நாதன் அருளிருக்க, நாளும் கோளும் என் செய்யும்?



பக்தித் தமிழ் 50

திருஞானசம்பந்தருக்கு ஒரு ரகசிய விண்ணப்பம் வந்திருந்தது. மதுரையில் பாண்டியன் ஆட்சியில் இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகியிருந்தது. அவர்களுடைய சில செயல்களைத் தாங்க இயலாமல் மன்னனின் மனைவியே திருஞானசம்பந்தருக்கு எழுதியிருந்தார்:

 ‘அரசரை மீண்டும் சைவநெறியின்பால் திருப்பவேண்டும். அதற்குத் தாங்கள் இங்கே எழுந்தருளவேண்டுகிறேன்.’திருஞானசம்பந்தர் உடனே புறப்படத் தயாராகிவிட்டார். ஆனால், அவரோடு இருந்த அப்பர் தடுத்தார். ‘அங்கே சென்றால் உங்களுக்கு ஏதேனும் ஊறு விளையுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது.’

‘இறைவன் துணையிருக்கும்போது யார்தான் என்ன செய்ய இயலும்?’ என்றார் திருஞானசம்பந்தர். ‘இதற்கு அஞ்சிப் பயணத்தை நிறுத்துவதா?’அப்பர் யோசித்தார். ‘நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள், குறைந்தபட்சம் இன்றைக்குப் புறப்படாமல் இன்னொருநாள் கிளம்பலாமே’ என்றார்.
‘ஏன்? இன்றைக்கு என்ன பிரச்னை?’

‘நாள் சரியில்லை’ என்றார் அப்பர். ‘பொறுத்திருந்து பின்னர் செல்லலாமே!’
திருஞானசம்பந்தர் சிரித்தார். ‘அப்பரே, தாங்கள் அறியாததா? எம்பெருமான்
துணையிருக்கும்போது எல்லா நாளும் நல்ல நாள்தானே? அனைத்துக் கிரகங்களும்
அடியவர்களுக்கு நல்லதை மட்டும்தானே செய்யும்? தீமைகள் எதிரே நிற்க இயலாமல் ஓடிவிடுமே!’ என்றார்.

அப்போது திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள்தான் ‘கோளறு திருப்பதிகம்’. இறைவன் இதயத்தினுள் இருக்கும்போது, அடியவர்களை எந்தத் துயரமும் நெருங்காது என்பதை உறுதியாகச் சொல்லும் இந்தப் பாடல்களைப் படிப்பவர்களுக்கு எல்லா மனத்துயரும் விலகி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

வேயுறு தோளிபங்கன், விடம்உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசுஅறு திங்கள், கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும்உடனே
ஆசுஅறு நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மூங்கில் போன்ற தோள்களை உடைய எங்கள் அன்னையை உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவன், நஞ்சுண்ட கழுத்தன், இனிதாக வீணை இசைக்கிறவன், குற்றமில்லாத நிலாவையும் கங்கையாற்றையும் முடிமேல் அணிந்தவன் என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,
வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற பாம்புகள் ஆகிய ஒன்பது கோள்களும் என்போன்ற அடியவர்களுக்குக் குற்றமில்லாதபடி நல்லவையாகத் திகழும்; நல்லதையே செய்யும்!

கோள்களைப்போலவே, நட்சத்திரங்களும் அடியவர்களுக்கு நல்லதையே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர். அதுவே இரண்டாவது பாடல்:
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்புஇலங்க எருது  ஏறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை, புனல் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

எலும்பு, கொம்பு, ஆமை ஆகியவை மார்பில் திகழ, எருதின்மீது ஏறி, அன்னையுடன் வருகை தரும் எம்பெருமான், தலையில் பொன்னாலான குளிர்ச்சியான மாலையையும் கங்கை ஆற்றையும் சூடியவன் என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், ஒன்பது, ஒன்று, ஏழு, பதினெட்டு, அதிலிருந்து ஆறு என எண்ணிக்
குறிப்பிடப்படுகிற பூரம், கிருத்திகை, ஆயில்யம், பூராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் அனைத்தும் அடியவர்களுக்குக் குற்ற
மில்லாதபடி நல்லவையாகத் திகழும்; நல்லதையே செய்யும்!

எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கும்போது திருஞானசம்பந்தர் இவற்றைக் குறிப்பிடக் காரணம், பொதுவாக சில நட்சத்திர நாட்களில் பயணம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதால்தான். இறைவன் துணையிருந்தால் எந்த நட்சத்திரமும் நல்லதையே செய்யும் என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.
இறைவன் நமக்குள் உள்ளபோது, மற்ற தெய்வங்களும் நமக்குத் துணை நிற்பார்கள். இதனை மூன்றாவது பாடல் குறிப்பிடுகிறது:

உருவளர் பவள மேனி ஒளிநீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகுஅலர் கொன்றை, திங்கள் முடிமேல் அணிந்து என் உளமேபுகுந்தஅதனால்
திருமகள், கலையது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

அழகிய பவள மேனியின்மீது ஒளிவீசுகின்ற திருநீறணிந்து, உமையன்னையோடு வெள்ளை எருதின்மீது ஏறி வரும் சிவபெருமான், முடியில் தேன் நிறைந்த கொன்றை மலரையும், நிலாவையும் அணிந்தவன், என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், திருமகள், கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்,
வெற்றிக்கு அதிபதியான மலைமகள், நிலமகள், மற்ற திசை தெய்வங்கள் எல்லாரும் அடியவர்களுக்குக் குற்றமில்லாதபடி நல்லவற்றையே
செய்வார்கள்!

அடுத்த பாடலில், நோய்களைக் குறிப்பிட்டு அவையெல்லாம்
அடியவர்களைத் துன்புறுத்தாது என்கிறார் திருஞானசம்பந்தர்:
மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்தஅதனால்
கொதியுறு காலன், அங்கி, நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்
அதிகுண நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

பிறைநிலவு போன்ற நெற்றியைக் கொண்ட உமையன்னையோடு வடக்குத் திசையிலிருந்து மறையோதுகின்ற எங்கள் பரமன், முடிமேல்
கங்கையையும் கொன்றை மாலையையும் அணிந்தவன் என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், உடம்பில் கொதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் அண்டாது மற்றும் எமனின் தூதுவர்கள் எல்லாரும் நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள், அடியவர்களுக்குக் குற்றமில்லாதபடி நல்ல
வற்றையே செய்வார்கள்!

நோய்களைப்போலவே மக்கள் அஞ்சி நடுங்கும் வேறு சில விஷயங்கள், இடி, மின்னல், அசுரர்கள் போன்றவை. திருஞானசம்பந்தர்
அவற்றையும் நல்லவை என்கிறார்:

நஞ்சுஅணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும் விடையேறும் நங்கள் பரமன்,
துஞ்சுஇருள் வன்னி, கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்தஅதனால்
வெஞ்சின அவுணரோடு உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும், நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

எங்கள் தந்தை, கழுத்தில் நஞ்சை அணிந்தவன், அன்னையோடு விடைவாகனத்தில் வரும் நம் பரமன்,
இருளைத் தோற்கடிக்கும் வன்னி, கொன்றை மலர்களை முடிமேல் அணிந்தவன் என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், சினம் கொண்ட அசுரர்கள், இடி, மின்னல், ஐம்பூதங்கள் போன்றவையெல்லாம் அவனை எண்ணி அஞ்சும், அடியவர்களுக்குக் குற்றமில்லாதபடி நல்லவற்றையே
செய்யும்!

அடுத்த பாடலில், கொடிய மிருகங்களைச் சொல்லி, ‘அவை எல்லாம் நல்லதே செய்யும்’ என்கிறார் திருஞானசம்பந்தர்:
வாள்வரி அதளதுஆடை வரிகோவணத்தர் மடவாள்தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி, கொன்றை, நதி சூடி வந்து என் உளமே புகுந்தஅதனால்
கோள்அரி உழுவையோடு கொலை யானை, கேழல், கொடுநாகமோடு கரடி,
ஆள்அரி நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

வாள்போன்ற கூர்மையான வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன ஆடையை அணிந்தவர்,
அன்னையோடு எழுந்தருளுகிறவர், புதிய வன்னி, கொன்றை மலர்களையும் கங்கையையும் முடிமேல் சூடியவர்
என் உள்ளத்தில் புகுந்திருக்கிறார். அதனால், கொடிய புலி, யானை, காட்டுப்பன்றி, நாகம், கரடி,
சிங்கம் என எல்லாமே அடியவர்களுக்குக் குற்றமில்லாதபடி நல்லவற்றையே செய்யும்!

வாதம், பித்தம் போன்ற நோய்களும் அடியவர்களைத் துன்புறுத்தாது என்று திருஞானசம்பந்தர் தனது அடுத்த
பாடலில் குறிப்பிடுகிறார்:

செப்புஇளமுலை நன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வன் அடைவார்
ஒப்புஇளமதியும் அப்பும் முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்தஅதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல,அடியார் அவர்க்கு மிகவே.

அழகிய, இளம் தனங்களைக் கொண்ட நன்மங்கையான அன்னையைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டு விடைவாகனத்தில் ஏறும் செல்வன், இளைய நிலாவையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவன் என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், வெப்பமான காய்ச்சல், குளிர்க் காய்ச்சல், வாதம், பித்தம் தொடர்பான நோய்கள் போன்றவை துன்புறுத்தாது, அவைஎல்லாம் அடியவர்களுக்கு நல்லவற்றையே செய்யும்!

