பெண்கள் வாசற்படியில் அமரக்கூடாதாமே, ஏன்?



தெளிவு பெரும் ஓம்


? கலசத்திற்கு தேங்காய் தான் வைக்க வேண்டுமா, வேறு எந்த காயும் வைக்கக் கூடாதா? சுரைக்காய் கூட கும்பம் போல் அழகாக இருக்கிறதே, அதை வைத்தால் என்ன? - புவனா, திண்டுக்கல்.

முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்து கொள்ளுங்கள். மனிதன் உயிர் வாழத் தேவையானது தண்ணீர். ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைகற்பூரம் முதலிய வாசனை திரவியங்களைப் போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து
பூஜிக்கிறோம்.

பித்தளை அல்லது தாமிர சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. அறிவியலாகச் சொல்வதானால், கடத்திகள். ஆங்கிலத்தில் conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை. இறைவனின் உடலாக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல் சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் கொள்ளலாம். ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக் கருதப்படுகின்றன. அறிவியல் ரீதியாகச் சொல்வதானால், குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்பவை போல.

மேலே மாவிலையைக் கொத்தைச் சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம். மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும், சில நாட்களில் அழுகியும் விடும். ஆனால், மாவிலை மட்டுமே குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே பசுமை மாறாமல் இருக்கும். அதற்கும் மேலான நாட்களிலும் சருகாக வேண்டுமானால் ஆகுமே தவிர, அழுகாது.

(சிலர் வீடுகளில் தலைவாசலில் தோரணமாகக் கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணம், மாதக்கணக்கில் மழை, வெயில் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு சருகாகத் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம்) ஆனால், இந்த காரணத்தால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு பயன்படுத்தவில்லை; மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைத் தரவல்லது. மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைப்பதை திருவிளையாடல் திரைப்படத்திலும் பார்த்திருக்கிறோமே! தேங்காயின் தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத் தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம்.

சரி, தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும்? மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் உண்டு. தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது ‘சோமசூர்யாக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள். அதாவது, வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய மூன்று கண்களை உடைய தேங்காயை தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம்.

(தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிய்த்துப்போடு என்று சொல்கிறோம்) கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால்கூட வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய இயலும். ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் இருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது. சுரைக்காய் உள்பட வேறு எந்த காய்க்கும் இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பதால்தான் அது கும்பத்தில் கிரீடமாக வைத்துப் போற்றப்படுகிறது.

? அமாவாசை நாளை ஒரு சிலர் நல்ல நாள், நல்ல செயலை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். வேறுசிலர் அது முன்னோர்கள் நினைவு தினம், அதனால் நல்ல விஷயம் செய்யக்கூடாது என்கிறார்கள். எது உண்மை..?
- சிவராஜ், மதுரை.

அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம் என்பது உண்மையே. தந்தைக்கு உரிய கோள் ஆகக் கருதப்படும் சூரியனும், தாயாரைக் குறிக்கும் கோள் ஆன சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளே அமாவாசை. அதனால்தான் அன்றைய தினம் நம் வீட்டில் முன்னோர்கள் நினைவாக இலைபோட்டு படையல் வைக்கிறோம். எள்ளும், தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்கிறோம்.

இந்த நாளில் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் தொழிலில் போட்டிகளைச் சந்திக்கின்ற வகையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது, அல்லது ஏற்கெனவே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது முதலான செயல்களில் ஈடுபடலாம். மாறாக, புதிய வீட்டில் பால் காய்ச்சுதல், க்ருஹப்ரவேசம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள், (பெண்பார்க்கும் நிகழ்ச்சி, பந்தல்கால் நடுதல், நிச்சயதார்த்தம் போன்றவை) முற்றிலும் புதிய வியாபாரம் துவங்குதல், முதன்முதலில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யக்கூடாது.

? கிருஷ்ணர் பிறந்தது அஷ்டமியில், ராமர் அவதரித்தது நவமியில், நரசிம்மர் தோன்றியது சதுர்த்தசியில், இப்படி திருமால் அவதாரங்கள் மூன்றும் வெவ்வேறு திதிகளில் அவதரித்திருக்க, பெருமாளுக்கு மட்டும் ஏகாதசி அன்று விரதம் ஏன்?
- பிரபாகரன், திருவையாறு.

