எண்ணை எண்ணிப் பார்ப்போம்



குறளின் குரல்

வள்ளுவர் தாம் கற்காத விஷயமே இல்லை என்று தோன்றுமளவு ஏராளமான துறைகள் தொடர்பாக எண்ணற்ற கருத்துகளைத் தெரிவிக்கிறார். மாபெரும் கல்வியாளர் கல்வியைப் போற்றுவது இயல்புதானே? அதனால்தான்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்’

- என்கிறார். கல்வி இரண்டு வகைப்படும். ஒன்று கணிதம் சார்ந்த எண் கல்வி. இன்னொன்று எழுத்து சார்ந்த மொழிக் கல்வி. அறிவியல் துறைசார்ந்த கல்வி முழுவதையும் எண் சார்ந்த கல்வி என்ற வகைப்பாட்டுக்குள் அடக்கி விடலாம். `எண் கல்வி, எழுத்துக் கல்வி’ என்ற இரண்டில் எது முக்கியமானது? எண் கல்வி, எழுத்துக் கல்வியை விட முக்கியமானது என்று தோன்றுகிறது. எழுத்தில் கவிதை எழுதிப் புகழ்பெற்ற கவிஞர்களும் கூட எண் கல்விக்குத் தான் முதலிடம் கொடுத்து எழுதியிருக்கிறார்கள்.



எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு!’

- என்கிறது வள்ளுவம். இதில் எண்தான் முதலில் வருகிறது. அவ்வையார் ஆத்திசூடியில் எண் எழுத்து இகழேல்’ என்றும், கொன்றை வேந்தனில் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் குறிப்பிடுகிறார். இரண்டிலுமே எண்ணை முதலில் சொல்ல என்ன காரணம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்!

வாழ்க்கை இரண்டு வகைப்பட்டது. ஒன்று சராசரியான அடிப்படை வாழ்க்கை. இன்னொன்று நல்ல குணங்களோடு வாழ்கிற மேலான வாழ்க்கை. அடிப்படை வாழ்க்கை என்பது, உண்டு உறங்கி பெரிய நோக்கங்கள் இன்றி வாழ்ந்து முடிப்பது.

`தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ’

- என்று இத்தகையவர்களைப் பற்றி பாரதியார் எழுதுகிறார். ஆனால், நான் இப்படி வாழமாட்டேன் என்றும் எழுதுகிறார். பாரதியார் வாழ்ந்தது வெறும் அடிப்படையான சராசரி வாழ்வல்ல. அது பொருளாதார சிரமங்களைக் கூடப் பொருட்படுத்தாது, உயர்ந்த லட்சியங்களோடு வாழ்ந்த மேலான வாழ்வு. (பாரதியாருக்குக் கணிதம் வராது. பள்ளியில் கணிதம் பிடிக்காததால் ‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்று எதுகை நயத்தோடு அவர் சலித்துக் கொண்டதாக ஒரு குறிப்பு உண்டு.) இலக்கியம் வாழ்க்கையை உயர்தரத்தில் வாழ உதவும். ஆனால், அப்படி உயர்தரத்தில் வாழ்பவர்களுக்குக் கூடச் சராசரி வாழ்க்கை என்ற ஒன்று உண்டே? அவர்களும் பால், காய்கறி வாங்கி சமைத்து உண்டு உறங்கி வாழவேண்டுமே? அந்த வாழ்க்கையின் அடிப்படையில் தானே மேலான தளத்திலான வாழ்வும் அமைகிறது?

அந்தச் சராசரி வாழ்வுக்கு அடிப்படையானது எண் தான். கணித அறிவு இல்லாவிட்டால் யாரும் அடிப்படை வாழ்வைக் கூட வாழ இயலாது. ஆனால், கணித அறிவோடு நின்று விடாமல், எழுத்து சார்ந்த இலக்கியங்களையும் பயில்வதனால், மனம் பண்பட்டு மேலான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கிறது. எண் இல்லாத துறை எது? கர்நாடக சங்கீதத்தின் பல அடிப்படையான அம்சங்கள் எண்ணை ஆதாரமாகக் கொண்டதுதானே? சப்த ஸ்வரங்களுமே ஏழு என்ற அடிப்படையில் தானே இயங்குகின்றன? ஏழு ஸ்வரங்களின் பல்வகைப்பட்ட மாறுபாடுகளால் தானே இனிய இசை உருவாகிறது?

