ஆடல் அரசே, திருவடி சரணம்..!



இறைவன் நடனம் ஆடுமிடங்கள் அவற்றின் தன்மை, வடிவு, சூழல், கூடியிருப்பவர் முதலியவற்றின் அடிப்படையில் அவை அம்பலம், அரங்கம், மன்றம், பொது என்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இச்சொற்கள் இப்போது ஒரே பொருளில் ஆளப்படுகின்றன. ஆனால், இவை ஆடுமிடம் என்ற பொதுத்தன்மை கொண்டிருந்தாலும் தனித்தனி சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டவை.

சபை என்பது நேர்த்தியாகக் கட்டப்பட்ட மாளிகையின் ஓர் அங்கமாகும். அரச மாளிகையின் அங்கமாக ராஜசபை விளங்குகிறது. இது சிறப்புப் பெற்ற அங்கத்தினர்களைக் கொண்டது. ஆடலரசனாகிய சிவபெருமான் தவமுனிவர்களும், மகிமை பெற்ற தேவர்களும் கூடியிருக்க ஆடுமிடம் தேவசபை எனப்பட்டது. அம்பலம் என்பது சோலைகளின் நடுவில் பெரிய மரத்தின் கீழ் அமைந்த மேடையாகும்.

ஆதியில் தில்லைவனத்தின் நடுவே இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே அமைந்திருந்த மேடையில் பெருமான் ஆடினான். அதையொட்டியே அது அம்பலம் எனப்பட்டது. இதற்கு எல்லோருமே பார்வையாளர்கள் ஆவர். அம்பலம் என்னும் பெயராலேயே இறைவன் ஆடும் ஐம்பெரும் சபைகளும் அழைக்கப்படுகின்றன. சிதம்பர ஆலயம், சிற்றம்பலம், தில்லையம்பலம், பொன்னம்பலம் என்றும், மதுரையில் உள்ள சபை வெள்ளியம்பலம் என்றும், திருவாலங்காட்டுச் சபை மணியம்பலம் என்றும், திருநெல்வேலி சபை செம்பொன்னம்பலம், திருக்குற்றால சபை ஓவிய அம்பலம் என்றும் அழைக்கப்படுகின்றன. இதையொட்டியே பொன்னம் பலம், வெள்ளியம்பலம் என்றும் மக்கள் பெயர் சூட்டிக்கொள்கிறார்கள்.

அரங்கம் என்பது வெட்டவெளியில் அமைந்த மேடை. ஆற்றின் நடுவில் அமைந்த இடம் என்றும் கூறுவர். சிவபெருமான் திறந்தவெளிகளாக உள்ள சுடுகாட்டையும் போர்க்களத்தையும் அரங்கமாகக் கொண்டு ஆடுகிறான். திருமுறைகளில், காடு அரங்காகப் பெருமான் தீயுகந்து ஆடுவதும், காடரங்காகக் கங்குலும் பகலும் ஆடரவாட ஆடுவதும் ஞான சம்பந்தரால் பாடப்பட்டுள்ளன. பேய்கள் கொள்ளிக் கட்டைகளை விளக்காகப் பிடிக்கப் பூதங்கள் பாடப் புறங்காட்டில் நடனமாடுபவனாக அவன் காட்சியளிக்கிறான்.

திரிபுராதிகளை வென்றபின் பெருமான் அந்த போர்க்களத்திலே அவர்கள் வெந்து அழிந்து வெண்மையான சாம்பல் நிறைந்திருந்த சாம்பல் மேட்டின் நடுவே தேர்த்தட்டின் மீது நின்று திசைமுகனாகிய நான்முகன் காணும்படியாக ஆடினான். அந்தக் கூத்து ‘பாரதி காண ஆடிய வியன் பாண்டரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
பேய்கள் கொண்டாடும் திருவாலங்காட்டிலுள்ள சபை, இலக்கியங்களில் அரங்கம் எனப்பட்டது. கல்வெட்டில் அரங்கில் அண்டமுற நிமிர்ந்து ஆடும் பெருமான் என்று இவர் அழைக்கப்படுகிறார்.

அறிஞர்களும் கலைஞர்களும் கூடியிருக்குமிடம் மன்றம் எனப்பட்டது. பெருமான் மன்றத்துள் ஆடுகின்றான். அவனை மன்றுள் ஆடும் பெருமான் என்றும், மன்றாடி எனவும் அழைக்கின்றனர். மன்றத்துள் பெருமானின் திருநடனத்தைக் கண்டு வழிபட்ட பதஞ்சலியாரைத் திருமூலர், ‘மன்று தொழுது பதஞ்சலி’ என்று போற்றுகிறார்.
மன்றம் எனும் பெயரால் நடராஜர் ஆடுகின்ற சபைகள் தில்லைமன்றம், வெள்ளி மன்றம், ஓவியமன்றம், மணிமன்றம் என்று அழைக்கப்படுகின்றன. இதையொட்டி மக்கள்மன்ற மணவாணர், மன்றுள் ஆடுவான் என்ற பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.

பொது என்பதும் ஆடும் அரங்கத்தைக் குறிக்கிறது. பொதுமக்கள் எல்லோரும் கூடுமிடம் பொது எனப்பட்டது. எல்லோரும் காண நடனம் ஆடுமிடம் பொதுவில் எனப்பட்டது. பொது என்ற சொல் சிவபெருமான் நாட்டியமாடும் சபைக்கும் பெயராக வழங்குகின்றது. பரக்கலக்கோட்டை என்னும் இடத்திலுள்ள ஒரு பெரிய ஆலமரம் சிவபெருமானாக வழிபடப்படுகிறது. அந்த மரத்தில் உறையும் பெருமான் பொது ஆவுடையார் என்று அழைக்கப்படுகின்றார்.