சாகாவரம் தரும் அமிர்தத்தை அடைய தேவர்கள் அசுரர்களோடு இணைந்து பாற்கடலைக் கடைந்தனர். வாசுகிப் பாம்பினைக் கயிறாகவும், மேருமலையை மத்தாகவும் கொண்டு ஒருபுறம் அசுரர்களும், மறுபுறம் தேவர்களும் ஒன்றாக இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அவ்வளவு எளிதாக அமிர்தம் கிடைத்துவிடவில்லை. வலி தாங்காத வாசுகிப்பாம்பு ஆலகால விஷத்தைக் கக்கியதுதான் மிச்சம். இந்த நிலையில் எல்லோரும் ஒன்றாக இணைந்து பெருமாளை நோக்கி விரதம் இருந்து ஒருமித்த மனதோடு சிரத்தையாக பிரார்த்தனை செய்ய பாற்கடலில் இருந்து அமிர்தம் நிறைந்த குடத்தோடு தன்வந்திரி வடிவில் பகவான் வெளிப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

இதில் நாம் கவனிக்க வேண்டியது தேவர்களும், அசுரர்களும் ஒன்றாக இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கிய நாள் பிரதமை. வாசுகிப் பாம்பு ஆலகால விஷத்தைக் கக்கிய நாள் அஷ்டமி.
அதனால்தான் இந்த இரண்டு நாட்களிலும் நாம் நல்ல செயல்களை மேற்கொள்வதில்லை.

எல்லோரும் ஒன்றாக இணைந்து பெருமாளை நோக்கி விரதம் இருந்த நாள் ஏகாதசி. ஏகாதசியில் விரதம் இருந்ததன் பலனாகத்தான் சாகாவரம் தரும் அமிர்தத்தை அமரர்களால் அடைய முடிந்தது. மனிதர்களாகிய நாம் ஏகாதசியில் விரதம் இருப்பதால் தன்வந்திரியின் அருளால் உடல் ஆரோக்யம் சிறக்கும், மறுபிறவி இல்லாத அமரத்துவம் கிடைக்கும்
என்பது நம்பிக்கை.

? நமக்கும் மீறிய சக்தி கடவுள் என்பது உண்மை. அதற்கு ஏன் இத்தனை உருவங்கள், விதவிதமான வழி
பாடுகள்?- செந்தில், மதுரை.

இறைவன் ஒருவனே என்பது உண்மை. ஆயினும், ஒரு மனிதனுக்குள்ளேயே எத்தனை முகங்கள்! கோபம், தாபம், பாசம், பரிவு என்று ஒவ்வொரு குணமும் வெளிப்படும்போது வெவ்வேறு முகங்கள் ஒரு மனிதனிடம் இருந்தே வெளிப்படுகிறதே! ‘நானா ரூபா பவந்தி’ என்கிறது வேதம். எல்லா வடிவங்களிலும் இறைவனைக் காண இயலும். பிரகலாதன் சொல்வது போல் இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்.

அவரவர் கண்களுக்கு எது பிடிக்கிறதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.அரிசி ஒன்றுதான். ஆனால், அதுவே இட்லி, தோசை, பொங்கல், இடியாப்பம், சாதம், பிரியாணி என்று பல வடிவங்கள் பெறுகிறது. யார் யாருக்கு எது விருப்பமோ அதனை விரும்பி உண்கிறார்கள். காலசூழல் மற்றும் இடத்திற்குத் தகுந்தாற்போல் உணவும் வேறுபடுகிறது. அதுபோலத்தான் இறைசக்தியும் பல வடிவங்களில் உருவகப்படுத்தப்படுகிறது. அவரவர் விருப்பம்போல் ஒரு உருவத்தை வைத்துக்கொண்டு விதவிதமான வழிபாடுகள் மூலம் இறைசக்தியை
அனுபவித்து உணர்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை.

?முன்னோர் வழிபாட்டிற்கு எள்ளு
உபயோகிப்பதன் காரணம் என்ன? வேறு தானியங்களைக் கொண்டு
தர்ப்பணம் முதலான காரியங்களைச்
செய்யக்கூடாதா?
- நடராஜன், திருச்சி.

மஹாவிஷ்ணுவின் வியர்வைத் துளி பூமியில் விழுந்து அதில் இருந்து உருவானது எள்ளுச் செடி என்கிறது சாஸ்திரம். ஆயுள்காரகன் ஆன சனிக்கு உரிய தானியம் ஆகவும் எள் திகழ்கிறது. மோட்சத்தைத் தருபவர் மகாவிஷ்ணு என்பதால் அவருடைய ரோமத்திலிருந்து உதிர்ந்த எள்ளினை பித்ரு
காரியத்திற்கு பயன்படுத்துகிறோம்.

