இறைவன் நடனமாடும் ஆனந்தக் கூடம் நமது உள்ளமே



திருமூலர் மந்திர ரகசியம்

சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாக்கவேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் இன்னல்களில் இருந்து தப்ப முடியாது என உலக அளவில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.  இதையே கேலியாகச் சொல்லி நம்மை இடித்த அயல் நாட்டுக்காரர்களும் உண்டு.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது: திருநெல்வெலியில் அரசு அதிகாரியான ஓர் ஆங்கிலேயரும், பெரும் தமிழ் அறிஞரான டி.கே.சிதம்பரநாத முதலியாரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஆங்கிலேய அதிகாரி, டி.கே.சியிடம் ‘‘நாங்கள் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம். மரங்களை எல்லாம் பாதுகாப்போம். நீங்கள் அப்படியில்லை,’’ என்று சொல்லி இடித்தார்.

உடனே டி.கே.சி. ‘‘ஆமாம். நாங்கள் அப்படியில்லை. உங்களைப் போல நாங்கள் அவற்றை மரமாக எண்ணுவதில்லை; தெய்வமாகவே பாவித்து வழிபாடு செய்கிறோம். ஒவ்வொரு கோயிலிலும் தல விருட்சம் என்று ஒன்றை வைத்து, அதைத் தெய்வமாகவே வணங்குகிறோம்,’’ என்று பதிலடி கொடுத்தார்.

அதிகாரி வாயை மூடிக் கொண்டார். அதாவது, அயல் நாட்டுக்காரர்கள் விஞ்ஞானத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமல்லவா? அந்த அயல்நாட்டுக்காரர்களுக்கு விஞ்ஞானத்தை அறிவுருத்தி முன்னாலேயே, விஞ்ஞானத்தை அலசி ஆராய்ந்து, அதை மெய் ஞானத்துடன் இணைத்தவர்கள் நமது முன்னோர்கள்.

அப்படிப்பட்ட தகவல்கள் பலவற்றைச் சொன்ன திருமூலரின் பாடல்களில் ஒன்று:
சொல்லலும் ஆயிடுமாகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் அனல் நீர்க் கடினமும்
சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில்
சொல்லலும் ஆம் தூர தெரிசனம் தானே
                 (திருமந்திரம் 806)

இப்பாடலில் ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்று சொல்லப்படும் பஞ்ச பூதங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றின் வசப்படாமல், அவற்றைத் தன் வசப்படுத்தும் ஞானிகளின் நிலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஓரளவிற்காவது நமக்குப் புரியும் வண்ணம் எளிமையாகப் பார்க்கலாம். பஞ்சபூதங்களும் கலந்தது இந்த உலகம் என்று, தொல்காப்பியம் கூறுகிறது: ‘நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’இந்த ஐந்தும் கலந்த இந்த உலகத்தில் இருக்கும் நாம், இந்த ஐந்தும் இறைவனின் வடிவங்கள் என்பதை உணரவேண்டும். நம் ஞான நூல்கள் அனைத்தும், இறைவனை அவ்வாறே வர்ணிக்கின்றன.

இறைவன் காற்றாக இருக்கின்றான். நீராக இருக்கின்றான் என்றெல்லாம் நமது ஞானநூல்கள் சொல்லியிருக்கின்றன. அவை ஏதோ விவரம் தெரியாமல் சொன்னதல்ல; அவர்கள் வாழ்ந்து, அனுபவத்தில் சொல்லிவிட்டும் போயிருக்கிறார்கள்.

ஆனால், இன்றைய நிலை?இறைவன் குடி கொண்ட ஆலயங்களும், இறைவனின் வடிவங்களாகச் சொல்லப்படும் பஞ்சபூதங்களும் சீரழிந்து கிடக்கின்றன. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று பழந்தமிழ் இலக்கியங்கள் போற்றிப் பாராட்டிய காவிரியில் தண்ணீர் ஓடவில்லை. தாயின் சதையை வெட்டிக் கூறு போட்டு, விலை கூறி விற்பதைப்போல, காவிரி மணல் லாரிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில், பகவானையும் பஞ்சபூதங்களையும் நாம் சரிவரக் கையாளவில்லை. அடுத்த தலைமுறையின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு பஞ்சபூதங்களையும் கையாண்டால், பஞ்சபூதங்களையும் பரம்பொருளாகக் கண்டு வணங்கினால், அப்படிச் செய்பவர்கள் தொலைநோக்குப் பார்வையும் தூய்மையான சிந்தையும் கொண்டவர்களாக விளங்குவார்கள் எனத் திருமூலர் இப்பாடலில், நம்மை எச்சரிக்கிறார். இந்த எச்சரிக்கையும், அதை மீறினால் உண்டாகும் விளைவுகளும் நன்றாகவே புரிகின்றன. இருந்தாலும் என்ன செய்ய? உணர்ந்ததைச் செயலில் கொண்டு வர சக்தியில்லையே என ஏங்கினால்,