தில்லையம்பலத்தைப் பூஜிக்கும் மூவாயிரவர் பொது தீக்ஷிதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு ‘பொது’ என்பது நடராஜ சபையைக் குறிக்கிறது. சேக்கிழார் ‘தில்லைப் பொது நடனம் போற்றி போற்றி’ என்றும், வள்ளலார், ‘பொது நடத்தரசே’ என்றும் நடராஜரைப் போற்றுகின்றனர். இப்படி ஆடுவதற்குரிய இடங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையால் சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தன. காலப் போக்கில் இவை எல்லாம் மேடையைக் குறிக்கும் பல சொற்களாகி விட்டன.

சிதம்பரம் இப்பெயர்களால் கனகசபை, பொன்னம்பலம், தில்லையம்பலம், தில்லை மன்றம், தில்லைப் பொது என்று பலவாறு அழைக்கப்படுகிறது. ஆடலரசன் ஆடியருளும் எழுவகைத் தாண்டவங்கள் உலகம் எப்பொழுதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் இயக்கம் தடைபடுவதே இல்லை. ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்பவை இடையறாது நிகழ்ந்த வண்ணமாகவே இருந்து உலகம் செயல் படுத்தப்படுகின்றது. இதைப் பஞ்ச க்ருத்யம் என்று வடமொழியிலும் ஐந்தொழில் என்று தமிழிலும் கூறுவர்.

இறைவன் ஐந்தொழில்களைச்செய்வதன் மூலம் உலகை இயக்குகிறான். அவன் தான் ஆடுவதன் மூலம் இந்த உலகத்தையும் ஆட்டுவிக்கிறான். ஐந்தொழிலை நடத்தியவாறே அவன் ஆடும் அற்புதத் தாண்டவமே ஐந்தொழில் புரியும் ஆனந்த நடனமென்றும், பஞ்ச க்ருத்ய பரமானந்தத் தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பரமானந்தத் தாண்டவத்தை அவன் தில்லையில் ஆடிக் கொண்டிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்த ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் அவனது வலது கை உடுக்கையை ஒலிக்கிறது. அந்த ஒலியால் படைப்புத் தொழில் நடக்கிறது. இடது கரத்தில் அக்னியை
ஏந்தியிருக்கிறான். அது அழித்தல் தொழிலைச் செய்கிறது. படைப்புக்கும், அழிவுக்கும் நடுவேயுள்ள வாழுங்காலத்தில் உயிர்களுக்கு உரியவற்றைத் தந்து அழிவிலிருந்து காத்தலை அபயகரம் செய்கிறது. ஊன்றிய திருவடியால் மறைத்தல் தொழில் நடைபெறுகிறது. அது தனது மறைப்பாற்றலால் உயிர்களை இரு வினைகளை அனுபவிக்கச் செய்து, அவற்றிற்கு மலபரிபாகம் ஏற்படச் செய்கிறது.

தூக்கிய திருவடி அருளலைச் செய்கிறது. ஏற்றம் பெற்ற உயிர்களுக்கு அது அளவில்லாத பேரின்பத்தினை அளிக்கிறது. இவ்விதம் தான் ஆடிக்கொண்டிருந்தவாறே சிவபெருமான் உலகையும் ஆட்டுவிக்கிறான். உலக இயக்கத்திற்குக் காரணமான ஐந்தொழில்களைத் தனித்தனியாகக் குறிக்கும் வகையில் பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் தாண்டவங்களும் உள்ளன. இவை உற்பத்தித் (சிருஷ்டி) தாண்டவம், காத்தல் (ஸ்திதி) தாண்டவம், அழித்தல் (சம்ஹார) தாண்டவம், மறைத்தல் (திரோபவம்) தாண்டவம், அருளல் (அனுகிரக) தாண்டவம் என அழைக்கப்படுகின்றன.

இவற்றில் காத்தல் தாண்டவம் இன்பக்காத்தல்; துன்பக்காத்தல் என இரு வகைப்பட, இவை ஆறு தாண்டவங்களாகும். இப்படி ஆறுவகைத் தாண்டவங்களும் இவற்றை உள்ளடக்கிய ஆனந்தத் தாண்டவமும் ஆக ஏழு தாண்டவங்களை இறைவன் ஆடுவதாகக் கூறுவர். இவற்றை சப்த தாண்டவங்கள் என்று அழைக்கின்றனர்.
இந்த ஏழு தாண்டவங்கள் ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளிகா தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஆனந்தத் தாண்டவத்தைத் தில்லையிலும், சந்தியா தாண்டவத்தை மதுரையிலும், கௌரி தாண்டவத்தைத் திருப்புத்தூரிலும், திரிபுர தாண்டவத்தைத் திருக்குற்றாலத்திலும், காளிகா தாண்டத்தைத் திருவாலங்காட்டிலும், முனி தாண்டவத்தைத் திருநெல்வேலியிலும், சங்கார தாண்டவத்தை பயங்கரமான இருண்ட காட்டிலும் ஆடுவதாக திருப்புத்தூர் புராணம் கூறுகிறது.

இத்தலங்களில் பெருமானை ஆனந்தத் தாண்டவராகவும், கௌரி தாண்டவராகவும், ஊர்த்துவ தாண்டவராகவும், சந்தியா தாண்டவராகவும் மட்டுமே காண முடிகிறது.
எனினும், சிற்பக் கலைஞர்கள் இந்த எழுவகைத் தாண்டவங்களையும் அவற்றின் தனித்தன்மைகள் வெளிப்பட, அற்புதத் திருமேனிகளாகப் படைத்துள்ளனர்.
உற்பத்தித் தாண்டவம்ஆதியில் எல்லையில்லாத பரந்த வெட்டவெளி மட்டுமே இருந்தது.

