தமிழும், தாம்பூல எச்சிலும்!



வான் தொட்டுப் படர்ந்திருக்கும் மேலை மலையின் கோல எழில்! அதிலிருந்து ‘இழும்’ எனும் இனிய ஓசையோடு தரை இறங்கி வருகின்றது அகத்தியர் அருவி.முற்றுமங்கல நாண்சாற்றி குலவுகின்ற உலகம்மையின் தாள் தொட்டு வணங்கச் செல்லும் பொருணையோடு போய், அருவி நீரும் சங்கமிக்கிறது.

தெள்ளிய நீரில் துள்ளிக் குதிக்கின்றன வெள்ளிக் கயல்கள்! அன்னை உலகம்மையின் கண்களாய் அவற்றை இரசித்துக் கொண்டிருந்த நமசிவாயர், சட்டென எழுந்து வழிமறிக்கும் மந்தியினங்களை விலக்கிக் கொண்டு, படிகளின் வழியே மேலேறி வரலானார்.மணிகள் ஒலி சிந்த, கோபுர வாயில் கதவங்கள் தாள் விலகின.

‘‘பேயோ எனக்குழறும் பேதாய்     உனக்கு மொரு
வாயோ? என்றென்னை இகழ் வாயோ? மகிழ்வாயோ?
தூயோர் தொழும் உலகே! சொல்வதெல்லாம் சொல்வேன்
காயோ பழமோ? நீ கட்டளை
சய் காரியமே!’’

- என்று அன்னை உலகாம்பிகையைப் பாடி எல்லா நிகழ்வுகளுக்கும் அவளையே பொறுப்பாக்கி, பணிவே வடிவாக நிற்கின்ற நமசிவாயர், கோபுரத்தின் வாயில் திறந்தும்கூட, அன்னையின் மீதுள்ள அளப்பரிய பக்தியினால், உடனே உள்ளே ஓடிப்போய் அம்பிகையைத் தரிசிக்க விரும்பினாலும்கூட, அவரின் பணிவும் பண்பும் கால்களுக்குத் தளையிட்டு விட்டன.கொடி மரம் தெரிகின்றது. கோல விளக்குகள் எரிகின்றன.

குறுநகைச் செல்வி கூவி அழைக்கிறாள் அவரை. ஆனாலும் ஓடிவந்த அவசரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, வெளியிலேயே நிற்கிறார். காரணம், நமசிவாயரின் பண்பு. நெஞ்சு நிறையப் பக்திப்புனல் பெருகி நிற்பினும்கூட, வாய் நிறையத் தாம்பூல எச்சில் அல்லவா இருக்கின்றது!

இனிமேல் அத்தனை படிகளையும் இறக்கித் தாண்டிப் போய்த் தாம்பூல எச்சிலைக் கொப்புளித்து வாயைச் சுத்தம் செய்தால்தான் மறுபடியும் ஆலயத்தினுள் நுழைய முடியும். இவற்றைச் செய்து முடித்து வரும்வரை, நெஞ்சில் தளும்பி நிற்கும் பக்திப் புனல் தளும்பாது நிற்குமோ? பல்லிடுக்கில் வந்து நின்று இடிக்கின்றது பாத்தமிழ். அதனால் ஆலயத்தினுள் செல்லாமலேயே,  வெளிப்புறமாக வலம் வந்து கொண்டே அன்னை உலகம்மையைப் பற்றிப் பாடலாம் என்று தீர்மானித்தார்.

உடனே கிளம்பிச் சுற்றுமதிலுக்கு வெளிப்புறமாக வலம் வரக் கிளம்பிவிட்டார். வாய் நிறையத் தாம்பூலம்! நெஞ்சு நிறையப் பக்தி வெள்ளம்! மேலைவான் பொன்னிறச் சால்வை போர்த்திருந்தது. இன்னும் சிறிது நேரம்தான். பிறகு இரவுக் கன்னி தனது கரிய மேலாடையினால், வானில் கருமை வண்ணத்தைப் பூசிவிடுவாள். பொன்னிறச் சால்வை மறுநாள் காலையில் கீழை வானுக்குப் போய்விடும்.

