தேனான வாழ்வருளும் தேசநாதீஸ்வரர்



ஒகேனக்கல்

புனித நதியாம் காவிரியின் பிறந்த வீடு கர்நாடகம். புகுந்த வீடு தமிழ்நாடு. அமைதியான நதியாக பாய்ந்து வரும் காவிரி புதுமணப்பெண் போல் உற்சாகமாக புகை கிளப்பி, அருவியாக ஆர்ப்பரித்து தமிழகத்தினுள் நுழையும் இடம் ஒகேனக்கல்.‘தேசனே! தேனார் அமுதே சிவபுரனே!’ என நாம் வணங்கித் தொழும் சிவபெருமான் நடந்தாய் வாழி காவேரி!

 என நானிலம் போற்றும் காவிரியம்மன் சமேத தேசநாதீஸ்வரராக ஒகேனக்கலில் திருவருட்பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்ட சிவலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்த விநாயகர், இத்தலத்தில் ராஜகணபதி என்ற பெயருடன் அருள்புரிகிறார். மேலும் இங்கு ஆறுமுகன், பாலமுருகன் என இரு கோலங்களில் தரிசனமளிக்கிறார் முருகப்பெருமான்.

துவாபரயுகத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் இது. இந்த ஆலயத்தின் ஆதி அர்ச்சகரே நான்முகன்தான்! தேசநாதீஸ்வரர் சந்நதியில் அவரை வணங்கியபடி நான்முகன் நின்ற கோலத்தில் இருப்பதை நாம் தரிசிக்கிறோம். ஆலயத்தூணில் நான்முகன் சிவபூஜை செய்வதைப் போன்ற சிற்பம் இதனை உறுதிப்படுத்துகிறது.

இந்த கலியுகத்திலும் சிவராத்திரியன்று ஒரு கால பூஜை முடித்து அர்ச்சகர் நடை சாத்திட, மீதமுள்ள மூன்று கால பூஜைகளை நான்முகன் செய்வதாக ஐதீகம் நிலவுகிறது. தேசத்தை ரட்சிக்கும் தேசநாதீஸ்வரரின் எதிரே யோகநந்தி ஒரு கால் மடக்கி, ஒரு கால் எழத் தயாரான நிலையில் உள்ளது. நந்தியின் மேல் அலங்கார நகைகள் ‘‘கல்லிலே கலை வண்ணம்’’ படைத்த சிற்பியின் கைத்திறனுக்கோர் சான்றாகக் காட்சியளிக்கிறது.

பிராகார வலம் வரத் துவங்கினால் நாம் முதலில் தரிசிப்பது தட்சிணாமூர்த்தியை. சிவபெருமானின் அம்சமான இவர் நந்தி மேல் அமர்ந்த கோலத்தில் திகழ கீழே கால் அருகில் முயலகன், நாகம் இவற்றுடன் காட்சியளிப்பது வேறெங்கும் காணமுடியாத சிறப்புத் தோற்றமாகும். போரில் வெற்ற பின் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்துள்ள ஐந்து லிங்கங்கள் ஒரே நேர்க்கோட்டில் தரிசனமளிக்கின்றன.

அன்னை காவிரியம்மன் தன் சந்நதியில் கருணைமிகு கண்களுடன் தனிச் சந்நதியில் தரிசனமளிக்கிறாள். பாயுமிடமெல்லாம் செடி கொடிகளை செழிக்க வைக்கும் தாயல்லவா! பயிர்களை செழிக்கச் செய்யும் தாய் பக்தர்களையும் காத்தருளி செழிக்கச் செய்கிறாள். அருகே நரசிம்மர் இருக்க அவரைப் பார்த்த வண்ணம் மஹாலட்சுமித் தாயார் தனிச் சந்நதியில் அமர்ந்து லட்சுமி கடாக்ஷம் தருகிறார். பின் சிவதுர்க்கையை தரிசிக்கிறோம்.

தேசநாதீஸ்வரரை வணங்கிய வண்ணம் நிற்கிறார் சூரியன். ஆலயத்தின் காவல் தெய்வம், சாந்த வீரபத்திரர் தனிச் சந்நதியில் அருள்கிறார். முதலையிடம் சிக்கிய யானையைக் காத்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்தார் திருமால். அந்த முதலைக்கும் மோட்சமளித்தவர் இந்த தேசநாதீஸ்வரர். மண்டபத்தின் மேற்புறம் உள்ள முதலையின் சிற்பம் இந்நிகழ்வுக்கு சான்றுரைக்கிறது.

ஆடி 18, ஆடிப்பெருக்கு, பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன. மகாபாரதத்தை இயற்றிய வியாசர் கார்த்திகை மாதம் வரும் ‘உத்மான ஏகாதசி’யன்று இத்தலத்து ஈசனையும், இறைவனையும் வணங்கி வனபோஜன விழாவை நடத்தினார். இன்றும் அந்த வனபோஜன விழா நடத்தப்படுகிறது.

ராகு-கேது தோஷம் நீங்க, வியாபார அபிவிருத்தியடைய, சந்தான பாக்கியம் ஏற்பட, விவாகம் கைகூட, குடும்பத்தில் நிம்மதி ஏற்பட காவிரியம்மன் சமேத தேச
நாதீஸ்வரரை பிரார்த்தனை செய்து வழிபட்டு பயனடைந்தோர் ஏராளம். அவர்கள் செய்து தரும் ஆலய திருப்பணிகளும் தாராளம். தற்போது திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்து ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

ஆலயம், ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது. காலை 7 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி
எண்: 9443316224.

- ப்ரவீணா அருண்