ஏர் உழுது ஏற்றமளித்த ஈஸ்வரன்



தீர்த்தனகிரி

உலகில் எங்கும் காணாத அதிசயக் கோயில் ஒன்று உண்டெனில் அது திருத்தினை நகரில் உள்ள சிவக்கொழுந்தீசர் ஆலயமே எனலாம்.ஆம். கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் இக்கலியுகத்திலும் 4 கோபுரங்கள், மூன்று பெரும் பிராகாரங்களைக் கொண்டு சுமார் 5 குரோச (12.25 மைல்) சுற்றளவு கொண்ட மிக பிரமாண்டமான கோயிலாக இச்சிவக்கொழுந்தீசர் ஆலயம் இருந்துள்ளது. கலியுகத்தின் தொடக்கத்தில் துலுக்கர்கள் (துருக்கியில் இருந்து வந்தவர்கள்) மற்றும் வேடுவர்களால் இக்கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

இத்தலமானது கிரேதாயுகம் மற்றும் திரேதாயுகத்தில் ஓங்காரபுரமென்றும், துவாபரயுகத்தில் தேசப்பிரதம் என்றும், கலியுகத்தில் ஞானப்பிரதம் என்றும் அழைக்கப்பட்டு பின்னர் திருத்தினைநகர் என்றும் போற்றப்பெற்று தற்போது தீர்த்தனகிரி என்று வழங்கப்படுகிறது.காசி முதல் கன்னியாகுமரி வரையுள்ள லிங்கங்கள் எல்லாம் உற்பத்தியாகக் காரணமாக விளங்கியது இந்த தலத்தின் லிங்கமே ஆகும். கயிலையில் ஈசன் அம்பிகைக்கு க்ஷேத்திர புராணங்களைச் சொல்லும் போது அதை செவிகொடுத்து கேட்ட கந்தன், அகஸ்தியருக்கு உபதேசித்தார்.

அகத்தியர் விவரித்த க்ஷேத்திர புராணங்களில் இத்தல வரலாறு ‘‘சிவ ரகசியம்’’ என்னும் நூலில் அடங்கியுள்ளது. திருச்செந்தூர் குமாரமலை மருந்தரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் இப்போது சென்னை கன்னிமாரா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தல ஈசனை வணங்கி, திருமால் முராசுரனை வதைத்து, ‘முராரி’ எனப் பட்டம் பெற்றார்.

துர்வாசரால் சாபம் பெற்ற பிருங்கி மகரிஷி இங்கு சிவனை வழிபட்டு, சாபநிவர்த்தி அடைந்துள்ளார். கருடன் இவரை பூஜித்து, பலம்பெற்று, தன் தாயின் அடிமைத்தளையை தகர்த்தான். ராமருக்கு ராவணனை வெல்ல உதவியாக இருந்து, அவரது பட்டாபிஷேகத்தைக் கண்ட ஜாம்பவான் இப்பதி லிங்கத்தை வெகு காலம் பூஜித்து, பூரண ஆயுளும், ஞானமும் பெற்று, துவாபரயுகத்திலும் தனது வாழ்வினைத் தொடர்ந்தார்.

உமையன்னையும் இங்கே பெருமானை வணங்கி வரங்கள் பல பெற்றுள்ளாள். இத்தலத்தின் ஐந்து குசோச எல்லையின் ஈசான மூலையில் (ஆலப்பாக்கம்) நந்திதேவர் தன் பெயரால் லிங்கம் அமைத்து, அனைவருக்கும் அருள்பாலிக்க வரம் பெற்றார். அதோடு இறைவன் தன் கலைகளில் ஒன்றை இப்பதி லிங்கத்தில் இருத்தி அருள்புரிந்தார். அம்மையையும் கருந்தடங்கண்ணியாக அருள்பாலிக்கச் செய்தார்.

பதஞ்சலி-வியாக்ரபாதரின் கோரிக்கைக்கு செவிமடுத்த ஈசன் இங்கே நடனமாடி காட்சி தந்து, பின்னர் தில்லையில் திருநடனமாடிக் காட்டினார். அகத்தியருக்கு திருமணக் காட்சியையும் இத்தலத்தில் மகாதேவர் காட்டியருளினார். முன்னொரு காலத்தில் பெரும் வனமாகத் திகழ்ந்த இத்தலத்தில் பெரியான் என்னும் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவபக்தனான அவன் தினமும் ஒரு அடியாருக்காவது உணவளித்துவிட்டுத்தான் உண்ணுவான்.

 அந்த விவசாயியின் வயலுக்கு நடுவே ஒரு கொன்றை மரம் இருந்தது. அதனடியில் ஒரு சுயம்புலிங்கம் இருந்ததனால் அவரை வழிபட்டு, அடியார் ஒருவருக்கு தினமும் அமுதளிப்பது அவனது வழக்கமாக இருந்தது! இந்நிலையில்தான் அவனோடு திருவிளையாடல் புரிய, திருவுளம் கொண்டார் ஈசன். முதிய சந்நியாசி வேடம் பூண்டு, பெரியானிடம் வந்து பசிக்கு உணவு தருமாறு கேட்டார் பரமேஸ்வரன்.

