வெளிமாநிலக் கோயில்கள்



பணி இடமாற்றத்துக்கு அருளும் ஜகன் மோகன கேசவ ஸ்வாமி

துர்வாச முனிவரின் சாபம் காரணமாக தேவேந்திரன் தனது செல்வங்களையெல்லாம் இழந்ததும், அவற்றைப் பெற தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைக் கொண்டு வந்ததும் நமக்குத் தெரிந்ததே!

பாகவதம் போன்ற பல புராணங்கள் இந்த பாற்கடல் கடைந்த கதையை விரிவாகக் கூறுகின்றன. சாவா மருந்தான அமிர்தத்தை ஏந்தி மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி வெளியே வந்தபோது உடனடியாக தேவர்களும் அசுரர்களும் அதை அடைய தங்களுக்குள் சண்டை போட, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அனைவரையும் அமரவைத்து தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்து மீண்டும் அவர்களுக்கு துணிச்சலையும், மனஉறுதியையும் அளித்தார். இந்திரன் செல்வங்களை பெற்று மகிழ்ச்சியடைந்தான்.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மகாவிஷ்ணுவிற்கு ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயக் கருவறைகளில் மகாவிஷ்ணு நின்ற, இருந்த, கிடந்த மூன்று கோலங்களில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

விஷ்ணுவின் அம்சமாக மோகினி இருந்தாலும் மோகினிக்கு என்று இந்தியாவில் ஆலயங்கள் ஏதும் இல்லை.ஆந்திர மாநிலத்தில் ரயாலி கிராமத்துக் கோயில் ஒன்றில் ஒரே சிலையில் முன்புறம் மகாவிஷ்ணுவையும், சிலையின் பின்புறம் மோகினியின் பின்புறத் தோற்றத்தையும் நாம் தரிசிக்கலாம். இதுபோன்ற அற்புதமான விக்கிரகம் இந்தியாவில் வேறு எங்குமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மகாவிஷ்ணு ஜகன் மோகினி கேசவ ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார்.கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராவுலபாளையம் என்ற இடத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் ரயாலி கிராமம் அமைந்துள்ளது.

 மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமான், மோகினியின் தலையலங்காரத்திலிருந்து ஒரு மலர் கீழே விழ அதை எடுத்து முகர்ந்து பார்த்தாராம். (ரயாலி என்ற தெலுங்குச் சொல்லுக்கு கீழே விழுதல் என்பது பொருள்) அதனால் இந்த ஊருக்கு ரயாலி என்ற பெயர் ஏற்பட்டதாம்.

ஒரு காலத்தில் அடர்ந்த வனப் பகுதியாக இருந்த ரயாலிக்கு விக்ரம தேவன் என்ற சோழ மன்னர் ஒருமுறை வந்தார். அவர் கனவில் மகாவிஷ்ணு தோன்றி மரத்தினாலான ரதம் ஒன்றைத் தயாரித்து தன்னை அதில் வைத்து எடுத்துச் செல்லுமாறும், அவ்வாறு ரதம் சென்று கொண்டிருக்கும்போது அதன் கடையாணி எங்கே கழன்று விழுகிறதோ அதன்கீழ், தான் சுயம்புசிலா மூர்த்தியாக இருப்பதாகவும், தன்னை எடுத்துப் பிரதிஷ்டை செய்யுமாறும் கூறவே, மன்னரும் ரதத்தை ஓட்டிச்சென்று விக்கிரகத்தைக் கண்டுபிடித்து பிரதிஷ்டை செய்தார். மன்னர் ஜகன் மோகன கேசவ ஸ்வாமியை ரதத்தில் ஏற்றி வந்ததால் ரதாரி எனப்பட்டார். அந்தப் பெயராலேயே ஊர் ரதாரி எனப்பட்டு ரயாலி என்று மருவி விட்டதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் புராண, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பல அற்புதமான ஆலயங்களைக் கொண்டது. அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர், பிக்கவோலு கோலிங்கேஸ்வரர், பஞ்ச ராமங்களில் ஒன்றான திராட்சாராமம் பீமேஸ்வரர், கொல்லாட மாமிடாடா சூர்ய நாராயணர், பெத்தாபுரம் சூர்ய நாராயணர், ராஜமத்திரி உமா மார்க்கண்டேஸ்வரர் போன்ற ஆலயங்கள் இந்த மாவட்டத்தில் மிகப் பிரபலம். பச்சைப் பசேல் என்ற தென்னந் தோப்புகளும், வயல்களும் கொண்ட இயற்கைச் சூழலில் ரயாலி ஜகன் மோகன் கேசவ ஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது. 1936ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்ட இந்த ஆலயம் சமீபத்தில் மீண்டும் நவீனப்படுத்தப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது.

