சங்கத்தார் சங்கடம் தீர்த்த சர்வேஸ்வரன்



“நான் சொன்ன சொல்லின் பொருள் உமக்குப் புரியவில்லையாயின், நடையைக் கட்டும். இங்கிருந்து நீர் வெளியே போனால் அது பெரிய உபகாரம்”.அவருக்கு முகம் சிவந்திருந்தது, வியர்த்திருந்தார். கோபத்தில் கன்னத்துத் தசைகள் நடுங்கின. வார்த்தைப் பிரயோகத்தில் தடுமாற்றம் தெரிந்தது.

எதிரில் இருந்தவர் நிலையோ அதற்கும் மேல். அவரின் பற்கள் நறநறத்தன. “நான் சொன்னால் சொன்னதுதான். உமது சீர்களில் பிழை. பொருள்களில் பிழை... நீ எழுதியதைக் கிழித்துப்போடு, தமிழ்த்தாய்க்கு தொல்லை கொடுக்காதே”“நீர் என்ன, தமிழ்த்தாயைக் காக்கப் பிறந்தவரா? நான் தமிழ்த்தாய்க்கு தீங்கிழைக்கப் பிறந்தவனா? யார் சொன்னது? இந்த அகம்பாவம் அழிவைக் கொடுக்கும்... அதிகம் ஆட வேண்டாம்”

“எல்லாம் எமக்கு தெரியும்”
 “கற்றது கைமண் அளவு... கல்லாதது
உலகளவு” இடையில் புகுந்தார் மற்றொருவர்.

விஷயம் என்னவெனில் அது முதற் சங்கம், தமிழ்ச் சங்கம். மேற்கண்ட வாதப் பிரிதிவாதங்கள் தமிழ்ச் சங்கப் புலவர்களுடையதுதான்.கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான். எதற்கெடுத்தாலும் கூச்சல். நானா,  நீயா போட்டி, எங்கும் செருக்கின் வீச்சம். அகங்காரத்தின் பொருளற்ற கூச்சல். தமிழ் சங்கம் மனித சமூகத்தின் மீதான
அன்பாலும், கருணையாலும் இறைவனால் உருவாக்கப்பட்டது என்பதெல்லாம் கடந்த காலத்தின் வரலாறு.

நிகழ்காலத்தில் ஆணவக் கூடாரமாகி விட்டது தமிழ்ச் சங்கம். ஆணவத்தின் பெருக்கத்தில் தமிழ் நசுங்கித் தவிக்கிற காலம்! வெறும் கர்வம் மட்டுமே தமிழ்ச் சங்கத்தை ஆண்டது.நேருக்கு நேரே வார்த்தைப் போர் நடத்துகிற சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. பாண்டிய மன்னன் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும்... பயனில்லாது போயிற்று. தமிழ்ப் புலவர்களுக்கு அரசன் மட்டற்ற மரியாதை கொடுத்ததும் ஒரு வகையில் இதற்குக்  காரணமாயிற்று. அரசன் தவித்தான். சொக்கநாதப் பெருமான் ஒருவரே இதற்கு தீர்வு  காண வல்லவர் என்பதால், இறைவனின் திருச்சந்நதியில் இது குறித்து முறையிட்டான்.

இறைவன் எப்போதும் போல ‘யாம் பார்த்துக்கொள்வோம். விஷயத்தை எம்மிடம் விடு’ என்று சொல்லாமல் சொல்வது போல் அமைதியாகப் பொலிந்தார். அங்கே விவாதம் முற்றி, ஒருவருக்கொருவர் சாதாரண மனிதர் போல் இறங்கிப் பேச முற்பட்ட போது “நிறுத்துங்கள் தமிழ்ச் சங்கத்துப் புலவர்களே” ஒரு குரல் கம்பீரமாக கேட்டது.கபிலர் நின்றிருந்தார். நக்கீரரைப் போன்ற புலவர். ஆனால், நக்கீரன்  போலில்லாது... தெளிந்த அறிவு கொண்டவர். பிரித்துப் பிரித்துப் பார்த்தும் அறிவில் இறைவனைப் பிரியாத நிலையில் உள்ள பெருந்தகை.

“சிறு பிள்ளைகள் போல இது என்ன சண்டை! என்ன ஆயிற்று உங்களுக்கு? நானும் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். இந்த தமிழ்ச் சங்கத்திலே இருக்கிற நாற்பத்தியெட்டுப் புலவர்களும், என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன், என்ன காரணத்தாலோ நிலை மாறி விட்டோம். நம்மிடம் நற்பண்புகள் குறைவுபட்டன. கீழ் குணங்கள் அதிகமாகி விட்டன...’’

“கபிலரே! நிறுத்தும். நீர் மூத்த புலவர். அதனாலேயே இப்படியெல்லாம் பேசலாம் என்று நினைத்து விட்டீரா? இழிகுணத்தில் வாழ்ந்து, பழகிய ஒருவரால்தானே இழி
குணங்களை எளிதில் அடையாளம் காண முடியும். அந்த வகையில் கபிலர் இழிகுணத்தார் இல்லையா?” வலது பக்க மூலையிலிருந்து ஒரு புலவர் எழுந்து நின்று கை நீட்டிப் பேசினார். அந்த நேரடித் தாக்குதலில் நிலை குனிந்து போனார் கபிலர்.

