பிட்ஸ்



காசிப் பலன் தரும் கடல் தீர்த்தம்திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலய தீர்த்தங்களில் ஒன்று, கடல். அதுபோல குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலய தீர்த்தமாகவும் கடல் உள்ளது. கடல் தீர்த்தம் மிகவும் சிறந்த பலனை அளிக்கும். அனைத்து புண்ணிய நதிகளும் கலப்பதால் கடலை மகா தீர்த்தம் என்று சொல்வார்கள். புண்ணிய நதியான கங்கை நதி கலப்பதால் வங்கக்கடலை கங்கைக் கடல் என்றும் அழைப்பார்கள்.

கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டால் பாவம் போய்விடும். இதனால் புண்ணியம் பெற பக்தர்கள் பலரும் காசிக்குச் சென்று வருகின்றனர். அப்படி அங்கு  செல்ல முடியாதவர்கள் குலசேகரபட்டினம் வந்து வங்கக்கடலில் நீராடி, முத்தாரம்மனையும்ஞான மூர்த்தீஸ்வரரையும் மனமுருகி வழிபட்டால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும்.

அவ்வையாருக்குத் தனிச் சந்நதிகன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில்   நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஆரல்வாய்மொழிக்கும் காவல் கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது முப்பந்தல். இங்கு இசக்கி அம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் இசக்கி அம்மனை அவ்வையார் சாந்தப்படுத்தியதால் முப்பந்தலில் அவ்வையார் அம்மன் என்ற பெயரில் தனிச் சந்நதி உள்ளது. இங்கு இசக்கி அம்மனின் சகோதரரான நீலனும் தனிச் சந்நதியில் காணப்படுகிறார்.

திருமாலே இசக்கியின் தமையனாக வந்ததாக கூறப்படுகிறது. இசக்கி என்றால் மனதை மயக்குபவள் என்று பொருள். முப்பந்தலில் கருவறையின் அம்மன் வடக்கு பார்த்து காட்சி தருகிறாள். வலது புறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச் சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கராதேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் சுற்றுப் பிராகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும் தனிச் சந்நதியில் பாங்குடன் அருள்புரிகின்றனர்.

 ஆலய முகப்பில் காவல் தெய்வங்களான சுடலை மாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனிச் சந்நதிகளில் உள்ளனர். ஆலயத்தின் வெளியே மிகப்பெரிய அளவில் இசக்கி அம்மன்  இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.

புளிப்பில்லா பிரசாதங்கள்

விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் அமைந்திருக்கும் சந்தோஷி மாதா கோயிலில் வெள்ளைநிற பளிங்கு கல்லால் அம்மனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத பவுர்ணமி நாளன்றும், விநாயகர் சதுர்த்தியன்று இங்கு சிறப்பாக திருவிழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி தினங்களிலும் அன்னையை நினைத்து பயபக்தியுடன் விரதமிருப்பது சகோதர யோகம் அளிக்கும். பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வ தால் திருமண யோகம் முதலான பலன்களை அடையலாம். ஆதிபராசக்தியின் அம்சமான இத்தேவியை நினைத்து வெள்ளிக்கிழமைகளில் விரதமிருக்க நினைத்தக் காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. இந்த அம்மனுக்கு புளிப்புச் சுவை
இல்லாமலேயே பட்சணங்கள் செய்யப்படுகின்றன.

- கோட்டாறு ஆ.கோலப்பன்

பசுவிற்கு காட்சி கொடுத்த ஈசன்புதுக்கோட்டை-திருச்சி சாலையில் புதுக்கோட்டை மாமன்னர் நிறுவிய கோகர்ணேஸ்வர் உடனுறை பிரகதம்பாள் ஆலயம் கம்பீரமாக நிற்கிறது. இத்தலத்து இறைவி பசுவாக பிறந்து தன் காதில் நீர் எடுத்து வந்து அன்றாடம் இறைவனுக்கு அபிஷேகம் செய்து மோட்சம் அடைந்ததாக புராண வரலாறு சொல்கிறது.  இவ்வாலயம் சென்று வணங்கு வோர்க்கு ஆன்மிகத்தில் தெளிவும், தொடர்பும் ஏற்படு வதோடு, மறுபிறவி இல்லா மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

பசு தன் காதில் நீர் கொண்டு வந்து நித்தமும் அய்யனை அபிஷேகம் செய்து வந்ததால் கோ+கர்ணம்  திருக்கோ கர்ணம் என்று வழங்கப்பட்டு வருகின்றது. சிவனார், பசுவின் பக்தியை சோதிக்க எண்ணி புலி உருவில் வந்து மிரட்டியதாகவும், பசு  கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருவேங்கட வாசல் என்ற இடத்தில் பசுவுக்கு சிவசக்தி சமேதராய் அவர் காட்சிக் கொடுத்திருக்கிறார். 

- மா.பா.சங்கரநாராயணன்