அனைத்து நோய்களையும் அகற்றும் அரன்





பொழுது புலர்ந்தது. சூரியனின் இளஞ்சூடான கதிர்கள் பட்டு உயிரினங்கள் யாவும் சுறுசுறுப்பாயின. வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவோ வழக்கத்தை விட உற்சாகமாய் இருந்தது. பிரம்மமுகூர்த்த வேளையான அதிகாலையில் தியானத்தில் அமர்ந்த வசிஷ்டர் கண் திறந்தார். அதீத உற்சாகத்தில் இருக்கும் காமதேனுவை நோக்கி நடந்தார். அதன் தலையை வருடினார். பிடரியை அழுந்த பிடித்து விட்டார். முதுகு வரை நீவினார். அவரது விரல் ஸ்பரிசத்தில் குழந்தையாய் குழைந்தது காமதேனு. பசுவைப் பிணைத்திருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். அது வசிஷ்டரை வலம் வந்து வனம் நோக்கி விரைந்தது. வசிஷ்டர் தண்டத்தைக் கையில் ஏந்தியபடி பின்தொடர்ந்தார்.

காட்டில் பசுமையாய் வளர்ந்து கிடக்கும் புற்களை பசி தீர தின்ற பசு, வெள்ளாற்று நீரை உறிஞ்சிக் குடித்தது. நிதானமாய் நகர்ந்து புதர் மண்டிய பகுதி நோக்கி விரைந்தது. அங்கே ஓரிடத்தில் அதன் கால் குளம்பு எதிலோ பட்டு இடற நின்று கவனித்தது. காலடி பட்ட இடத்திலிருந்து குருதி பொங்கியது கண்டு தவித்த பசு, தன் காலகற்றி நின்றது. சற்றைக்கெல்லாம் அதன் மடியிலிருந்து அமுதமாய் பால் தானாக சுறந்தது. பசுவின் பால் பட்ட கணத்திலேயே ரத்தக் கசிவு நின்றது. இத்தனையையும் பின்தொடர்ந்து வந்த வசிஷ்டர் கவனித்தார். குளம்படிபட்டு ரத்தம் பொங்கியது சுயம்பு லிங்கத்திலிருந்துதான் என்பதையும் உணர்ந்த அவர், அச்சத்துடன் நின்ற காமதேனுவை ஆதூரத்தோடு தொட்டார். ‘‘இவர் இவ்வுலகை காக்க வந்த ஈசன். இவர் இங்கே உன் மூலமாக கோயில் கொள்ள விரும்பியுள்ளார். ஆகவே அச்சப்படாதே. இந்த இடத்தில் அரனுக்கு ஒரு ஆலயம் எழுப்பு’’ என்று காமதேனுவிடம் கேட்டுக் கொண்டார்.


அவரது குறிப்பின்படி காமதேனு அந்த சுயம்பு லிங்கத்திற்கு ஆலயம் எழுப்பியது. காமதேனுவும், வசிஷ்டரும், கூடவே ஆஸ்ரமத்தில் இருந்தபடி காட்டில் நடந்த அத்தனையையும் கண்டு மெய்சிலிர்த்து நின்ற அருந்ததியும், வேங்கை வனத்து நாதனை மனமுருக தொழுதனர். அவரை பிறவி பிணி தீர்க்கும் வைத்தியநாதன் என்று கொண்டாடி மகிழ்ந்தனர்.இதைத் தொடர்ந்து வசிஷ்டர் இந்த சுயம்பு மூர்த்தியை பூஜிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இத்தல ஈசனின் அருளால் ஞானவாசிஷ்டம், வசிஷ்ட சித்தாந்தம் என்கிற ஜோதிட நூல்கள், வாஸ்து வித்யை என்கிற மனையடி சாஸ்திர நூல், வசிஷ்ட ஸ்ம்ருதி என்கிற அரிய நூல் ஆகியவற்றைப் படைத்தார். ஒரு சமயம் ராமனின் முன்னோரான மனு சக்ரவர்த்தி இங்கு வந்து, வசிஷ்டரின் ஆசிரமத்தில் தங்கி, வேங்கை வன ஈசனை வணங்கினார். வசிஷ்ட முனிவரை தன் சூரிய குலத்திற்கு குருவாக இருந்து வழி நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். வசிஷ்டரும் எல்லாம் ஈசனின் சித்தம் என்று ஏற்றுக் கொண்டார். வசிஷ்டரின் சொற்படி மனு சக்ரவர்த்தி அந்த வேங்கை வனத்தை சீரமைத்து ஓர் அழகிய ஊரை நிர்மாணித்தார். அதற்கு திருவதிட்டக்குடி என்றும் பெயரிட்டார்.

