சங்கடங்கள் தீர்க்கும் சந்திரசேகரர்



வானூர் - புதுப்பாக்கம்


பிரபஞ்சத்தையே ஆண்டு அருள்பாலிக்கும் சிவபெருமான் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை சடுதியில் தீர்த்து வருகிறார். அதற்காக பல நாமங்களை தாங்கி உலகம் முழுவதும் அருளாட்சி செய்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வி.புதுப்பாக்கம் கிராமத்தில் சந்திரசேகரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அம்பாள் பெயர் வடிவாம்பிகை. 12ம் நூற்றாண்டில் வெளிக்கொடி எச்சமென நாயக்கர், கூத்தாண்ட குருவப்பா நாயக்கர் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தற்போது இவை சிதிலமடைந்து காணப்பட்டாலும் ஊர் மக்களின் ஒத்துழைப்பால் சிறப்பான வழிபாடு நடந்து வருகிறது.

இங்கு சந்திரசேகரர் சிறிய லிங்க வடிவில் பெருங்கீர்த்தியுடன் திகழ்கிறார். எதிரில் அதிகாரநந்தி அருள்பாலிக்கிறார். அருகில் பலிபீடம் உள்ளது. சுவாமிக்கு இடதுபுறம் வடிவாம்பிகைக்கு தனிச் சந்நதியுள்ளது. இங்கு இளங்குமரி வடிவத்தில் அம்பாள் நின்ற கோலத்தில் இன்முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பானது. சந்திரசேகரர் சந்நதியின் கர்ப்பகிரகத்தின் பின்புறம் பூலோகநாதர் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். வடக்கு திசையில் லேசாக சாய்ந்த நிலையில் அவர் காட்சி தருவது சிறப்பானது.

பக்தர்கள் குறையை காதுகொடுத்து கேட்பதற்காக இந்தக் கோலம் என்பது ஐதீகம்! சக்தி சொரூபமான பெண்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையும் இந்த பூலோகநாதருக்கு உண்டு. திங்கட்கிழமைதோறும் அபிஷேகம், அலங்கார வழிபாடு நடக்கிறது. ஆலய வளாகத்தில் விநாயகர், முருகன், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் தனித்தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன.

 சிவனுக்கு வலதுபுறம் இரட்டை விநாயகர் (இடம்புரி விநாயகர்) அருள்பாலிக்கிறார். மயில்மேல் அமர்ந்த நிலையில் பாலமுருகன் காட்சி தருகிறார். அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர். முருகப் பெருமானின் வாகனமான மயில் தன் வாயில் பாம்பை கவ்விய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகில் பலிபீடம் உள்ளது. ஐயப்பன், நவகிரகம், சனி பகவான், ஆஞ்சநேயர் சந்நதிகளும் தனித்தனியே உள்ளன.

சனி பகவானின் வலதுபுறம் நாகம்மன் உள்ளது. இதன் அருகே ஆலிங்கன நாகம் சிலை வடிவில் உள்ளது. விஷ்ணுவும் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார்.கோயிலுக்கு வெளியேயுள்ள நந்திமண்டபத்தில் அமர்ந்தபடியே நந்தீஸ்வரர் சாளரம் வழியாக சிவபெருமானை தரிசிக்கிறார்.

 பிரதோஷ காலத்தில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடக்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, படுக்கை கல்லில் செதுக்கப்பட்டதாகும். இது பல்லவர் காலத்தை சேர்ந்தது. இத்தலத்தின் விருட்சங்களாக வன்னியும், வில்வமும் விளங்குகின்றன.

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் வி.புதுப்பாக்கம் சந்திரசேகரர் ஆலயம் பற்றிய குறிப்பு உள்ளது. இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், 16ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. கல்வெட்டில் மீன் சின்னமும் உள்ளது. மேலும், அம்மன் சந்நதிக்கு மேல்புறம் மீன்வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மீன் சின்னம் உள்ளதால் பாண்டியர்கள் இப்பகுதியை ஆண்டபோது கோயிலின் ஒரு பகுதியை கட்டியிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் கிடைத்த பல கல்வெட்டுத் தூண்கள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள சிவபெருமான் திருமணத் தடை, குழந்தையின்மை போன்றவற்றை போக்கி சுபிட்ச வாழ்வு தருவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.  12ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயில் இடையில் பல ஆண்டுகளுக்கு யாராலும் கவனிக்கப்படாமல் இருந்துள்ளது. 1935ம் ஆண்டு ஊர் பெரியவர்கள் கோயிலை சுத்தப்படுத்தி திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டு வந்திருக்கின்றனர். இக்கோயிலில் ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் கடந்த 2010ம் ஆண்டு திருப்பணி தொடங்கியுள்ளது.

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலுக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், வானூர் நவக்கொழுந்து ஈஸ்வரர் ஆலயத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண்: 97882 17509.விழுப்புரத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு செல்லும் பேருந்தில் பயணித்து புதுப்பாக்கம் நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம். புதுவையில் இருந்து காட்டேரிக்குப்பம் செல்லும் பேருந்திலும் (வானூர்-ஒட்டை வழி) இக்கோயிலுக்கு வரலாம்.

-சி.பரமேஸ்வரன்
படங்கள்: செல்வகுமார்