தமிழின் மரபுச் செய்யுள் வகையே, எண்களை அடிப்படையாகக் கொண்டதுதான். அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்பதெல்லாமே சீர்களின் கணக்கை வைத்துச் சொல்லப்படும் பெயர்கள் தான். ஒரு மரபுக் கவிதை சீரும் சிறப்புமாக இருக்க வேண்டுமானால், சீர்களைச் சரியாகக் கணக்கிட்டு எழுத வேண்டும். தன் 1330 குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும் சரியாக ஏழேழு சீர்களை வைத்து எழுதியிருக்கிறார் வள்ளுவர்.

தமிழில் எழுத்தெண்ணிப் பாடும் முறையும் உண்டு. ஒவ்வோர் அடியிலும் நேரசையில் தொடங்கினால் பதினாறு எழுத்து, நிரையசையில் தொடங்கினால் பதினேழு எழுத்து எனக் கடுமையான எண் கட்டுப்பாடு கொண்டது கட்டளைக் கலித்துறை. அந்தக் கட்டளைக்கு உட்பட்டுக் கவிதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், அந்த அரிய வகையிலும் பல கவிதை நூல்கள் தமிழில் உள்ளன. நம் தமிழின் பெருமையை எண்ணியெண்ணிப் பெருமைப்பட ஒரு முழு வாழ்நாள் போதாது. (கட்டளைக் கலித்துறையில் எழுத்துகளைக் கணக்கிடும்போது ஒற்றெழுத்தை நீக்கி - அதாவது, புள்ளி வைத்த எழுத்தை நீக்கி - கணக்கிட வேண்டும். ஒற்றெழுத்துகள் கணக்கில் வராது.)

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எழுதிய திருவேங்கடத்து அந்தாதி’ என்ற செய்யுள் நூல் தன் மூன்று சிறப்புக்களால் பிரமிக்க வைக்கிறது. முதல் சிறப்பு கட்டளை கலித்துறை என்ற வகை காரணமாக நேரசையில் தொடங்கினால் பதினாறு எழுத்து, நிரையசையில் தொடங்கினால் பதினேழு எழுத்து என்ற எழுத்துக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது எழுதப்பட்டுள்ளது. இன்னொரு சிறப்பு, அந்தாதி என்பதால் ஒரு செய்யுளின் முடிவு, அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைகிறது. மூன்றாவது சிறப்பு ஓர் அபாரமான சாதனை. ஒவ்வோர் அடியிலும் இரண்டாம் சீர் ஒரே சொல்லாக மீண்டும் மீண்டும் நான்கு முறை வரும். ஆனால், அந்தச் சொல்லைப் பிரிப்பதால் அது சிலேடை நயத்தோடு நான்கு பொருள் தரும்! சிலேடை என்றால் இரண்டு பொருள் என்றுதானே பரவலாக நினைக்கிறோம்? ஆனால், இவர் நான்கு பொருள் தரும் சிலேடைகளை ஒவ்வொரு பாடலிலும் அள்ளித் தெளிக்கிறார்.

உதாரணத்திற்கு ஒரு பாடல். இதன் தொடக்கச் சொல் இதற்கு முன்னுள்ள பாடலின் கடைசிச் சொல். இதன் ஒவ்வொரு வரியும் நேரசையில் தொடங்குவதால் பதினாறு எழுத்துகளைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இரண்டாம் சீர் எல்லா வரிகளிலும் கண்ணன்’ என்றே வருகிறது. ஆனால், அது பிரிக்கப்படும் விதத்தில் நான்கு பொருள் தருகிறது. இதோ பாடல்:

மாயவன் கண்ணன்’ மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும் தாயவன் கண் நன்’ கமலமொப்பான் சரத்தால் இலங்கைத் தீய வன்கண்ணன்` சிரமறுத்தான் திரு வேங்கடத்துத் தூயவன் கண்அன்’புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே. ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் இமாலயப் பேராற்றலை எந்தச் சொற்களால் வியப்பது’?

