உள்ளம் உருகியது உள்ள(த்)தை சொல்கிறோம்




உண்மையான கலியுக பக்தி எது, புராதனக் கோயில்களுக்குப் புனரமைப்பு செய்வதற்கு முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது, போன்ற கேள்விகளுக்கு  பொறுப்பாசிரியர் தெளிவாக விளக்கம் அளித்திருப்பது விழுப்புணர்சியூட்டுவதாய் அமைகிறது.
- பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம் தொடர் கண்களைப் பனிக்க வைக்கிறது. கடவுள் முன்னே பேரம் பேசும் பக்தர்களிடையே இப்படி ஒரு பெண்மணியா என மலைக்க வைத்தது.
- கோ.மயில்வாகனன், அரும்பாக்கம்.

மோகம் விளைவிக்கும் மோசமான நிகழ்வுகளைச் சித்தரிக்கின்ற மன்னன் பரீட்சித்தின் காதல் விவகார வரலாறு பற்றித் தித்திப்பு மேலிடுமாறு சத்தான மொழி நடையில் மனதைக் கட்டி இழுத்திருக்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்.
- இனாம் கேசவன், கோவில்பட்டி.

உள்ளத்தை உருக வைத்தது மனுநீதி கண்டவாசகம் தொகுப்பிலிருக்கும் பட்டியல். மனமொன்றி இதனை படிப்பவர்கள் எந்தப் பாவமும் செய்ய அஞ்சுவார்கள். நல்வாழ்வு வாழ அருமருந்து, அந்தப் பகுதி.
- எஸ்.வளர்மதி, கொட்டவரம்.

மகத்தான வாழ்வருளும் மகாகாளியை மிக அற்புதமான படங்களுடன் அழகாக விவரித்த கட்டுரை ஆசிரியருக்கு பாராட்டுகள். வாசகர்கள் செய்த பெரும் பாக்கியம், ஆன்மிகம் பலன் என்றால் மிகையில்லை.
- அகிலாகுமார், மதுரை.

மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தினை சென்ற இதழ் அட்டையில் தரிசித்து மெய் சிலிர்த்துப் போனேன். அதே போன்று மூன்று மாங்காய் மூவர் அருள் எனும் குறிப்பு முருகனடிமைகளை உள்ளம் குளிர வைத்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

தேரை நம் உடம்போடு ஒப்பிட்டு விளக்கியது அருமையாக இருந்தது. தேரில் உள்ள உருவங்களை நம்மிடம் உள்ள குணங்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருந்தது இன்னும் அருமையாக இருந்தது. வித்தியாசமான திருவிழாக்கள் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
- பிருந்தா, ரமணி, மதுரை.

தற்போதைய சூழ்நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள்தான் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் பிரச்னைகள் தீர அபூர்வ ஸ்லோகமான நரசிம்ம ஸ்லோகத்தை வழங்கியதற்கு நன்றி.
- ஆர். அம்பிகா, பெங்களூரு

ஆன்மிக குறுக்கெழுத்துப் போட்டி, தெரியாத ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஏதுவாகவும் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய அருமருந்தாகவும் உள்ளது. ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொள்வதே பெரிய பரிசுதான். இதற்கு மேலே பணமாகவும் பரிசு வழங்குகிறீர்கள் - கரும்பு தின்னக் கூலி தருவதுபோல!
- ஆர். சீதாலட்சுமி ரவிச்சந்திரன், ஈரோடு.

பிரபல ஆலயங்கள் சிலவற்றில் அருளும் சக்கரங்கள் குறித்த தகவல்களும் சம்பந்தப்பட்ட ஆலயப் படங்களும் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தினை அளித்திருந்தன.
- பி. கதிர்வேலன், தோட்டக்குறிச்சி.

குருப்பெயர்ச்சி நேரத்தில் குரு பகவான் சிறப்புத் தலங்களைத் தொகுத்து வெளியிட்டு குருவருள் கிட்டச் செய்து விட்டீர்கள். நன்றிகள் கோடி.
- மோனிஷா ப்ரியங்கா, திருச்சி-8.

மணம் வீசும் மந்திரப்பூக்கள் இனிமை! ஓஷோவின் உரைகளோ எளிமை. மனதில் குறைவதோ சுமை.
எண்ணத்தில் நிறைவதோ குளுமை. தொடரட்டும் இந்த உண்மை.
- ஜே.சி. ஜெரினாகாந்த், சென்னை-16.

ஆறுமுகத்தோன், பன்னிருகையோனின் அழகிய வண்ண அட்டைப்படம் மனதைக் கவர்ந்தது. பாராட்டுகள்.
- அ. ஆரிமுத்து. வாழைப்பந்தல்.

‘தெளிவு பெறு ஓம்’ பகுதி வாயிலாக ஆன்மிகத்தில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கிட்டுகிறது. நன்றி.
- ஜி. கோபாலகிருஷ்ணன், திருவாரூர்.

நீண்ட நாட்களாக நான் தேடி வந்த ருணவிமோசன துதி, புதையல் போன்று ஆன்மிகம் பலன் இதழ் மூலம் எனக்குக் கிட்டியது. உங்களுக்குக் கோடி புண்ணியம். வாழ்க ஆன்மிகம் பலன்.
- கே.வி.கே.கமலாகிருஷ்ணன், தஞ்சாவூர்.

எத்தனை எத்தனை பாவங்கள் கட்டுரை வாழ்வின் முன்னேற்றத்தைப் படித்துப் பயன்பெறு என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.
- கீதா முருகானந்தம். திருவைகாவூர்.

உணர்வுகளில், பண்புகளில், உன்னதமானது நன்றி எனும் தலையாய பண்பு. ஆசிரியர் பக்கம் அதை அழகாக உணர்த்தியது. கோரிக்கைகள் நிறைவேறும் போது அதற்குக் காரண காரியமாகத் திகழும் கோயில்களின் நலன்களையும்
பேணுவதுதானே சிறப்பு!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.