ஆனால், அன்றைய தினம் பெரியான் ஓர் அடியாருக்கு உணவளித்துவிட்டு, தானும் உணவு உண்டுவிட்டு ஏர் உழுது கொண்டிருந்தான். எனினும், தேடிவந்து உணவு கேட்கும் அடியாரிடத்தில் ‘உணவு இல்லை’ என்று சொல்ல மனம் வரவில்லை. எனவே பெரியான், அந்த அடியாரைக் கொன்றை மர நிழலில் அமரச் சொல்லி, வீட்டிற்குப் போய் உணவு கொண்டு வருவதாகக் கிளம்பினான். சிவ சந்நியாசியோ பெரியானிடம், ‘‘நீர் வீட்டிற்குச் சென்று வரும் வரை நான் ஏர் உழுகின்றேன்’’ எனக்கூறி ஏர் உழுகலானார்.

வீடு சென்ற பெரியான், மனைவியிடம் உணவு தயார் செய்யும்படி கூறினான். வீட்டில் எவ்வித பண்டமும் இல்லாது போகவே பெரியானின் மனைவி அருகிலிருந்த வீடுகளில் அரிசி கேட்டு யாசித்தாள். அதுவும் கிடைக்காமல் போகவே வீட்டில் இருந்த நொய்யை கஞ்சியாக்கி பெரியானும், அவனது மனைவியும் அடியாருக்காக எடுத்துச் சென்றனர்.

வந்து பார்த்தால், பெரியானுக்கு பெரும் வியப்பு காத்திருந்தது. ஆம்! நிலத்தில் தினைப்பயிர்கள் யாவும் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருந்தது. ஆனால், உணவு கேட்டு வந்த அடியாரைக் காணவில்லை. வந்தது யாரென்று உணர்ந்தான் பெரியான்.படியளக்கும் பரம்பொருளுக்கு உணவிட முடியாமற்போனதை எண்ணி வருந்திய அவனும், அவனது மனைவியும் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்தனர்.

ஏர்க் கலப்பையினால் கழுத்தை வெட்டிக்கொள்ள முற்பட்ட பெரியானின் கரங்களைப் பற்றிய சர்வேஸ்வரன், அவர்கள் கொண்டு வந்த நொய்க் கஞ்சியைக் குடித்து பெரியானுக்கும், அவனது மனைவிக்கும் மோட்சமளித்தார். இச்சம்பவத்திற்குப் பின்னரே இத்திருத்தலம் தினைநகர் என்றாயிற்று.

ஒரு சமயம் வங்கதேசத்தை ஆண்ட வீரசேனன் என்கிற மன்னன் வேட்டையாட இப்பகுதிக்கு வந்தபோது, இவ்வாலய தீர்த்தத்தில் தோல்நோய் பீடித்திருந்த நாய் ஒன்று இறங்கி நீராடி, நோய் நீங்கி, நல்ல நிலையுடன் திரும்பியதைக் கண்டான். அக்குளத்தின் மகத்துவத்தை அறிந்த மன்னன் காவலாளிகளைக் கொண்டு குளத்தைத் தூரெடுத்தான். அப்போது பஞ்சலோகத்தினாலான நடராஜர், சிவகாமியம்மை சிலைகள் கிடைத்தன.

அப்போது, ‘‘வீரசேனனே! நான் சுயம்பு லிங்கமாய் இங்கு தோன்றி வெகுகாலம் ஆகிவிட்டது. எனவே எனக்கு இங்கு ஒரு ஆலயம் எழுப்புவாய்’’ என்று அசரீரி வாக்கு ஒலித்தது. அதன்படி உருவானதே இந்த ஆலயம். அம்பிகை நெற்றிக்கண்ணுடன் திகழ்வதும், நடராஜப்பெருமான் காலடியின் வலதுபுறம் பிரம்மா பஞ்சமுக வாத்தியம் இசைக்க,

 இடப்புறம் திருமால் சங்கு முழங்குவதுமான அரியதொரு சிலாரூபம் அமைந்திருப்பதும், வேறெந்த தலத்திலும் காணக்கிடைக்காதது. இரு கால்களையும் மடக்கி, யோகாசன வடிவில் தட்சிணா மூர்த்தி வீற்றிருப்பதும் அவர் கீழே சனகாதி முனிவர்களோடு காகபுஜண்ட மகரிஷியும் வீற்றிருப்பது இத்தலத்தின் மற்ற பிற சிறப்புகளாகும்.

நடுநாட்டின் தேவாரதலங்கள் 22ல் 5வது தலமாக விளங்கும் இப்பதி மீது சுந்தரர் ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் கூட இத்தலத்தின் மீது பதிகங்கள் பாடியுள்ளதாக சேக்கிழார் திருவாய் மொழிகின்றார். ராமலிங்கரும் இப்பெருமானைப் போற்றிப் பாடியிருக்கிறார்.

