ஈசனை நோக்கிய சனீஸ்வரன்



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - ஆலங்குடி

கோளறு திருப்பதிகம் பாடிய திருஞான சம்பந்தப்பெருமான் அப்பதிகத்தின் முதற்பாடலில் விடம் உண்ட கண்டனாகிய அந்த ஆலங்குடியான் ஒருவர் தம் உள்ளத்தில் புகுந்தானானால் நவகோள் சாரத்தால் ஏற்படக்கூடிய கொடிய தீங்குகள் அனைத்தும் அகன்று அவை நல்லவையாகவே மாறும் என்று கூறியுள்ளார்.

‘‘ஞாயிறு திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே ஆசுஅறும், நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே’’ - என்பதே அந்த ஞானக் குழந்தையாரின் திருவாக்கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவொற்றியூரில் தம் இரு கண்களின் பார்வையை இழந்தபோது ‘‘மகத்திற் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் எனக் குறிப்பிட்டு முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்வேன்’’ என்று புலம்புகிறார்.

மக நட்சத்திரத்தை சனி தீண்டும்போது ஒருவர் பெறும் தீங்கினை சுந்தரர்போல் இனியாரால் கூறிட முடியும். அதுபோன்றே சனியுடன் ராகு-கேது என்ற பாம்புகளுள் எது சேர்ந்தாலும் ஒருவர் அடையும் அல்லலைத்தான் திருஞானசம்பந்தர் எடுத்துக்காட்டி சிவபெருமானை உள்ளத்தால் பற்றுகின்ற அடியார்களுக்கு அவை நல்லதையே செய்யும் என்று நான்கு முறை ஆணையிட்டு உரைத்துள்ளார். ராகு- கேது என்ற பாம்புகளுடன் ஈசனார் முன்பு நின்றவாறு சனீஸ்வரன் பரமனை வழிபடும் அடியார்களின் கோள் சார்ந்த துயரங்களைப் போக்குகின்ற ஒரு திருத்தலமே திரு இரும்பூனை எனப்பெறும் ஆலங்குடியாகும்.

சோழநாட்டில் கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியே நீடாமங்கலம் செல்லும் சாலையில் ஆலங்குடி என்ற இத்திருத்தலம் உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் இருப்புப்பாதையில் பயணம் செய்வோர் நீடாமங்கலத்தில் இறங்கி ஆலங்குடியை அடையலாம். தற்காலத்தில் குரு ஸ்தலம் என்ற பெயரால் இவ்வூர் போற்றப் பெறுகின்றது. வன்னிமரக் காடான அரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்), பாதிரி மரக்காடான அவளிவநல்லூர், வில்வவனமான திருக்கொள்ளம்பூதூர், நந்தியாவர்த்தக்காடான கோயில் வெண்ணி, பூனைச் செடிக்காடான திருவிரும்பூனை என்ற ஐந்து காடுகள் (பஞ்சாரண்யம்) உள்ள சிவப்பதிகளுள் ஆலங்குடியும் ஒன்றாக இடம் பெற்று திகழ்கின்றது.

கம்போடியா நாடு செல்வோர் அங்கு திகழும் சைவ, வைணவ, பௌத்த ஆலயங்கள் அனைத்தும் நீரால் சூழப்பெற்ற அகழி நடுவே இருப்பதைக் காணலாம். அதுபோன்றே தமிழகத்தில் நீர் சூழ்ந்த அகழி நடுவே பல கோயில்கள் திகழ்ந்தன. அவற்றுள் பெரும்பாலானவை காலப்போக்கில் அகழிகளை இழந்து காணப்பெறுகின்றன. ஆலங்குடியில் திகழும் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் தற்போது அகழி நடுவேதான் உள்ளது. இருப்பினும் தென்புற அகழி பிற்காலத்தில்  தூர்க்கப்பெற்று சாலை அமைப்பாக மாறி காணப்பெறுகின்றது. திருப்புகலூர் சிவாலயமும் இவ்வாறே ஒருபுறம் தூர்க்கப்பெற்ற அகழி சூழ்ந்த ஆலயமாக விளங்குகின்றது.