நளவெண்பாவில் பத்து என்ற எண்ணுக்கு ஒரு முக்கியத்துவம் வருகிறது. தமயந்தியைப் பிரிந்து செல்கிறான் சூதாட்டத்தில் நாட்டைத் தோற்ற நளன். அப்போது கானகத்தில் ஒரு பாம்பு நெருப்பில் துடிதுடிப்பதைப் பார்க்கிறான். இரக்க உணர்ச்சியால் உந்தப்பட்டு, அக்கினி நளனை ஒன்றும் செய்யாது என வரம் பெற்றிருப்பதால் நெருப்பில் புகுந்து பாம்பைக் காப்பாற்றுகிறான். பாம்பு நளனிடம் தன்னை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, ஒன்று இரண்டு என்ற எண்களை ஏக, த்வீ, த்ரிணீ, சத்வாரி, பஞ்ச, ஷட், சப்த, அஷ்ட, நவ, தச’ என்று வரிசையாகச் சொல்லச் சொல்லி வற்புறுத்துகிறது. முதலில் திகைத்த நளன் பின் ஒப்புக்கொண்டு நாகம் சொன்னபடியே எல்லா எண்களையும் சொல்லி இறுதியில் தச’ என்கிறான்.

தச’ என்ற சொல்லுக்கு வடமொழியில் கடி’ என்றும் ஒரு பொருள் உண்டு. அந்தப் பொருளைத் தான் மேற்கொள்வதாகச் சொல்லி, பாம்பு நளனைச் சடாரெனக் கடிக்கிறது! அடுத்த கணம், நளனின் அழகிய நெடிய உருவம் கறுத்துக் குறுகுகிறது. `உயிரையே காப்பாற்றியவர்களுக்குச் செய்யும் பிரதி உபகாரம் இதுதானா?’ எனச் சீறுகிறான் நளன். இது பிரதி உபகாரமே!’ என்றும் அவனைக் கொல்லத் துரத்தும் எதிரிகள் இனி அவனை அறிய மாட்டார்கள் என்றும் சொல்லும் நாகம், ஓர் ஆடையை அவனுக்குத் தருகிறது. அவனது இடுக்கண்கள் தீர்ந்த பிறகு அந்த ஆடையை அணிந்தால் அவனது பழைய உரு திரும்பக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது. புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவில் இந்நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லும்போது `தச’ என்ற வடசொல்லை அப்படியே எடுத்தாள்கிறார்.

மண்ணின்மீ தென்றனை வன்தாளால் ஒன்று முதல் எண்ணித் தசவென் றிடுகென்றான்- நண்ணிப் போர் மாவலான் செய்த உதவிக்கு மாறாக
ஏவலால் தீங்கிழைப்பேன் என்று.’

இப்படி எண்கள் பாட்டில் வருவது மட்டுமல்ல, தமிழில் எண்ணலங்காரம் என்றே ஓர் அழகிய அணி உண்டு. எண்களை வைத்து சமத்காரமாக எண்ணலங்காரம் துலங்கப் பாட்டெழுதிய புலவர்கள் பலர்.
 
அஞ்சுமுகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்- நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்!’

- திருமுருகாற்றுப் படையில் பின்னால் வரும் இந்த வெண்பா  ஐந்து, ஆறு, ஒன்று இரண்டு ஆகிய எண்களை வைத்துத் தமிழ் விளையாட்டு நடத்துகிறது. அஞ்சுமுகம் என்றால் அஞ்சுகின்ற முகம். ஒருகால் நினைக்கில் என்றால் ஒருமுறை நினைத்தால் கூடப் போதும் எனப் பொருள். `திருவிளையாடல்’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய `ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்’ என்ற பாடல் முழுவதும் எண்ணலங்காரம் சார்ந்ததே.

