ஆசானுக்கே அர்த்தம் அருளிய அருமை சீடன்



‘நான் இப்போது நிற்பது கச்சி மாநகரமா! முக்தி பூமியான காஞ்சியா!! அதோ தேவாதிராஜன் வரதராஜன் விமானம் தெரிகிறதே!’’ என்று ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை தெளிந்து கண்களில்
நீர் வழிய நின்றார். சீதையைக் கண்ட பின்பு பெருமாளை சந்திக்கும் முன்பு மதுவனத்தில் புகுந்த மாருதியைப் போலவும், ராவணவதம் கேட்ட சீதா பிராட்டியார் போலவும் சந்தோஷமானார். என்ன செய்யப் போகிறோம் என்று அறியாதபோது வேடுவ, வேடுவச்சி உருவில் தேவாதிராஜனும், பெருந்தேவி தாயாரும் ஆட்கொண்டதை நினைத்து பலவாறு புலம்பி அழுதார்.

நானும் அவர்களை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே! என்னே! என் மடமை! பகவானின் இந்த ஸௌலப்யம் (சுலபமாக தரிசனம் கிடைக்கும் தன்மை) கிருஷ்ணாவதாரம் போல உள்ளதே என்று புலம்பினார். சுவாமி நம்மாழ்வார், கிருஷ்ணன் உரலில் எளிதாகக் கட்டுப்பட்ட நினைத்து ‘‘எத்திறம் உரவினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே!’’ என்று பகவானின் எளிமையை நினைத்து ஆறு மாதகாலம் மூர்ச்சித்து இருந்திருக்கிறார்.

ஸ்ரீராமானுஜர் தன்னைத்தானே மெல்ல தேற்றிக்கொண்டு எழுந்து, ‘‘ஹே கிருஷ்ணா, ஹே யாதவக் குலத்தோன்றலே, அர்ஜுனனை உயவடைய வைத்ததுபோல எனக்கும் அருளினீரே,’ என்று பெருமகிழ்ச்சி கொண்டார். தன்னுடைய அந்த உணர்வை கீழேயுள்ள ஸ்லோகங்களால் வெளிப்படுத்தி பகவானைத் தொழுதார்.

‘‘ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்ரம் ஹே க்ருஷ்ண, ஹே யாதவ ஹே ஸகேதி
அஜானதா மஹிமானம் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரணயேன வாபி
யச்சாபஹாஸாந்த மஸக்ருதோஸி விஹார ம்ய்யாசன போஜனேஷு
ஏகோதவாய் யச்யுத தத்ஸமகவும் தத்க்ஷா
மயே த்வாமஹம ப்ரமேயம்’’

அதாவது, ‘‘அச்சுதனே! உன்னுடைய இந்த மஹிமையை அறியாத நான், கவனமின்மையாலும், அன்பினாலும் உன்னை நண்பனென எண்ணி, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, நண்பா! என்று விளையாடும்போதும், படுத்திருக்கும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும், உண்ணும்போதும், பலர் முன்னிலை யிலும் உன்னை அவமதித்திருக்கிறேனே, அவை அனைத்தையும் பொறுத்தருளும்படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று அர்ஜுனனைப்போல் வேண்டிக் கொண்டார்.

அர்ஜுனனை பகவான் தன் எளிமையாலே பிரமிக்கச் செய்தபடி, என்னையும் ஆட்கொள்வார் என்று தமக்குள்ளேயே தேற்றிக் கொண்டார். காஞ்சியிலுள்ள பெரிய ராஜமார்க்கத்தில் நடந்தார். பல்லவ ராஜ்ஜியத்தில் ராஜமார்க்கம் என்பது அயோத்தியிலுள்ள ராஜவீதியைப் போன்றதொரு பெரிய வீதி. அத்திகிரி பேரருளாளன் சந்நதியில் வந்து நின்று திருப்பொலிந்த சேவடிகளை சேவித்து ஆனந்தக் கண்ணீர் மல்கியவராக புளகாங்கிதமானார். மீண்டும் மீண்டும் ஆனந்தத்தாலே உவகையடைந்தார்.