பொன்னும் இப்படித்தானே! இருப்பது போல் இருந்து மறையும். மறைவதுபோல் காட்டித் தோன்றும். இன்று ஓரிடம்! நாளை ஓரிடம்! இந்த நிலையாத பொன்னை எண்ணி எண்ணி, என்றும் நிலைப்பொன்னாக விளங்கும் அன்னை உலகாம்பாளை மறப்பவர் எத்தனை பேர்! சிந்தித்தார் நமசிவாயர். சிரிப்பு வந்தது. உடன் தாம்பூல எச்சிலும் தளும்பியது. பின்னால் திரும்பி உமிழ்ந்துவிட்டு,

‘‘பொன்னை நொந்து கொண்டாலப் பொன் வருமோ
முன்னை வினை தன்னை நொந்து
கொண்டால் அத்தன்மை நன்மை ஆயிடுமோ!
என்னை நொந்து கொள்கினால் இன்பமின்றித் துன்பம்வரின்
உன்னை நொந்து கொள்வேன் உலகுடைய மாதாவே!’’

- வலம் வந்து கொண்டே, அடுத்தடுத்துப் பாடுகிறார். தாம்பூல எச்சிலும் அடிக்கடி ஊறுகிறது. திரும்பித் திரும்பி உமிழ்ந்து கொண்டே வருகிறார்.ஆலய வலம் வருகின்ற தனக்குப் பின்னால் எவரோ தொடர்வது போன்ற மெல்லிய காலடி ஓசை கேட்பதை உணர்கிறார். நின்று நிதானத்துடன் பார்க்கிறார். அவரின் புறக்கண்களுக்கு எவருமே தென்படவில்லை. ஆனால், நமசிவாயர் நடக்கும்போது தொடர்கின்றன காலடி ஓசைகள். அவர் நின்று திரும்பினாலோ, பின்னால் எவரையும் காணவில்லை.

வெறும் பிரமைதான் என ஒதுக்கிவிட்டு, பாடியபடியும் தாம்பூல எச்சிலை பின்னால் திரும்பித் திரும்பி உமிழ்ந்தபடியும் வலம் வந்தார். தன் தாபம் தீரும்வரை, அம்பிகையாம் உலக நாயகியை அன்னைத் தமிழால் பாமாலை தொடுத்துப் பரவிக்கொண்டே வந்தார். கால்கள் ஓயும்வரை, உலகம்மையின் ஆலயத்தை வெளிப்புறமாக வலம் வந்துகொண்டே இருந்தார்.மறுநாள் காலை பொல்லெனப் புலரத் துவங்கிய வேளையில் அம்பிகையின் கருவறை மணிக்கதவுத் தாளை விலக்கி உள்ளே நுழைந்த அர்ச்சகர் திடுக்கிட்டார்.

மஞ்சளும், குங்குமமும், மலர்களும் சூடி, பட்டும் பொன்னும் அணிந்து சர்வமங்கள நாயகியாய் முந்தின நாள் காட்சியளித்த அன்னை உலகநாயகி, இன்று காலையில் பட்டாடை முழுவதும் தாம்பூல எச்சில் வழிய நின்று கொண்டிருந்தால் அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும்!
பூட்டிய கதவு பூட்டியபடி இருக்க இப்படி வந்து அபசாரம் செய்த பாவி யார்?

அப்போது அங்கே காலையில் தரிசனம் பண்ண வந்த மதுரைச் சிற்றரசனிடம் முறையிட்டார்.வலிமையான காவலையும் மீறி வந்து இப்படி ஓர் அபசாரத்தைச் செய்தது யார் என்று மன்னனும் திகைத்தான். மனம் பதைபதைத்தான். உண்மையை அறிய ஆசைப்பட்டான்.அதனால், அன்று தானே காவல் புரிவது என்று முடிவு செய்தான். சற்றும் கண் அயராது அம்பிகையின் சந்நதியிலேயே குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருந்தான். எனினும் அந்த இரவு வேளையில் மன்னனையும் மீறி வந்த உறக்கம் அவரைச் சிறிது ஓய்வெடுக்க வைத்து விட்டது.

அந்த வேளையில்தான் அன்னை உலகம்மை மன்னனின் கனவில் தோன்றினாள். ‘‘மன்னவனே, நான் தோன்றி, நாதன் தோன்றி, நானிலமும் தோன்றும்போதே நற்றமிழும் தோன்றி விட்டது. நாதன், உயிர்க் கணமானார். நான், அவ்வுயிர்க் கணங்களின்  சக்தி ஆனேன். சக்தியின் ஆற்றலை வெளிப்படுத்த  மொழி ஆனேன். தமிழ் மொழி ஆனேன். எம்மொழிக்கும் இறைவி நானே!