ஆலயத்தின் நுழைவாயிலை ஐந்து கலசங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபுரம் அலங்கரிக்கிறது. நுழைவாயிலின் இருபுறங்களிலும் சுதையிலான துவாரபாலகர்கள் உள்ளனர். முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறையுடன் கூடிய விசாலமான பிராகாரங்களை கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் ஐந்து அடி உயரத்தில் சாளக்கிராம சிலையில் கேசவ ஸ்வாமி கிழக்கு நோக்கி நான்கு கரங்களோடு அருள்பாலிக்கிறார். பின் வலக்கரத்தில் சங்கும், பின் இடக் கரத்தில் சக்கரமும் உள்ளன.

(பொதுவாக பெருமாள் விக்கிரகங்களில் பின் வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில் சங்கும் இருப்பது மரபு. ஆனால், ரயாலி ஆலயத்தில் இவை மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது). முன் வலக்கரத்தில் மந்தார மலரும் முன் இடக்கரத்தில் கீழ்நோக்கிய கதையும் உள்ளன. மூன்றடி அகலமுள்ள கேசவ ஸ்வாமியின் விக்கிரகம் தற்போதுதான் வடிக்கப்பட்டது போன்று புத்தம் புதியதாகக் காட்சி தருகிறது.கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான விக்கிரகத்தின் பிரபாவளியில் தசாவதாரப் புடைப்புச் சிற்பங்கள், நாரதர், தும்புரு, ஆதிசேஷன், ரம்பா, ஊர்வசி, யட்சர், கின்னரர், கிம்புருடர் போன்ற சிற்பங்கள் நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளன.

பெருமாளின் இருபுறமும் சிறிய அளவில் ஸ்ரீதேவி, பூதேவியும், கங்கா தேவியும் அருள்புரிகிறார்கள். கங்காதேவி சிலையிலிருந்து சுவாமியின் பாதத்தில் கங்கை நீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருப்பது பார்க்கப் பரவசம் தருகிறது.ஜகன் மோகினி கேசவ ஸ்வாமியின் பின் புறத்தில் மோகினியின் பின்புற வடிவம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் கூந்தல் வட்ட வடிவக் கொண்டையாகக் காட்டப்பட்டிருப்பதும் அங்கங்கள் பெண்களுக்குரிய நளினத்தோடு கூடியதாகவும் இருப்பது கண்டு மகிழத் தக்கவை. கோயில் அர்ச்சகர் கற்பூர ஆரத்தி காட்டும்போது கேசவ சுவாமி மற்றும் மோகினியின் திருவுருவங்கள் பற்றி விளக்கம் அளிக்கிறார்.

12ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட ரயாலி ஜகன் மோகன கேசவ ஸ்வாமி ஆலயத்திற்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவாலயம் உள்ளது. மேற்கு பார்த்து சான்னித்யம் கொண்டுள்ள இந்த சிவாலயக் கருவறையிலும், கிழக்கு நோக்கியிருக்கும் ஜகன் மோகன கேசவ ஸ்வாமி ஆலயக் கருவறையிலும் இரண்டு நந்தா தீபங்கள் எதிர் எதிராக எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. சிவாலயத்தில் சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை பிரம்மா தன் கமண்டல நீரால் பிரதிஷ்டை செய்ததாகிய ஐதீகத்தின்படி சிவபெருமான் இங்கு உமா கமண்டலேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார். இந்த சிவாலயத்திலும் மூலவர் மீது கங்கை நீர் சொட்டுச் சொட்டாக விழுந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது.