அடுத்த பாடலில் அதற்கு
உண்டான வழியைக் கூறுகிறார் திருமூலர்:
நின்ற பராசக்தி நீள்பரன் தன்னொடு
நின்றறி ஞானமுன் இச்சையுமாய் நிற்கும்
நின்றறியும் கிரியாசக்தி நண்ணவே
மன்றனவற்றுள் மருவிடுந்தானே
               (திருமந்திரம் 1136)

கருத்து: அம்பிகை பராசக்தி, சிவபெருமானோடு (அர்த்த நாரீஸ்வரகோலமாக) ஒன்றி இருப்பாள். அவளே ஆருயிர்களோடு பொருந்தி ஞான சக்தியாகவும் இச்சா சக்தியாகவும் விளங்குகிறாள். அவளோடு கிரியா சக்தியும் சேர்ந்தால், சித்தம் சிவமாகும். உள்ளம், இறைவன் நடனமாடும்

ஆனந்தப் பெருங்கோயிலாகும். இந்தப் பாடலில் பராசக்தியை, ஞானசக்தி - இச்சா சக்தி - கிரியா சக்தி என வரிசைப் படுத்தி இருப்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். அந்த வரிசைப்படியே பார்ப்போம். இந்த வரிசை மிகவும் முக்கியமானது. எந்தவொரு செயலைச் செய்ய வேண்டுமானாலும், அதைப் பற்றிய தெளிந்த அறிவு வேண்டும். விவரம் தெரியாமல் காரியத்தில் இறங்கி கஷ்டப்படக்கூடாது.

செய்யப்போகும் காரியம் அதனால் உண்டாகும் சாதக-பாதகங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெளிவாக அறிந்து கொண்டு காரியத்தில் இறங்க வேண்டும். இதைப்பற்றி இக்காலத்தில் பிரச்னை இல்லை. ஏனென்றால், இப்போது எல்லோருமே கருத்துப் பேழைகளாக, தகவல் களசியங்களாக இருக்கிறோம். கணினியைத் தட்டினால் தகவல்கள் விரல் நுனியில்
கொட்டுகின்றன. ஏன், கை பேசியிலிருந்து கொட்டுகின்றன.

ஆகவே, திருமூலர் சொன்ன ஞான சக்தியைப் பற்றிப் பிரச்னை இல்லை. அடுத்து இச்சா சக்தி! நல்லவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. உதாரணமாக, பசிக்கிறது! எந்த உணவு ருசியாக இருக்கும், நல்லது எது, அது எங்கு கிடைக்கும் என்றெல்லாம் தெரிந்து கொண்டால் போதுமா? அதை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணமும் வேண்டுமல்லவா? அதைத்தான் இச்சாசக்தி என்கிறார்கள்.

அதாவது, நல்லதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதைச் செயல்படுத்தும் ஆர்வமும் இருக்க வேண்டும். இந்தக் கட்டத்திலேயே பலர் விலகி விடுவோம். நல்லதைச் செயல்படுத்தும் ஆர்வம் கொண்டவர்கள், குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறோம். அந்த எண்ணிக்கையும் குறையும். எப்போது? நல்லதைத் தெரிந்து அதைச் செயல்படுத்தும் ஆர்வமும் இருந்தும், ‘‘என்னவோ போங்க சார்! நல்லதைச் செய்யணும்னு ஆசையாகத்தான் இருக்கு. முடியல. நேரமே ஒழியல. என்னத்தச் சொல்ல?’’ என்று புலம்பல் வசனம் பேசுவோமே தவிர, செயலாற்று திறன் அதாவது, கிரியாசக்தி என்பது நம்மிடம் குறைவு.

செயலாற்றும் திறனும் அமைந்து விட்டால் நமது உள்ளம் இறைவன் நடனமாடும் ஆனந்தக் கூடமாக அமைந்து விடும். பராசக்தியை அர்த்த நாரீஸ்வரக் கோலமாகச் சொல்லத் தொடங்கிய திருமூலர், இப்பாடலில் மேலும் மூன்று சக்திகளாக விவரித்ததில், மற்றொரு சூட்சுமமும் உண்டு. பலராலும் பாராயணம் செய்யப்படும் சாக்த மந்திர நூலான தேவி மாஹாத்மியத்தின் ஆரம்பத்தில், ‘‘யா தேவி ஸர்வ பூதேக்ஷு புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ’’ என்று வரும்.