ஆயினும் முன் தோன்றிய தமிழே நான் ஆவேன்.
 நானே தமிழ் ஆனதால் ஒரு தமிழ்க் குமரனை
ஈன்றெடுத்து தமிழ்த்தாயும் ஆனேன். தமிழ்
ஒலிக்கும் இடமெல்லாம் நானே! மழலை போலப் பேசுவார் சிலர்.
 மாண்புறத் திருத்தமாய்ப் பேசுவார் சிலர். இலக்கணமாய்ப் பேசுவார் சிலர்.
எல்லோரும் எனக்கு ஒன்றே.
ஆயினும் இலக்கியத் தமிழ்தானே உலகம் போற்றும் உயரிய தமிழ்! எனக்கும் அது
தான் உயிர்த் தமிழ்! பாடும் புலவர்கள் என்றால்
உயிர். என்னை நன்றாகப் போற்றுகிறவர்கள் அவர்கள்தாமே!

 என்னைச் சேவிக்கும் பக்தன் நமசிவாயன். நேற்று மாலையில் ஆலயத்தை வலம் வந்தபோது, நற்றமிழ்ப் பாடல்களால் என்னை அழைத்தான். தமிழில் மயங்கிப் பின்னே சென்றேன். அவனது புறக்கண்கள் என்னை உணராமையினால் தாம்பூல எச்சிலை உமிழ்ந்து உமிழ்ந்து சென்றான். தமிழ் கேட்கும் ஆசையால் நானே இதைப் பொருட்டாக்கவில்லை. நீ ஏன் வீணாய் நோகிறாய்? என்னைத் தனது நெஞ்சிலும் நாவிலும் கொண்டிலங்கும் அவனை நீயும் போற்றுக,’’ என்று கூறி மறைந்தாள்.

தன்னைத் தமிழ்த்தாய்  என்று பிரகடனம் செய்து கொண்ட அன்னை உலகாளின் ஆணையைச்  சிரமேற்கொண்டு, புலவர் நமசிவாயரை உடனே அழைத்து வரப் பணித்தான் மன்னன்.
‘‘நேற்றிரவு நமதன்னையின்மீது தாம்பூல எச்சிலை உமிழ்ந்து தவறு செய்ததாகக் குற்றம் சுமத்தப்படுகிறீர். இதற்கு உமது பதில் என்ன?’’ என்று கோபம் கொண்டவர் போல் நடித்து வினவினான் மன்னன்.

‘‘நானா செய்தேன்?’’ இரண்டே வார்த்தைகள்தான்! ஆழமான வருத்தமுடன் அதிர்ந்து வந்து விழுந்தன புலவரின் வாயிலிருந்து.அரசனோ, பூச்செண்டு ஒன்றினை வரவழைத்து அதனை அம்பாளின் திருக்கரத்தில் அமைத்துப் பொன் நூலினால் கட்டுவித்தான். பிறகு புலவரை நோக்கி,  ‘‘இத்தவற்றினை நீர் செய்யவில்லை என்றால், அதை நமது அன்னையே மெய்ப்பிக்கட்டும்.

நீர் தேவதேவியின் மீது பொற்றமிழால் புகழ் பாடும். நீர் பாடப்பாட ஒவ்வொரு நூலாக அறுபட்டு, அன்னையின்  கரத்திலுள்ள பூச்செண்டு உமது கரத்திலே தானாக வந்து விழவேண்டும். இல்லை எனில்...” என்று எச்சரிப்பதுபோல் கூறினான் மன்னவன்.

‘‘என்றைக்கும் நீ துணை அம்மா. என்
ஆவி இறந்திடும் அன்றைக்கும் ஓடிவந்து அஞ்சேலென்பாய்...’’
 என்று பாடத் துவங்கிவிட்டார் புலவர்.
‘‘அழுது புலம்பில் விடுமோ யமன்? இனியாயினும் என்
பழுது களைத்து புரப்பாய் உலகம் படைப் பவளே!’’
- என்று பாடி முடித்தபோது பூச்செண்டு வந்து புலவரின் கரத்திலே விழுந்தது.
‘‘அன்னையின் அருளே அருள்!’’ என்று
பூரிப்புடன் கூறினான் மன்னன்.

‘‘தமிழ் அன்னையின் அருளே அருள்’’ என்று, நெகிழ்ந்து உருகினார் புலவர்.
‘‘ஆம்... ஆம்... அன்று ஞானப்பால் ஊட்டி ‘அமிழ்தமாய்த் தமிழ்மழை பொழிக’ என்று சம்பந்தனை ஞானசம்பந்தப்  பெருமானாக்கிய அன்னை அல்லவா! இன்று பூச்செண்டு அளித்து உம்மையும், உம் தமிழ்ப் புலமையையும் போற்றிவிட்டாள்’’என்றான் மன்னன்.