? மந்திரம் சொல்லும்போது முடிவில் ‘ததாஸ்து’ என்று சொல்கிறார்களே. இதன் பொருள் என்ன?
- மோகன், விருதுநகர்.

தது + அஸ்து = ததாஸ்து; அப்படியே ஆகட்டும் என்பது பொருள். இவர்கள் வேண்டுவது கிடைக்கட்டும். எதனை வேண்டி இந்த பூஜையை அல்லது நிகழ்ச்சியை நடத்துகிறார்களோ அது முழுமை பெறட்டும். இவர்களது பிரார்த்தனை பலிக்கட்டும் என்று வாழ்த்தும் வார்த்தை இது. வீட்டிலும் சரி, ஆலயங்களிலும் சரி பூஜைகள் முடிவடையும் தருவாயில் பிரதான ஆச்சாரியார் ‘ஸ்வஸ்தி வசனம்’ என்ற பெயரில் அவ்வாறு நடத்துபவர்களின் பிரார்த்தனைகளைச் (தேவைகளைச்) சொல்லுவார்.

அதற்கு பிரதிவசனமாக உடன் இருக்கும் உப ஆச்சாரியார்கள் ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசீர்வதிப்பர். ஆலயங்களில் நடத்தப்பெறும் பூஜைகளில் பொதுமக்களின் நன்மை வேண்டி தலைமை குருக்கள் சில வாக்கியங்களைச் சொல்வார். ‘ஸர்வே ஜனா: ஸூகினோ பவந்து’ என்பது மாதிரி. உதாரணமாக மாதம் மும்மாரி பெய்ய வேண்டும், நீர் நிலைகள் நிரம்ப வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும், பகுதிவாழ் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதி செழிப்படைய வேண்டும் என்று பலவிதமான பிரார்த்தனைகள் மூலம் பிரதான குருக்கள் இறைவனை வேண்டுவார்.

உடன் இருப்போரும் அவ்வாறே நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு சொல்லும் ஆசீர்வாத வார்த்தையே ‘ததாஸ்து’. ஆதலால் அத்தருணத்தில் நாமும் நல்லதையே நினைக்க வேண்டும். மாற்று எண்ணங்கள் மனதில் தோன்றுமாயின் நாம் என்ன நினைத்தோமோ அதுவே நடந்துவிடும். எப்பொழுதும் நல்லதையே நினையுங்கள். மனம்போல மங்களமும் உண்டாகும் என்ற அடிப்படை தத்துவத்தை விளக்கும் சொல்தான் ‘ததாஸ்து’, மனம்போல வாழ்க என்றும் பொருள் சொல்லலாம்.

? கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்?
- ரவிராஜ், திண்டிவனம்.

க்ருஹம் என்றால் வீடு அல்லது வசிப்பிடம். கிரகம் என்றால் வானில் சுற்றும் கோள். க்ருஹப்ரவேசம் என்பதே சரியான வார்த்தை. புதுமனைப் புகுவிழாவின்போது வாசலில் கன்றுடன் கூடிய
பசுமாட்டிற்கு பூஜை செய்து அதனை வீட்டிற்குள் அழைத்து வருவதை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கிறோம். பசுமாட்டிற்குள் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. கோமாதா என்றழைக்கப்படும் பசு மகாலட்சுமியின் அம்சம். அக்காலத்தில் ஒருவருடைய சொத்து மதிப்பீடு செய்யும்போது எத்தனை பசுமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை கணக்கில் கொள்வார்கள். போரில் வெற்றி பெறும் அரசர்கள் கூட அண்டை நாட்டில் இருந்து பசுமாடுகளை தனது நாட்டிற்கு வெற்றிப் பரிசாகக் கொண்டுவருவர்.

ஆக பசுமாடு என்பது செல்வத்தைத் தர வல்லது என்பது வரலாற்று உண்மை. அது மட்டுமல்லாது பசு என்பது சுத்தத்தின் அடையாளம். குறிப்பாக, கோமயம் என்றழைக்கப்படும் பசுவின் சிறுநீர் கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. புதிய வீடு கட்டும்போது பணியாளர்கள் மற்றும் இன்னபிற மனிதர்களாலும் தெரிந்தும், தெரியாமலும் பல தவறுகள் நடந்திருக்கலாம். கட்டி முடித்த வீட்டிற்குள் பல துர்தேவதைகளும் வாசம் செய்யலாம். தீயசக்திகளை விரட்டும் வலிமை பசுமாட்டிற்கு உண்டு. அதனால்தான் புதுமனைப் புகுவிழாவின்போது முதலில் பசுமாட்டினை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறோம்.