பகவான் விடியற் காலையிலேயே சட்டென்று மறைந்ததன் கருத்தறிந்து மீண்டும் அந்தக் கிணற்றிலிருந்து தீர்த்தத்தைக் கொண்டுவர துடித்தார். ஏதோவொரு பேரின்பத்தில் தோய்ந்தெழுந்தபடி இருந் தார். எந்தக் கிணற்றின் நீர் பருகுவதற்கு ஏற்றதோ, எதனால் பெரிய பிராட்டியார் உவகை அடைவார்களோ, அந்தக் குறிப்பறிந்து, தினமும் திருமஞ்சனத்திற்காகவும், பிரசாதம் செய்வதற்காகவும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

பகவானும் திருவுள்ளம் உகந்தார். இந்த தண்ணீரின் சுவை மிகமிக அருமை என தேவாதிராஜன் நினைத்தான்போலும். தளிகை அமுது பிரசாதங்கள் முன்பைவிட மிகவும் சுவையாக இருந்தன. திருவாராதனத்தை பகவான் மிகவும் உகந்து ஏற்றுக் கொண்டார். சாலைக் கிணறு தண்ணீரையே தினமும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஜலத்தின் சுவை, மற்றொன்று ராமானுஜரின் கர ஸ்பரிசம். இவர் கைப்பட்டதன் காரணமாகவே நன்றாக உள்ளதென மற்ற சந்நதிகளின் சுவாமிகளும் நம்பினர். இந்த சாலைக் கிணறு இன்றும் தேவாதிராஜன் சந்நதியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஸ்ரீராமானுஜர் தினந்தோறும் சாலைக் கிணற்றிலிருந்து நீர் இரைத்துக் கொண்டு பெரிய பெருமாள் (காஞ்சி வரதன்) சந்நதியிலுள்ள திருமடைப்பள்ளியில் கொண்டு சேர்த்து வந்தார். அந்த ஜலத்தைக் கொண்டுதான் பரிசாரகர்கள் அமுது படியை செய்து எம்பெருமானுக்கு சமர்ப்பித்தனர். மகானாகிய, அவதார புருஷராகிய ஸ்ரீ ராமானுஜரே இவ்வாறு நடந்து கொண்டது, ஒவ்வொரு பக்தனும் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு தகுந்த உதாரணம். மகானாக இருந்தாலும் பகவத் சந்நதியில் எல்லோரும் சமமே.

யாரும் தன்னைத்தானே மகான் என நினைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைவூட்டுகிறார் போலும்.இதற்கு நடுவே, காசி க்ஷேத்ரம் செல்ல எண்ணிய யாதவப் பிரகாசர், நடுவே ராமானுஜரைக் காணாது, தேடித்தேடி அலைந்தார். சற்றே கவலை கொண்டாலும், உடனே மகிழ்ச்சியும் அடைந்தார். காரணம், ராமானுஜரை நாம் முடிக்க எண்ணினோம்.

 ஆனால், காலமே அவரை முடித்து விட்டது என்று நினைத்துக் கொண்டார். பிறகு தேடுவதுபோல் தேடி, போலியாக சிறிது நேரம் துக்கப்பட்டு, ஒருநாள் கழித்து மற்ற சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு காசி சென்றடைந்தார்.

அங்கு சென்று பாடங்களை நடத்திவிட்டு மீண்டும் காஞ்சிபுரமே செல்ல ஆயத்தமானார். மீண்டும் மூடுபல்லக்கில் எழுந்தருள, யாதவப் பிரகாசரின் சிவிகை வேத கோஷங்களுடன் புறப்பட்டது.

இப்படி இருக்கையில், யாதவப் பிரகாசர், ராமானுஜருடைய குடும்பத்தாருக்கு என்ன பதில் உரைப்போம்? என்னை நம்பி அவருடைய தாயார், ராமானுஜரை ஒப்படைத்தாரே! காணவில்லை, வழி தவறிச் சென்று விட்டார். தேடிப்போன இடங்களிலெல்லாம், என் சிஷ்யர்களும் காணக் கிடைக்காது திரும்பி வந்து விட்டனர்’ என்று சொன்னால் அது தன் கையாலாகத தனத்தை வெளிப்படுத்துகிற மாதிரி ஆகிவிடுமே!’ என்று மிகவும் வருத்தத்தோடு இருந்தார்.

அப்படி ஒருநாள் தன் சிஷ்யர்களுடன் கங்கையில் நீராடும்போது, மாக ஸ்நானம் செய்து மனமுருக கங்காதரனை பிரார்த்தித்தார். வேதத்திலுள்ள ‘அகமர்ஷண ஸூக்தம்’ என்கிற பாகத்தை உச்சரித்துக் கொண்டே ஸ்நானம் செய்தபோது, கோவிந்தன் கையில் (ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர்) ஒரு லிங்கம் வந்து சேர்ந்தது.