தினையையே நைவேத்தியமாக ஏற்ற இத்தல மூல லிங்கத்தின் மீது பங்குனி மாதம் 26, 27, 28 தேதிகளில் சூரியனின் கதிர்கள் படர்வதும் அதிசயங்களுள் ஒன்றே! தெற்கே கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றாள் அன்னை கருந்தடங்கண்ணி. நின்ற வண்ணம் எழில்நகை சிந்தும் இந்த அம்பிகைக்கு நீலாயதாட்சி, பிரணவபுரீஸ்வரி, ஒப்பிலாநாயகி போன்ற திருப்பெயர்களும் உண்டு. ஒரே சுற்றுடைய இச்சந்நதி ராஜகோபுரத்திற்கு வெளியே இருப்பது வித்தியாசம். பின் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் கடந்து சென்றால் மூன்று நிலைகள் கொண்ட அழகிய கட்டமைப்பு கொண்ட அகன்ற ராஜகோபுரம் எழில் கொஞ்சுகிறது.

உள்ளே நேராக பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார்.அவர் முன்னே 35 துவாரங்கள் கொண்ட சாளரம் பார்க்க வசீகரிக்கிறது. மூடுதளத்துடன் கூடிய மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என ஈசன் சந்நதி அமைந்துள்ளது.  தென்திசை நோக்கியுள்ள நடராஜப்பெருமான் அன்னை சிவகாமியோடு அற்புதமாய் தரிசனம் தந்தருள்கின்றார். கருவறையில் நான்கு யுகங்களாக வீற்றிருந்து அருள்புரியும் சிவக்கொழுந்தீஸ்வரப் பெருமானைப் போற்றி வணங்குகின்றோம்.

 இப்பெருமான் சிவாங்குரேஸ்வரர், நந்தீஸ்வரர், பிரணவபுரீஸ்வரர் போன்ற திருநாமங்களாலும் போற்றப்படுகின்றார். இவரது மகிமைகளும், இவர் புரிந்த அற்புதங்களும் எண்ணிலடங்காதவை. கருவறை சுவரின் இரு பக்கங்களிலும் சங்கநிதி மற்றும் பத்மநிதி தேவதைகள் அழகிய புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

வலம் வருகையில் தென் கோஷ்டத்தில் யோகாசனமிட்டு அமர்ந்திருக்கும் அதி அபூர்வ தட்சிணாமூர்த்தியைக் கண்டு பேரானந்தம் அடைகிறோம். நம் இன்னல்களைக் கேட்டு, அவற்றைக் களைந்து நமக்கு இளைப்பாறுதலை தருவதில் இவருக்கு நிகர் இவரே. அர்த்த மண்டப வெளிப்புறச் சுவரில் நர்த்தன கணபதியருகே தல வரலாற்றினை சிறுசிறு புடைப்புச் சிற்பங்களாக அழகுற வடித்துள்ளனர்.

நிருதி மூலையில் தல கணபதியும், அடுத்ததாக கந்தனும், பின் கஜலக்ஷ்மியும் தனித்தனியே திருச்சந்நதி கொண்டு திருவருள் புரிகின்றனர். துர்க்கை அஷ்டபுஜதுர்க்கையாக நின்ற வண்ணம் பேரருள் புரிகின்றாள். அகத்தியர் நிறுவிய லிங்கம் ஒன்றும் இங்கே காணப்படுகிறது. ஏனைய கோஷ்டங்கள் ஆலயத்தை அலங்கரிக்க, மன அமைதியோடு ஆனந்த பரவசமும் இங்கே கிடைக்குமென்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆலயத்தின் இடப்புறம் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்டதால் இது ஜாம்பவான் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இதோடு அம்பிகை உண்டாக்கிய கௌரி தீர்த்தம், கருடன் ஏற்படுத்திய பெருமாள் ஏரி, தேவ தீர்த்தமென்னும் கடல் போன்றவையும் இத்தல தீர்த்தங்களாகும். தினசரி ஒரு பூ பூக்கும், காய் காய்க்கும் சரக்கொன்றை மரம் இத்தலத்தின் விருட்சமாகத் திகழ்கின்றதுஇதுவரை இங்கு ஒன்பது கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வெட்டில் இவ்வூர் ‘விருதராச பயங்கர வளநாட்டு, மேற்காநாட்டு ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதிமங்கலத்து திருத்தினைநகர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியாக 1949 மற்றும் 1998ம் ஆண்டுகளில் இவ்வாலய குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 6 முதல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8:30 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். வைகாசி விசாகத்தில் தேர்த்திருவிழாவும், அனுஷ நட்சத்திர நாளில் ஜாம்பவான் தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், மாசி மகத்தில் தேவ தீர்த்தம் என்னும் கடலில் தீர்த்தவாரியும் சிறப்புற நடைபெறுகின்றன. தீராத வினைகளையும், நோய்களையும் தீர்த்தருளும் திருத்தினைநகர் சிவக்கொழுந்தீசரை வணங்கி, வழிபட்டு இகபர சௌபாக்கியங்கள் பெறுவோம்.

கடலூர்-சிதம்பரம் பேருந்து சாலையில், ஆலப்பாக்கம்-புதுச்சத்திரம் இடையே உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து இங்கு வர பேருந்து வசதி உள்ளது. ஆலயத் தொடர்புக்கு 9786467593.

- எம்.கணேஷ்