உலகைப் படைக்க வேண்டும் என்று இறைவன் எண்ணினான். அந்த எண்ணமே வெண்ணிற ஒளியதாகி கௌரி என நின்றது. அதுவே பெண்ணுருக் கொண்டு பராசக்தியானது. இறைவன் அவள் மூலமாக படிப்படியாக கலைகளைத் தோற்றுவித்தான். பின்னர் திருவுருவம் தாங்கி ஆட அரம்பித்தான். வலக்கரத்தால் துடியை ஒலித்துக் கொண்டே நடம் புரிந்தான்.

உடுக்கை ஒலியிலிருந்து பிரணவமும் அதிலிருந்து அகரம் முதலானவையும் (எழுத்துகள்), பதம், மந்திரம் எனப் படிப்படியாக உலகங்களும் உயிர்த்தொகுதிகளும் தோன்றின. பின்னர் அவற்றிற்கு உரிய நிலைகளைத் தந்து உலகத்தை நிலை பெறுமாறு செய்தான். இப்படி உலகமும் உயிர்த் தொகுதிகளும் தோற்றுவிப்பதற்காகப் பெருமாள் ஆடும் தாண்டவமே உற்பத்தித் தாண்டவமாகும்.

ஆதியில் இறைவன் உலகைப் படைக்க ஆடிய தாண்டவம் காளிகா தாண்டவம் என அழைக்கப்படுகிறது. காளியோடு இறைவன் ஆடிய தாண்டவமான காளி தாண்டவம் வேறு; இது வேறு. இதனை ரிஷி தாண்டவம் என்றும் கூறுவர். ரிஷி என்பது சிருஷ்டித்தல் என்பதிலிருந்து வந்ததாகும். சிவபெருமானின் அழகிய காளிகா தாண்டவம் எனப்படும் சிருஷ்டி தாண்டவத்தைக் காண நாம் நல்லூர் செல்ல வேண்டும். நல்லூர் பாடல் பெற்ற சோழ நாட்டுத் திருத்தலமாகும். அப்பர் சுவாமிகளுக்குப் பெருமான் இத்தலத்தில் திருவடி சூட்டி அருளினார்.

இத்தலத்தில் சதுரதாண்டவர் எனும் பெயரில் சிருஷ்டி தாண்டவமூர்த்தி ஆடிக் கொண்டிருக்கிறார். இவரது வலது பின்கை துடியை முழக்குகிறது. துடியை வேகமாக அடிப்பவர்கள் அதைக் காதருகில் நெடுக்காக வைத்து அடிப்பது வழக்கம். அது போல் பெருமான் துடியை முழக்குகிறார். துடியை அடிப்பதன் மூலம் உலகை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார். வலது முன்கை அபயம் காட்டுகிறது. எஞ்சிய இரண்டு வலது கரங்களில் சூலத்தையும் (சூலத்தின் முனை உடைந்துள்ளது ) பாசத்தையும்
தாங்கியுள்ளார்.

இடது மேற்கரம் தீயை ஏந்தியுள்ளது. அதை தூரத்தில் பிடித்துள்ளார். இது அழிப்புத் தொழில் இன்னும் தொடங்கவில்லை என்பதைக் குறிப்பதாகும். இடது முன்னங்கையை முன்னோக்கித் தாழ்ந்த நிலையில் வைத்துள்ளார். எஞ்சிய இரண்டு கரங்களில் மூன்று படங்களுடன் கூடிய பாம்பும் மணியும் உள்ளன. மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைப் பாம்பின் மூன்று படங்கள் குறிக்கின்றன. வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி ஆடத் தொடங்கும் கோலத்தில் உள்ளார். ஆட்டத்தின் தொடக்கம் என்பதால் மேலே கட்டியுள்ள சடைகள் அவிழவில்லை. பின்னால் தாழ்ந்த சடைகள் அப்படியே உள்ளன. இடையாடையகள் பறக்கவில்லை.

இது, ‘சூடும் இளந்திங்கள் சுடர் பொன் சடை தாழ’ என்றும், ‘அரவச் சடை தாழ’ என்றும்; ‘பிறங்கு சடைதாழ’  என்றும் தேவாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த சிருஷ்டி தாண்டவம் மிகுந்த கலையழகு படைத்ததாகும். பாபநாசம் வட்டத்திலுள்ள களக்காடு விருப்பாட்சீசுவரர் கோயிலிலும் இது போன்ற அழகிய காளிகா தாண்டவரைக் காணலாம். இங்கு பெருமான் இடக்கரத்தைப் பக்கவாட்டில் நீட்டியுள்ளார்.

இடக்காலை ஊன்றி வலக்காலை எடுத்து ஆடத் தொடங்கும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இரண்டு திருவடிவங்களிலுமே காலடியில் முயலகன் அமர்ந்தவாறு காட்சி அளிக்கின்றான். இது மும்மலங்கள் உயிரைப் பற்றி அவை செயல்படாத நிலையையும் உயிர்கள் இன்ப துன்பங்களை அனுபவிக்கத் தொடங்காத ஆதிநிலையையும் குறிப்பதாக உள்ளது.

சிவபெருமான் தனது படைத்தல் தொழிலான சிருஷ்டி தாண்டவத்தை திருக்குற்றாலத்திலுள்ள சித்திர சபையில் ஆடிக் கொண்டிருப்பதாக சித்தர்கள் கூறுகின்றனர்.
காத்தல் தாண்டவம் உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் வாழ்வதற்கும், அவை தாம் செய்த செயல்களால் விளைந்த வினைப்பயனால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்து அதிலிருந்து விடுபட்டு மேன்நிலை பெறவும் சிவபெருமான் காத்தல் தொழிலை நடத்துகின்றான்.

