எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்?



போன இதழில் சில கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களைச் சொன்னேன். அதைப் படித்துவிட்டு அந்தப் பிரசாதங்களை உட்கொண்டவர்கள் தங்களுடைய மலரும் நினைவுகளில் திளைத்ததாகத் தெரிவித்தார்கள்.

அப்படி அந்த பிரசாதங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் அந்தந்த கோயில்களுக்குப் போய், பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார்கள். அப்படி அந்தக் கோயில்களுக்குப் போகிறவர்கள் அந்தப் பிரசாதங்களை விட அந்தந்த கடவுளர்களின் அருள் வரத்தால் ஆனந்தமடைவார்கள் என்பது பேருண்மை. சரி, இப்போது வேறு சில கோயில் பிரசாதங்களைப் பார்க்கலாம்:

 மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும், இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகின்றன.
 கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் இரவு அர்த்தஜாம பூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.
 நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.
 கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக் காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக சமர்ப்பிக்கப்படுகிறது.
 திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.
 கேரளம், இரிஞ்சாலகுடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பை வைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் சா(கா)ட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

(இன்னும் சில ேகாயில் பிரசாதங்கள் அடுத்த இதழில்)

பாதாம் பால் ஸ்வீட்

என்னென்ன தேவை?
முழு பாதாம் -  10 - 15 சிறிது அலங்கரிக்க, பால் - 1 லிட்டர், சர்க்கரை - 2 கப், பாதாம் எசென்ஸ் - சிறிது, நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் பாதாம் பருப்பை வறுத்து ஆற விடவும். பின் தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிது பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். இந்த கலவை இறுகி கெட்டியாக வரும் போது அடுப்பை அணைத்து விடவும். கீழே இறக்கி பாதாம் தூள், நெய், எசென்ஸ் சேர்த்து 2 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டாம். கீழே இறக்கியபின்
இந்த கலவை கெட்டியாக வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் மெல்லிய வில்லைகள் போடவும்.
குறிப்பு: பாதாம் அதிகம் இருந்தால் வில்லைகள் மேல் வைத்து அலங்கரிக்கலாம் கலவை சூடாக இருக்கும் போது அதில் பாதாமை அழுத்தலாம். இந்த ஸ்வீட்டை முந்திரிப் பருப்பு கொண்டும் செய்யலாம்.

வெள்ளரி விதை கீர்

என்னென்ன தேவை?
வெள்ளரி விதை - ½ கப், கசகசா - ¼ கப், பூவன் பழம் - 1, தேன் - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப, பால் - 1 கப், கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது ஓட்ஸ் - ஒரு கைப்பிடி, சர்க்கரை - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
(வெள்ளரி விதை பெரிய கடைகளில் கிடைக்கிறது) வெள்ளரி விதையையும், கசகசாவையும் அரைத்து வைக்கவும். சிறிது வெள்ளரி விதையை கொஞ்சம் பாலில் ஊற வைத்து மீதி பாலைக் காய்ச்சி அரைத்த விழுதை அதில் சேர்த்து சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அதன் ேமல் ஓட்ஸ் அல்லது கார்ன்ஃப்ளேக்ஸ்ஸை போட்டு இறக்கி ஆறியதும் குளிர செய்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும். பரிமாறும் முன் தேன், பொடித்த வாழைப்பழம் சேர்த்து பரிமாறவும்.
கடவுளுக்கு படைப்பதாக இருந்தால், ஓட்ஸ்க்கு பதில் சிறிது அவல் சேர்க்கலாம். தேன், பால், அவல் இருப்பதால் கடவுளையும் குளிர வைக்கலாம்.
குறிப்பு: கண்ணுக்கு கீழிருக்கும் கருவளையம் நீக்கும் இந்த வெள்ளரி விதை கீர்.

பூசணி தயிர் பச்சடி

என்னென்ன தேவை?
வெள்ளை பூசணிக்கீற்று - 2, தயிர் - 2 கப், கேரட் துருவல், வெள்ளரித் துருவல் - தலா 1 கப், மல்லி பொடித்தது - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பூசணி, கேரட், வெள்ளரி யாவற்றையும் துருவிக் கொள்ளவும். தயிருடன் துருவியவற்றை சேர்த்து உப்பு, பொடித்த மல்லி சேர்த்து கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் பொடித்த பச்சை மிளகாய் சேர்க்கலாம். கோடைக்கேற்ற குளிர்ச்சியான பச்சடி, பருத்த உடலை குறைக்கும்.

இளநீர் பாயசம்

என்னென்ன தேவை?
இளநீர் ஒன்று அதன் வழுக்கை பொடித்தது - ¼ கப், தேங்காய் பால் - ½ கப் அல்லது மில்க்மெய்டு - ¼ கப்.
எப்படிச் செய்வது?
மேற்கண்ட எல்லாவற்றையும் நன்றாக கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பாயசமாக பரிமாறவும். பால் சேர்ப்பதாக இருந்தால் சிறிது சர்க்கரை சேர்த்து குளிர வைத்து பரிமாறவும். இது
சம்மர் ஸ்பெஷல் பிரசாதம். அதுதான் நம்ம ஊர்ல வருஷம் பூராவும் சம்மராகவே
இருக்கே!
குறிப்பு: இது வயிற்றுப்புண்ணை ஆற்றும். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற பானம்.

தொகுப்பு: ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்