மிகவும் ஆச்சர்யம் அடைந்து அந்த லிங்கத்தை தன் குருநாதன் யாதவப் பிரகாசரிடம் காட்டினார். யாதவப் பிரகாசரும், சந்தோஷமுற்று, ‘‘ஹே! கோவிந்தரே! கங்காதரனே, கங்கா ஸ்நானத்தின் பலனாக உம் கைக்கு கிடைத்திருக்கிறார். இப்படி யாருக்கும் கிடைத்ததில்லை என்பதால், நீர் ஒரு தெய்வப் பிறவி,’’ என்று சொல்லி பாராட்டினார்.

யாதவப் பிரகாசரின் ஏனைய சீடர்கள் அனைவரும் இதைக் கண்டு அதிசயித்தனர். ‘‘சிவபெருமானின் பூரண கடாட்சம் உமக்கு வாய்க்கப் பெற்றதே! அதுவே நீர் செய்த பாக்யம்’’ என்று கூறி ஓரிடத்தில் அந்த லிங்கத்தை தற்காலிகமாக பிரதிஷ்டை செய்து, ருத்ரம், சமகம் சொல்லி அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார் யாதவ பிரகாசர்.

 பிறகு, ‘‘இந்த லிங்கம் உம்மிடமே இருக்கட்டும்’’ என குருநாதன் சொல்லி கோவிந்தரை மகிழ்வித்தார். கோவிந்தரின் கையில் இப்படி லிங்கம் கிடைத்ததால், இவரை ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்று அழைத்தனர்.யாதவப் பிரகாசர் தன் சிவிகையில் ஏறிக்கொள்ள, எல்லா சீடர்களும் ‘சிவபெருமான் வந்தார். பார்வதி நேசன் வந்தார், கங்காதரன் வந்தார்.

ஹைமவதீ மணாளன் வந்தார்’ என்று கட்டிய வசனத்தை கோஷித்தார்கள். இந்தப் பட்டாளம் மீண்டும் காஞ்சிபுரம் நோக்கிப் புறப்பட்டது. ராமானுஜர் இல்லாமலேயே, திரும்பிச் செல்கிறோமே என்கிற நெருடல் யாதவப் பிரகாசரிடம் இருந்தது. எனினும், எல்லாம் கங்காதரன் செயல் என்று தனக்குள் சொல்லி மனதைத் தேற்றிக்கொண்டார்.சில நாட்கள் கடந்தன. யாதவப் பிரகாசருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. வழியில் ஒருமாத காலம் ஒரு கிராமத்தில் தங்கி நோய் தீர்ந்தவுடன் மீண்டும் புறப்பட்டனர்.

நான்கு மாதங்கள் கடந்து காஞ்சிபுரத்திற்கு வந்தனர். அங்கே ராமானுஜரைக் கண்டதும் அனை வருக்கும் பேராச்சரியம். முக்கியமாக யாதவப் பிரகாசர், கண்களில் நீர்த் துளிக்க, ‘‘எப்படி காணாமல் சென்று விட்டீர். எங்கு போனீர்? சாப்பிடுவதற்கு என்ன செய்தீர்? எப்படி, யார் துணையுடன் இங்கு வந்து சேர்ந்தீர்?’’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் தன் திகைப்பை வெளிப்படுத்தினார். 

ராமானுஜரோ, எல்லா துக்கங்களையும் மறைத்துக்கொண்டு, இவர்தானே கொல்ல நினைத்தார் என்கிற உண்மையையும் மறைத்துக் கொண்டு, நடந்த வரலாற்றை அப்படியே கூறி, இந்த காஞ்சி வரதனும் பெருந்தேவியும் வேடுவ, வேடுவச்சியாக வந்து தம்மைக் காப்பாற்றிய அற்புதத்தைக் கூறி விம்மி அழுதார். யாதவப் பிரகாசருக்கு நெஞ்சில் முள் தைத்தாற்போன்று இருந்தது. இருப்பினும் அதை வெளிக் காட்டிக்கொள்ள இயலாதிருந்தார். ராமானுஜரோ நடந்தவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீண்டும் யாதவப் பிரகாசரிடமே தொடர்ந்து படிக்கலானார்.

கோவிந்தன் என்கிற உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார், தம் கிராமமாகிய மழலை மங்கலம் அல்லது மேலமங்கலம் (தற்போது மதுர மங்கலம் என்றழைக்கப்படுகிறது) சென்று நடந்தவற்றை குடும்பத்தினரிடமும், கிராம மக்களிடமும் கூற அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அந்த லிங்கத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். கோவிந்தரும் மிகுந்த பக்தி சிரத்தையுடன் லிங்கத்திற்கு செய்ய வேண்டிய அபிஷேகங்களைச் செய்து பிரசாதங்களை நிவேதித்தார்.