தீயசக்திகள் விலகி என்றென்றும் வீட்டிற்குள் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். தற்காலத்தில் ஒரு சிலர் வீட்டிற்குள் டைல்ஸ், கிரானைட் தரை அமைத்திருப்பதால் பசுமாட்டிற்கு கால் வழுக்கும் என்று நினைத்து கோபூஜையை முடித்த பிறகு வாசலோடு பசுவினை திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இது முற்றிலும் தவறு. வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை வாசலோடு திருப்பி அனுப்புவதற்கு சமமான செயல் அது. முன்னதாகவே திட்டமிட்டு பசுமாடு உள்ளே நடந்து வருவதற்கு உதவியாக தரைவிரிப்புகள் முதலானவற்றை தயார் செய்து வைப்பது நல்லது.

அதேபோல தனியாக உள்ள பசுவிற்கு பூஜை செய்யக்கூடாது. கன்றுடன் கூடிய பசுமாடுதான் பூஜைக்கு உகந்தது. வீட்டிற்குள் நுழைந்த பசுவினை வெறும் வயிற்றோடு அனுப்பாமல் அதற்கு அரிசி, வெல்லம் கலந்து கொடுத்து, நமது இல்லத்திற்குள் அது உணவருந்தி செல்வது போல் ஏற்பாடுகளைச் செய்வது சாலச் சிறந்தது.

? கோயில் வீதியில் குடியிருப்பவர்கள், கோயில் கோபுரத்தை விட அதிக உயரத்திற்கு வீடு கட்டலாமா?
- வெங்கட்ராமன், கும்பகோணம்.

நிச்சயமாகக் கட்டக் கூடாது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோயிலின் ராஜகோபுரத்தை அந்தப் பகுதியிலேயே மிக உயரமாக அமைத்து அதன் உச்சியில் எளிதில் எலக்ட்ரான்களை கடத்தும் தன்மையுடைய தாமிரம் முதலான உலோகங்களைக் கொண்டு கூர்மையான முனையை உடைய கலசங்களை அமைத்தார்கள். அதற்குக் காரணம், இடி மின்னல் முதலான இயற்கை இடர்பாடுகளை அவை தமக்குள் வாங்கிக்கொண்டு நம்மைக் காக்கும் என்பதால்தான்.

தற்காலத்தில் இடிதாங்கி, மின்னல் கடத்தி போன்ற சாதனங்களைக் கண்டுபிடித்த பிறகு கோபுரத்தை விட உயரமாக வீடு கட்டி உச்சியில் இந்த சாதனங்களைப் பொருத்திக்கொண்டால் என்ன என்ற எண்ணம் நமக்கு உதிக்கிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். நேரமின்மை, தீட்டு முதலான காரணங்களால் ஆலயத்திற்குச் செல்ல இயலாதவர்கள் கூட தங்கள் வீட்டு மாடியில் இருந்தே கோபுர தரிசனம் செய்வர்.

அதனை மறைக்கும் விதமாக உயரமான கட்டிடத்தைக் கட்டுவது தவறு. அடுத்தவர்களின் பக்திக்கு இடைஞ்சல் செய்வது போல் ஆகிவிடும். மேலும் இறைவன் உறையும் ஆலயத்தின் கோபுரத்தை விட என் வீடு உயரமானது என்ற எண்ணம் மனிதனுக்கு உண்டாவது தவறல்லவா? அதனால் உயரமான கட்டிடம் கட்ட நினைப்போர் ஆலயம் அமைந்திருக்கும் பகுதியைத் தவிர்த்து வேறு பகுதியில் கட்டுவதே நல்லது.

? பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்?
- கனகராஜ், சென்னை.

பெண்கள் மட்டுமல்ல, யாருமே வாசல்படியில் அமரக்கூடாது. வீட்டு வாசல்படி என்பது மகாலட்சுமியின் அம்சம். நம் வீட்டுப் பெண்கள் வாசல்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து வணங்குவதை இன்றும் காண்கிறோம். பெருநகர அடுக்கு மாடி குடியிருப்புகளைத் தவிர்த்து இன்றும் தனியாக வீடு கட்டுவோர் தலைவாயிலை சிறப்பான முறையில் வடிவமைத்துக்கொள்வதைக் காண்கிறோம். குறிப்பாக வாசற்காலின் கீழ்ப்பலகை சற்று பருமனாக அமைந்திருக்கும்.