ரயாலி ஜகன் மோகன கேசவ ஸ்வாமியை மனதார வழிபட்டால் பதவி உயர்வு, விரும்பும் இடத்திற்கு இடமாற்றம் போன்றவை கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எனவே அன்றாடம் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். கேசவ ஸ்வாமியை ‘டிரான்ஸ்ஃபர் வழங்கும் சாமியாக’ மக்கள் கொண்டாடி வழிபடுகின்றனர்.

ரயாலி

வெளிமாநிலக் கோயில்கள் அவல் தந்த ஆனந்த வாழ்க்கை

ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய நண்பரான குசேலருக்கான ஒரே ஆலயம்தான், போர்பந்தர் ஸ்ரீசுதாமா ஆலயம். கிருஷ்ண பரமாத்மா தன் இளம் வயதில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலவாசம் செய்த போது சுதாமா என்ற குசேலர் அவருடைய நண்பராக இருந்தார்.

அவர் வறுமையால் வாடியபோது கிருஷ்ணரிடம் உதவி கேட்டுச் சென்று, தான் கொண்டு சென்ற அவலை அவரிடம் கொடுத்துத் திரும்பியபோது ஸ்ரீகிருஷ்ணர் அருளால் அவர் பெரிய செல்வந்தர் ஆனார். மஹாவிஷ்ணுவின் பூர்ண அவதாரமான கிருஷ்ணருக்கு இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. ஆனால், அவருடைய நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த குசேலருக்கும் ஒரே ஒரு கோயில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. 

குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் தேசப் பிதா மகாத்மா காந்தி பிறந்த இடம். குஜராத் மாநிலத்தின் மேற்கே சௌராஷ்ட்ரா பகுதியில் அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ள மாவட்டம் போர்பந்தர்.

குஜராத் தலைநகரான காந்தி நகரிலிருந்து 420 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள போர்பந்தர் கிராமத்தில் குசேலர் பிறந்ததால், இது அக்காலத்தில் சுதாமாபுரி என்றழைக்கப்பட்டது. போர்பந்தரில் மதுகா-ரோசனா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுதாமா. கிருஷ்ண லீலைகளைப் பார்த்து மகிழும் பொருட்டு நாரத முனிவரே சுதாமாவாக அவதரித்ததாகவும் கூறுவதுண்டு.

மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினி நகரின் வெளியே அமைந்திருந்தது சாந்தீபனி முனிவரின் ஆசிரமம். அந்த முனிவரின் குரு குலத்தில்ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர், சுதாமா மூவரும் ஒரே சமயத்தில் மாணாக்கர்களாக பயின்று வந்தனர்.

அப்போது சுதாமாவும் ஸ்ரீ கிருஷ்ணரும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர். சாந்தீபனி ஆசிரமம் இருந்த இடத்தில் தற்போது அமைந்திருக்கும் ஒரு அழகிய ஆலயத்தில் ஸ்ரீ பலராமர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் சுதாமா ஆகியோரின் பாலபருவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அழகிய விக்கிரகங்கள் உள்ளன. அருகிலுள்ள கோமதி குண்ட் என்ற கிணற்றில், தன் குரு சாந்தீபனி முனிவர் நீராடும் பொருட்டு அனைத்து புண்ணிய நதிகளும் வந்து சேருமாறு ஸ்ரீகிருஷ்ணர் அருள்புரிந்தாராம்.

இங்குள்ள ஒரு பாறையின் மீது காணப்படும் 1 முதல் 100 வரை உள்ள எண்கள் குரு சாந்தீபனியால் மாணவர்கள் படிக்கும் பொருட்டு செதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.குருகுலம் முடிந்தவுடன் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகா திரும்பி உரிய காலத்தில் துவாரகாவின் மன்னரானார். ஆனால், குசேலரோ சுசீலா என்ற பெண்ணை மணந்துகொண்டு தன் கிராமத்தில் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தார்.