“என்னிடமுள்ள இழிகுணத்தை நீர் கண்டுபிடித்தீர் என்றால், நீரும் அவ்வகைதானே?’’ கபிலர் சரம் தொடுத்தார்.‘அறிவில் குறைந்தவர்களால் கூட இப்படி நடந்து கொள்ள முடியாது என்கிற அளவிற்கு ஆகிப் போன நிலையில், பரணர் சோமசுந்தரக் கடவுளை நூறாவது முறையாக நினைந்து, இப்பிரச்னை தீர இறைஞ்சினார். புலவர்களை கையமர்த்தினார்.“சரி, சரி. நிறுத்துங்கள் தேவையில்லாத பேச்சை! எல்லோரும் சோமசுந்தரக் கடவுளை தரிசித்துப் பாடி வருவோம் வாருங்கள்.”

புலவர்கள் எல்லோரும் இசைந்து, அசைந்தாலும் உள்ளூற எரிச்சல் இருக்கத்தான் செய்தது, அனைவருக்கும்.நக்கீரர் ‘உமது நெற்றியில் ஒரு கண் காட்டினும் குற்றம் குற்றமே’ என்று இறைவனிடமே நேருக்கு நேர் நின்றது, புலவர்களின் அகங்காரத்தைத் தூண்டிவிட்டது. தமிழில் தெளிவு இருந்தால், எதுவும் செய்யலாம் என்று எண்ணம் உள்ளூற வேர்விட்டது.

சாம்பலாகிப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த நக்கீரனை, எம்பெருமான் உயிர்ப்பித்தது இன்னும் அதீக கர்வத்துக்கு இடம் கொடுத்தது, இறைவனின் கருணையை எண்ணி கதற வேண்டியவர்கள், இறைவனின் கருணையைத் தாழ்த்தி மதிப்பிட்ட காரணத்தால் அகங்கார, மமகாரப் பேய் பிடித்தது அவர்களை.

சோமசுந்தரக் கடவுளின் திருச்சபை முன் எல்லாப் புலவர்களும் கூடி நின்றார்கள். கை கூப்பித் தொழுதார்கள். நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி, இறைவனை சேவித்துத் திரும்பியபோது,    வெண்ணீறணிந்து, பெரும் பொலிவாய், பிரகாசமாய் நின்றிருந்தார் ஒருவர். “புலவர்களே! உங்கள் நிலை உணர்ந்தேன், யார் பெரியவர்? யார் சிறியவர்? என்பதை உணர அளவு கோல் இல்லாமல் தவிக்கிறீர்கள் நீங்கள், இல்லையா?”

புலவர்கள் அதிர்ச்சியோடு அவரை நோக்கினர். சிலருக்கு கோபம் தலைகேறிற்று. சிலருக்கு நிம்மதி விரவிற்று. ‘அடேங்கப்பா சொல்லாமலே இவ்வளவு புரிந்து கொள்கிறாரே... இவர்’ என்ற வியப்பும் எழுந்தது.எல்லாவற்றிற்குமான புன்னகையோடு அந்த புதியவர் வாய் திறந்தார்.“தமிழ்ச் சங்கச் சான்றோரே! மதுரையம்பதியிலே தனபதி எனும் ஒரு வணிகன் இருக்கிறான். அவனும், அவனது மனைவி குணசாலினியும் நற்குடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் தவப் புதல்வன் ‘உருத்திர சன்மன்’. அவன் வாய் பேச மாட்டான். அவனை முருகப்பெருமானின் அவதாரம் என்பார்கள்.’’

புலவர்கள், ஏறிட்டார்கள். ‘அந்த உருத்திரசன்மன் பேச இயலாதவனா’“அந்த வணிக மைந்தனிடம், அவரவர் உயர்வாகக் கருதும் செய்யுளைப் படித்துக் காட்டுங்கள். எது அவனுக்கு உகந்ததோ, அதுவே அனைவரும் போற்றத் தக்க உயரிய செய்யுள். புரிந்துகொள்ளுங்கள்” - என்றார் புதியவர்.“அதுசரி ஐயா. பேச இயலாதவரா எம்
கவித்திறம் ஆராய்பவர்? சாத்தியமா இது? ”‘பெரிதாகக் கவலை வேண்டாம். அந்த உருத்திரசன்மன் அறிவில் மிக்கோன். சொல்லழகு, பொருளழகு உயர்வு கண்டு தலையசைப்பான். தோள் உயர்த்துவான். மகிழ்வான். தட்டிக்கொடுப்பான். கண்டு உணர்வீர்’  என்றார் அவர்.எல்லாப் புலவர்களும் மகிழ்ந்து, அவரை வணங்கித் திரும்பினர்.