கோயிலினுள் நுழையும்போதோ முதலில் காட்சி தருபவர் கலங்காமல் காத்த கணபதியாவார். ராஜகோபுரங்கள், திருமதில், திருச்சுற்றுகள் ஆகியவற்றுடன் கம்பீரமாகத் திகழும் இச்சிவாலயத்தின் கிழக்குநோக்கிய மூலவர் கருவறையில் காசி ஆரண்யேஸ்வரர் என்றும் ஆபத்சகாயேஸ்வரர் என்றும் அழைக்கப்பெறும் ஈசனார் சிவலிங்கத்
திருமேனியாக அருள்பாலிக்கின்றார்.

மூலவர் சந்நதிக்கு முன்பாக தெற்கு நோக்கியவாறு ஏலவார்குழலி அம்மை உறையும் திருக்காம கோட்டம் உள்ளது. ஆபத்சகாயேஸ்வரருக்கு நேர் எதிரிலும், அம்மை
சந்நதிக்கு அருகாகவும் ஈசனை நோக்கியவாறு சனீஸ்வரன் திருமேனி சிற்றாலயம் ஒன்றில் இடம் பெற்று காட்சி நல்குகின்றது. இத்திருவடிவினை தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாது.

 சனிபகவான் காக்கை வாகனத்தோடு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். ஒருகரம் அபயம் காட்ட ஒருகரம் தொடைமீது இறுத்தப்பெற்றுள்ளது. அபயக்கரத்தின் அருகே காக்கைக்கொடி உள்ளது. திருமுகத்தின் இருமருங்கும் இரண்டு படமெடுத்த பாம்புகள் காணப்பெறுகின்றன. அவை ராகு-கேது எனப்பெறும் இரு பாம்புகளாகும். சனி பகவானுடன் இருபாம்புகளும் இணைந்து ஆலங்குடி ஈசனாரின் திருமுன்பு நின்றவாறு அப்பெரு மானைப் போற்றி வணங்குகின்ற அடியார்களின் தோஷங்கள் அனைத்தையும் போக்குகின்றவர்களாக விளங்குகின்றனர்.

 இத்தகையதோர் அபூர்வ காட்சியை அருளுகின்ற நிலையை இப்பூவுலகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது. அந்த இடத்தில் நின்றுகொண்டு ஆலங்குடி ஈசனை மனத்தில் நிறுத்தி ஞானசம்பந்தப் பெருமானின் கோளறு பதிகத்தினைப் படிப்பவர்களுக்கும், பாடுபவர்களுக்கும் ஒன்பது கோள்களும் நலமே பயப்பன
வாகும். இது சத்தியப்பூர்வமான அனுபவ உண்மையாகும்.

திருச்சுற்றில் வலம் வரும்போது தென்புற கோஷ்டத்தில் அருள்பாலிக்கின்ற ஞானகுருவான தட்சிணாமூர்த்தியையும் லிங்கோத்பவரையும், பிரம்மனையும், கணபதியையும், சுப்ரமணிய பிள்ளையாரையும், சண்டீஸ்வரரையும் வழிபட்டு உய்யலாம். கிழக்குக் கோபுரத்திற்கு வெளியே வடக்கு நோக்கியவாறு சப்தமாதர் கோயில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.

ஆலங்குடி சிவாலயம் ஒரு வரலாற்றுப் பெட்டகமாகவே விளங்குகின்றது. இவ்வாலயத்திலிருந்து பதிவு செய்யப்பெற்ற கல்வெட்டுகள் 1,500 ஆண்டுகளாக இவ்வூர் எவ்வாறெல்லாம்  திகழ்ந்தது என்பது பற்றியும் அங்கு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் பற்றியும் விளக்கி நிற்கின்றன. இரும்பூளை என்பதே இவ்வூரின் பழம்பெயராகும். தேவாரப்பாடல் பெற்றமையால் திருவிரும்பூளை என அழைக்கப்பெற்றது. 

பல்லவப் பேரரசன் சிம்மவிஷ்ணு காலத்தில் இவ்வூருக்கு சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூரில் திகழும் விஷ்ணு ஆலயத்தை திருமேற்றளி என்று இச்சிவாலயத்து கல்வெட்டு குறிப்பிடுவதோடு அவ்வாலயத்தின் ராகவப் பெருமாளுக்கு சூரிய கிரகண நாளில் சிறப்பு வழிபாடு செய்ய தஞ்சாவூரின் தலைவன் ஒருவன் கொடை நல்கியதை ஒரு கல்வெட்டு எடுத்துக் கூறுகின்றது.