காத்தல் தொழில் இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதலாவது நிலையை அருளிக் காத்தல் என்றும், இரண்டாவது நிலையை அழித்துக் காத்தல் என்றும் கூறுவர். இவை முறையே இன்பக் காத்தல் எனவும், துன்பக் காத்தல் எனவும் அழைக்கப்படுகின்றன. உயிர்களுக்குத் துன்பம் நேரும்போது சிவபெருமான் தானே முன்வந்து அத்துன்பத்தை நீக்கி உயிர்களுக்கு அருள்புரிகிறான். இது அருளிக் காத்தல் அல்லது இன்பக் காத்தல் எனப்படும்.

எடுத்துக்காட்டாக, தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்த போது ஆலகாலவிஷம் தோன்றியது. அதனால் எல்லா உயிர்களும் மரண பயத்தால் சோர்ந்து வருந்தின. தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானிடம் தம்மைக் காத்தருளுமாறு பணிந்து வேண்டினர். சிவபெருமான் ஆலகால விஷத்தைத் திரட்டி வரச் செய்து அமுதென உண்டு தமது கழுத்தில் (கண்டத்தில்) தேக்கினான். அதனால் நீலகண்டன் எனப் புகழ் பெற்றான். தேவர்களின் துயர் நீங்கியது.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் சிவபெருமான் சூலத்தைச் சுழற்றித் தாண்டவம் ஆடினான். அதுவே சந்தியா தாண்டவம் என்று போற்றப்படுகிறது. இவ்வாறு அவன் ஆடியது தானே உவந்து ஆடியதாகும். இதுவே பிரதோஷ தாண்டவமாகும். சிவபெருமான் அருளிக் காத்தல் தாண்டவராக எழுந்தருளியிருக்கும் தலம் மதுரையாகும். அங்குள்ள வெள்ளியம்பலத்தில் சந்தியா தாண்டவராக அவர் விளங்குகிறார்.

ஒரு சமயம் தாருகாவனத்து ரிஷிகள் சிவன் தம்மை அவமதித்ததாக நினைத்து அவரை அழிக்கப் பெரிய வேள்வியைச் செய்தனர். அதிலிருந்து பெரிய யானை தோன்றியது. அந்த யானையிடம் சிவபெருமானைக் கொன்று வரும்படி ஆணையிட்டு அனுப்பினர். தம்மை எதிர்த்து வந்த அந்த யானையின் தோலைப் பெருமான் உரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொண்டதுடன், அந்தத் தோலை இடமாகக் கொண்டு நடனமாடினான்.

பின்னர் ஒரு சமயம் தம் பக்தனான மார்க்கண்டேயனை அழிக்க வந்த யமனை உதைத்து அழித்தான். அந்த மகிழ்வால் பெருங்கூத்து ஆடினான். இப்படி ஒவ்வொரு அழித்தல் செயலுக்குப் பின்னும் ஆர்ப்பரித்து வீரட்டகாசமாக நடனம் ஆடினான். இதுவே பகைவனை அழித்துத் தமது அடியவனைக் காத்தப்பின் ஆடிய துன்பக் காத்தல் தாண்டவமாகக் கருதப்படுகிறது.

இறைவன் தாருகாவனத்து ரிஷிகள் அனுப்பிய யானையை உரித்து அழித்தபோது வைரவ வேடத்துடன் தோன்றினான் என்பர். தேவாரத்துள் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூலத்தைச் சுழற்றி, தமருகம் வெடிபட ஒலிக்க, கங்கையைத் தரித்து கோலாகல வைரவனாகி அட்டஹாசமாக சிரித்தவாறே ‘உமை அஞ்ச, யானை உரித்தான்’ என்று திருநாவுக்கரசர் கூறுகிறார்.

சம்ஹார தாண்டவம் ஆனந்த நடராஜப் பெருமானின் ஐந்தொழில் ஆடற்கோலங்களில் மூன்றாவது அழித்தல் தொழிலைப் புரியும் தாண்டவம்.  வடமொழியில் இதனை சம்ஹார தாண்டவம் என அழைக்கின்றனர். பொதுவாக சம்ஹாரம் என்றதும் ஊழிக் காலத்தில் பெருமான் உலகங்களைப் படிப்படியாக அழித்து தன்னுள் அடக்கிக் கொள்ளும் நிலையாக மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்நிலையில் ஆடும் தாண்டவம் மஹாசம்ஹார தாண்டவம் எனப்படும். இவரை ஊழிக்கூத்தன், ஊழி முதல்வர் என்று அழைப்பர். அதை அவன் இருள்மிகுந்த காட்டில் ஆடுகின்றான் என்று புராணங்கள் கூறுகின்றன. அது யுக முடிவில் நடப்பது. ஆனால், நாம் இப்போது சிந்தித்து மகிழ இருப்பது கணம் தோறும் நிகழும் நித்ய சங்கார தாண்டவம்.

உலகம் தொழிற்பட ஒவ்வொரு கணத்திலும் மாற்றம் நிகழ்கிறது. அந்த மாற்றத்தை ஓயாது நிகழ்த்துவதும் சம்ஹார தாண்டவமே. உலகில் கணம் தோறும் ஓயாது மாற்றங்களை நிகழ்த்திப் புதுமைகளைத் தோற்றுவித்து உலகை உற்சாகத்துடன் வழிநடத்தும் நடனமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அந்த மாற்றமே உலகம் தொழிற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. நிலையாகத் தோன்றும் பொருட்களில் கூட கண்ணுக்கும் எண்ணத்திற்கும் புலப்படாத வகையில் மாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நதிகள் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் தோன்றினாலும் அதில் ஓடும் தண்ணீர்த் துளிகள் புதிதாக வருபவையே.

