பக்தியின் இலக்கணம் என்ன?





ம் ஊரில் ஆலயங்களுக்குக் குறைச்சலே இல்லை. அங்கே வணங்க வரும் பக்தர்களும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில். இப்படி வரும் பக்தர்கள், பலவிதமான வழிபாடுகளைச் செய்கிறார்கள். சிலர் வெறுமனே கடவுள் முன்னால் கை குவித்து நிற்பதோடு சரி. இன்னும் சிலர், கண்களை மூடியபடி அமைதியாகத் தங்களுடைய வேண்டுதல்களைச் சொல்வார்கள் தமிழிலோ, சமஸ்கிருதத்திலோ ஸ்லோகங்களை உச்சரிப்பார்கள், ஓரமாக உட்கார்ந்து பாராயணம் செய்வார்கள், ‘ஸ்ரீராமஜெயம்’, ‘ஓம் நமச்சிவாய’ என்று 1008 முறை எழுதுவார்கள், குழுவாகச் சேர்ந்து பக்திப் பாடல்களைப் பாடி பஜனை நடத்துவார்கள், கோயிலைச் சுற்றி வருவார்கள், தோப்புக்கரணம் போடுவார்கள், சுவாமிக்கு வெவ்வேறு உணவுப் பொருள்களைச் சமைத்துக் கொண்டுவந்து படைப்பார்கள்... இப்படி ஒரே கோயிலுக்குள் வழிபட விரும்புகிறவர்கள் செய்யும் பல்வேறு விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அதே கோயிலில் திருவிழா என்று வந்துவிட்டால், பக்தர்களின்

நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகிவிடுகின்றன. கடவுள்மேல் தாங்கள் கொண்ட உண்மையான பக்தியைக் காட்டுவதற்காகச் சிலர் விரதம் இருக்கிறார்கள், அதிகாலையில் எழுந்து குளிக்கிறார்கள், அலகு குத்திக்கொண்டு நடந்து வருகிறார்கள், தீ மிதிக்கிறார்கள்... உண்மையில், கடவுள் இதையெல்லாம் எதிர்பார்க்கிறாரா? அவர் நமக்கு அருள் புரிவதற்கு இதெல்லாம் அவசியம் வேண்டுமா? இவற்றைச் செய்யாவிட்டால் அவர் நம்மைப் புறக்கணித்துவிடுவாரா? நிஜமான பக்தியின் அடையாளம்தான் என்ன? அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? இந்தக் கேள்விகள், குழப்பங்கள் பலருக்கு உண்டு. இவை அனைத்துக்கும், இரண்டே பாடல்களில் விடை தருகிறார் ஒருவர். ‘திருமந்திரம்’ வழங்கிய ‘திருமூலர்’தான் அவர். மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திரம் தொடாத விஷயங்களே இல்லை. மிக எளிமையான ஒரு பக்திக் காவியம். யார் வேண்டுமானாலும் இதனைச் சுலபத்தில் படித்துவிடலாம். ஆனால் அதனுள் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துகளைப் புரிந்துகொள்ளச் சிந்தனையும் முதிர்ச்சியும் அவசியம். உண்மையான பக்திக்கு இலக்கணம் என்ன என்று திருமந்திரத்தில் திருமூலர் சொல்லும் அந்தப் பாடல்கள்: பொன்னைக் கடந்து இலங்கும் புலித் தோலினன்

மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடியார்க்குப்
பின்னிக் கிடந்தது என் பேரன்புதானே!

என்பே விறகாய் இறைச்சி அறுத்து இட்டுப்
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என் போல் மணியினை எய்த ஒண்ணாரே!

என் இறைவன் (சிவபெருமான்) அணிந்திருக்கும் புலித்தோல் ஆடை, தங்கத்தைவிடப் பளபளப்பானது, சிறப்பு மிகுந்தது. அவனுடைய தலையில் உள்ள இளம்பிறைச் சந்திரன் மின்னல் ஒளிபோல் மிளிர்கின்றது. அவன் தனது உடல்முழுவதும் திருநீறைப் பூசிக்கொண்டிருக்கிறான்.

அப்படிப்பட்ட சிவபெருமானை என்னோடு பிணைப்பது எது தெரியுமா?

