ஆனந்தமளிக்கும் ஆன்மிகத் தகவல்கள்



அம்பிகையின் ஆயுதங்கள் தன் திருவடியைத் தஞ்சமடையும் உயிர்களை மாயையில் இருந்து மீட்பவள் அம்பிகை. பக்தர்களைக் காப்பதற்காகத்தான் ஒரு கையை அபய முத்திரையாக வைத்திருக்கிறாள்.

அம்பிகையின் கையில் காட்சி தரும் பாசம் (கயிறு) அங்குசம், சூலம் மற்றும் நீலோத்பல மலர் ஆகிய ஒவ்வொன்றும் ஓர் ஆயுதம்தான்! ஒவ்வொன்றுக்கும் ஓர் மறை பொருள் உண்டு: மனிதனை பாவங்களில் இருந்து மீட்பது பாசம்; ஆணவத்தை அடக்குவது அங்குசம்; அவர்களை தீய வழிக்கு இழுத்துச் செல்லும் சக்திகளை அழிப்பது சூலம்; இவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட மனிதனுக்கு  நல்வாழ்வைத் தருவது நீலோத்பல மலர்.

- சக்தி விண்மணி

அனைத்தும் கோடியே‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க‘ என்பர் பெரியோர். ஆனால், கோடியும் நாட்டி குலம் விளங்கச் செய்பவர் கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூர் ‘கோடி விநாயகர்.‘ இங்கு எல்லாமே கோடிதான். அதாவது கோடி விநாயகர், கோடீஸ்வரர், கோடி தீர்த்தம், கோடி விமானம், கோடி கோபுரம் என்று எல்லாமே கோடியில்தான் இருக்கும். இத்தலத்திற்கு வந்து இந்த விநாயகரை வழிபட்டு, தெய்வங்களை வழிபட்டால் கோடி செல்வங்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

- யோகானந்தம்

அரிய மூலவர்விருத்தாச்சலத்திற்கு அருகே உள்ள பெண்ணாடத்தில் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றும் நேராக தரிசிக்கலாம். இதுபோன்ற அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் இல்லை என்கிறார்கள்.

- டி.பூபதிராவ்

அருள்மழை பொழியும் அஷ்டபைரவர்கள் சேலத்தைச் சுற்றியுள்ள பஞ்சபூதத்தலங்களில் ஆறகழூர், வாயு தலமாகும். முருகப் பெருமான் அவதரிப்பதற்கு முன்னரே தோன்றிய யுகாந்திரப் பழைமை வாய்ந்த திருத்தலம். மன்மதன், ஈசனின் நெற்றிக் கண்ணால் சாம்பலாக்கப்படுவதற்கு முன் மன்மதன், ஈசனை பூஜித்ததால் இத்தல ஈசன், காமநாதீஸ்வரர் என வணங்கப்படுகிறார். ஒரே கோயிலில் அஷ்ட பைரவர்கள் அருள்வது, வேறெங்கும் காணவியலாத அபூர்வம். பைரவர் என்றால், பயத்தைப் போக்குபவர், பயத்தைத் தருபவர் என்று இரு பொருள் உண்டு.

தன்னை வணங்கும் பக்தர்களின் பயத்தைப் போக்கியும், அவர்களின் எதிரிகளுக்கு பயத்தைத் தருவதும் பைரவரின் அருள். இத்தல அஷ்டபுஜ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று, உலக நன்மைக்காக பைரவ யாகம் நடைபெறுகிறது. இவரே அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதி என்கிறது வாருணபத்ததி எனும் நூல்.

ஒன்பது அமாவாசை தினங்களில் 27 மிளகுகள் கட்டிய துணியைத் திரியாக்கி, இவர் சந்நதியில் விளக்கேற்றி, தயிர் சாதம் நிவேதித்து வழிபட, இழந்த சொத்துகள் திரும்பக் கிடைப்பதாக ஐதீகம்.