அவர் கிழிந்த ஆடை கட்டியிருந்ததால் குசேலர் (குசேலம் - கிழிந்த ஆடை) என்று அழைக்கப்பட்டதாகவும், நட்சத்திரத்திற்கு ஒன்றாக 27 குழந்தைகளைப் பெற்றார் என்றும் கூறப்படுவதுண்டு. வறுமையில் வாடினாலும் தன் வறுமையை வெளிக்காட்டாது, ஸ்ரீகிருஷ்ணரின் மீது மிகுந்த பக்தியோடு, எதையும் எதிர்பாராத புனிதமான பக்திக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த பரம பாகவதராக வாழ்க்கை நடத்தினார்.

ஆனால், வறுமைக் கொடுமை மேன்மேலும் அதிகரிக்கவே, அவர் மனைவி சுசீலா அவரது பால்ய நண்பர் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து பொருளுதவி கேட்கச் சொல்லி அடிக்கடி வற்புறுத்தி வந்தாள். சுதாமா ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்கச் சென்றார். தான் பகவானுக்கு ஆசையோடு கொண்டு போயிருந்த அவலை அவருக்குச் சமர்ப்பித்தார். கிருஷ்ணரோ சுதாமாவை ஆரத்தழுவி அரவணைத்து வரவேற்று தன் பட்டமகிஷி ருக்மிணியோடு சேர்ந்து பணிவிடைகள் செய்தார்.

தன் நண்பரின் உபசரிப்பில் திக்குமுக்காடி எந்த உதவியையும் கேட்கத் தோன்றாது வீடு திரும்பிய சுதாமா தன் வீடு பகவான் அருளால் செல்வத்தில் மூழ்கியிருப்பது கண்டு திகைத்தார். அளவற்ற செல்வம் வந்தபோதும் கூட செருக்கடையாது எப்போதும் போல கிருஷ்ணரிடம் பக்தி செலுத்தி எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் சுதாமா.ஸ்ரீ கிருஷ்ண பகவான், செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் மனிதர்களிடையே வேறுபாடுகளைக் காண்பதில்லை.

உண்மையான களங்கமற்ற பக்தியையே விரும்புகிறார் என்பதையும் தன்னிடமிருந்து ஒரே ஒரு எளிய பொருளான அவலை சுதாமா கொடுக்க ஸ்ரீகிருஷ்ணரோ சுதாமாவுக்குத் தேவையான அனைத்து செல்வங்களையும் தன்னிடமிருந்து அள்ளிக் கொடுத்தார் என்பதையும் குசேலர் கதை எடுத்துக் காட்டுகிறது.

ஸ்ரீகிருஷ்ணரும், சுதாமாவும் சாந்தீபனி ஆசிரமத்தில் நண்பர்களாக இருந்தது போன்றே திரௌபதியின் தந்தையான துருபத மன்னனும், துரோணரும் பால்ய நண்பர்களாக துரோணரின் தந்தையான பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் குருகுலம் பயின்று வந்தனர்.

 அவர்கள் குருகுலம் முடிந்து பிரியும் போது துருபத மன்னன் தன்னை எப்போது வந்து பார்த்தாலும் துரோணருக்கு தன் பாதி ராஜ்யத்தைக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தான். வறுமையில் வாடிய துரோணர் தன் குழந்தை அஸ்வத்தாமனுக்கு பால் கொடுக்க ஒரு பசுவை யாசித்து துருபதனிடம் சென்றபோது மன்னன் அவரை யார் என்றே எனக்குத் தெரியாது என்று அவமானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

ஸ்ரீ கிருஷ்ணரும் துருபதனும் நண்பர்களை எவ்வாறு நடத்தினர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இக்கதையைக் கூறுவதுண்டு.ஸ்ரீகிருஷ்ணரின் நண்பரான ஸ்ரீசுதாமாவுக்கு அவர் பிறந்த சுதாமாபுரி கிராமத்தில் 12, 13 நூற்றாண்டுகளில் ஒரு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் கிராம மக்கள் இந்த ஆலயத்தைத் திருப்பணிகள் செய்து விரிவுபடுத்தினர். 1902 முதல் 1907 வரை இந்த ஆலயத் திருப்பணிகள் நடைபெற்றன.