எண்ணம், செயல், வடிவம், வனப்பு என எல்லாவற்றிலும் இந்த மாற்றம் நிகழ்கிறது. ஒன்றின் அழிவிலிருந்தே புதியது ஆக்கம் பெறுகிறது. விதைகள் காலத்தால் பயிராகி, தானியமாகி, உணவாகி, உண்ணப்பட்டு உயிர்களுக்குச் சக்தியூட்டி, மீண்டும் மண்ணை அடைகிறது. தண்ணீர் ஆறாகிக் கடலாகி மேகமாகி மழையாகி, தாவர வளர்ச்சிக்குத் துணையாகிப் பல்வேறு மாறுதலை ஓயாது பெற்றுக் கொண்டே இருக்கின்றது.

இந்த எண்ண அழிவு, செயல் அழிவு, வடிவு அழிவு முதலான அழிவுகளே, ஒரு பொருள் அடுத்த வடிவம் பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றன. இந்த அழிவுகளை நிகழ்த்தும் தாண்டவத்தையே நாம் இங்கே அறிகிறோம். இதனை முற்றழிவு என்று கூறாது, கணம் தோறும் நிகழும் மேலான அழிவு அல்லது ஆக்கலுக்கான அழிவு
என்பர். இது இன்றேல் உலகம் ஸ்தம்பித்து நின்றுவிடும் இந்த ஆக்கலுக்கான அழித்தல் தொழிலையே இங்கு காண்கிறோம்.

ஓயாது நிகழும் மாற்றத்திற்கு உரிய குறியீடாகத் தீயைக் கொள்வர். தீயின் பெயரால் பெருமான் ஆடும் மேற்கண்ட தாண்டவம் அக்னி தாண்டவம் என்பர். ஐம்பூதங்களில் ஒன்றாக விளங்கும் நெருப்பு மற்ற நான்கு பூதங்களில் மறைந்து நின்று அவற்றை ஓயாது மாற்றிக் கொண்டே இருக்கிறது. அக்னியை இலக்கியங்கள் அழித்தலுக்கும் புதுமையைப் படைத்தலுக்கும் ஆக்கல் தொழிலுக்கும் அடையாளமாகக் கூறுகின்றன.

 சிவபெருமான் அழித்தல் தொழிலை நிகழ்த்துவதனைக் குறிக்கும் வகையில் தனது இடது மேல்கையில் அக்னியை ஏந்தியுள்ளான். இதனைச் சித்தாந்த நூல்கள்,
‘சாற்றிடும் அங்கியிலே சங்காரம்’ எனக் கூறுகின்றன. இறைவன் அக்னியை ஏந்துவதன் மூலம் தாம் சம்ஹாரத் தொழில் செய்வதை நமக்குக் காட்டுகிறான்.
ஆலயங்களில் சம்ஹாரத் தாண்டவத்தைக் குறிக்கும் வகையிலான நடராஜர் திருவுருவங்களைக் காண இயலவில்லை. அதுபோல சம்ஹாரத்தைக் குறிக்கும் தலங்கள் என்று தனிக்குறிப்பும் நூல்களில் இல்லை.

எனினும் உலகம் ஓயாது தொழிற்படநடத்தும் சம்ஹார தாண்டவத்தைப் பெருமான் தீயின் வடிவமாக வீற்றிருக்கும் (அக்னீசராக எழுந்தருளியிருக்கும்)
தலங்களில் ஆடுவதாகக் கூறுகின்றனர். அவ்வகையில் ஐம்பெருஞ்சபைகளில் ஒன்றான திருநெல்வேலி தாமிரசபையில் சிவபெருமான் இந்த நடனத்தை ஆடுவதாகக் கூறப்படுகிறது.

அக்னிக்குரிய உலோகமாகத் தாமிரத்தின் பெயரால் அழைக்கப்படுதல், தாமிரபரணி ஆற்றங்கரையில் இருத்தல் முதலியவற்றால் இங்குள்ள சபையை
அக்னியோடு தொடர்பு படுத்துகின்றனர். இங்குள்ள சபாபதி அக்னி சபாபதி என்று அழைக்கப்படுகிறார். எனவே இது மூன்றாவது தொழிலான சம்ஹார தாண்டவத்தை ஆடும் சபையாகக் கொள்ளப்படுகிறது.

மேலும் வயலூர், கொழுமம் முதலிய தலங்களிலும் பெருமான் இத்தகைய நடனத்தை ஆடிக்கொண்டிருக்கிறார் என்பர். திருச்சிக்கு அருகிலுள்ள தலம் வயலூர். இத்தலத்தில் பெருமான் அக்னீஸ்வரர் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சம்ஹார தாண்டவரின் நடராஜ வடிவம் புதுமையானது. இங்கே பெருமானைச் சதுர தாண்டவர் என அழைக்கின்றனர். வலது காலின் உள்ளங்கால் தெரியும்படி சற்று மேலே வளைத்து வைத்துள்ளார்.

அவரது திருமுகம் அக்னியை நோக்கியுள்ளது. அதைப் பார்ப்பதன் மூலம் பெருமான் சம்ஹாரத்தை நடத்துவதை நமக்கு உணர்த்து கிறார் என்பர்.
கொழுமம் என்னும் தலம் பழனிக்கு அருகில் உள்ளது. கொழு என்பது உழு என்ற சொல்லில் இருந்து தோன்றியது. உழவுத் தொழிலுக்குரிய ஏரில் முனையில் அமைந்து நிலத்தைப் பிளக்கும் கூரிய கருவியே கொழு என்பதாகும். இது நிலத்தின் கடினத்தன்மையை அழித்து விளைநிலமாக்கும் கருவியாகும். இது புதுமையைப் படைத்தலின் அடையாளமாகும்.

