பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு....



திருப்தி தரும் திருப்பதி லட்டு பற்றிய செய்திகள் இனிப்பாக இருந்தன. நாள் ஒன்றுக்கு லட்டு தயாரிக்கப் பயன்படும் பொருட்களைப் படித்த வுடனே மலைப்பு ஏற்பட்டுவிட்டது. மலையப்பனுக்கான பிரசாதம் அல்லவா!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

சாய்ந்த அட்டைப்படத்தை தலை சாய்த்துப் பார்த்தபோது மனம் நேரானது. வாவ்! எவ்வளவு தத்ரூபம். வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். மகா அற்புதம். ஓவியருக்கும் ஆன்மிகம் பலனுக்கும் கோடானுகோடி நமஸ்காரங்கள்.
- முத்தூஸ், தொண்டி.

தலையங்கத்தில், வயது கூடக்கூட ஆயுள் குறைகிறது என்ற பிறந்த நாள் எச்சரிக்கை செய்தி ரியலி சூப்பர். நாம் ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடித்தால் மனதிருப்தியுடன் சஞ்சலமின்றி வாழலாம் என்பது உறுதி.
- மு.சுகாரா, ராமநாதபுரம்.

தமிழக சக்தி பீடங்களைப் பற்றி அறிந்து கொள்ள, அன்னையின் திருத்தலங்களை நேரில் காண, கைப்பிடித்து அழைத்துச் சென்றது போல் இருந்தது. நன்றி. திருப்பங்கள் தரும் திருப்பதி பெருமாளின் சிறப்புகளும், நிகழ்வுகளும் இதழுக்கே பெருமை சேர்த்தன.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

சக்தி பீடங்களில் அருளும் அம்பிகைகளின் தொகுப்பு அதியற்புதம். கல்வி, செல்வம், வீரம் வளர்க்கும் முப்பெரும் தேவியர் துதியைத் தொகுத்தளித்தமை எல்லா வாசகர்களுக்கும் பயன்படத்தக்கது.
- புலவர்.ராம.வேதநாயகம்,
வடபாதிமங்கலம்.

இன்றும் இனிக்கும் இதிகாசம் மனதை கனக்கச் செய்தது. புத்திர சோகத்தால் தவித்த திருதராஷ்டிரனும் காந்தாரியும் கானகம் செல்ல முடிவெடுத்தது நியாயம். ஆனால் தர்மத்தை ஜெயிக்க வைக்க தன் பிள்ளைகள் கௌரவர்கள் நூறுபேரைக் கொன்றார்கள் என்றாலும் அதற்குப் பரிகாரம் தேட குந்தியும் கானகம் சென்றது தியாகம். (அது என்ன திருதராஷ்டிரருக்கும் கண்ணைக் கட்டியிருக்கிறார் உங்கள் ஓவியர்? பார்வையில்லாத அவருக்குக் கண்ணைக் கட்டவேண்டுமா என்ன?)
- கு.கோப்பெருந்தேவி, சென்னை.

நவராத்திரியை முன்னிட்டு வெளிவந்த முப்
பெருந்தேவியரின் அபூர்வ ஸ்லோகம் மனதை
பக்குவமாக்கும் முக்கனிகளாக சிறந்து விளங்கியது.
- இரா. கல்யாணசுந்தரம், வேளச்சேரி.

ஜ்வாலா துர்க்கா பெயர்க் காரணம், துர்க்காவின் பணி, கிடைக்கும் சக்திகள், தீரும் நோய்கள், முடியும் வேலைகள் பற்றி சிறப்பாக எழுதியது அருமை. நாரத பாஞ்சராத்திரம், கேதார கௌரி விரதம் பக்திக்கு மணி மகுடம் போல் நல்ல செய்திகள். உபாசகனுக்கு அருள் மழை பொழியும் தேவியின் பாதம் பணிவோம்.
- ஏ.டி.சுந்தரம், ராக்சம்பாளையம்.

நவராத்திரிக்கு பல நாட்களுக்கு முன்பாக அதற்காக அனைத்து தகவல்கள், வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை வெளியிட்டு
வாசகர்களுக்கு, வழி காட்டுதலாக இந்த இதழ் சிறப்பாக இருந்தது.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

நவராத்திரி புரட்டாசி பக்தி ஸ்பெஷல் பல ராத்திரிகள் படிக்க வேண்டிய ஸ்பெஷல். ஆம்.  சிவராத்திரி போன்று கண் விழித்துப் படிக்க வேண்டிய நலங்கள் நல்கும் நவராத்திரி சிறப்பு இதழ். உள்ளதைச் சொல்லிவிட்டேன். உள்ளத்தில் உள்ளதைச் சொல்லி விட்டேன்.
- அதிதி, கவசம்பட்டு, ஸ்ரீதர், பெங்களூரு.