சிலர் இறைவனை நோக்கிக் கடுமையான தவம் இருக்கிறார்கள். தங்களது சொந்த எலும்பையே விறகாக்கி அடுப்பு ஏற்றி, அதில் தங்களுடைய தசையையே அறுத்துப் போட்டு வறுத்துப் படைப்பதுபோல் ஏதேதோ செய்கிறார்கள், தங்களைத் தாங்களே மிகவும் வருத்திக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம், இறைவன் சுலபத்தில் அகப்படுவதில்லை. என்னைப் போன்ற சாதாரண பக்தர்களைதான் நாடி வந்து அருள் செய்கிறான். ஏன் தெரியுமா? என்னையும் இறைவனையும் பிணைக்கின்ற நூல், மிகவும் லேசானது, மென்மையானது, அதன் பெயர் அன்பு, வெறும் அன்புகூட இல்லை, பேரன்பு! நீங்களும் இறைவனை அடைய விரும்பினால், மற்ற வெளி அடையாளங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராதீர்கள். கோயிலுக்குச் செல்வது, பூஜை செய்வது, மந்திரம் சொல்வது, படையல் வைப்பது, திருநீறு அணிவது, பண்டிகை கொண்டாடுவது போன்றவையெல்லாம் முக்கியம்தான். ஆனால் அவற்றையெல்லாம்விட, உண்மையான அன்பு (பக்தி) வேண்டும், அதனால் உங்கள் உள்மனம் குழைந்து அவனை வணங்கிச் சரணடைய வேண்டும். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் உங்களுக்குக் கிடைக்கும்.

இதைத்தான், வேறொரு பாடலில் திருமூலர்
இன்னும் சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் சொல்கிறார் : ‘அன்பே சிவம்!’ ஆதிகாலத்தில், இயற்கைதான் தெய்வம். அன்றைய மக்கள் இயற்கையை, அதாவது, சூரியன், மழை, காற்று, நீர் போன்றவற்றையே மதித்து வணங்கினார்கள், வழிபட்டார்கள். காரணம், இந்த இயற்கை சக்திகள் கோபப்பட்டால், நம்முடைய தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். அவை மகிழ்ச்சியுடன் இருந்தால், நாமும் சந்தோஷமாக வாழலாம் என்பதுதான். இன்றைக்கு நாம் கோயிலுக்குச் சென்று பல தெய்வங்களை வணங்குகிறோம். ஆனால் அந்தத் தெய்வங்களும்கூட இந்த இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்துகிறவர்களாகவே சித்திரிக்கப்படுகிறார்கள். இது நமது அந்தக் கால பக்தியின் தொடர்ச்சி என்றே சொல்லலாம். ‘முக்கூடற்பள்ளு’ என்று ஓர் அற்புதமான நூல். இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் இதில் உள்ள எளிய தமிழ்ப் பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை, அவற்றை மண்ணின் இசையுடன் சேர்த்துக் கேட்டால் இன்னும் இனிமை கூடும். ‘பள்ளு’ என்பது தமிழில் உள்ள ஏராளமான சிற்றிலக்கியங்களில் ஒன்று. ‘மருத நிலம்’, அதாவது விவசாய நிலத்தில் வாழும் பள்ளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதுதான் இதன் சிறப்பு. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ‘முக்கூடல்’ என்ற ஊரில் வாழும் பள்ளர்களைப் பற்றிப் பாடுகிறது இந்தச் சிறு நூல். ஆகவே அதற்கு ‘முக்கூடற் பள்ளு’ என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.


விவசாயத்தை நம்பி வாழும் மக்கள், அவர்களுக்கு மழை மிகவும் முக்கியம். சரியான மழை இல்லாவிட்டால் அவர்களது குடும்பங்கள் சந்தோஷமாக வாழ முடியாது. ஆகவே, மழை பொழியும்போது பள்ளர்கள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். நம்மைப்போல குடை பிடித்துக்கொண்டு ஒதுங்கிச் செல்வது இல்லை, ‘இந்த மழை வந்தாலே பெரிய அவஸ்தைதான்’ என்று அலட்டுவதில்லை, பொழிகிற ஒவ்வொரு துளியையும் ரசித்து அனுபவிக்கிறார்கள், ‘நம் கஷ்டங்கள் தீர்ந்தன’ என்று மகிழ்ச்சியுடன் துள்ளுகிறார்கள். அதுமட்டுமில்லை, அந்த மழையின் ஒவ்வோர் அம்சமும் அவர்களுக்குக் கடவுளாகவே தெரிகிறது. ‘திருமால், சிவன், பிரம்மன், இந்திரன் என தெய்வங்கள் எல்லாமே எங்களுக்கு நீதான்’ என்று