இத்தலத்தில் சம்ஹார தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கும் பெருமான் நித்தம் நின்றாடுவார் என்னும் பெயரில் தனிச் சபையில் ஆனந்த நடராஜராக எழுந்தருளியுள்ளார். நித்தம் நின்றாடல் என்பது கணந்தோறும் புதுமையைப் படைப்பதை உணர்த்தும் சொல்லாக உள்ளது.

இங்கும் சிவலிங்கப் பெருமானை அக்னீஸ்வரராகக் காண்கிறோம்.
சம்ஹார தாண்டவத்தைக் குறிக்கும் நடராஜர் திருமேனி மதுரைக்கு அருகில் கிடைத்துள்ளது. இதில் பெருமான் கால் மாறி ஆடிய கற்பகமாக விளங்குகிறார். சிருஷ்டியைக் குறிக்கும் உடுக்கை இக்கோலத்தில் இடக்கைக்கு மாறி செயலற்று இருக்கின்றது. வலது மேல் கையில் அக்னி இடம் பெற்றுள்ளது. இதுவே சம்ஹாரத்தைக் குறிப்பதாகும் என்பர்.

சம்ஹார தாண்டவத்தைக் கண்டு தரிசிப்பதால் ஓயாது ஒரே நிலையில் உருண்டோடிக் கொண்டிருக்கும் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழும். மேன்மைகள் உண்டாகும்.
 மறைத்தல் தாண்டவம் சிவபெருமான் ஆடும் ஐந்தொழில் நடனங்களில் நான்காவது செயலான மறைத்தல் தொழிலைச் செய்யும் தாண்டவம் திரோபவ தாண்டவம் எனும் மறைத்தல் நடனமாகும்.

அனாதியான உயிர்கள் தமது உண்மைத் தன்மையான தெய்வத்தன்மையை உணர முடியாதவாறு மறைத்துக் கொண்டிருப்பவை ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றாகும். இவற்றைச் சைவ சித்தாந்திகள் மும்மலம் என்பர். இவை வலிய கோட்டை போல் ஆன்மாவைச் சுற்றியிருந்து ஆன்மாவைத் தம்முள் அமிழ்த்திக் கொண்டிருக்கின்றன. உயிரானது மும்மலக் கட்டுகளால் ஏற்படும் சுக துக்கங்களை உண்மையென்று மயங்கி அதில் திளைப்பதையே விரும்புகிறது.

அதனால் இவற்றை மூன்று கோட்டை
களாக வர்ணித்துத் திரிபுரம் என்றனர்.
திருமூலர் சிவபெருமானின் திரிபுரத
கனத்தைப் பற்றிக் கூறும் போது,
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் சென்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாறே
- என்கிறார்.

ஆன்மாவில் படிந்து கிடக்கும் மும்மலமே முப்புரங்கள். இறைவன் அன்பர்களின் இந்த மூவினைத் தொகுதிகளை அழித்து அவற்றிற்குத் தன்னை உணரும் ஞானத்தை அருள்கின்றான். தன்னை உணர்ந்த ஆன்மாவே தலைவனையும் அறிந்து வீடுபேறு பெறுகின்றது. மும்மலமாகிய முப்புரக் கோட்டையை அழித்து பெருமான் அருள்புரிந்து ஆடுகிறான். எனவே இந்த ஆட்டம் திரிபுர தாண்டவம் எனப்படுகிறது.

உயிரைப் பற்றியுள்ள மும்மலங்களை அழிப்பது எவ்வாறு? நல்வினை தீவினை என்னும் இருவினைகளுக்கேற்ப, உயிர் பிறந்து, இறந்து ஓயாது அல்லல்படுகிறது. பிறவிகள் தோறும் வினைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. உயிரானது தான் செய்த இன்ப துன்ப வினைகளை ஒரே பிறவியில் துய்த்து முடித்து விடுவதில்லை. செய்வது அனேகம். அதில் கழிவது சிறிதளவே என்று தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஊயிர்களால் அனுபவிக்கப்படாமல் இருக்கின்ற அதனுடைய கர்மா நூறு கோடி, சதகோடி கற்பகாலங்கள் ஆனாலும் அது அழிவதில்லை. மாறாகக் கூடிக் கொண்டேதான் போகிறது என்று பௌஷ்கர ஆகமம் கூறுகிறது. இங்கே மறைத்தல் என்பது உயிர்களை மீண்டும் மீண்டும் வினைப் போகங்களில் அழுத்தி அதன் மூலமாக மலபரிபாகமும் இரு வினையொப்பும் (இரண்டு வினைகளான நல்வினை, தீவினை சமநிலை எய்துதல்) ஏற்படச் செய்யும் செயலாகும். எனவே மறைத்தல் நடனம் என்பது மும்மலத்துடன் படிந்து கிடக்கிற ஆன்மாவில் நிகழ்வதாகும்.

அதாவது, உயிர்களை பற்றியுள்ள மும்மலங்களின் குறியீடான முயலகன் மீது நடப்பதாகும். இறைவனின் தூக்கிய திருவடி அருள் நிலையையும், ஊன்றிய திருவடி உயிர்களை மும்மல காரியத்தில் அழுத்துவதையும் குறிப்பதாகும். இத்திருவுருவத்தில் அழுந்திப் பதிந்துள்ள திருவடி அருள்வதையும், மென்மையாகச் சற்றுத் தூக்கிய திருவடி மும்மலங்களில் இருந்து விடுபடச் செய்வதையும் குறிக்கிறதென்று கூறுகின்றனர்.