அதுமட்டுமின்றி, வேதம் பயின்ற ரிஷிகளை இங்கே குடியமர்த்தினார். இதனால் வேங்கை வனம் வேத கோஷத்தால் நிரம்பியது. வேதம் படிக்கவும் வித்தைகளை கற்றுத் தேறவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வரத்தொடங்கினர். வேங்கை வனத்தினிடையே அமைந்த இவ்வூரில் வேத கோஷம் நிரம்பி வழிந்ததால் வித்யாரண்யபுரம் என்றும் புகழ் பெற்றது. அப்போதும் திருப்தி அடையாத மனு, காமதேனு கட்டிய கோயிலுக்கு இன்னும் மெருகேற்றத் துடித்தார். வசிஷ்டரிடம் அனுமதி பெற்று நான்கு மதில்கள், மூன்று கோபுரங்கள் உடையதாக மாற்றிக் கட்டினார். இதனால் மகிழ்ந்த அரனும், அன்னையும் மனுவுக்கு காட்சியளித்து ஆசி வழங்கினர். ‘‘நீ எழுதும் நீதி நூல் பதினான்கு உலகங்களிலும் பின்பற்றப்படும். அது உன் பெயராலேயே மனுநீதி நூல் என்று அழைக்கப்படும்’’ என்றும் வரமளித்தனர். ஈசனின் அருளால் உருவான அந்நூல் இன்றும் பலவகையில் நமக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. மனு சக்ரவர்த்திக்கு பிறகு தசரதனுக்கும், ராமனுக்கும் வழிகாட்டி அருளிய வசிஷ்ட மகரிஷி, ராமனுக்கு ஞான வாசிஷ்டத்தை போதித்தார். இத்தல நாதனின் கருணையால் ‘ராஜரிஷி’ என்ற சிறப்பையும் பெற்றார்.

புராணகால வரலாற்று சிறப்பு இப்படி உள்ளதென்றால் பிற்கால வரலாற்றிலும் இத்தலம் மிகச் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.  பல்லவ மகேந்திர மன்னரின் வீரப்புதல்வன் நரசிம்மவர்மன் காலத்தில் இந்த ஊர் நரசிங்க சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டுள்ளது. மல்லிதேவராயர், நாகம உடையார் நாயக்கர் ஆட்சி காலத்தில் வித்யாரண்யம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, ராஜேந்திரசோழன், குலோத்துங்கச் சோழன், ராஜராஜ சோழன், சுந்தரபாண்டியன் என பல்வேறு வம்சத்தினரின் கட்டுப்பாட்டில் இத்தலம் மேலும் மெருகேறி உள்ளது. சேரப் பேரரசி செம்பியன்மாதேவி காலத்தில் இத்தலத்தில் உள்ள மூலத்திருமேனிகளின் அளவுக்கு செப்புத் திருமேனிகள் செய்யப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது தமிழகத்தின் இரண்டு பெரும் வணிக சமூகத்தவர்களான சித்திரமேழி பெரிய நாட்டாரும், திசை ஆயிரத்து ஐந்நூற்றுபவரும் இத்தலத்திற்கு நிறைய நிவந்தங்களை அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வைத்தியநாதரின் ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு கம்பீரமாக காட்சி தருகிறது. கொடிமரம், பலிபீடம், நந்தியை கடந்து நுழைவாயில் கோபுரம் வழியாக உள்ளே செல்கிறோம். அங்கே பிராகாரத்தில் நால்வர், சிறுதொண்டர், சரஸ்வதி, நாகம், எமலிங்கம், நைருதிலிங்கம், சப்தமாதாக்கள் ஆகியோரை தரிசித்து வணங்குகிறோம்.