‘‘குமர குருபரனின் மழலைத் தமிழ் கேட்க, திருமலை மன்னன் மடிமீது சிறு பெண்ணாய்
வந்தமர்ந்த தமிழணங்கு, என் தமிழ்ப் பாடலுக்கும் மயங்கியது விந்தை அல்லவே’’ என்றார் புலவர்.‘‘சங்கப்பலகை மீதமர்ந்து அகத்தியம் அரங்கேற்றத் தனது மணாளனை விடுத்தவர்.

அரும் பெரும் சுடரை ஒரே தமிழ்ச்சுடராய் ஆக்கி உலகிற்களித்தவள். அவள் தமிழின் தாய். அவளின் கணவனும் மகனும் தமிழ் பரப்புபவர்கள்’’ என்றான் மன்னன். 
‘‘நன்று சொன்னீர்கள் மன்னவா. ஆகமங்களும், திருமுறைகளும் அழகிய தமிழால் அன்னையைப் போற்ற என்ன காரணம்? அவள் தமிழின் தாய் என்பதனால்தான்’’ என்றார் புலவர்.

‘‘உலகோ மாப்பெரிது! உயிரினங்களோ அளப்பரியன. பேசப்படும் மொழிகளோ பலப்பல. அப்படி இருக்க, உலகின் இறைவியை எப்படி தமிழ்த்தாய் எனலாம்?’’ கூடியிருந்தோரில் ஒருவர் எழுப்பிய வினா!

‘‘அருமையான வினா இது! எல்லா மக்களுக்கும், எல்லா மொழிகளுக்கும் அவள்தான் இறைவி. அதில் ஐயமேதும் வேண்டாம். ஒரு தாய் பல குழந்தைகள் பெறுவது இயற்கைதானே! இராமன், சேது, அபிராமி, உமா, கண்ணன், காயத்ரி - இங்கே இராமனின் தாய்தான் காயத்ரி எனும் கடைசிக் குழந்தைக்கும் தாய் ஆகிறாள்.

இராமன் முதலில் பிறந்ததனால் மூத்தவன் என்று புகழ். ஆனால், மற்ற எந்தக் குழந்தையையும் அன்னை வெறுக்கவில்லை. இராமன், ‘என் அம்மா’ என்று கொண்டாடுகிற உரிமையை மற்ற பிள்ளைகளும் கொண்டாடும். அதையும் அன்னை உவப்புடன் ஏற்பாள். இராமனும் மறுக்க வேண்டியதில்லை.

கல்தோன்றி மண்தோன்றும் முன்பே கனகத்தமிழ் தோன்றிவிட்டது. அதன் பின்னே ஆயிரம் மொழிப்பிள்ளைகள். அன்னைக்கு அனைவரும் ஒன்றே. ஆயினும் மூத்தப்பிள்ளையின் மீது அதிகப்படியான பாசம். அவள் அன்னை இல்லையெனில் எனது எச்சிலை, பிள்ளையான நான் உமிழ்ந்த எச்சிலை எப்படிச் சகிப்பாள்? பிள்ளையின் எச்சில் பெற்றவளுக்கு மட்டுமே அருவறுப்பதில்லை. போதுமோ?’’ என்று கேட்டார் புலவர் நமசிவாயர்.

‘‘அகில லோக நாயகி, அன்னை பரமேஸ்வரி, ஆதிசக்தி நாயகி,
முத்தமிழை  முன்னே ஈன்ற
முத்துநகை உலகம்மை! தயாபரி! தமிழன்னை!’’
என்று மன்னன் முழங்கினான். சூழ்ந்து நின்ற
அடியவர் கூட்டமும் விண்ணதிர முழங்கியது.
‘‘நான்தானே தமிழ்த்தாய்! என்னை
அறியீர்களோ தமிழ்ப் புலவர்களே!’’ இப்படிக்
கேட்பது போன்று, தமிழ் பிறந்த பொதிகை மலைச் சாரலில்,
தாமிரபரணி நதிக்கரையில்,
 பாபநாசம் திருத்தலத்தில் புன்னகை பொலிய அருளாட்சி
செய்கின்றாள் அன்னை உலகம்மை!

உமா கல்யாணி