அதனால் இந்த நடனத்தில் பெருமான் தனது இரண்டு திருவடிகளையும் முயலகன் மீதே வைத்திருப்பது போல் அமைத்துள்ளனர். திருவரங்குளத்தில் இருந்ததும் தற்போது எங்கோ தனியாரிடத்தில் இருக்கிறதென்று கூறப்படுவதுமான நடராஜர் சிற்பம் இக்கோலத்தில் அமைந்ததாகும். இதில் இடது திருவடியைத் தூக்காமல் முயலகன் மீது ஊன்றியுள்ளார். இரண்டு திருவடிகளையும் முயலகன் மீது ஊன்றுவதன் மூலம் அருள் நிலையாய் மலங்கள் ஒழிந்து முக்தி விரைந்து கைகூடும் என்பதாகும்.

பாண்டிக்கொடுமுடியிலும் இத்தகைய மறைத்தல் தாண்டவக் கோல நடராஜர் திருவுருவம் உள்ளது. இதில் முயலகன் இல்லை. மும்மலங்களும் நீங்கிய பின் (மறைத்தல் முடிந்து) ஞானம் வெளிப்பட அன்பர்களின் அகத்தாமரை  மலரில் பெருமான் ஆடுவதை இது உணர்த்துகிறதென்பர். அதையொட்டியே பீடம் தாமரை மலர் போல் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

திருவக்கரையில் உள்ள நடராஜர் திருவுருவமும் மறைத்தல் நடனம் புரிவதாகும். இந்த நடராஜர் மூர்த்தங் களை வணங்கி வந்தால் காலகதியில் மும்மலங்கள் தாமே விலகி எளிதில் மோட்சம் கிட்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

அருளல் தாண்டவம்

சிவபெருமானின் ஐந்தொழிலை விளக்கி நிற்கும் ஆடற்கோலங்களில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் ஆகிய தொழில்களைக் கண்ட நாம் இப்போது உயிர்களுக்கு அருள்புரியும் கோலமான ஆடலை (அனுகிரகத் தாண்டவத்தை) இங்கு காணலாம். இறைவன் உயிர்களைப் படைத்து, அவை நிலைபெற்று வாழ உலகங்களைப் படைத்து அவற்றில் இன்ப துன்பங்களை அனுபவித்து வாழ வகை செய்துள்ளான். அவை மகிழ்வுடன் வாழத் தனது அருளை வாரி வழங்குகின்றான். அப்படி அருள்வழங்கும் வேளையில் ஆடும் ஆட்டமே அனுகிரக தாண்டவம் எனப்படுகிறது.

திருப்புத்தூர் புராணம் அனுகிரக தாண்டவத்தைத் திருவாலங்காட்டில் ஆடியதாகக் கூறுகிறது. இந்த தாண்டவத்தைக் காளி தாண்டவம் என்றும் கூறுவர்.
திருவாலங்காடு திருவள்ளூர்-அரக்கோணம் இடையே அமைந்துள்ள திருத்தலமாகும். இங்குள்ள சபை ரத்தினசபை (மணியம்பலம்) எனப்படுகிறது. இங்கு பெருமான் காளியோடாடி அவளது அகந்தையை அழித்து அவளுக்கு அருள்புரிந்தார். இதனைத் திருமூலர் காளியோடாடி கனகாசலத்தாடி என்ற தொடரால் குறித்துள்ளார்.

சிற்பநூல் இங்கு பெருமான் ஆடிக் கொண்டிருக்கும் கோலத்தை ஊர்த்துவ தாண்டவமென்று கூறும். இலக்கியங்கள் பெருங்கூத்து என்றும், செயற்கரிய நடனம் என்றும் கூறுகின்றன. ‘ஆடினார் பெருங்கூத்து காளி காண’ என்று காளிதேவி காண இறைவன் பெருங்கூத்தாக ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார் என்று அப்பர் சுவாமிகள் குறிக்கின்றார். காரைக்காலம்மையார் இந்த நடனத்தை, ‘அண்டமுற நிமிர்ந்தாடும் ஆனந்தக் கூத்து’ என்பார்.

இறைவன் உடுக்கையை ஒலித்துப் படைப்புத் தொழிலையும் அக்கினியால் அழித்தலையும் அபய முத்திரை காட்டிக் காத்தல் தொழிலையும் புரிவது போல்
தூக்கிய திருவடியால் அருளல் தொழிலைப் புரிகின்றான். அவ்வகையில் இங்கே ஓங்கித் தூக்கிய திருவடியால் இறைவனின் அருளல் தொழில் நடைபெறுகிறது.

அப்படி திருவருள் பெற்று திருவடியில் கலந்து மேன்மை பெற்ற உயிர்களை அருள் நிலையில் மாறாது நிலை பெற்றிருக்கும்படிச் செய்து காத்தருள்வதைத் தூக்கிய திருவடியை ஒரு கரத்தால் குடைபோல் கவிழ்த்து மூடும் கோலத்தில் காட்டி உணர்த்துகின்றார் என்பர்.

அருளல் என்பது இருநிலைப்படும். இதில் முதல் நிலை, உயிர்கள் தோன்றியது முதல் அழியும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் அவற்றிற்குத் துன்பம் வராமல் பல்வேறு நிலைகளில் நின்று காத்து அருள்புரிவதாகும்.

இரண்டாவது நிலை, வினைகள் நீங்கித் திருவடி நீழலை அடைந்த உயிர்களை மீண்டும் வாரா நெறியான மோட்சத்தில் செலுத்தி மாறா இன்பம் அடையும் நிலையை அருளுவதாகும். இவ்விரு நிலைகளிலும் அருள் புரிவதைத் திருவாலங்காட்டு நடராஜர் திருவுருவம் விளக்கிக் கொண்டிருக்கிறது.