அடுத்து நாம் காண்பது சோமாஸ்கந்தர். அதற்கு அருகே கோடி விநாயகர் இருக்கிறார். இங்கு பாதாள வழி இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதற்கு அருகில் தேவநாகலிங்கம், வருணலிங்கம், பல்லவ பாலசுப்ரமணியர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகப் பெருமான், நாகலிங்கம், வாயுலிங்கம், கஜலட்சுமி, சனீஸ்வரர், பைரவர், பிச்சாடனர் ஆகியோரை தரிசிக்கிறோம். அடுத்து ஆடலரசன் அருட்காட்சி தரும் சந்நதி இருக்கிறது. இங்கே ஒரு சுரங்கப்பாதை இருப்பதாகவும் இது சிதம்பரம் வரை செல்கிறது என்றும் கூறுகிறார்கள். அருகே ஈசான்யலிங்கம், காசி லிங்கம், இந்திரலிங்கம், சூரியன் ஆகியோரின் அற்புத தரிசனத்தை பெறுகிறோம். இங்குள்ள ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் வியக்கத் தக்கவை. ஒவ்வொரு தூணிலும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளதைப் போன்று அமைத்துள்ளார்கள்! கருவறை கோஷ்டத்தில் உச்சிஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, சட்டநாதர், அண்ணாமலையார், பிரம்மா, விஷ்ணு,  விஷ்ணு துர்க்கை மற்றும் தனிச்சந்நதியில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள் புரிகிறார்கள்.  கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையின் பாதம், முன்னால் கால் வைத்து பக்தரை நோக்கி வருவது போன்று இருப்பது தனிச் சிறப்பாகும். உள்ளே நுழைந்தால், அருந்ததியும் வசிஷ்டரும் காட்சி தருகிறார்கள். எதிரே நவகிரகம், சொக்கநாதர், மீனாட்சி ஆகியோரின் தரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அடுத்து  உற்சவர் மண்டபத்தில் நடராஜ பெருமானும், இதர உற்சவ திருமேனிகளும் கொலுவிருக்கிறார்கள். ஆளுயரத்திற்கு நிற்கும் துவாரபாலகர்களை கடந்து கருவறையில் அமர்ந்திருக்கும் வைத்தியநாத சுவாமியை தரிசிக்கிறோம். மெல்லிய விளக்கொளியில் பேரொளியுடன் திகழும் அரனின் அன்பு நம்மை மெல்ல சூழ்கிறது. உளமாற இவரது பாதம் பணியும்போது மன வேதனை எல்லாம் மாயமாய் மறைகிறது.  பங்குனி மாதம் 10, 11, 12 தேதிகளில் அதிகாலையில் சூரியன் தன் கிரணங்களால் வைத்தியநாதரை வழிபாடு செய்வதால் இத்தலம் சூரிய தலமாகவும் விளங்குகிறது.

அங்கிருந்து தனிக்கோயில் கொண்டிருக்கும் அன்னை அசனாம்பிகையை தரிசிக்க வருகிறோம். கொடிமரம், பலிபீடம், நந்தியை கடந்து சென்றால் துவார சக்திகளை காணலாம். கருவறைக்கு வெளியே பழைய மூலவர் சிலை இருக்கிறது. இது ஒருகாலத்தில் சிதிலமடைந்ததால் கோயில் கிணற்றில் போட்டுள்ளார்கள். அப்போது கனவில் தோன்றிய அன்னை, ‘‘உன் தாய்க்கு இது போன்று கைகால் உடைந்தால் கிணற்றிலா போடுவாய்?’’ என கேட்டதும் அப்படியே விதிர்விதிர்த்து, உடனே இந்த அன்னையை கருவறைக்கு  முன்பாக அமைத்து விட்டார்கள். கருவறை உள்ளே, புதிதாக அமைக்கப்பட்ட அன்னையின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்கள் பாசம், அங்குசம் தாங்கி இருக்க, கீழிரு கரங்கள் அபய, வரத ஹஸ்தம் காட்டி அருள்கின்றன. அன்னையைப் பணிந்து வணங்க, தடைபடும் திருமணம் விரைவில் கைகூடும் என்பது பலரது அனுபவ நம்பிக்கை. இத்தலத்தின் வளாகத்தில் புதர்மண்டிய யாகசாலை உள்ளது. அதற்கு நேரெதிரே வனதுர்க்கை இருக்கிறாள். இவள் சக்திவாய்ந்தவள். இந்த வனத்தின் காவல் தெய்வம். அருகில் நாகரும் இருக்கிறார். மற்றொரு புறத்தில் தல விருட்சமான வேங்கை மரம் இருக்கிறது. கோயிலுக்கு எதிரே கட்டடங்களால் மறைக்கப்பட்ட கோயிலின் திருக்குளம் உள்ளது. இத்திருக்குளம் உடையார் பாளையம் ஜமீன்தாரால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு நான்கு பக்கமும் பக்தர்கள் பயன்படுத்த படிக்கட்டுகள் அமைத்ததாக தலவரலாறு சொல்கிறது. இந்த குளத்தில் சக்தி தீர்த்தம், ஞானவாவி தீர்த்தம், ராமதீர்த்தம், பரத தீர்த்தம் உள்ளிட்ட 24 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக ஐதீகம். தன்னை நாடிவரும் அனைவரது பிணிகளையும் தீர்த்து, பிறவியிலிருந்து கடைத்தேற்றும் வைத்தியநாதரையும் அன்பே வடிவான அன்னை வேங்கைவளர்வல்லி அசனாம்பிகையையும் மனதில் நிறுத்தி வணங்க, இத்தலத்தின் புராண சிறப்பும் வரலாற்று பின்னணியும் நம்மை பெருமிதத்தில் சிலிர்க்க வைக்கிறது. கூடவே அருந்ததியும் வசிஷ்டரும் அருவமாய் இருந்து ஆசிர்வதிப்பதை உணரமுடிகிறது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், தொழுதூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் விருத்தாசலத்திலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, இந்த ஆலயம். விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடிக்கு அடிக்கடி பஸ் வசதி இருக்கிறது.
- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: இரா.ரெங்கப்பிள்ளை