போற்றுகிறார்கள். அந்த நெகிழ்வான
காட்சியை விவரிக்கும் அழகான பாடல் இதோ:
காருக்கு இறைவனாகும் இந்திரன்
ஏவல் பணி கொண்டு எழுந்த கார்
கடலில் படிந்து திருவில் கோட்டி
அடல் முக்கூடல் அரியுமாய்ப்
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு
மேவிக் கமலத்து அயனுமாய்ப்
புனலைத் தரித்து வரையில் ஏறிக்
கனலைத் தரித்த சிவனுமாய்த்
தாவிப் பறந்து பணிகள் பதுங்கக்
கோவித்து எழுந்த கருடனும்
தானே ஆகி உலகுக்கு உரிமை
ஊனே ஆகி உயிருமாய்க்
கோவில் பெரிய வடமலேந்திரன்
மாவில் கறுத்துப் பொழிந்தபின்
குளிறுகின்ற தன் கோன் களிற்றினில்
வெளிறுகின்றது வானமே

-மருத நிலத்துக்குத் தலைவன் இந்திரன். அவன் மேகங்களைப் பார்த்துக் கட்டளையிடுகிறான், ‘கடலில் சென்று தண்ணீரை அள்ளிக்கொண்டு வாருங்கள், இந்தப் பள்ளர்களின் நிலத்தில் மழையாகப் பொழியுங்கள்!’ தேவேந்திரன் கட்டளையை மறுக்க முடியுமா? மேகங்கள் நேராகக் கடலில் சென்று சேர்கின்றன. தண்ணீரைக் குடித்துக்கொள்கின்றன. பின்னர் அந்தப் பள்ளர்களின் ஊரை நோக்கி விரைந்து வருகின்றன. அப்போது, வானத்தில் அழகான ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில் தோன்றுகிறது. அதைப் பார்க்கும்போது, எங்களுடைய முக்கூடலில் எழுந்தருளியிருக்கும் திருமாலின் கம்பீரம்தான் எங்கள் நினைவுக்கு வருகிறது. (அரி - திருமால்) அடுத்து, மேகங்களுக்கு நடுவில் மின்னல் அடிக்கிறது. அதைப் பார்க்கும்போது, தாமரைப் பூவில் வசிக்கும் பிரம்மனின் நிறம்தான் எங்கள் நினைவுக்கு வருகிறது. (அயன் - பிரம்மன்) இப்போது, தண்ணீரைச் சுமந்திருக்கும் அந்த மேகம் மலை உச்சியில் சென்று தங்குகிறது. அதைப் பார்க்கும்போது, கையில் கனலை ஏந்திய சிவன்தான் எங்கள் நினைவுக்கு வருகிறார். ஆக, திருமால், சிவன், பிரம்மன் என்று மும்மூர்த்திகளும் எங்களுக்கு மேகம்தான், அதனால் பெய்கிற மழைதான்! வானம் முழுக்க மேகங்கள் பரவி, மின்னல் வெட்டுகிறது, இடி இடிக்கிறது, அதனால் தரையில் உள்ள பாம்புகள் பயந்து ஒளிந்துகொள்கின்றன. மேகமே, இப்படிப் பாம்புகளையெல்லாம் பயமுறுத்தி விரட்டுவதால், நீ எங்களுக்குக் கருடனாகவும் தோற்றமளிக்கிறாய்! எங்களை ஆட்சி செய்யும் தலைவன், அரசர்களுக்கெல்லாம் பெரிய அரசன், அவன் பெயர் வடமலேந்திரன். அந்த வடமலேந்திரனின் படையில் இருக்கும் யானைகளையெல்லாம்விடக் கருப்பாக இந்த மேகங்கள் தோன்றுகின்றன. ஆனால் மழை பெய்தவுடன், அந்த மேகங்கள் அனைத்தும் வெளுத்துவிடுகின்றன. இப்போது அவை இந்திரனின் யானையாகிய ஐராவதத்தைப்போல் தெரிகின்றன.