இத்திருவுருவத்தில் பெருமான் எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கிறார். படைப்புத் தொழிலைக் காட்டும் உடுக்கை ஏந்திய கரமும், அழித்தலைக் காட்டும் அக்கினி ஏந்திய கரமும் விலகியிருக்கின்றன. இது இந்த இரு தொழில்களும் முடிந்து போனதை உணர்த்துவதாகும். அருளல் தொழிலைக் குறிக்கும் வகையில் பெருமான் இடது காலை உயரத் தூக்கியிருப்பதுடன் அதன் மீது அருள்நோக்கும் புரிகிறான். இடது கரத்தைத் தூக்கி உள்ளங்கையை குவித்து தூக்கிய இடதுகாலுக்கும் மேல் குடை போல் வைத்துள்ளான்.

இந்த இரு நிலையும் இத்தாண்டவத்திற்கே உரிய சிறப்பு நிலையாகும்.வலது முன்கை அபயம் காட்டி காத்தல் தொழிலைப் புரிய, வலது திருவடி ஊன்றிய நிலையில் மறைப்புத் தொழிலைப் புரிகிறது.பெருமான் மும்மலங்களைக் குறிக்கும் பாம்பை இடது கரத்திலும் அவற்றைக் களைந்து அடக்கி வைக்கும் திரிசூலத்தை வலது கரத்திலும் தாங்குகின்றான். முன் இடது கரம் வீரகரமாக அமைய அதற்கிணையான கையில் கிளி வடிவு கொண்ட பாக்கு வெட்டியை ஏந்தியுள்ளான்.

இது மும்மலங்களில் இருந்தும் தொடர்ந்து வரும் வினைகளில் இருந்தும் உயிர்களை வெட்டிப் பிரித்து மோட்ச உலகில் நிலைபெற வைப்பதை உணர்த்துவதாகும். சுகம் என்பது கிளியையும் மகிழ்வுடன் இருப்பதையும் குறிக்கிறது. கிளி வடிவம் உயிர்கள் இன்பத்தில் திளைத்திருத்தலின் குறியீடாகும். இறைவன் உலக போகங்களில் சிக்கி அதுவே உண்மையான சுகமென்று கருதியிருக்கும் உயிர்களுக்கு அருள்புரிந்து மோட்சமாகிய மேலான சுகத்தில் நிலைபெறச் செய்கிறான்.

இரண்டு நிலையிலும் உயிர்கள் மகிழ்ச்சியைப் பெறுகின்றன என்றாலும் முன்னையது நிலையற்றது; பின்னையது நிலையானது. எனவே உலகில் வாழும் போது இன்பமும், பின்னர் மோட்சத்தில் நிலையான இன்பத்தையும் அருள்வதைக் குறிக்கவே பாச நீக்கம் செய்யும் ஆயுதத்தைக் கிளி வடிவம் கொண்டதாகத் தாங்கியுள்ளான்.

இங்கு சிவபெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஊர்த்துவ தாண்டவத்தின் சிறப்புகளை ஆதிசேஷனுக்குத் திருமால் விவரித்துக் கூறியுள்ளார். அக்கருத்தைத் தலபுராணம் ‘வீறுபாசம் மாற்றி அருள் அளித்து ஈசன் மலரடிக் கீழ் பேரின்ப வாழ்வு சேர்க்கும் அருள் திருநடம்’ என்று குறிக்கின்றது.

இது உயிர்களுக்கு மாறாத அருள்புரியும் நடனமாகும்.இது போன்று வேறு சில அருள் நடனங்களையும் அருளாளர்கள் அருட்காட்சியில் கண்டு வடித்துள்ளனர். அப்படி வடிக்கப் பட்டுள்ள மற்றோர் நடனத்தையும் அது பற்றிய கருத்துகளையும் தொடர்ந்து காணலாம்.

இறைவனின் அருளல் சக்தியே அம்பிகையாக வெளிப்பட்டுள்ளது. எனவே, இறைவன் உயிர்களுக்கு அருள வரும்போது அன்னை பராசக்தியுடன் கூடி விடை வாகனத்தில் வருகிறான். அந்தக் கோலத்திலேயே அடியவர்கள் பெருமானைக் கண்டு பேரருள் பெற்றுள்ளனர். அதையொட்டி அனுகிரக தாண்டவத்தில் நந்தியும்,பராசக்தியும் இடம் பெறுகின்றனர்.

இறைவன் அம்பிகையைத் தன்னுள் இணைத்து அருளல் தாண்டவத்தை நிகழ்த்துகிறான். எனவே இடக்கையை வீசாமல் அம்பிகை வழக்கமாக வைத்திருப்பது போல் தொங்கவிட்டவாறு வைத்துள்ளார். வலக்கை அபய முத்திரையைக் காட்டுகிறது. மேற்கரங்களில் உடுக்கையும், தீ அகலும் உள்ளன. மெதுவாக ஆடும் நடனமாதலின் சடை அவிழவில்லை. ஆட்டத்தில் வேகமும் இல்லை.

இத்தகைய அற்புத நடன கோலத்தைக் காண நாம் ஆரணியை அடுத்த காமக்கூர் செல்லவேண்டும். காமக்கூர் சந்திரசேகரர் ஆலயத்தில் இந்த நடராஜரைக் காண்
கிறோம். இங்குள்ள சபையில் பெருமான் அருளல் தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கிறான். இந்தத் தாண்டவத்தைக் காண்பதால் வாழும் காலத்தில் மகிழ்ச்சியைப் பெறுவதுடன் மோட்சமடைந்து மாறாத இன்பத்தில் திளைக்கலாம்.