சோழப் பேரரசன் ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் காலத்தில் இரும்பூளை என்றும் இவ்வூருக்கு ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டதை சில கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

இவ்வூரில் திகழ்ந்த ஆயிரத்து நாற்பதின்மன் சாலை என்ற பாடசாலைக்காக செற்றூர் கூற்றத்து ஓகை (குடவாயில்) என்ற ஊரினனாகிய காடுவெட்டிகள் என்பான் 440 பொற்காசுகளையும், சில நிலங்களையும் அளித்த செய்தி கூறப்பெற்றுள்ளது. பல்வேறு நிலக் கொடைகள் பற்றியும் விளக்குக் கொடைகள் பற்றியும் பல கல்வெட்டுகள் விவரிக்கின்றன.

இரண்டாம் ராஜராஜ சோழனின் ஆறாம் ஆண்டு கல்வெட்டில் (கி.பி.1152ல்) இவ்வூரின் பெயர் ஆலங்குடியான ஜனநாத சதுர்வேதிமங்கலம் என்று குறிக்கப்பெற்றுள்ளது. இதே ராஜராஜ சோழனின் கல்வெட்டில் ஜனநாதப் பேராறு, பராந்தகப் பேராறு போன்ற ஆறுகளில் நீர் வரத்து இல்லாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டதாகவும், அப்போது அப்பஞ்சத்தைப் போக்குவதற்கும், பின்பு ஆற்று நீர்ப்பாசனம் மேம்பட மேற்ெகாள்ள வேண்டிய வேலைகளுக்காகவும் அத்திருக்கோயிலிலுள்ள செம்பியன் மாதேவி ஆதூரசாலை என்ற மருத்துவமனையில் ஊர் சபையோர் கூடி முடிவுகள் எடுத்ததையும் விவரிக்கின்றது.

இரண்டாம் ராஜ ராஜசோழனின் இவ்வாலயத்துக் கல்வெட்டில் ஆலங்குடிக்காக அரசு செய்த வருவாய் செயல் திட்டங்களை விவரிப்பதோடு, கோயிலுக்குரிய நிலங்களில் உள்ள நாற்பதாயிரம் பாக்கு மரங்களிலிருந்து ஒரு மரத்திற்கு 400 பாக்குகள் என்று ஒரு கோடியே அறுபது லட்சம் பாக்குகளை அம்மரங்களை பேணுவோர் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது.

ஆலயத்து அகழியை சுற்றி நான்கு வீதிகளை உருவாக்கி அதில் ஆலய ஊழியர்களுக்காக வீடுகள் கட்டப்பெற வேண்டும் என்பதை ஒரு கல்வெட்டு விவரிக்கின்றது.
கல்வெட்டுகள் ஈசனின் பெயரை திருவிரும்பூளை உடையார் என்றே பண்டு முதல் குறிக்கின்றன. கி.பி.1264ல் பொறிக்கப்பெற்ற பாண்டிய மன்னன் கல்வெட்டில்தான் இத்தலத்து ஈசனின் பெயரை ஆபத்சகாயேஸ்வரர் எனக் குறிக்கின்றது.

 ஆறுவகையான கலைப்பணிகளை புரிகின்ற நான்கு பிரிவு ரதகாரர்கள் ஒருங்கிணைந்து ஆபத்சகாயேஸ்வர பெருமான் திருவிழாக் காலங்களில் திருநீற்றுச்சோழன் என்றும் நந்தவனத்திற்கு எழுந்தருளி அங்கு அமர்ந்தருள்வதற்கு மண்டபம் ஒன்றினை எடுத்தனர் என்ற செய்தியை ஒரு சாசனம் விவரிக்கின்றது. ஆலங்குடி செல்லும் அன்பர்களே! ஆபத்சகாயேஸ்வரரை வணங்கி அவர் முன்பு நிற்கும் சனீஸ்வரனை ராகு-கேதுகளோடு வணங்கி கோள் துயர் நீங்கி நலம் பெற்று மகிழ்வீர்.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்