 ஒரு கட்டத்தில் போதிய நிதி ஆதாரமின்றி ஆலயக் கட்டுமானப் பணி நின்று போனபோது சுதாமாபுரி மக்கள் பல நாட்டிய நாடகங்களை நடத்தி பணம் திரட்டி ஒரு வழியாக சுதாமா ஆலயத்தைக் கட்டி முடித்தனர். கிருஷ்ணனின் நண்பரான சுதாமாவுக்கு இந்தியாவில் அமைந்துள்ள ஒரே ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றது இது. ராஜஸ்தான் மாநில க்ஷத்திரிய வம்சத்தினர் மணமானவுடன் தம்பதியராக இத்தலத்திற்கு வந்து வழிபடும் மரபு உள்ளது.

ஆலய நுழைவாயிலில் ‘‘ஸ்ரீசுதாமாபுரி யாத்ரா தாம்’’ என்ற பெயரைத் தாங்கிய வரவேற்பு வளைவு உள்ளது. 50 தூண்களைக் கொண்ட விசாலமான மண்டபத்தை அடுத்துக் கருவறை அமைந்துள்ளது.

சிறிய கருவறை நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். கருவறையில் ஸ்ரீசுதாமாவும் அவருக்கு இடப்புறம் அவருடைய மனைவி சுசீலாவும், வலப்புறம் ஸ்ரீகிருஷ்ணரும் அமர்ந்த நிலையில் கொலுவிருக்கின்றனர். கருவறைக்கு மேலே வட இந்தியப் பாணியில் உயரமான விமானம் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் அழகான நந்தவனமும் ஆலய வளாகத்தில் சுதாமா பயன்படுத்திய கிணறும் உள்ளன.

போர்பந்தர் ஸ்ரீசுதாமாஜீ ஆலயம் காலை 7 முதல் இரவு 9 வரை திறந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் இரவு ஏழு மணிக்கு சந்தியா ஆரத்தி நடைபெறுகிறது. காலை 11 மற்றும் மாலை 5 மணிக்கு ‘சுதாமாஜீ தண்டுல்’ (குசேலரின் அவல்) என்ற மஹாப்பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த மஹாப்பிரசாதமான அவலை உண்பவர்களுக்கு செல்வ வளம் பெருகும் என்றும், மகப்பேறு வேண்டுவோருக்கு அது கிட்டும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.சுதாமாபுரியில் மகாத்மாகாந்தி பிறந்த  வீட்டிற்கு அருகில் உள்ள நினைவாலயமான, கீர்த்தி மந்திர், கீதா மந்திர், காயத்ரி மந்திர், ஸ்ரீஹரி மந்திர், ஸ்ரீசந்தோஷ்வர் மஹாதேவ் ஆகிய ஆலயங்கள் உள்ளன.

இந்தியா முழுவதும் சித்திரை மாதம் சுக்லபட்ச திருதியை நாளான அட்சய திருதியை நாளை ஸ்ரீகுசேலர் தினமாக அனுஷ்டிக்கின்றனர். கேரள மாநிலத்தில் மார்கழி மாதம் முதல் புதன் கிழமை ஸ்ரீகுசேலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில்தான் குசேலர் அவலோடு ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்ததாக ஐதீகம். இந்நாள் குருவாயூர் ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில் மிகச் சிறப்பாக அனுசரிக்கிறார்கள். பக்தர்கள் ஏராளமான அவலை நைவேத்தியமாகச் சமர்ப்பிக்க அது அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.  

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்

போர்பந்தர்