நேரே வணிகன் மகனான உருத்திர சன்மனிடம் சென்று, தகப்பனார் அனுமதியோடு, அழைத்து  வந்து சங்க மண்டபத்தின் மைய ஆசனத்தில் அமர்த்தினர், வணங்கினர்.
விஷயம் உருத்திர சன்மனிடம் சொல்லப்பட்டது. அவனும் அகமகிழ்வோடு அமர்ந்திருக்க, புலவர்கள் ஆரம்பித்தனர். தாங்கள் இதுவரை எழுதியதில் உன்னத
மானது எதுவோ அந்தச் செய்யுளை வாசித்துப் பொருள் விளக்கம் செய்தனர்.

ஆளுக்கு ஒன்று என நாற்பத்தியெட்டுச் செய்யுள்கள்...., தமிழ் அருவியாய்ப் பொழிந்தது.ஒவ்வொரு பாடலையும் உருத்திர சன்மன் ஆழ்ந்து கேட்டான். சொல்லழகிற்கு முகம் மலர்த்தினார். பொருளழகிற்குப்புருவம் உயர்த்தினார். பொருள் குற்றத்திற்கு ‘சைகையால்’ திட்டினார். தலையில் அடித்துக் கொண்டார்.ஆனால், கபிலர், பரணர், நக்கீரர் ஆகியோர் பாடிய போது அவனது கண்களில் நீர் பொழிந்தது. கண்கள் ஒளி வீசின.

தலையசைத்துப் பேரானந்தம் காட்டினார், உருத்திர சன்மன் வணிகன் மகன் என்பதால் மிகுந்த திறமையோடு எடை போட்டான் கடைசியாக, சிறந்த செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து புலவர்களுக்கு அவன் சிறப்பு செய்தான்.கபிலர், பாணர், நக்கீரர் பாடல்களும் சிறப்பிடம் பெற்றன. நாடெங்கும் அவர் புகழ் பரவியது.

நாற்பத்தியெட்டு புலவர்களிடமும் பகை ஒழிந்தது, நன்னெறி தழைத்தது. தம்முள் இருந்த பொறாமை, கர்வம் நீங்கின. புலவர்கள் உண்மை உணர்ந்து, தமிழ்ச் சங்கத்தில் குற்றமற்ற படைப்புகளை ஆராய்ந்து அளித்தனர்.இந்த நிகழ்வு ‘திருவிளையாடற் புராணத்தில்’ காணப் பெற்றதொரு நிகழ்வு. மதுரையம் பதியிலே எம் பெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.

இக்கதையில் ‘அத்யாத்மமாக’ அதாவது, உண்மைப் பொருளாக விளங்குவது என்ன?தமிழ்ச் சங்கம் என்பது அறிவுள்ளவர் கூட்டும் ஒரு சபை. அந்த அறிவுள்ள புலவர்கள் என்பவர்கள் நம்முடைய மனதின் உயர்ந்த எண்ணங்கள் அவை உயர்ந்த எண்ணங்களாக இருப்பதால், அவற்றை ஆணவமாகிய அகங்காரம் பற்றிக் கொள்கிறது. அகங்காரம் உள்ள மனம், தன்னைத் தவிர, மற்றவர்களைத் தாழ்த்திப் பேசுவதும், தன்னைத் தானே உயர்வாக எண்ணிக் கொள்வதும் அதனுடைய தன்மை.

மொத்த மனமுமே அகங்கார வயப்பட்ட போது, தமிழ்ச் சபையே அகங்காரம் நிறைந்த நிலைக்குச் செல்கிறது. அதனுடைய இன்னொரு பகுதி இது தவறு தான் என்று மிக இலேசாக உணர்கிறது. எனவேதான், அகங்காரம் அழிய, இறைவனை நாட வேண்டியது இயல்பாக நடக்கிறது.இறைவன் தங்களைப் போன்ற மனித வடிவில் ஒரு புதியவராகத் தோன்றுகிறார். உருத்திர சன்மனிடம் தீர்வு பெறத் தூண்டுகிறார்.

உருத்திர சன்மன் என்பது முருகக் கடவுளின் அம்சம். முருகன் என்றால் அறிவு, ஆக அறிவு, புலவர்களின் புலமையை ஆராய்கிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல் தீர்ப்பைத் தருகிறது.புத்தி பாசாங்கு மிக்கது. ஆள் பார்க்கும்; தராதரம் பார்த்து தீர்ப்பு சொல்லும். எனவே, அகங்காரம் தலை தூக்கும் போது புத்தியின் தன்மை மிகும்.
அதனால் விளைவுகள் தாறுமாறாகும்.

ஏனென்றால், புத்தி எப்போதும் சரியா, தவறா என்ற கேள்வியோடுதான் இருக்கும். அறிவுதான் தீர்வை, முடிவைத் தரும். அதுவும் திடமாக இருக்கும். புத்தி தந்திரமானது. அறிவு நேர்மையானது. மறுக்க முடியாத தீர்வைத் தருவது.இதற்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது சிவபரம்பொருளே, அதுதான் புத்தியோடு, அகங்காரம் சேரும் போதெல்லாம், தீர்ப்பைத் தருகிற அறிவைத் தூண்டி,விளக்கம் செய்கிறது. என்ற உண்மையே இந்தப் படலத்தின் நிதர்சனத் தத்துவம்.

 கணேஷ் ஜீ