மழையே, நீ ஒருவருக்கு மட்டும் சொந்தமான பொருள் அல்ல. ஒட்டுமொத்த உலகத்துக்கும் உரிமை. எங்களுக்குச் சாப்பாடு தருவதும் நீதான், உயிர் கொடுத்து வாழவைப்பதும் நீதான், எல்லாக் கடவுள்களும் நீயேதான்! இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரியது எது? கிணற்றுக்குள் இருக்கும் ஒரு தவளைக்கு, தன்னுடைய கிணறுதான் மிகப் பெரியது என்று தோன்றும். அதே தவளை கிணற்றிலிருந்து வெளியே வந்தால் தோட்டத்தைப் பார்க்கும், தோட்டத்துக்கு வெளியே இருக்கும் வயலைப் பார்க்கும், ஊரைப் பார்க்கும், நகரத்தைப் பார்க்கும், மாநிலம், நாடு, கண்டம்,

உலகம் என்று இன்னும் இன்னும் பெரிய விஷயங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளும். அப்படியானால், உலகம்தான் மிகப் பெரியதா? ம்ஹூம், இல்லை. நம்முடைய பூமிப்பந்து சூரிய மண்டலத்தின் ஒரு பகுதி, அதுபோல் எண்ணற்ற மண்டலங்கள் இந்த விண்வெளியில் இருக்கின்றன. கணக்குப் பார்க்க நம்மால் முடியாது! இதென்ன கூத்து? ‘பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய விஷயம் எது?’ என்கிற புதிருக்கு விடையே கிடையாதா? கவலையே வேண்டாம். நம்முடைய தமிழ்ப் பாட்டியாகிய ஔவையார் இந்தக் கேள்விக்கு அற்புதமான பதில் சொல்லியிருக்கிறார், அதுவும் தமிழ்க் கடவுளாகிய முருகனிடமே நேரடியாகப் பேசியிருக்கிறார். அந்தப் பாட்டு:

பெரியது பெரியது புவனம் பெரியது,
புவனமோ நான்முகன் படைப்பு,
நான்முகனோ கரியமால் உந்தியில் வந்தோன்,
கரியமாலோ அலைகடல் துயின்றோன்,
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்,
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்,
கலசமோ புவியில் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்,
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்,
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்,
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்,
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இந்த உலகம் பெரியது. உண்மைதான். ஆனால், அந்தப் பெரிய உலகத்தையே படைத்தவர் பிரம்மா. அப்படியானால், அவர் உலகத்தைவிடப் பெரியவராகத்தான் இருக்க வேண்டும். அந்த பிரம்மா திருமாலின் தொப்புளில் தோன்றியவர். அப்படியானால் திருமால்தான் ரொம்பப் பெரியவரோ? ம்ஹூம், அந்தத் திருமால் அலைகடலில் தூங்குகிறார். ஆக, கடல் அவரைவிடப் பெரியது. அவசரப்பட வேண்டாம். அத்தனை பெரிய கடல்கூட அகத்திய முனிவரின் உள்ளங்கையில் அடங்கிவிட்டதே! அந்த அகத்தியர் சிறிய குடத்தில் பிறந்தவர். அதனால் அவரைக் ‘கும்ப முனி’ என்று சொல்வார்கள். அப்படியானால் கும்பம்-குடம்தான் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரியதா? அது எப்படி? அந்தக் குடம் என்பது பூமியில் உள்ள சிறு மண்ணினால் செய்யப்பட்டதுதானே? அந்தப் பூமியை ஆதிசேஷன் எனும் பாம்பு தன்னுடைய ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. ஆக, பூமியைவிட ஆதிசேஷன் பெரியவர். அதனால் என்ன? ஆதிசேஷனைப் பார்வதி தேவி தன் விரலில் மோதிரமாக அணிந்துள்ளார். அவர்தானே ரொம்பப் பெரியவராக இருக்கவேண்டும்? ம்ஹூம், பார்வதி தேவி சிவபெருமானுக்குள் ஒரு பாதிதானே? அப்படியானால் சிவன்தான் பெரியவரோ? இல்லவே இல்லை, காரணம், அந்தச் சிவபெருமான் பக்தர்களின் உள்ளத்தில் இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரியது எது என்றால், நம்மைப் போன்ற பக்தர்கள்தான். ‘அந்தப் பக்தர்களின் பெருமையை முழுவதுமாகச் சொல்வதற்குத் தமிழில் வார்த்தைகளே இல்லை’ என்று நெகிழ்கிறார் ஔவையார்! (தொடரும்)