மிகப் பெரிய வீரனான ஜராசந்தனை அடித்து பிய்த்துக் கொன்றான். மல்யுத்தத்தில் அடித்துத் தாக்கலாம். இரண்டாக கிழிப்பது உண்டா. அப்படி செய்ய முடியுமென்றால் அவன் எப்பேர்பட்ட வீரன்! மிகப் ெபரிய பலசாலியான ஜராசந்தனை இரண்டாகக் கிழிக்க முடியுமென்றால் எத்தனை வலிவு அந்த உடம்பில் இருக்க வேண்டும். அந்த வலிவுள்ள உதவி ஆள் உனக்கு இல்லை.

இது ஒரு உண்மை. ‘‘காண்டவவனத்தை எரித்து மாயாசூரனுக்கு உயிர் பிச்சை கொடுத்து அவன் மூலம் மிகப் பெரிய மாளிகை கட்டி, அக்னி கொடுத்த பல அஸ்திரங்களை தன்னிடம் வைத்துக் கொண்டு நிகரற்ற வில்லாளியாக அர்ஜுனன் வளர்ந்து விட்டான். காண்டவ வனத்தை எரிப்பதற்கு உனக்கு தோன்றியிருக்குமா? அக்னி வந்து கேட்டிருந்தால் நீ செய்திருப்பாயா? இல்லையே! கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ஜுனன் செயல்பட்டிருக்கிறான். ஜனங்களை கொடிய மிருகங்களிடமிருந்து காப்பாற்றவும், காடு அழித்து நாடாக்கவும் பெரும் பச்சை புல்வெளி உண்டாக்கவும் அர்ஜுனனால் அந்தக் காடு அழிக்கப்பட்டது.

பரதகண்டம் முழுவதும் உண்டான காடு ஜனங்கள் வசிப்பதற்குண்டான நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணனின் மகிமை குறித்து சிசுபாலன், காது கொடுத்து கேட்கவில்லை. கண்டபடிக்கு பேசினான். தண்டிக்கப்பட்டான். அதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ‘‘கிருஷ்ணரை உன்னாலோ, என்னாலோ, பீஷ்மராலோ, துரோணராலோ எதிர்க்க முடியாது. ஆனால், கிருஷ்ணர் நம்மை கொல்ல எந்த முயற்சியும் செய்யமாட்டார் துரியோதனா. கிருஷ்ணர் தர்மபுத்திரர் பக்கம் இருக்கும்வரை வெல்லுகின்ற வாய்ப்பு அரிது. ஆனால், அதற்காக அசட்டையாக இருந்துவிட முடியுமா? இந்த மாமாவால் உதவிக்கு ஆகாது என்று நினைத்திருக்கிறாயே, அப்படி நினைக்கக் கூடாது. உனக்கு உதவி செய்ய நான் இருக்கிறேன். உனக்கு நிச்சயம் வெற்றி வாங்கித் தருவேன். அது போர் மூலம்தான் என்பது என்ன அவசியம்?

தருமபுத்திரனை சூதுக்கு அழை. அவன் சூதாட மிகவும் ஆசைப்படுவான். அதே சமயம் சூதாட அவனுக்கு தெரியவே தெரியாது. இந்த அசட்டுத்தனத்தை உபயோகப்படுத்திக் கொள்வோம். போரில் இழுத்து பல உயிர்களை நாசம் செய்வதைவிட அவனை சூதுக்கு அழைத்து அவமானப்படுத்து’’.

‘‘நன்றாக இருக்கிறது. தருமபுத்திரர் சூதாடுவார் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எப்பொழுதும் காய்களோடு முட்டிக் கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யார் அவரை அழைத்து வருவது? நான் அழைத்தால் சந்தேகப்படுவார்களே’’ ‘‘நீ அழைக்கக்கூடாது. உனக்கு அழைக்கின்ற உரிமை இல்லை. அழைப்பதற்கு உன் தகப்பனுக்குத்தான் உரிமை, உன் தகப்பன் இருக்கும்ெபாழுது நீ அழைப்பது என்பது அதிகப் பிரசங்கித்தனம். உன் தகப்பனை அழைக்க வைக்க வேண்டும்’’

‘‘எப்படி?’’ ‘‘நீ போய் கேள்’’ ‘‘நான் கேட்டால் ஒத்துக் கொள்ளமாட்டார் மாமா.’’ ‘‘நாம் இருவருமே போவோம். அவர் மனதை கரைப்போம்.’’ ‘‘விதுரரும், பீஷ்மரும், ஒத்துக் கொள்ளமாட்டார்களே.’’ ‘‘அவர்களை விலகி இருக்கும்படி உன் தகப்பனை சொல்லச் செய்வோம். விதுரரை சூதுக்கு அழைத்துவர பயன்படுத்துவோம்.’’

துரியோதனன் கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருகியது. அழுகை என்பது துக்கத்தால் மட்டுமல்ல, ஆத்திரத்தாலும் ஏற்படும். அது சுய பச்சாபத்தால் வெளிப்படுகின்ற வேதனை. தருமபுத்திரருக்கு சுமைகள் இல்லை. துரியோதனனுக்கு சுமைகள் அதிகம்.

(தொடரும்)