எந்த தேவி எல்லா ஜீவராசிகளிலும் புத்தியின் வடிவமாகப் பரிணமித்து இருக்கின்றாளோ, அந்தத் தேவியை நமஸ்கரிக்கின்றேன் என்பது அதன் கருத்து. மிகவும் பொருள் பொதிந்த சொற்கள் அவை. அனைவரின் புத்தியிலும் உறைந்திருப்பவள் அம்பிகையே. அவள் யாருக்காவது தண்டனை கொடுக்க வேண்டுமென்றால், கையில் குச்சியையோ துப்பாக்கியையோ தூக்கிக் கொண்டு வந்து தண்டனை கொடுக்க மாட்டாள். தண்டனை பெற வேண்டியவனின் புத்தியைக் கெட்ட வழியில் திருப்பி விட்டு விடுவாள்!

இதை உணர்ந்த நமது முன்னோர்கள் ‘‘தெய்வமே!  எனக்கு நல்ல புத்தியைக் கொடு!’’ என்று வேண்டினார்கள்.  நாமோ ‘‘ஆமாம்! அவங்க அவங்க கிட்ட எது இல்லையோ அதைத்தானே கேட்கவேண்டும்,’’ என்று, அவர்களைக் கிண்டல் செய்கிறோம். என்ன செய்வது?

நம் புத்தியில் பரிணமிக்கும் அவளே ஞானசக்தியாகவும், இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் வெளிப்படுகிறாள். அதை உணர்ந்து அவளைச் சரணடைய வேண்டியது நமது பொறுப்பு. அவ்வாறு சரணடைந்தால், நல்லதைச் செய்யும் சக்தி தானே வந்துவிடும். பிறகு நமது உள்ளம் ஆனந்த அரங்கமாகிவிடும் என்கிறார் திருமூலர். இவ்வாறெல்லாம் சக்தியின் பெருமையைச் சொல்லியும் திருமூலருக்குத் திருப்தி இல்லை.

சிந்தையில் குடிகொண்ட தேவியை மேலும்
விவரிக்கத் தொடங்குகிறார்.
சிந்தையின் உள்ளே திரியும் சிவசக்தி
விந்தையும் நாதமுமாயே விரிந்தனள்
சந்திரபூமி சடாதரி சாந்தவி
அந்தமொடு ஆதியதாம் வண்ணத்தாளே
               (திருமந்திரம் 1138)

கருத்து: அடியார்களின் சிந்தையில் கோயில் கொண்ட அம்பிகை, அவள் ஒளியாய், ஓசையாய் உலகளாவி நிறைந்து நிற்பவள். சந்திரமண்டலத்தில் ஒளியாய் இருப்பவள். பூமண்டலத்தைக் காப்பவள். சடாமுடி கொண்டவள். சாந்த குணம் கொண்டவள். முடிவும் முதலும் மூலமும் ஆனவள். வடிவழகு கொண்டவள். மேம்போக்காகப் பார்த்தால், இப்பாடல் சாதாரணமாகத் தோன்றினாலும், அபூர்வமான தகவல்களைக் கொண்டது.

பாடலின் தொடக்கத்தில் ‘திரியும்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. நாம் சாதாரணமாகப் பேசும் போது கூட ‘‘என்னப்பா இது! அவன் பாட்டுக்கு இஷ்டம் போலத் திரியறான்’’ என்போம். அதுபோல நம் சிந்தையின் உள்ளே இருந்து கொண்டு, விருப்பப்படி நம்மை ஆட்டிப் படைக்கிறாள் எனச் சொன்ன திருமூலர், ஒளியும் ஓசையுமாக இருப்பவள் அந்த அம்பிகை என்கிறார்.

அந்தப் பெரும் ஜோதியையும் நாதத்தையும் நாம் கண்டு கேட்டு உணர முடியாமல், எல்லை அறியாது தவிக்கும் போது, குளுமையான சந்திரனைக் காட்டி, அதன் ஒளியாக இருப்பவள் அம்பிகை என்று கூறி, அனைத்திற்கும் மூலமாக, காரணமாக இருப்பவள் அந்த அம்பிகை. அவளுக்கு ஆதியும் கிடையாது. அந்தமும் கிடையாது. சாந்த குணமாகக் கொண்ட வடிவுடை
நாயகி அவள் என திருமூலர் நம்மை அம்பிகையின் திருவடிகளில் ஆற்றுப்படுத்துகிறார்.

(மந்திரம் ஒலிக்கும்)

பி.என்.பரசுராமன்