நமது ஆன்மிக நெறியில் பல மந்திரத் தகடுகள் பூஜிக்கப்படுகின்றன. கோயில்களில், சக்தி பீடங்களில், மூல விக்கிரகத்தின் கீழே யந்திர ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ர யந்திரம், தன ஆகர்ஷண யந்திரம் போன்றவற்றை அவரவர் இல்ல பூஜையில் வைத்து வழிபட்டுப் பயனடையும் அன்பர்கள் பலர் உண்டு. யந்திரங்கள் யாவும் கணிதம் சார்ந்தவையே. மந்திரங்களை உருச் செய்கிறபோது குறைந்தபட்சம் நூற்றெட்டு அல்லது ஆயிரத்தெட்டு என்று கணக்கு வைத்து ஜபிக்கிறோம். ஏன் அது நூற்று ஏழாகவோ ஆயிரத்து ஏழாகவோ இருக்கக் கூடாது? அந்த எண்ணிக்கையில் உள்ள குறைந்தபட்சக் கட்டுப்பாடு என்பதன் பின்னாலும் பல ஆன்மிக சூட்சுமங்கள் இருக்கின்றன.

மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்களும் தாவரங்களும் கூடக் கணித அறிவுடன் திகழ்கின்றன! தேன்கூட்டின் தொகுப்பில் அமைந்துள்ள ஒவ்வொரு சின்னக் கண்ணறையும் அறுகோண வடிவிலேயே அமைந்துள்ளதே? இப்படி அமைக்க அவை எங்கு பாடம் கற்றன? மாதுளம்பழம் என்ற அழகாகத் தயாரிக்கப்பட்ட பாத்திரத்தின் உள்ளே மாதுளை முத்துக்களைச் சின்னச் சின்ன முத்து களாகப் பொதிந்து வைத்தது யார்? இதெல்லாவற்றின் பின்னாலும் இயற்கையின் கணிதப் பேரறிவு இயங்குகிறது. கணிதம் இல்லாவிட்டால், எண் இல்லை. எண் இல்லாவிட்டால் இயற்கையே இல்லை.

`சூரியன் வருவது யாராலே?
சந்திரன் திரிவது எவராலே
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணில் படுவன அவை என்ன?
பேரிடி மின்னல் எதனாலே?
பெருமழை பெய்வதும் எவராலே?
யாரிதற்கெல்லாம் அதிகாரி?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ?

- என்ற நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகள் இயற்கையின் கணித விதிகளைப் பார்க்கும்போது பிரமிப்பாகவே இருக்கிறது. இதையெல்லாம் உட்கொண்டுதான் வள்ளுவர் `எண்ணென்ப ஏனை எழுத்தென்ப’ என்பதில் எண்ணுக்கு முதலிடம் கொடுத்துள்ளார். ஆராய்ச்சிக்கு அடிப்படையான புள்ளி விவரங்களெல்லாம் எண் சார்ந்தே உருவாகின்றன. எண் இல்லாவிட்டால் எந்த ஆராய்ச்சியையும் செய்ய இயலாது. கோலம் போடக் குறைந்த பட்சம் எத்தனை புள்ளிகள் தேவை என்பதிலிருந்து புள்ளி மானின் உடலில் சராசரியாக எத்தனை புள்ளிகள் இருக்கும் என்பது வரை ஆய்வு செய்து வழங்கப்படும் கணக்கு சார்ந்த புள்ளி விவரங்களுக்கு ஒரு கணக்கே இல்லை!

எதைப் பற்றியும் இன்று புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன. சாதாரண மனிதர்களும் கூட இந்தப் புள்ளி விவரங்களை இணைய தளத்தில் பெற்றுவிடலாம். அந்த விவரங்களைப் பெறப் பெரிய புள்ளியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை! புள்ளி விவரங்களைப் பற்றியே ஆய்வு செய்தார் ஒருவர். அவர் தன் ஆய்வின் முடிவாக ஒரு கருத்தைத் தெரிவித்தார். அந்தக் கருத்து இதுதான். `பொய் இரண்டு வகைப்படும். ஒன்று பொய். இன்னொன்று புள்ளி விவரம்!’

(குறள் உரைக்கும்)