இப்படி கங்காதரனின் பக்தியில் அவர் திளைத்திருந்தபோது, ஒருநாள் கனவில் சிவபெருமான் தோன்றினார். ‘‘உள்ளங்கை கொணர்ந்த நாயனாரே! எம்மையடைந்து நீர் மிகவும் சந்தோஷத்துடன் உள்ளீர். யாமும் உம் பக்தி கண்டு பரவசமடைகிறோம். என் ரூபமான லிங்கம் உம் கையில் உள்ளது.

அந்த லிங்கத்தை காளஹஸ்தி என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து ஒரு கோயிலையும் நிர்மாணம் செய்வீராக’’ என்று கூறினார். இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. ஒரு கிராமமே காளஹஸ்தியை நோக்கி, கோவிந்தன் தலைமையில் புறப்பட்டது.  காளஹஸ்தி வந்து சேர்ந்த பிறகு சுவாமியை எங்கு பிரதிஷ்டை செய்வது என்று சிவபெருமானை நோக்கி கண்மூடி, நெக்குருக, மனமுருக வேண்டினார் கோவிந்தன்.

சிவபெருமானும் ஓரிடத்தைக் காட்டிக் கொடுத்தார். அங்கேயே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்படி அமைந்ததுதான், தற்போதுள்ள காளஹஸ்தி க்ஷேத்ரம். கேட்டவருக்கு அதை அப்படியே அள்ளித்தரும் பெருமானாகவே இங்கு சிவபெருமான் பிரதிஷ்டையானார். அதற்குக் காரணம் கோவிந்தனின் உள்ளொழுகிய பிரார்த்தனை தான்.

 யார் இங்கு வந்து கஷ்டத்துடன் மனமுருக பிரார்த்தித்தாலும், அவர்களின் யோக்யதையை ஆராயாமல் உடனே அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று கோவிந்தன் பிரார்த்தித்தபடியால், சிவபெருமானும் அப்படியே அருள்கிறார். இன்றும் பக்தர்கள் மனமுருக பிரார்த்தித்து, வேண்டிய வரம் கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் முன்னேறுகின்றனர். மேலும், இத்தலம் ராகு-கேது தலமாகவும் விளங்குவதால், சர்ப்பதோஷம் உள்ளவர்கள் அந்த தோஷம் நீங்க சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.

சிவபெருமான், உள்ளங்கை கொணர்ந்த நாயனாரையே கோயில் நிர்வாகம் செய்யும்படி செய்து, இலச்சினை, மோதிரம் கொடுத்து அங்கேயே தங்கும்படியும் செய்தார். கோயில் நிர்வாகம் முழுவதையும் கோவிந்தனே கவனித்துக் கொண்டார். இன்றளவும் சீரும் சிறப்புமாக கோயில் கொண்டாடப்படுகிறது.ஒரு சமயம் காஞ்சிபுரம், வரதராஜன் சந்நதியில் கைங்கர்யம் செய்யக்கூடிய இருவர் ஸ்ரீரங்கம் சென்று தன் ஆசார்யரான ஸ்ரீஆளவந்தாரை தரிசித்தனர்.

அவரை நமஸ்கரித்து, ஸ்ரீராமானுஜரைப் பற்றி பலவாறு புகழ்ந்து கூறினர். ‘‘ஸ்ரீராமானுஜர் என்பவர் யாதவப் பிரகாசர் என்கிற வேதாந்தியிடம் பாடம் பயின்று வருகிறார். யாதவப் பிரகாசரோ, வேதங்களிலுள்ள முக்கிய பகுதிகளுக்கெல்லாம் தவறான அர்த்தங்களையே போதித்து வருகிறார்.

அதற்கு ஸ்ரீராமானுஜர் கண்டனமும் தெரிவித்து வருவதுண்டு. இப்படித்தான் ஒருசமயம், ‘ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்ம’ என்ற வேத வாக்கியத்திற்கு தப்பான அர்த்தங்களை யாதவப் பிரகாசர் போதிக்க, அதைக் கண்டித்து ஸ்ரீராமானுஜர் மிகச் சரியான விளக்கங்களை மிக நேர்த்தியாக அளித்தார். அதைக் கேட்டு கோபமடைந்த யாதவர் ஸ்ரீராமானுஜரை மிரட்டவும் செய்தார்,’’ என்று நடந்த விஷயங்களையெல்லாம் கூறினர்.

(வைபவம் தொடரும்)

கோமடம்
மாதவாச்சாரியார்