இறைவனைத் துணையாகக் கொண்ட அடியவர்களை அரக்கர்களால் எதுவும் செய்ய இயலாது என அடுத்த பாடல்
வலியுறுத்துகிறது:

வேள் பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள்தனோடும் உடனாய்
வாள்மதி, வன்னி, கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்தஅதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்தனோடும் இடரான வந்து நலியா,
ஆழ்கடல் நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தவன்,
விடைவாகனத்தில் அன்னையுடன் தோன்றுகிறவன், ஒளி நிறைந்த
நிலா, வன்னி, கொன்றை மலர்களை முடியில் சூடியவன் என் உள்ளத்தில்
புகுந்திருக்கிறான். அதனால், ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்குத் தலைவனாகிய ராவணன் போன்ற எந்த அரக்கனாலும் இடர் இல்லை. ஆழ்கடல்களும் அடியவர்களுக்கு நல்லவற்றையே செய்யும்!

சிவபெருமானை வணங்குகிறவர்களுக்கு திருமால், பிரம்மன் தொடங்கி எல்லாரும் நலம் அருள்வார்கள் என்கிறது

அடுத்த பாடல்:

பலபல வேடமாகும் பரன், நாரிபாகன், பசுஏறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் உளமே புகுந்தஅதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு     தேவர் வருகாலமான பலவும்
அலைகடல், மேரு நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

அடியவர்களைக் காக்க பல வடிவங்களில் தோன்றிய பரன், உமையன்னையை உடலின் ஒரு பாகமாகக் கொண்டவன், பசுவேறும் எங்கள் பரமன், கங்கையையும் எருக்கம்பூக்களையும் முடிமேல் அணிந்தவன் என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான். அதனால், மலர்மேல் தவம் செய்கிற பிரம்மனும் திருமாலும் வேதங்களும் தேவர்கள் எல்லாரும் யமனும் அலைகடலும் மேருவும் அடியவர்களுக்கு நல்லவற்றையே செய்வார்கள்! இத்தனை பேரும் நல்லவற்றைச் செய்யும்போது, பிற மதத்தவர்களுடைய வாதங்கள் அடியவர்களை என்ன செய்யும்? இதனை அடுத்த பாடலில் குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர்:

கொத்துஅலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து
என் உளமே புகுந்தஅதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும்
அண்ணல் திருநீறு செம்மை திடமே,
அத்தகு நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல,

அடியார் அவர்க்கு மிகவே.
கொத்தாக மணக்கும் மலர்களைக்
கூந்தலில் சூடிய அன்னையோடு
தோன்றும் சிவபெருமான், அர்ஜுனனுக்கு
அருள் செய்வதற்காக வேடன் வடிவில் வந்தவன்,
கங்கையையும் நிலாவையும்
பாம்பையும் முடிமேல் அணிந்தவன்
என் உள்ளத்தில் புகுந்திருக்கிறான்.

அதனால், புத்த மதத்தவர்களையும்,
சமண மதத்தவர்களையும் வாதத்தில் அவனே வெல்வான், அவனுடைய
திருநீறு செம்மையானது, திடமானது,
அடியவர்களுக்கு நல்லவற்றையே செய்வது!

நிறைவாக, இதுவரை சொன்ன அனைத்தும் உறுதியானவை எனக் குறிப்பிட்டு, இறைவனைப் போற்றி வணங்குகிறார்
திருஞானசம்பந்தர்:

தேன்அமர் பொழில்கொள் ஆலை விளை
செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான
ஞான முனிவன்தானுறு கோளும் நாளும் அடியாரை
வந்து நலியாதவண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள்
வானில் அரசாள்வர், ஆணை நமதே!
தேன் நிறைந்த மலர்கள் நிரம்பிய

சோலைகள், கரும்பாலைகள், செந்நெல் வயல்களால் எங்கும் செம்பொன்போல் வளம் நிறைந்திருக்கும் ஊர் சீர்காழி, அங்கே நான்முகனான பிரம்மன் தொடங்கி அனைத்து தேவர்களும் வந்து சிவபெருமானை வணங்குவார்கள், அவ்வூரில் வாழும் ஞான முனிவன், கோள்களும் நாளும் அடியவர்களைத் துன்புறுத்தாதவண்ணம் சொன்ன சொல் மாலையாகிய இதனை ஓதும் அடியவர்கள் வானுலகச் சிறப்பை அடைவார்கள், இது உறுதி!

ஓவியங்கள்: வேதகணபதி

(தொடரும்)

என்.சொக்கன்