அதன் கீழ்ப்புறத்தில் உள்நோக்கி ஒரு துவாரம் அமைத்து அதற்குள் பொன், முத்து, பவழம், பஞ்சலோகம் என்று பதித்து அதனைத் தூக்கி நிறுத்துவார்கள். இவ்வாறாக வாசல்படியை அமைக்கும்போது வீட்டிற்குள் இறைசக்தி நிறைந்திருக்கும். தீயசக்தி ஏதும் உள்ளே நுழையாமல் துவாரபாலகர்கள் ஆக நம்மைக் காக்கும் வல்லமை வாசல்படிக்கு உண்டு என்று நம்புகிறோம். சாதாரணமாக வீட்டிற்குள் நுழைவோர் கூட வாசல்படியை மிதிக்காமல் அதனைத் தாண்டியே வருவர்.

வாசல்படியை மிதிப்பதாலும், அதன் மீது அமர்வதாலும் உள்ளிருக்கும் இறைசக்தி காணாமல் போகும். தீயசக்திகள் வீட்டிற்குள் புகுந்துவிடும். இந்த விதி தலைவாசலுக்கு மட்டும்தானே, பின்புற தோட்டத்து வாசல்படி அல்லது மற்ற அறைகளுக்கான வாசல்படியில் அமரலாம் அல்லவா என்ற கேள்வியும் எழும். அவ்வாறு வாசல்படியில் அமருவதால் உள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், அதாவது, இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் என்கின்ற இரண்டுங்கெட்டான் எண்ணங்களே மனதில் தோன்றும், ஸ்திரபுத்தி கிடைக்காது  என்பதாலேயே பொதுவாக எந்த வாசல்படியிலும் அமரக்கூடாது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

? பழைய துணிகளை தானமாக
பிறருக்குக் கொடுக்கலாமா?
- பார்த்தசாரதி, விழுப்புரம்.

தானம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏதோ ஒரு வகையில் பலனை எதிர்பார்த்துச் செய்வது தானம். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் செய்வது  தர்மம். பலனை எதிர்பார்த்துச் செய்யும் தானத்தில் நிச்சயமாக பழைய துணிகளைக் கொடுக்கக் கூடாது. அது நீங்கள் எதிர்பார்த்த பலனுக்கு எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவிக்கும். அதே நேரத்தில் நல்ல நிலையில் இருக்கும் உபயோகித்த துணிகள் ஏதோ ஒரு காரணத்தினால் நமக்கு பயன்படாத பட்சத்தில் அதனைத் தூக்கி எறிவதற்கு பதிலாக இல்லாதோர்க்கு கொடுத்து உதவலாம்.

 அதுவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே. கிழிந்த துணிகளை நிச்சமாக தானமாகவோ அல்லது தர்மமாகவோ கொடுக்கக் கூடாது. உபயோகமில்லாத கிழிந்த துணிகளைக் கொடுத்து விட்டார்களே என்று யார் மனமும் புண்படக்கூடாது என்பதே மிக முக்கியம். நல்ல நிலையில் உள்ள துணிகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவுவதில் தவறில்லை.

?பெற்றோர்களின் பாவபுண்ணியம் பிள்ளைகளைச் சேருமா?
- அசோகன், சென்னை.

நிச்சயமாக. “மாதா, பிதா மக்களுக்குச் சத்ரு’’ என்பார்கள். பெற்றோர்கள் செய்யும் பாவ புண்ணியம் கண்டிப்பாக பிள்ளைகளைச் சென்றடையும். ஒருவன் சம்பாதித்த சொத்தினை அனுபவிக்கும் உரிமை அவனது வாரிசுகளுக்கு உண்டு எனும்போது இது மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுமா? புண்ணியம் செய்தவனின் பிள்ளை, தீயவனாக இருந்தாலும் அவன் நல்ல உயர்ந்த நிலையில் வாழ்வதையும், பாவங்களை அதிகமாகச் செய்தவனின் பிள்ளை, நல்லவனாக இருந்த போதிலும் அவன் வாழ்க்கையில் சிரமப்படுவதையும் நடைமுறை வாழ்வினில் நாம் கண்டு வருகிறோமே!

அதனால்தான் ஜோதிடர்கள், பிள்ளைகளைக் குறிக்கும் ஐந்தாம் பாவத்தை ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் பெற்றோரைக் குறிக்கும் ஒன்பதாம் பாவத்தை பாக்ய ஸ்தானம் என்றும் குறிப்பிடுவார்கள். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே நம் பிள்ளைகளின் வாழ்வு அமையும். பெற்றோர் செய்யும் பாவ, புண்ணியம் பிள்ளைகளையும் சேரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.