ஆலயங்களில் தலவிருட்சமாக பரிமளிக்கும் மரங்களின் மகத்துவம், தெய்வத்தன்மை இவற்றைப் படித்து பரவசம் அடைந்தோம். வஞ்சிக்கொடியின் சிறப்பு, மருத்துவகுணம் இவற்றைப் படித்து புருவங்கள் உயர்ந்தன.
- பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

யார் இறைவன், எது முறையான தரிசனம் போன்ற சிக்கலான கேள்விகளுக்கு மகான்களின் கவிதைகள் மூலம் பதிலளித்து வரும் என். சொக்கன் அவர்களின் தொடர், பக்தர்களுக்கு அரிய வரப்
பிரசாதம்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

நவராத்திரி புரட்டாசி ஸ்பெஷலின் சிறப்புக் கட்டுரைகளான ‘திருப்பங்கள் தருவார் திருப்பதி பெருமாள்’. ‘நலங்கள் நல்கும் நவராத்திரி’ ஆகிய இரண்டும் சிறப்பிலும் சிறப்பானவையாக அமைந்து விட்டன.
- சின்னஞ்சிறு கோபு, சென்னை.

கடந்த ஆன்மிகம் பலன் இதழ் செம கலக்கல். நவராத்திரி மற்றும் புரட்டாசி பக்தி ஸ்பெஷலாக வலம் வந்ததோடு பெருமாளின் தரிசனத்தை காணச் செய்து உளம் நிறையவும் வைத்து அசத்தி விட்டீர்கள். தம் அணிந்துரை வாயிலாக, பிறந்தநாள் பற்றிய எச்சரிக்கையினை பிரதிபலித்த பொறுப்பாசிரியர் அவர்களின் மாண்பு பிரமிக்க வைத்தது. பிரமாதம். பாராட்டுகள்.
- துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.

அபூர்வ ஸ்லோகம் முப்பெருந்தேவியரின் துதி கிடைத்தற்கரிய பொக்கிஷமே என்றால் மிகையல்ல. இது நிதர்சனமான உண்மை. பாராட்டுகள்.
- ரேவதி ரமேஷ், சோளிங்கர்.

திருப்தி தரும் திருப்பதி லட்டைப் பற்றிதான் எத்தனை எத்தனை தகவல்கள்! அந்த லட்டின் சுவையையும் பக்தி பரவசத்தையும் அப்படியே
தாங்கள் வெளியிட்ட கட்டுரையிலும் உணர்ந்தோம்.
- ராதா, ரகுநாதசமுத்திரம்.

பிறந்தநாள் எச்சரிக்கை - ஆசிரியர் தந்த செய்தி ரொம்பவே யோசிக்க வைத்தது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் பெரிய உண்மையை எளிமையாய் உணர வைத்து விட்டீர்கள். கொண்டாட்டம்
சந்தோஷம் இவற்றுடன் அந்த நாளில் ஆயுளும்தானே குறைகிறது/ ஒவ்வொரு விடியலும் இறைவன் தரும் போனஸ் அல்லவா? வாழும் நாளை நல்ல விதமாக அமைத்துக் கொண்டால் மிச்ச வாழ்க்கை நாட்கள் கவிதையாக அமையுமே!
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.

செப்டம்பர் இதழ், திருப்பதி லட்டைப் போல் இனித்தது. எத்தனை எத்தனை நவராத்திரி செய்திகள்... அடேங்கப்பா... ஆன்மிகம் பலனுக்கு நிகர் ஏது? பக்தி இதழ்களில் தாங்கள்தான் நம்பர்
ஒன் என்பதே எங்கள் தேர்வு.
- காமாட்சி சந்திரமௌலி, காஞ்சிபுரம்.

ஆன்மிகம் பலனில் எதை முதலில் படிப்பது எதை பிறகு படிப்பது என்று மனம் யோசிக்கிறது. பக்கத்துக்கு பக்கம் அருமையான தகவல்கள்.
அற்புதமான கட்டுரைகள். வாழ்க உங்கள் பணி. வளர்க தங்கள் புகழ்.
- ஹேமா ரவி, பம்மல்.

அட்டையில் தேவியருடன் பெருமாளின்
கண் கவர் ஓவியம், உள்ளே பெருமாளைப் பற்றிய அற்புதமான தகவல்கள். போனஸாக லட்டு தகவல்கள். ஏராளமான நவராத்திரி தகவல்கள். ஆன்மிகம் பலனே வாழ்க பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு...
- பிரதாப், அரக்கோணம்.

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், திருமந்திர ரகசியம், சக்தி வழிபாடு, குரு பரம்பரை வைபவம், பக்தி தமிழ், கல்வெட்டுக் கதை, பழநி
மகிமை, வாஸ்து, தலவிருட்சம்,  ஓஷோ, இன்றும் இனிக்கும் இதிகாசம் போன்ற அற்புதமான தொடர்களை வாசகர்களுக்கு தருவதில் ஆன்மிகம் பலன் இதழுக்கு நிகர் ஆன்மிகம் பலனேதான். தங்கள் தொண்டு தொடர இறைவன் திருவருள் புரியட்டும்.
- சந்திரசேகரன், விழுப்புரம்.

தமிழக சக்தி பீடங்கள் கட்டுரையும், அந்தந்த சக்திபீட நாயகிகளில் தரிசனமும் கண்களையும், மனதையும் விட்டு அகலவில்லை. நேரிலே போய் தரிசித்த உணர்வைத் தந்தது. நவராத்திரி சமயத்தில் அருமையான கட்டுரை. பாராட்டுகள்.
- வாணி, நுங்கம்பாக்கம்.